மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தித்திணிப்பு ஒரு சர்வாதிகாரம்

சுசிலா

Apr 22, 2017

Siragu hindhi1

இந்தியாவின் சிறப்பே, அதனுடைய பன்முகத்தன்மை தான். அதனை அழிக்கும் வேலையில், பாசக அரசு மும்முரமாக இறங்கி இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. மத்திய அரசு மறுபடியும் எடுத்திருக்கும் இந்த இந்தித்திணிப்பு மீண்டும் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திடும் என்பதே உண்மை. நாடு முழுவதும் இந்தியை கட்டாயமாக்குவோம் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறது மத்திய பாசக அரசு. 1968 -ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது மதவாத அரசு.

நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ மொழிகள் பற்றி பரிந்துரைகள் அளிப்பதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த காங்கிரசு ஆட்சியில் அமைக்கப்பட்டது என்றாலும், தற்போது 117 பரிந்துரைகளை தற்போது கொடுத்துள்ளது. அதில் சிலவற்றை குடியரசுத் தலைவர் நிராகரித்து இருக்கிறார். சிலவற்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி பார்த்தோமானால், இனி குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் இந்தியில் பேச வேண்டும். அதாவது இந்தி தெரிந்த அமைச்சர்கள், இந்தியில் தான் பேச வேண்டுமாம்.

அடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான டிக்கெட்களில் இந்தி எழுதப்பட வேண்டும் என்பதும், மேலும் பயணிகள் படிக்க இந்தி நாளிதழ்கள், புத்தகங்கள் வைக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.

Siragu hindhi3

பின்பு, மத்திய அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த அரசு விருப்பப்பட்டால், அதற்கென புத்தகங்கள் வழங்கப்படுமாம். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தியில் பேச, எழுத, படிக்க தேவையான பயிற்சி கொடுக்கப்படுமாம்.

கடினமான சொற்களைத் தவிர்த்து, எளிய முறையில் இந்தியை அரசு அலுவலங்களில் பயன்படுத்த வேண்டுமாம்.

நிராகரிக்கப்பட்ட பரிந்துரைகளை பார்த்தீர்களானால்,

மத்திய அரசு பணியிடங்களில், குறைந்தபட்ச இந்தி மொழி அறிவு இருக்க வேண்டும் என்பதும், தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் இந்தியில் பரிமாறப்பட வேண்டும் என்பதும் தான்.!

அதுவும் கூட வரும் ஜூலை மாதத்தில், தற்போது இருக்கும் திரு. பிரணாப் முகர்ஜி ஒய்வு பெறுகிறார். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குடியரசு தலைவர் நிச்சயம் பாசக, ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவராக இருக்கும் பட்சத்தில் இப்போது நிராகரிக்கப்பட்ட பரிந்துரைகள் ஒப்புக்கொள்ளப்பட்டு விடும் ஆபத்து இருக்கிறது.

ஏற்கனவே பிரதமர் பங்கு பெறும் விழாக்களிலும், கூட்டங்களிலும் விளம்பரங்கள் இந்தியில் தான் இருக்கின்றன. கூர்ந்து கவனித்தோமானால், தெரியும்… அரசி திட்டங்கள் அனைத்திற்கும் இந்தியிலும், சமற்கிருதத்திலும்தான் பெயர்கள் சூட்டப்படுகின்றன. நாடு முழுவதும் இந்திமயமாக்கப்படுகிறது.

இந்தி பேசா மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக்கப்படுவர். இது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும்.

இந்த நடவடிக்கை, பிற மொழி பேசும் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய வஞ்சகம் ஆகும். அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகள் ஆக்கப்பட வேண்டும் என்று நாம் கேட்டுக்கொண்டிருக்கும் இச்சமயத்தில், இந்த இந்திமொழித்திணிப்பு என்பது முற்றிலும் விரட்டப்பட்ட வேண்டிய ஓன்று.

தந்தை பெரியார் காலத்திலிருந்தே, இந்தி எதிர்ப்புக்குரல் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. 1938முதலே இந்தி எதிர்ப்புப்போராட்டம் நடத்தி, வெற்றி கண்ட தமிழகத்தில் மீண்டும் ஓர் மாபெரும் போராட்டத்தைத் தூண்டுகிறது பாசக அரசு.

Siragu hindhi6

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இருமொழிக்கொள்கை என்பது சட்டமாக்கப்பட்டிருக்கிறது. இதில் கை வைக்கும் உரிமை மத்திய அரசிற்கு இல்லை. கல்வியை மாநிலப்பட்டியலிலிருந்து, பொதுப் பட்டியலுக்கு மாற்றியதின் உள்நோக்கமே இது தான். சென்ற வருடமே, மத்திய கல்வி பள்ளிகளில், மூன்றாவது மொழியாக இருந்த ஜெர்மன் மொழியை நீக்கி விட்டு, அந்த இடத்தில் சமற்கிருதத்தை வைத்தது. தற்போது இந்தியை கட்டாயமாக்கத் துடிக்கிறது மத்திய மோடி அரசு.!

நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களே, தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டத்தைக்கண்டு, இந்த இந்தித்திணிப்பை கைவிட்டார்கள். இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை, இந்தியுடன் சேர்த்து ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கட்டும் என்று உறுதி அளித்தார். ஆனால் இன்றோ இந்த மதவாத பாசக அரசு அதை அழிக்கும் நோக்கோடு செயல்படுகிறது. மைல்கல்லில் உள்ள ஆங்கில எழுத்துக்களை அழித்து விட்டு இந்தியில் எழுதுதல், தேசிய வங்கிகளிலும், ஏடிம் சென்டர்களிலும் இந்தியை பயன்படுத்துதல் என அனைத்து வழிகளிலும் இந்தி மொழியை திணிக்கப்பார்க்கிறது.

Siragu hindhi5

மக்கள் விரும்பி கற்றல், தேவைப்படும்போது கற்றல் என்பது வேறு… விருப்பம் இல்லா மக்களிடம் திணிப்பது என்பது வேறு.. எந்த ஒரு திணிப்பும் வன்முறை, கலவரத்தில் தான் போய்முடியும். ஆனால், தமிழக மக்கள் அற வழியில் போராடும் குணம் உள்ளவர்கள் என்பதை பலமுறை மெய்ப்பித்திருக்கிறார்கள். அதற்காக எவ்வளவு இடையூறுகள் வேண்டுமானாலும் தரலாம் என்ற அதிகார தோரணையில் மத்திய அரசு செயல்படுமானால், மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என்பதில் அட்டியில்லை. இந்திய நாட்டிற்கே தமிழகம் முன்னோடியாகப் போராடி வெற்றி பெறும் என்பது உறுதி.

இதனை மனதில் கொண்டு இம்மாதிரி திணிப்பு வேலைகளில் இறங்காமல், ஆக்கப்பூர்வத் திட்டங்கள் தீட்டி, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முற்படட்டும் மத்திய பாசக அரசு.!

எல்லா இனத்திற்கும் தாய்மொழி என்பது மூச்சுக்காற்று போன்றது.

பிற மொழிகளை மதிப்போம்… தாய் மொழியான தமிழை. சுவாசிப்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தித்திணிப்பு ஒரு சர்வாதிகாரம்”

அதிகம் படித்தது