மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியப் பொருளாதார மாற்றம் – பகுதி – 5

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Aug 20, 2016

Siragu Indian economy2

பெயர்பெற்றோர்களின் வட்டாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, தொழிலகங்களையும், சுரங்கங்களையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும், இலாபநோக்கைக் கொண்ட தனியார் மருத்துவ மனைகளையும், கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் அமைக்கவும், கோயில்களையும், ஆசிரமங்களையும், மரபுவழியான ‘அறிவியல்’களான சோதிடம், யோகம், ஆயுர்வேதம் ஆகியவற்றைப் பரப்பும் ‘ஆய்வு நிறுவனங்களை’ உருவாக்கவும் விவசாய நிலங்களையும் பழங்குடி மக்களின் நிலங்களையும் வாங்கி ஏறத்தாழ இலவசமாகவே மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டுக்குழுமத்துறைக்கு வழங்கிவிட்டன.

கம்யூனிஸ்டுக் கட்சிகளும், தாராளமயத்திற்கு ஆதரவான பிற கட்சிகளுக்கு இந்த ‘நிலத்தைப் பிடுங்கும்’ செயலில் உடனாளிகளாக இருந்துள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட நானோ கார் உற்பத்திசெய்யும் தொழிலகத்தை உருவாக்க, டாட்டா குழுமத்திற்கு நடைமுறையில் 997 ஏக்கர் வளமான விவசாய நிலத்தை மேற்கு வங்காளத்தின் கம்யூனிஸ்டு அரசாங்கம் பரிசாகவே தந்துவிட்டது. விவசாயிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் செய்த தீவிர எதிர்ப்பினால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலையை குஜராத் மாநிலத்திற்கு இடம்பெயர்க்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

siragu Naanjil nadu9ஏழைகளிடமிருந்து நிலத்தைப் பறிப்பது செல்வங்களை உருவாக்குவதற்கு இன்றியமையாத காரணியாகவே மாறிவிட்டது.
கிராமப்புறம், சிறுநகரங்கள், பெருநகரங்களின் சேரிகள் ஆகியவற்றில் வாழும் ஏழைகள், நேரடி நிலப்பறிப்பினால் மட்டுமின்றி, பொதுத்துறை வேலை வாய்ப்புகளில் புறக்கணிப்பு, வேலைக்குறைப்பு ஆகியவற்றாலும் அவதிப்படுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பைக் குறைத்துவருவதாலும், உயர் தொழில்நுட்பத் திறன்களும், கலாச்சார முதலீடும் அற்ற அவர்களுக்கு, அமைப்புசார் தனியார் துறை கதவுகளை மூடி விட்டதாலும், மிகப் பெரும்பான்மையான ஏழைகள், அமைப்புறாத, அல்லது முறைசாராத் துறைகளில் ஏதோ ஒருவிதமாகப் பிழைப்பு நடத்துகிறார்கள்.

அமைப்பு சாரா வணிகத்துறை நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் (என்சிஈயுஎஸ்) சேகரித்த அரசாங்கத்தின் சொந்தத் தகவல்களின்படி, 2005இல் இந்தியாவின் மொத்த உழைப்புச் சக்தியான 4580 லட்சம் தொழிலாளர்களில், 86 சதவீதம் பேர், அதாவது 3950 லட்சம் பேர், அமைப்புறாத் துறைகளில் இருக்கிறார்கள். அதாவது, (கடைக்காரர்கள், தெரு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், கைவினைஞர்கள் போன்ற) சுய தொழில் செய்பவர்களாகவோ, கூலிக்காக வேலைசெய்யும் நிரந்தரமற்ற தொழிலாளர்களாக, வீட்டு வேலைக்காரர்களாக, வேலைக்காரிகளாக, விவசாயக் கூலிகளாக இருக்கிறார்கள். உலகமயமாக்கலினால் உருவான வேலைப்பெருக்கம், பொருளாதாரத்தின் அமைப்புசார்ந்த, அமைப்புசாராத் துறைகள் இரண்டிலுமே இம்மாதிரி சங்கங்களற்ற, முறைசாராப் பணியாளர்களையே உருவாக்கியிருக்கிறது.

