மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 3

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Aug 6, 2016

கட்டம் 2: சோதித்துப் பார்த்தல், 1977-1991

Siragu Economy kattam1

இந்தக் காலப்பகுதி, காங்கிரஸ் கூட்டுக் கட்சிகள் அல்லாத, ஜனதாக் கட்சி 1977இல் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1980இல் இந்திரா காந்தி பிரதமராகத் திரும்பினார். 1984இல் அவர் கொலை செய்யப்பட்டார். இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி, அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றி 1991இல் தான் கொல்லப்படும் வரை நீடித்தார். இந்தத் தாய்-மகன் இரட்டையர், முதல் கட்டத்தில் இந்திரா காந்தியின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட கடுமையான ஆனால் நன்னோக்குடைய திட்டங்களை இல்லாமல் செய்யும் பல சீர்திருத்தங்களை முடுக்கிவிட்டனர்.

எல்லா நோக்கிலும், இடையில் குறைந்த காலமே பதவியில் இருந்த ஜனதாக்கட்சி அரசாங்கம், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் விசயத்தில் எந்த விளைவும் அற்றதாக இருந்தது. இப்போது தனது திறனின்மை, ஊழல் ஆகியவற்றிற்காக மட்டுமே அது நினைவுகூரப்படுகிறது. ஜனதாக் கட்சி என்பது பொதுவுடைமைக்கு எதிரான அரசியல் கட்சிகளின் கூட்டு; இந்திரா காந்திக்கும் அவசரநிலைக்கும் எதிரானது. இந்தக் கூட்டில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு முன்னோடியான பாரதிய ஜனசங்கமும், பிற சில கட்சிகளும் இருந்தன. இவை அனுபவமிக்க சமதர்மவாதியாக இருந்து காந்தியவாதியாக மாறிய, ‘ஜே.பி’. என அழைக்கப்பட்ட, ஜயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய ‘முழுமைப் புரட்சி’ என்னும் இயக்கத்தில் பங்கு கொண்டவை. கூட்டணியில்தான் என்றாலும், ஜனசங்கம் போன்ற ஓர் இந்து தேசியக் கட்சி மையத்தில் ஆட்சிக்கு வருவது அதுவே முதல்முறை.

ஜனதாக் கட்சி, காந்திய மற்றும் ஜனசங்கத்தின் இந்துப் பாரம்பரியப் பார்வையைக் கொண்டிருந்தது. பெருந்தொழில்களுக்கு மாறாக சிறிய, கிராமப்புற அடிப்படையிலான தொழில்களுக்கும் கிராமப் பஞ்சாயத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என மாற்ற விரும்பியது. ஆனால் இவ்வாறெல்லாம் இருப்பினும், தொழிற்கொள்கை மீது அதன் நிஜமான பாதிப்பு ஒன்றுமே இல்லை. நகர்ப்புற சிறு உற்பத்தியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதுகாப்புக்கு அழுத்தம் தரப்பட்டது தான் ஒரே ஒரு சிறிய மாற்றம்.

மிகுந்த அளவில் மாறாததும், மிகக் கட்டுப்படுத்தக்கூடியதுமான விதிமுறையமைப்புகளில் சிலவற்றுக்கு நியாயம் கற்பிக்கவும், சிலவற்றைத் தளர்த்தவுமான நிஜமான பணி, முதலில் அவற்றை உருவாக்கிய பொறுப்புள்ள ஒருவருக்கே வந்து சேர்ந்தது. அதாவது இந்திரா காந்திக்கு. அவருடைய கொலையைத் தொடர்ந்து, அவர் மகன் ராஜீவ் காந்திக்கு.

