மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம்

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Jul 23, 2016

Siragu indhiya porulaadhaaram2

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்கிறார்கள். இந்த ஆண்டு 8% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (ஜிடிபி) எட்டுவோம், அடுத்த ஆண்டு 10% வளர்ச்சியை எய்துவோம், 2025-இல் உலக வல்லரசாகி விடுவோம் என்கிறார்கள். இதில் காங்கிரஸ் ஆட்சியா, பிஜேபி ஆட்சியா என்ற வேறுபாடெல்லாம் இல்லை. ஆனால் நமக்குத் தெரிந்தவரை, இந்தியாவில் ஒருசில பணக்காரர்களின் தொகை அதிகரித்துள்ளது. ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். இலவசப் பொருள்களை நம்புகிறார்கள். அதையே நம்பி வாக்களிக்கவும் செய்கிறார்கள். விவசாயிகள் பிழைப்புக்கு வழியின்றித் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நடுத்தர மக்கள் தினசரி உயரும் விலைவாசியால் அவதிப்படுகிறார்கள். 1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது 1 டாலருக்கு 1 ரூபாய் என்று இருந்த மதிப்பு, இன்று 1டாலருக்கு 68 ரூபாய் அளவுக்கு வீழ்ந்துள்ளது (“வளர்ச்சியடைந்துள்ளது” என்று ஒருவேளை பிரதமர் மோதி, மன்மோகன் சிங் போன்ற அரசியல், பொருளாதார நிபுணர்கள் சொல்லலாம்!)

அதனால்தான் இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்று தலைப்பிடாமல் பொருளாதார மாற்றம் என்று இக்கட்டுரைக்குத் தலைப்பிட்டுள்ளேன்.

சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.

1. அடிப்படை அமைத்தல் காலம் (1947இல் விடுதலை பெற்றதிலிருந்து 1975இன் அவசர நிலைமை வரை);

2. சோதனைக் காலம் (1977இல் ஜனதாக் கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 1991இல் ராஜீவ் காந்தி கொலையும் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தொடக்கமும் நிகழ்ந்ததுவரை);

3. நவதாராளமயமாக்கல் காலம் (1992 முதல் இன்று வரை).

காலகட்டம் 1: அடிப்படை அமைத்தல் காலம். (1947-1975)

Siragu indhiya porulaadhaaram3

முதல் காலகட்டம் (1947-75), ஜவஹர்லால் நேருவின் இலட்சியமான திட்டமிட்ட பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்திய காலம். நாட்டைத் தொழில்துறையிலும் விவசாயத்துறையிலும் தன்னிறைவுள்ளதாக ஆக்கி, அதேசமயம், சமூகத்தின் எல்லாப் பிரிவுகளும் சமஅளவு வளர்ச்சியும் பொதுநலமும் உறுதிசெய்யப்படும் கடமை அரசுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட காலம்.

இக்கால கட்டத்தில் இந்தியத் திட்டமிடுவோர் மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தினர்.

1. இறக்குமதிகளைச் சாராமல் தொழில்துறையின் உள்கட்டமைப்பைக் கட்டுதல்;

2. பொருளாதாரத் துறையின் உயர்வுக்குத் தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை உருவாக்குவதற்கெனத் தேவையான உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குதல்;

3. நிலத்தைப் பகிர்ந்து பயிரிடுபவர்களுக்கும் நிலமற்ற விவசாயப் பணியாளர்களுக்கும் நிலத்தைப் பகிர்ந்து தருவதற்குத் தேவையான நிலச் சீர்திருத்தங்கள்.