இந்தப் பரந்த முறைசாராத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச நலவாழ்வு அடித்தளமும் கிடையாது, அவர்களைக் கசக்கிப் பிழியும் சுரண்டலுக்கான உச்சபட்ச வரம்பும் கிடையாது. முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள உறவு, சட்டப்படியான ஒப்பந்தங்களால் முறைப்படுத்தப்படாதது. மதத்தின், வழக்காற்றின் பாரம்பரியத்தால் நெறிப்படுத்தப்படுவது. ஆதாயமின்மை, ஆதரவின்மை, கூப்பிட்டபோது வரவேண்டிய நிலை, கடனுக்கு ஈடுசெய்ய உழைப்பது, (அல்லது கொத்தடிமைத்தனம்) ஆகிய கட்டாயங்களால் மட்டுமல்லாமல், பால், மதம், சாதி போன்ற சமூக அமைப்பினாலும் அவர்களுடைய உழைப்பு வாங்கிக்கொள்ளப்படுகிறது என்று பார்பாரா ஹாரிஸ்ஒயிட் கூறுகிறார்.

Siragu Indian economy6

முறைசாராப் பொருளாதாரத்தில், நவதாராளவியத்தின் மோசமான விளைவுகள் ஒருவரின் சமூக பொருளாதார நிலைக்கேற்பத் தலைகீழ் விகிதத்தில் உணரப்படுகின்றன. அதாவது இந்த அளவுகோலில், மிகக் கீழ்நிலையில் இருப்பவர்கள், மிகமோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்திய மக்கள்தொகையில் பாதிப்பு எய்தக்கூடிய இருபெரும் பகுதியினரான தலித்துகளும், முஸ்லிம்களும் இதற்கு உதாரணங்கள். 88 சதவீத தலித்துகளும், 84 சதவீத முஸ்லிம்களும் முறைசாரா அல்லது அமைப்புறாத் துறைகளில் பிழைப்பு நடத்துகின்றனர். “தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து தொடங்கிய இந்த உயர்பொருளாதார வளர்ச்சிக்காலத்தில், இவர்கள், வேலையோ, சமூகப் பாதுகாப்போ இன்றி, மிகக் குறைந்த பிழைப்புத் தளத்தில், மிகப் பரிதாபமான, சுகாதாரமற்ற, வாழத்தகுதியற்ற நிலைமைகளில் ஏழைகளாகவே உள்ளனர்” என்று அரசாங்கமே ஒப்புக்கொள்கிறது.

இருப்பினும், சந்தைச் சீர்திருத்தங்கள் தலித்துகளை விடுதலை செய்யக்கூடியவை என்று சில செல்வாக்குள்ள குரல்கள் எழுகின்றன. புதிய சந்தைப் பொருளாதாரத்தை தலித்துகள் எதிர்ப்பதற்கு பதிலாக, அதில் இணைந்துகொள்ளவேண்டும் என்று ஊக்கப்படுத்துவதில் ‘தி பயனியர்’ இதழின் கட்டுரையாளரான சந்திர பான் பிரசாத் முனைந்துள்ளார். 2002இல், பிரசாதும், அவருக்கு ஒத்த சிந்தனையுள்ள அறிவுஜீவிகளும், செயல் ஆர்வலர்களும் தலித் முதலாளியத்திற்கான போபால் பிரகடனத்தை வெளியிட்டனர். தலித்துகள் சந்தைப் பொருளாதாரத்தில் நுழைவதற்கு ஏதுவாக ‘முதலாளியத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும்’ என்று அது அரசாங்கத்தையும் தொழில் துறைத் தலைவர்களையும் கேட்டுக்கொண்டது. இந்த இலக்கை அடைவதற்காக, சந்தைப்படுத்தக்கூடிய புதிய கல்வியை தலித்துகளுக்கு அளிக்குமாறும், அமெரிக்கப் பாணியிலான (வேற்றுமை நோக்காத) உடன்பாட்டுச் செயல்முறையை கூட்டுக்குழுமத் துறைகளில் கடைப்பிடிக்குமாறும் போபால் பிரகடனம் கேட்டுக்கொள்கிறது.