Siragu-Economy-kattam2

1980இல் இந்திரா காந்தி ஒரு புதிய வீச்சோடு பதவிக்குத் திரும்பினார். பொருளாதாரம் மிகக்குறைந்த அளவே செயல்படுகிறது என்பதும், தனியார் துறை மீதான கட்டுப்பாடுகள் வெகுதொலைவுக்குச் சென்றுவிட்டன என்பதும் அவருக்கே புரிந்தது. 1980 ஜூலையில் இந்திரா காந்தி ஒரு புதிய தொழிற்கொள்கையை அறிவித்தார். அவர் முதல்முறை (அவரசநிலைக்கு முன்னால்) பதவியிலிருந்தபோது ஏற்படுத்திய ‘கழுத்தை நெறிக்கும்’ ஆட்சிக்கு எதிராகச் சின்னச்சின்ன விலகல்களை முற்றிலும் எதிர் திசையில் கொண்டு செல்வதாக அது அமைந்தது. இந்தச் சீர்திருத்தங்கள், இறக்குமதிகள் மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கின, தனியார் தொழில்துறை மேலும் உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ளவும், ஏகாதிபத்திய உரிமைக்கு எதிரான சட்டங்களின் பயமின்றித் தொழிலகங்கள் பெரிதாகவும் அனுமதி அளித்தன.

Siragu-Economy-kattam3

1984இல் இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு, அவருடைய மகன் ராஜீவ் காந்தி சீர்திருத்தங்களைத் தொடர்ந்தார். முன் தலைமுறையின் சமதர்ம அல்லது காந்தியச் சிந்தனையினால் சிறிதும் தொல்லைப்படாமல், நவீன வசதிகளான தனியார் வாகனங்கள், வண்ணத் தொலைக்காட்சி போன்றவற்றை மேலும் ஏற்றுக்கொண்டு, நவீன தொழில்நுட்பத்தை வளர்த்தும், நிர்வாகத் திறனை மேம்படுத்தியும், பொருளாதாரப் போட்டியை ஊக்குவித்தும் ராஜீவ் காந்தி இந்தியாவை இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்குள் செலுத்த முனைந்தார். மேற்கத்திய நுகர்வுப் பாணிகளை விரும்பிய நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவை இது அவருக்குப் பெற்றுத்தந்தது.

Siragu-Economy-kattam5

1980களின் மேட்டுக்குடியினர் தலைமை ஏற்ற இந்தக் கட்டுப்பாட்டுநீக்கம், தனியார் துறைகளின்மீது இருந்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியது, இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட வாகனங்களையும், வண்ணத் தொலைக்காட்சிகளையும் வைத்துக் கொள்ளுமாறு நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியையும் நுகர்வோருக்கான வரிவிலக்கையும் தாராளமாக்கியது. இதன் விளைவாக நீடித்துழைக்கும் பொருள்கள் உற்பத்தித்துறை 1980களில் ஆண்டுக்கு 8 முதல் 22 சதவீதமாக வளர்ச்சியடைந்ததோடு, அது நுகர்வோர் பெருக்கத்தையும் உருவாக்கியது. ஒட்டு மொத்த உற்பத்திவீதம் 5.6 சதவீதம் ஆகியது. இது கடந்த ஆண்டுகளின் ஜனதா கட்சியின் அவப்புகழ் பெற்ற ‘இந்து வளர்ச்சி வீதமான’ 3.5 சதவீதத்தைவிட மிகுதி. வெளிநாட்டுக் கடனும், கடன்மீதான வட்டியும் 1980களில் முன்னைவிட மூன்றுமடங்காக, 23.8 பில்லியன் டாலரிலிருந்து 62.3 பில்லியன் டாலராக அதிகரித்தது.

ஆனால், இறக்குமதி சார்ந்த இந்த நுகர்வோர் வளர்ச்சிக்கேற்றவாறு ஏற்றுமதியின் அதிகரிப்பு இல்லை. இது, அயல்நாட்டுப் பணத்தின் இருப்புநிதியில், அந்நியச் செலாவணியில் ஒரு கடுமையான பற்றாக்குறை நிலையை உருவாக்கியது.