நேருவின் கொள்கை சமதர்மம் என்ற பெயரைக் கொண் டிருந்தாலும், ரஷ்யா அல்லது சீனாவின் சமதர்மத்திற்கும் இதற்கும் வெகுதூரம். நேருவின் மென்மையான, ‘ஃபேபியன்’ சமதர்மம், முதலாளித்துவத்தை அழிப்பதல்ல, மாறாக, அதன் உயர்வுக்கே வழிவகுக்கக்கூடியது, அதேசமயம் மக்களுக்குச் சிறிதளவேனும் நல்வாழ்வையும் நீதியையும் கொண்டு வருவதற்கான முயற்சி. இதைப்பற்றி விமர்சகர்கள் பலவேறு நிலைகளில் மதிப்பிட்டுள்ளனர். நேருவின் தொழிற் கொள்கை விருப்பமற்றதொரு முதலாளி வர்க்கத்தின்மீது அவர்களுடைய விருப்பங்களுக்கும் ஆர்வங்களுக்கும் எதிராகத் திணிக்கப்பட்டதல்ல. தனியார் தொழில்களை நசுக்க ஏற்பட்டதுமல்ல. மாறாக, இந்தியாவின் முக்கியத் தொழில் பரம்பரையினர், பெருவிவசாயிகள், உயர்மட்டத் தொழிலாளர்கள், பெரும் அரசு அதிகாரிகள், பிற வெள்ளைக்காலர் பணியாளர்கள் ஆகியோர் அமைந்த ஆதிக்கக் கூட்டமைப்பின் முழு ஆதரவைப் பெற்றதாக அது இருந்தது. பொருளாதாரம் மேல்நோக்கிச் செல்லத் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அரசிடம் மட்டுமே உள்ளன என்று அனைவரும் புரிந்துகொண்டிருந்தனர்.

இந்தியாவைச் சந்தித்த பிரச்சினைகளின் பிரம்மாண்டத்தினால், அது முதல் ஐந்தாண்டுக் காலப் பகுதியில் மிகக் குறைவாக, 3.5 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வளர்ச்சியுற்றது. ஆனால் இரண்டாம், மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் இறுதியில் (1956-61, 1961-66) இறக்குமதிக்குப் பதிலீட்டுமுறை இந்தியாவின் தொழில்துறை அமைப்புக்குத் தேவையான அடிப்படையை அமைப்பதில் வெற்றிகண்டது.

நேருவைப் பின்பற்றிய சமதர்மவாதிகள்மீதும், திட்டமிட்ட பொருளாதாரத்தை ஆதரிப்போர்மீதும், இப்போது உள்ளவர்கள் வெறுப்பைக் குவிப்பது மோஸ்தராகிவிட்டது. அதனால் அவர்களின் சாதனைகளை நாம் காண்பது முக்கியமானது. அவற்றில் சிலவற்றைப் பட்டியலிடலாம்:

1970களின் தொடக்கநிலையிலேயே இந்தியா உள்நாட்டுத் தொழிலுக்குத் தேவைப்படும் தரமான மூலதனச் சரக்குகள் உற்பத்தியில் ஏறத்தாழ முழுஅளவு தன்னிறைவு பெற்று விட்டது. தனது சொந்த எந்திரக்கருவிகள், இரசாயன உபகரணங்கள், எந்திரவியல் பொறிகள், கனரக, மற்றும் பிற மின்சாரக்கருவிகள், அடிப்படை உலோகங்கள், உலோகக் கலவைகள் ஆகியவற்றை இந்தியா உற்பத்திசெய்தது. தனது சொந்த எஃகு ஆலைகள், மின்உற்பத்தி நிலையங்களைக் கொண்டிருந்ததோடு, எல்லாவற்றுக்கும் மிக முக்கியமான, உலகிலேயே மிகப் பரந்த தனது இரயில்வே வலைப்பின்னலையும் வளர்ச்சியடையச் செய்தது.

இந்தச் சாதனைகள் பின்வரும் எல்லாவற்றுக்கும் அடித்தளமாக அமைந்தன.

இந்தக் காலப்பகுதி முழுவதும், இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து 1964இல் அவரது மரணம் வரை இந்தியாவின் முதல் பிரதமரான நேருவே வழிகாட்டியாக இருந்தார். லால்பகதூர் சாஸ்திரியின் குறைந்தகால ஆட்சிக்குப் பிறகு, நேருவின் மகள் இந்திரா காந்தி, முதல் முறை 1966இலிருந்து 1977வரையும், பிறகு மீண்டும், அவசர (நெருக்கடி) நிலைக்குப் பிறகு 1980 முதல் அவர் கொலைசெய்யப்பட்ட 1984 வரையும் இருமுறை பிரதமராக இருந்தார்.