Siragu Indian economy7

முதலாளியம் சாதிமுறையை உடைத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக, நாட்டின் சிலபகுதிகளில் உழைப்புச் சந்தையைச் சுருக்கியதன் விளைவாக, தலித்துகள் இடையே நுகர்வின் அளவும், கூலியின் அளவும் உயர்ந்துள்ளன என்று தலித் முதலாளியத்தை முன்வைப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது ஒரு கட்டுக்கதை என்பதுதான் இந்த நோக்கில் உள்ள ஒரே ஒரு பிரச்சினை. இந்தியாவில் உள்ள சாதியுறவுகளை முதலாளியம் கரைத்தழிக்கவில்லை. மாறாக, எவ்விதச் சமூகப் பாதுகாப்புமின்றி, மிகக் குறைந்த கூலிக்கு முதலாளிகள் கூப்பிட்ட குரலுக்கு வேலைசெய்ய வரும் ஒரு உழைப்பாளர் படையினைத் தக்கவைத்துக்கொள்ள அது முனைகிறது. சில இடங்களில் உள்ளூர் உழைப்புச் சந்தைச் சுருக்கம் தலித்துகளுக்கும், பிற பிற்பட்ட சாதியினருக்கும் பேரம்பேசும் சக்தியை உயர்த்தியிருந்தாலும், ‘பட்டியல் சாதியினராக இருப்பது’, ஒருவரை விவசாயக் கூலியாகவும் ஏழையாகவும் வைத்திருக்கும் வாய்ப்பினை இருமடங்கு ஆக்குகிறது என்ற மெய்ம்மை இருக்கவே செய்கிறது.

பலவழிகளில், இந்திய முஸ்லிம்கள் தலித்துகளைவிட மோசமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் சுய தொழில் செய்பவர்கள். மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 13 சதவீதம் மட்டுமே அரசு அல்லது தனியார் துறைகளில் ஊதியம் பெறும் பணிகளில் உள்ளனர். வெறும் 5 சதவீதம் மட்டுமே அரசுத்துறைகளில் உள்ளனர். அண்மையிலான சச்சார் குழு அறிக்கையின்படி, உலகமயமாக்கல் பிற சமுதாயத்தினரைவிட முஸ்லிம்களை அதிகமாக பாதித்துள்ளது. முஸ்லிம்களின் பாரம்பரியமான பட்டுத்தொழில், நெசவு, தோல், ஆடை உற்பத்தி போன்றவை மலிவான சீன இறக்குமதிகளால் அடிபட்டுள்ளன. இரத்தினக்கற்கள் வெட்டுதல், பித்தளை வேலை போன்றவை ஏற்றுமதிகள் வாயிலாக அதிக வளர்ச்சியைப் பெற்றாலும், அவற்றின் ஆதாயங்கள் அத்தொழில்களின் இந்து உரிமையாளர்களுக்கே செல்கின்றன.

சுருக்கமாக: உயரும் அலைகள், எல்லாப் படகுகளையும் உயர்த்துவதில்லை!

தனியார்மயமாகும் கல்வி

Siragu Indian economy3

உணவு விடுதிகள் நடத்துவதையும், உணவு, தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசிகள் விற்பதையும் விட்டுவிட்டால், கல்வி உடல்நலம் போன்ற சமூக சேவைகளுக்கு அதிக மூலவளம் செலவிடலாம் என்ற அரசின் வாக்குறுதியை வைத்துப் பொதுத்துறை நிறுவனங்களைத் தனி முதலீட்டாளர்களுக்கு விற்றதைப் பகுதியளவேனும் நியாயப்படுத்தலாம். ஆனால் அப்படி நிகழவில்லை. மாறாக, கல்வி, குறிப்பாக உயர்கல்வி என்பது அரசு முதலீட்டு நீக்கம் செய்யப்படும் மற்றொரு துறையாகி விட்டது. எனவே சில சமயங்களில் அரசின் கூட்டோடு இயங்குவதன்றிக், கல்வித்துறை தனியாருக்கு என்றே விடப்பட்டுவிட்டது.