Siragu-Economy-kattam7

1991இல் ஒரு தேர்தல் கூட்டத்தில் ராஜீவ் காந்தி, ஸ்ரீலங்காவில் சிங்களருக்கு ஆதரவாக இந்தியாவின் குறுக்கீட்டை விரும்பாத ஓர் இலங்கைத் தமிழ்த் தற்கொலைப் படையாளியினால் கொல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டது. இரண்டு காந்திகளும் தொடங்கிவைத்த சிறிய சிறிய சீர்திருத்தங்கள், நவதாராளமயச் சீர்திருத்தங்கள் முழு அளவில் நிறைவேறுவதற்கான மேடையை அமைத்தன. அவற்றைச் செய்தவர் நரசிம்மராவ். ராஜீவ் காந்தி கொலையினால் கிடைத்த அனுதாப அலை வாக்குகளைக் கொண்டு 1991 ஜூனில் காங்கிரஸ் கட்சி தேர்தலை வென்றபோது அவர் பிரதமர் ஆனார்.

கட்டம் 3: நவதாராளமயமாக்கம், 1991 முதல்

சோவியத் கூட்டமைப்பு நாடுகளுக்கு 1989ஆம் ஆண்டைப்போல, இந்தியாவின் தாராளவாதிகளுக்கு 1991 அமைந்தது. அதாவது ‘பழைய கெட்ட காலத்தின் முடிவு’ என்று பல பொருளாதார வாதிகள் சொல்கின்றனர். இந்தியாவின் நன்கு கற்றறிந்த நவ தாராளவாதியான குர்சரண் தாஸ், 1991 இன் ‘பொன் வசந்தத்தைப்’ பற்றி, அது “இந்தியாவின் இரண்டாவது சுதந்திரம்…. ஒரு பொருளாதாரப் புரட்சி… 1947இல் நேரு தொடங்கிய அரசியல் புரட்சியை விட முக்கியமானது” என்று நினைக்கிறார். 1991இல் இந்திய அரசாங்கம் தொடங்கி வைத்த நவதாராளவாத சீர்திருத்தங்களைக் கொண்டாடுவதற்கு, வியாபார பேரமையங்கள், பெரும்பாலான மையநீரோட்ட ஊடகங்கள், சுதந்திரச்சந்தைப் பொருளாதாரவாதிகள், இந்தியாவின் மேல்நோக்கி நகரக்கூடிய நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினர் ஆகியோர்க்கு வார்த்தைகளே இல்லை.

காங்கிரஸ் பிரதமரான (1991-96) நரசிம்மராவும், அவரது நிதியமைச்சரான மன்மோகன் சிங்கும் (இவர் பின்னர் பிரதமரானார்) இந்தியாவைச் செல்வம், புகழ் ஆகியவற்றின் வேகப்பாதையில் செலுத்திய புரட்சி நாயகர்கள் என்று புகழப்பட்டனர்.

முந்திய தலைமுறையில், மேட்டுக்குடியினர் தலைமையேற்ற நுகர்வோர் பெருக்கத்தினால் உண்டான வணிகப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி இருப்புக் குறைபாடு ஆகியவற்றுக்கு எதிர்வினையாக அமைந்தவை இந்த 1991 சீர்திருத்தங்கள். இதனுடன் 1990இன் வளைகுடாப் போரினால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வும் சேர்ந்துகொண்டது. மோசமான பொருளாதார நிலைமை, முதலீடு அந்நிய நாடுகளுக்குச் செல்வதற்குக் காரணமாகியது. அதனால் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் தங்கள் சேமிப்புகளை இந்திய வங்கிகளிலிருந்து திரும்பப் பெற்றனர். அப்போது தான் சர்வதேசப் பணநிதி (ஐஎம்எஃப்), உலகவங்கி ஆகியவற்றிடம் பல கட்டுப்பாடுகளுடன்கூடிய கடனை இந்தியா பெற நேர்ந்தது.