Siragu indhiya porulaadhaaram5

இந்திரா காந்தியின் முதல் ஆட்சி, அதாவது அவசரநிலைக்கு முந்தியது, பெரும்பாலும் இடதுசாரியைச் சிந்தனையைச் சார்ந்தது. பத்து அம்சத் திட்டத்திற்காக இன்று நினைவு கொள்ளப்படுகிறது. ‘வறுமையை ஒழிப்போம்’ (கரீபி ஹடாவோ) என அது உறுதியளித்தது. இத்திட்டம் மிகப் பரவலான கொள்கை மாற்றங்களை நுழைத்தது.

_______________________________________________________________________

வங்கிகளையும் காப்பீட்டுக் கழகங்களையும் தேசியமயமாக்குதல், நகர்ப்புறச் சொத்துக்கு உச்சவரம்பு,

வணிக, நில, ஏகபோக உரிமைகள் மீது கட்டுப்பாடு,

உணவு தானியங்களின் பொதுவிநியோகம்,

நிலச்சீர்திருத்தம்,

விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல் (பசுமைப் புரட்சி)

போன்ற ஏழைகளுக்கு ஆதரவான, ஆனால் அரசு ஆதிக்கக் கொள்கை மாற்றங்கள் இவற்றில் அடங்கும். பொருளாதார நிறுவனங்கள்மீது அதிகமான அரசுக் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய காரணம், வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் சிறிய நகர்ப்புற, கிராமப்புறத் தொழில்களுக்கு மூலவளங்களை அளிப்பதற்காகவே.

இந்தத் திட்டங்கள் ஏழைகள் மத்தியில் மிகப் பிரபலமாகியிருந்தன. ஆனால் இந்திராகாந்திக்கு அவரது சொந்தக் கட்சிக்குள்ளாகவே எதிர்ப்பு இருந்தது. திட்டங்களின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அரசுக் கட்டுப்பாடுகளின் அதிகரிப்பு, மத்தியதர அதிகாரவர்க்கமும் அலுவலர்களும் பெரிதும் பயனடையுமாறு வேண்டியவர்களைப் பணியில் அமர்த்துதல், ஊழல், இடைத்தரகு பெறுதல் போன்றவற்றிற்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கியது.

Siragu indhiya porulaadhaaram8

இந்தியப் பொருளாதாரம் ஏற்கெனவே முதிர்ச்சிநிலை அடைந்து விட்டது. இந்நிலையில் தனியார் முதலீடு தலைமை ஏற்க வேண்டும் எனப் பலர் விரும்பினர். இந்திரா காந்தியின் சீர்திருத்தங்கள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை.

மேலும், எண்ணெய்ப் பிரச்சினையையும், 1970களின் தொடக்கத்தில் கடுமையான பஞ்சத்தையும் இந்தியப் பொருளாதாரம் சமாளிக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில், 1975இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தேர்தல் குற்றங்களில் ஈடுபட்டதாக இந்திராகாந்தியைக் குற்றவாளி ஆக்கியது. (இன்று இம்மாதிரி ஒரு நிகழ்வுக்கு வாய்ப்பே இல்லை. மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் வெவ்வேறு விதமான குற்றங்களைச் செய்ததாகக் கருதப்படுகின்றவர்களே ஆட்சிபுரிகின்றனர்!) பலவிதமான இந்த நெருக்கடிகளால் அவர் அவசர நிலைமையைச் செயல்படுத்தினார். சுதந்திரம் அடைந்தபிறகு ஏறத்தாழ 25 ஆண்டுகள் நீடித்த முதல் காலகட்டத்தில், நேருவின் அரசு நிர்வாக முதலாளித்துவத்திற்கு வலதுசாரிகள் (பொதுவுடைமைக்கு எதிரானவர்கள், முதலாளிகளை ஆதரிப்பவர்கள்) எதிர்ப்புகளைத் தந்தனர்.

அன்றிருந்த வலதுசாரிகள் இரண்டுவகை.

ஒன்று இந்து தேசியவாதக் கட்சிகள் (சமஸ்கிருத, ‘பாரத்மாதா கீ ஜே’, இந்துமதவாதிகள்). மற்றொன்று ராஜாஜியின் சுதந்திரா கட்சி.