அரசின் வருவாய் உயர்ந்து வந்தபோதும், கல்விக்கும் உடல்நலத்திற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் அரசு செலவிடும் தொகை ஏறத்தாழ மாறாமலும், அல்லது குறைந்தும் வந்துள்ளது. 2008-09 பட்ஜெட், தெளிவாகவே “வரியைக் குறை, செலவை இன்னும் குறை” என்ற நவதாராளமயக் கொள்கையைப் பின்பற்றியது. இதே கொள்கை அடுத்து வந்த பட்ஜெட்டுகளிலும் தொடர்ந்தது. முந்தைய ஆண்டைவிட அரசின் வருவாய் 15 சதவீதம் உயர்ந்தபோதிலும், தொடக்கக் கல்விக்கு பட்ஜெட்டில் 7 சதவீதமே உயர்த்தப்பட்டது. இது பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கே போதுமானதாக இல்லை, மேலும் முன்னரே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தைத் தொடக்கக் கல்விக்கு அளிப்பதாகச் செய்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அரசின் கருவூலம் செல்வத்தில் நிரம்பி வழிந்த போதும், கல்விக்குச் செலவிடுவது மட்டும் 3 முதல் 4 சதவீத அளவிலேயே இருந்தது. அதில் பாதி மட்டுமே தொடக்க, மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்குச் சென்றது. [தமிழ்நாட்டில் இந்த நிலை இன்னும் மோசம்: மழலையர் பள்ளிகளிலிருந்தே தனியார் மயமாக்கப்பட்டு கல்விக்கொள்ளை பிற எந்த மாநிலத்தையும்விட உச்சநிலையில் இருக்கிறது.]

நடைமுறையில், தனியார் மயமாகிப்போன, மிகப்பரிதாபத்திற்குரிய தொடக்கப் பள்ளிகளைப் பற்றி யாவருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது, பெரிய அளவில் இது பற்றி எழுதப்பட்டும் விட்டது. அரசுப் பள்ளிகள் சரிசெய்யவே முடியாத நிலையை எய்தி விட்டதால், சேரிவாழ் மக்கள்கூட தங்கள் குழந்தைகளை (குறிப்பாக ஆண் குழந்தைகளை) ஆங்கில வழித் தனியார் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள். கட்டணத்திற்குக் கல்விதரும் இலாப நோக்குள்ள தனியார் பள்ளிகள் மிகச் சிறுநகரங்களிலும் தொலை தூர கிராமங்களிலும்கூட, நாடெங்கும் முளைத்துள்ளன.

அரசுப் பள்ளிகளுடைய இருளடைந்த நிலையை மேம்படுத்துவதற்கு பதிலாக, அமைதியாக, ஆனால் நிதானமாகப் பொதுச் சேவைகளிலிருந்து விலகிக்கொண்டிருக்கும் மத்திய வகுப்பினரின் உடந்தையோடு, அரசாங்கம் அவற்றைக் கெட்டுப்போக்கி ஒழித்துக் கட்ட முடிவுசெய்துவிட்டது என்று விமரிசகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 2008இன் கல்விக்கான உரிமை மசோதாகூட, “கல்விக்கான உரிமை என்பது சமமற்ற, தரங்குறைந்த கல்விக்கான ‘உரிமை’“ என்ற யதார்த்தத்தை ஒப்புக்கொண்டுவிட்டது. எல்லார்க்கும் பொதுவான பள்ளி முறைமையை உருவாக்குகின்ற இலட்சியம் சுத்தமாகச் செத்துவிட்டது.