அரசு-பொருளாதார உறவை முழுமையாக மாற்றியமைக்க இந்தக் கடன் ஒரு முகாந்திரமாக அமைந்தது. இந்தியா தன் அரசாங்கத்தைப் பொருளாதாரத் தொழிலகங்களைச் சொந்தமாக வைத்திருப்பதையும் நடத்துவதையும் கைவிடவேண்டும் அரசு மானியங்களைக் குறைக்கவேண்டும், மேலும் சந்தை சார்ந்ததாக இந்தியப் பொருளாதாரத்தை ஆக்கவேண்டும், சிவப்பு நாடாத் தன்மையைக் குறைக்கவேண்டும் என்பவை கடனின் நிபந்தனைகளின் ஒரு பகுதி. வழக்கமாகவே ஐஎம்எஃப்-உலகவங்கி விதிக்கும் நிபந்தனைகள்தான் இவை.

ஆனால் இந்தச் சீர்திருத்தங்களை ஓர் ஏழையான, ஆதரவற்ற இந்தியாவின் மீதான நவ ஏகாதிபத்தியத் திணிப்பாகக் காண்பது தவறு. சூழ்நிலை மிகவும் சிக்கலானதாக இருந்தது. இந்தியத் தொழிலதிபர்களும் கொள்கை வகுப்போரும் இந்தச் சீர்திருத்தங்களை எதிர்க்கவில்லை. உண்மையில், அவர்கள் இந்தியர்களின் பணம் செய்யும், தொழில் முனையும், விலங்குத்தனத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்குத் தேவையானதொரு ஊட்டச்சத்து ‘டானிக்’காக அதை வரவேற்றார்கள். அந்தச் சமயத்தில் உலக வங்கிக்காகப் பணிபுரிந்து கொண்டிருந்த கொலம்பியா பல்கலைக் கழகப் பொருளாதாரவாதியான அரவிந்த் பனகரியாவின் கூற்றுப்படி, “இந்த நிறுவனங்களின் கட்டாயத்திற்கென தொடக்க தாராளமய ‘பாக்கெட்டை’ உலகவங்கி திணித்தாலும், முன்வைக்கப்பட்ட சீர் திருத்தங்கள் “இந்தியாவின் மூலத்தில் தோன்றியவை; இந்தியக் கொள்கை வகுப்போரின் ஒருமித்த மனப்பான்மையைப் பிரதிபலித் தவை.”

பலபேரின் எதிர்ப்புக் கூற்றுகளுக்கு மாறாக, சர்வதேசப் பண நிதியம், உலகவங்கி ஆகியவற்றின் செல்வாக்கு செயல்பாடுகளின் முதல்கட்ட அளவில் நின்றுவிட்டது. 1991 டிசம்பரின் கட்டுமானச் சரிப்படுத்தல் கடனுக்குப் (எஸ்ஏஎல்) பிறகு, இந்திய அரசாங்கம் மறுபடியும் அதிகாரத்திற்கு வந்துவிட்டது”.

Siragu-Economy-kattam4

உண்மை என்னவென்றால், 1980களில் ராஜீவ் காந்தியின் தாராளமயச் சோதனைகள் தொடங்கி, இந்தியா அதுவரை பின்பற்றிய உள்முகநோக்குக் கொண்ட, அரசு நிர்வகித்த, பொருளாதாரப் பாதையிலிருந்து இந்தியத் தொழில்துறை விடுபடத் துடித்துக் கொண்டிருந்தது. ஏற்றுமதிச் சந்தைகளில் பங்கேற்க ஆர்வமாகவும் இருந்தது. அதற்குப் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டு தேவையாக இருந்தது. இந்திய வணிகத்தொழில்கள், தொலைத் தொடர்பு, நிதிச் சேவைகள், பங்குச் சந்தை வியாபாரம், இவை போன்ற பொருளாதாரத்தின் புதிய பகுதிகளுக்குள் நுழையவும் ஆர்வமாக இருந்தன. ஆகவே நடைமுறையில், நாட்டின் கூட்டுக்குழும(கார்ப்பரேட்)ப் பகுதி, தன்னைப் பெரிதாவதிலிருந்தும், தனியாகவோ, அயல்நாட்டுக் கூட்டுடனோ, உலக அரங்கில் பரவுவதிலிருந்தும் தடுத்துவந்த அரசுக் கட்டுப்பாடுகளை ஒழிக்கத் துடித்துக் கொண்டிருந்தது.