இந்தக் காலப்பகுதியில் இந்து தேசியவாத அமைப்புகள் பெரும்பாலும் மறைவாகவே இருந்தனர். அவர்களில் ஒருவரான நாதுராம் கோட்ஸே மகாத்மா காந்தியைக் கொலை செய்ததனால் ஏற்பட்ட மறைவு அது. அனுபவம் வாய்ந்த இரு இந்து தேசியவாத அமைப்புகளான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்), இந்து மகாசபை என்பவற்றின் தலைவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. ஏனெனில் தேர்தல்களில் வெற்றி பெறுவதைவிட, இந்தியக் கலாச்சாரத்தின் இந்து அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான கலாச்சாரப் புரட்சியாளர்கள் என்ற நிலையில் அவர்கள் தங்களை வைத்துக் கொண்டனர்.

பொருளாதார விவாதங்களில் நேரடியாகப் பங்குபெறாவிட்டாலும், இவர்கள் நேருவாதிகளின் திட்டமிட்ட பொருளாதாரத்தின்மீது கடுமையான விமரிசனங்களை முன்வைக்கவே செய்தனர். இந்தியப் பொருளாதாரத்தின் சமதர்மத் தன்மையை இரண்டு கோணங்களிலிருந்து அவர்கள் எதிர்த்தனர்:

ஒன்று, சாதி அடிப்படையில் அமைந்த ‘ஒன்றுபட்ட மானிடம்’ (இண்டெக்ரல் ஹியூமனிசம்) என்ற நோக்கிலிருந்து;

மற்றது, தனிநபர் முக்கியத்துவத்தின்மீது அமைந்த முழுஅளவிலான சுதந்திரச் சந்தை முதலாளித்துவ நோக்கிலிருந்து.

==========================

ஒன்றுபட்ட மானிடம்

ஒன்றுபட்ட மானிடம் என்னும் தத்துவம் இன்றைய பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தின் முதல் பொதுச்செயலர் தீனதயாள் உபாத் யாயாவினால் 1965இல் முன்வைக்கப்பட்டது. இந்துத்துவத்தோடு சேர்ந்து, ஒன்றுபட்ட மானிடம்தான் இன்னும் பிஜேபியின் அதிகாரபூர்வமான தத்துவமாக இருக்கிறது. புதிய உறுப்பினர்கள் இந்தத் தத்துவத்தைத் தாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று உறுதிமொழி ஏற்கவேண்டும்.

உபாத்தியாயாவின் கருத்துப்படி, தனிமனிதர்களை ஓர் உயிருள்ள முழுமையாக, அல்லது குழுமனத்தோடு ஒன்றிணைப்பது, இந்து இந்தியாவின் உள்ளார்ந்த, உடன் பிறந்த இயற்கை அல்லது ‘சித்தி’ என்பதாகும். அவ்வாறு ஒன்றிணைந்த பிறகு, தனிமனிதர்களுக்கு அரசு போன்ற ஏதோ ஒரு புறச் சக்தியின் கட்டுப்பாடு தேவையில்லை. இதுதான் ஒன்றிணைந்த மானிடம் என்னும் கருத்து.

இந்திய மக்களின் சாதி சார்ந்த, பொருளுக்கு-பணத்துக்கு முதன்மை தராத, ஆன்மிகம் சார்ந்த கலாச்சார மதிப்புகளால் தேச வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கைகள் நெறிப்படுத்தப்படுவனவாக இருக்க வேண்டும்.

=======================

முரண்பட்ட இந்த இரு கருத்துகளுக்கும் ஆதரவை இந்து மதம், இந்து ஆன்மிகப் புனித நூல்களிலிருந்தே இந்துக் கருத்தியல்கள் பெற்றன என்பதுதான் ஆச்சரியம்! புதிய நூல் வெளியீட்டகங்கள், சிந்தனைக் களஞ்சியங்கள், அவர்களின் கூட்டுக்குழும ஆதரவாளர்கள் பலர் ஆதரவில் இந்த இரு கருத்தியல்களும் பெரிய அளவில் மீண்டும் நுழைந்து கொண்டிருக்கின்றன. இந்துமதம் உயரிய நாகரிகம் என்றும், அதன் ஒன்றுபட்ட மானிடம் என்னும் இலட்சியம் உயரியது என்றும் நம்பப்படுகின்ற எல்லைக்குள் சுதந்திரச் சந்தைகளை இவை நுழைக்கின்றன.