Siragu Indian economy5

உயர்கல்விதான் தனியார்மயமாக்கலுக்கான புதிய பிரதேசம் ஆகும். இன்று 1956இன் கம்பெனிச் சட்டத்தின்கீழ்ப் பதிவுபெற்ற எந்தச்சங்கமும், பொது அறக்கட்டளையும் அல்லது கூட்டுக் குழுமமும் ஒரு கல்வி நிறுவனத்தை அமைத்து, பிறகு அதைப் பல்கலைக்கழகமாக அறிவிக்க அரசை ஒரு சட்டமியற்ற வைக்கலாம், அல்லது அரசின் அதிகார அமைப்பு (பல்கலைக்கழக மானியக்குழு-யுஜீசி) அதற்குப் பல்கலைக்கழக ‘அந்தஸ்து’ தர வைக்கலாம். பல்கலைக்கழகம் என்ற பேராசைமிக்க அந்தஸ்தை அடைந்துவிட்டால், பிறகு தனக்கே உரிய விதிகளின்படி மாணவர் சேர்க்கையையும், கட்டணத்தையும் நிர்ணயிக்கலாம், படிப்புத் துறைகளின் உள்ளடக்கத்தை வகுக்கலாம், பாடம் நடத்தும் முறைகளையும் தானே நிச்சயித்துக்கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுவிட்டால், ஒரு “பாடம் நடத்தும் கடை”, பட்டமளிக்கும் தகுதியையும், கட்டணங்கள், ‘நன்கொடைகள்’ வாயிலாகப் பணம் சேர்க்கும் தகுதியையும் பெற்றுவிடுகிறது.

கோட்பாட்டளவில், யுஜிசி வகுத்துள்ள சில குறைந்தபட்சத் தரங்களைப் பின்பற்ற வேண்டும் என்றாலும், அது ஒரு மிகப் பெரிய தடையல்ல, குறிப்பாகக் கல்வித்திட்டத்தில் மதத்தைப் புகுத்தும் நிலை வரும்போது. முந்தைய பிஜேபி நிர்வாகத்திலேயே, வேத சோதிடம் போன்ற துறைகளில் பி.ஏ., எம்.ஏ., பாடங்களுக்கு மட்டுமல்ல, பிஎச்.டி ஆய்வுக்கும் ஒப்புதல் தந்ததோடு மட்டுமின்றி, வாஸ்து சாஸ்திரம், கர்மகாண்டம் போன்ற விஷயங்களைப் புகுத்தவும் யுஜிசி ஏற்றுக்கொண்டுவிட்டது. (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கல்வியைக் காவிநீக்கம் செய்வதாக வாக்களித்திருந்தாலும், அறிவு பெருகுவதற்கும் பரவுவதற்கும் எதிரான இந்தப் பாடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இதற்கு ஒரு பகுதிக் காரணம், 2004இல் உச்சநீதிமன்றம் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சோதிடத்தைப் பாடமாக நடத்துவதற்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் இருக்கலாம்.)

Senior University Photographer

தனியார்மயமாக்கம் என்பது உயர்கல்வியைப் பெருவணிகமாக மாற்றுகின்ற ஒன்று மட்டுமல்ல, அது கடவுளையும் சாமியார்களையும் வணிகத்தில் புகுத்தும் முயற்சியும் ஆகும் என்று காட்டுவதற்குச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. தனியாருக்குரிய, இலாபநோக்கிலான ‘கல்விபோதனைக்கடை’களுக்கு அனுமதிதரும் ஒழுங்கு முறை மாற்றங்கள், மத அறக்கட்டளைகளும், ஆசிரமங்களும், குருஜிக்களும் பூசாரி (அர்ச்சகர்)க் கல்வி, சோதிடம் ஆகியவற்றில் பட்டங்கள் தரும் வணிகத்தில் புகவும், நவீன நிறுவனங்கள் பாரம்பரிய நோக்கில் நிறுவப்படவும் வழிசெய்துள்ளன. ஆனால் இந்தப் பரந்த சூழலைப் பற்றி முதலில் நன்கு புரிந்துகொள்வது அவசியம் என்றால் பின்வரும் புள்ளி விவரங்களைக் காணுங்கள்:

ஃ 2000இல் முழுமையாகத் தனியாரால் நிர்வகிக்கப்பட்ட (அதாவது அரசின் உதவிபெறாத), இலாபநோக்கற்ற, பல்கலைக்கழக ‘அந்தஸ்து பெற்ற’ நிறுவனங்கள் 21 மட்டுமே இந்தியாவில் இருந்தன. 2005இல் இந்த எண்ணிக்கை 70ஆக உயர்ந்தது, 2007இல் 117 ஆயிற்று. 1998க்குப் பிறகு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அனைத்துமே தனியாருக்குச் சொந்தமானவை. அவற்றில் பல, பொதுநல அறக்கட்டளைகளாகப் பதிவு செய்து கொண்டு, தங்கள் ‘இலாபநோக்கற்ற’ சேவைக்காக வரி விலக்கும் பெறுகின்றன; என்றாலும், உண்மையில், அவற்றில் புகுவதற்கு, குறிப்பாகப் பொறியியல், மருத்துவ, வணிகப் பள்ளிகளுக்குள் சேருவதற்கு, ‘நன்கொடைகள்’ என்ற வேஷத்தில் வரம்புகடந்த அளவிலான பணத்தைப் பெறுகின்ற அவை “கல்விபோதனைக் கடைகள்” என்பதற்குமேல் ஒன்றுமில்லை. [அண்மையில் தமிழகத்தில் ஒரு கல்வி 'வேந்தர்' தன் பல்கலைக்கழகத்திற்குப் பொதுநிலங்களை அபகரித்தது, மாணவர்களிடம் மருத்துவப் படிப்பிற்குப் பலநூறு கோடி ரூபாய்கள் வசூலித்தது போன்ற விவரங்கள் சந்திசிரித்தன என்றாலும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. கல்விக்காக யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம் என்ற பரந்த மனப்பான்மை!]

ஃ தொழிற்கல்லூரிகளான மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் உட்படத் தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை 1990இல் 5748. இது 2003இல் 16865ஆக உயர்ந்தது. ஏறத்தாழப் பத்தாண்டுகளில், 11,117 கல்லூரிகள் புதிதாகத் தோன்றிவிட்டன.

ஃ 2003இல் 86.4 சதவீதப் பொறியியலாளர்கள் தனியார் கல்லூரிகளில் படித்து வெளிவந்தவர்கள். இந்த எண்ணிக்கை 1960இல் 15 சதவீதமாக இருந்தது. இதேபோல, 1960இல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வெளிவந்தோர் 6.8 சதவீதம். இது 2003இல் 40.9 சதவீதம் ஆயிற்று.

ஃ அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் தனித்தோ, நாட்டில் ஏற்கெனவே பெயர் பெற்றுள்ள கல்வி நிறுவனங்களுடன் கூட்டாகவோ பட்டங்களை வழங்க அனுமதிக்க ஒரு திட்டம் இருக்கிறது. அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை நாட்டில் அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் மசோதா, 2007இல் வரைவுபெற்றது. ஆனால் அரசியல் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், குறைந்தது 130 அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்கள், பெரும்பாலும் அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் சேர்ந்தவை, உள்நாட்டைச் சேர்ந்த, பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத, தனியார் நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்துள்ளன.

இவை, இரவோடிரவாகப் பறந்து போகும் செயல்பாடுகள் கொண்டவை, இவற்றின் பட்டங்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அங்கீகரிக்கப்படாதவை. கொள்கையளவில், தனியார் அமைப்புகள் உயர்கல்வி நிறுவனங்களை அமைக்க அனுமதி தருவதில் தவறொன்றுமில்லை. உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு, யேல், ஸ்டான்ஃபோர்டு, எம்ஐடி, சிகாகோ போன்ற பல்கலைக்கழகங்கள் எல்லாம் தனியார் நிறுவனங்களே. நாட்டில் தெளிவாகவே நிலவும் பெரும்அளவு உயர் கல்வித் தேவைக்காகத் தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று ஒருவர் வாதிடவும் செய்யலாம்.


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியப் பொருளாதார மாற்றம் – பகுதி – 5”

அதிகம் படித்தது