நரசிம்மராவும், ‘ஆக்ஸ்பிரிட்ஜ்’ கல்விகற்ற பொருளாதார நிபுணரும் அவரது நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கும் ஐஎம்எஃப் – உலகவங்கி நிபந்தனைக்கட்டை ஒரு முழுமையான மாற்றத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஹார்வர்டு எம்பிஏ வான ப. சிதம்பரத்துடனும், ஆக்ஸ்ஃபோர்டில் பயிற்சிபெற்ற புகழ்பெற்ற பொருளாதாரவாதியான மான்டெக்சிங் அஹ்லுவாலியாவுடனும் மன்மோகன் சிங் கூட்டுச்சேர்ந்தார். இவர்கள் மூவரும் ‘கட்டுப்பாட்டு நீக்கக் கேளிக்கை’யில் ஈடுபட்டனர். பல ஆண்டுகள் கஷ்டப்பட்டுக் கட்டமைத்த சிக்கலான ஒழுங்குமுறை களையும் சிலமணிநேரங்களில் சிலசமயங்களில், நீக்கிவிட்டனர். இரண்டு ஆண்டுகளில், ஒற்றையுரிமைகள் மீதான ஒழுங்கு முறைகளை எல்லாம் தளர்த்தியதோடு, வங்கித்துறை, விமானப் போக்குவரத்து, மின் உற்பத்தி, பெட்ரோலியம், கைப்பேசிகள் போன்ற அரசுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியார் துறைக்குத் திறந்துவிட்டனர். அயல்நாட்டு முதலீட்டுக்கும் 34 பெருந்தொழில்களில் பெரும்பான்மை நிலையில் அவை தானாகவே உரிமை பெறுமளவுக்குத் நாட்டைத் திறந்துவிட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக, பெருவணிகங்களுக்கும் வணிகக் குழுமங்களுக்கும் வரிகளைக் குறைத்தனர். சுங்க வரிகளையும் குறைத்தனர். முதலீட்டுச் சந்தையை பன்னாட்டு முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிட்டனர். இந்தியக் குழுமங்கள் அயல்நாட்டு நிதிச் சந்தைகளில் கடன் பெறவும் முதலீடு செய்யவும் அனுமதியளித்தனர்.

இந்தச்  சீர்திருத்தங்கள் யாவும் இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவு ஐஎம்எஃப் – உலகவங்கியின் சந்தை அடிப்படை வாதத்துக்கு ஒத்துச்செல்ல வைத்தன. சுதந்திர வணிகம், தடையற்ற முதலீடுகள், ஒழுங்குமுறை நீக்கம், அரசுத்துறைத் தொழில்களைத் தனியார் மயமாக்குதல் என்ற நவதாராளவாத நற்செய்தியின் எல்லாக் கூறுகளையும் இந்தியக் கொள்கையாளர்கள் தழுவிக்கொண்டனர்.

நேருகாலத்திலிருந்து பாரம்பரியமாகப் பெற்ற மனிதத் தன்மையோடு கூடிய வளர்ச்சி என்ற பழைய சமதர்ம வாய்பாட்டை வாயளவில் சிலசமயம் கூறிவந்தபோதிலும், இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள், சந்தைகள் நல்லவை; அரசாங்கங்கள் தீயவை; உலகச் சந்தைக்கு மாற்று இல்லை; என்ற புதிய மந்திரங்களைப் பெற்றுக்கொண்டனர்.

“உயரும் அலைமட்டம், எல்லாப் படகுகளையும் உயர்த்திவிடும்” என்ற ஒளிமயமான நம்பிக்கை, எல்லா இடங்களிலும் செல்லுபடியாவதில்லை!

வர்க்க-சாதி நெகிழ்ச்சிக்கான தடைகள் தாண்ட முடியாத அளவு கடினமாக உள்ள இந்தியா போன்றதொரு நாட்டில் இது நிகழ்வதே இல்லை என்பதை நாம் பின்னர் காணப்போகிறோம்.

-தொடரும்


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 3”

அதிகம் படித்தது