காங்கிரஸ் சமதர்மவாதிகள் அரசுகளில் வைத்திருந்த உயரிய அரசியல்வாதிகளை ஒன்றுபட்ட மானிடவாதிகள் அயலார்கள் என்றும் இந்து-அல்லாதவர்கள் என்றும் தாக்கினர். ஆனால் அவர்கள் சுதந்திரச் சந்தை முதலாளித்துவத்தை ஏற்கவும் இல்லை. அவர்கள் பரிந்துரைத்தது ஒரு ‘மூன்றாவது வழி’. அது சமதர்மமும் அல்ல, முதலாளித்துவமும் அல்ல, தெளிவாக காந்தியச் சார்புடன் கூடிய சுதேசி அல்லது சுயசார்பினைக் கொண்ட ‘தார்மிக’ வழி.

Siragu indhiya porulaadhaaram7

ஒன்றிணைந்த மானிடவாதிகள், முதலாளிகளின் சுயநல இயல்பூக்கங்களுக்கு இரையாக மாட்டார்கள். ஏனென்றால்

அவர்களுக்கு தேசிய சமுதாயத்தின் நலன்களுக்காகத் தங்கள் ஆசைகளையும் தேவைகளையும் வரையறுத்துக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. இந்தியாவுக்குத் தேவையானது தர்மத்தை வளர்ப்பது. அதாவது, குடும்பம், சாதி, வணிகஅமைப்பு, தேசம் ஆகியவை ஒன்றிணைந்த அரசமைப்பின் உறுப்புகளாகத் தங்களைக் காணக் கற்றுக்கொள்ளக்கூடிய ஆண்களையும் பெண்களையும் உருவாக்குவது. உடலுக்கும் அதிலுள்ள உறுப்புகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்க இயலாததுபோல, வெவ்வேறு சாதிகளிலும் வர்க்கங்களிலும் பிறந்த தனிமனிதர்களின் ஆர்வங்களுக்கும் சமூகத்தின் பிற பகுதிகளுக்கும் முரண்பாடிருக்க இயலாது. இதுதான் இந்தியாவுக்கே சொந்தமான ‘மூன்றாவது வழி’. இது இந்தியாவின் இனப்பண்பிற்கு அயலான கொள்கைகளான சமதர்மத்துக்கும் முதலாளித்துவத்திற்கும் அப்பால் செல்லக்கூடியது. சமூக வாழ்க்கையின் பிற கூறுகளைப் போலவே, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையும் இந்துமத, ஒழுக்க மதிப்புகளோடு பிணைந்ததாகும்.

சுதேசி அல்லது சுயசார்பினைக் கொண்டாடிய காந்திய சமதர்மத்திலிருந்து கடன் பெற்ற சொற்களைக் கொண்டு, மெதுவாக, ஆனால் உறுதியாக, இந்த ஒன்றிணைந்த மானிடம் என்னும் தத்துவத்தை இந்து தேசியவாதிகள் பரப்பத் தொடங்கினர்.

ஒன்றிணைந்த மானிடம் என்ற கருத்தை காந்தியின் சுதேசி என்னும் கருத்தோடு ஓரளவு ஒப்பிடலாம். காந்தியின் சுதேசி, அயல் இறக்குமதிகளைவிட வட்டார, தேசிய விஷயங்களையும் நவீனப் பெருந்தொழில் சார்ந்த உற்பத்தியைவிட கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட சிறு தொழில்களையும் ஆதரித்தது. தொழில்களில் அரசுரிமையையும் பொருளாதாரச் செயல்பாடுகளில் கட்டுப்பாட்டையும் எதிர்த்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் அயல்நாட்டு இறக்குமதி செய்த பொருள்களைத் தெருக்களில் எரிக்க மக்களுக்குப் பரிந்துரைத்த சுதேசிப் போராட்டங்களின் நினைவுகளுடன் இக்கனவு ஒத்திருந்தது. நேருவின் பொருளாதார, தொழில் கொள்கை, பெரிய, அரசு கட்டுப்பாட்டிலிருந்த பொது நிறுவனங்களுக்கே தொடர்ந்து ஆதரவளித்தது.

[தொடரும்]


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம்”

அதிகம் படித்தது