மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியப் பொருளாதார மாற்றம் –இறுதிப் பகுதி

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Aug 27, 2016

Siragu Indian Economy-L1

உலகத்திலேயே பெரும் எண்ணிக்கையிலான கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் இந்தியா பெற்றிருந்தாலும், கல்லூரி வயது மாணவர்களில் 10 சதவீதத்தினருக்கே இவை இடமளிக்கின்றன. (மாறாக, சீனா கல்லூரி வயது இளைஞர்களில் 20 சதவீதத்தினருக்கேனும் இடமளிக்கிறது. அமெரிக்காவில் 80 சதவீதத்தினர் கல்லூரிக்குச் செல்கின்றனர்.)

இந்தத் தர்க்கம், இந்தியாவின் அடித்தள யதார்த்தங்களைப் புறக்கணிக்கிறது என்பதுதான் பிரச்சினை, தனியார்மயத்திற்கு ஆதரவாக வாதிடுவோர், அரசாங்கம் தொடக்கநிலை, இடை நிலைக் கல்வியில் கவனம் செலுத்துவது சமநிலையை உயர்த்தும், கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வியைத் தனியாரிடம் விடவேண்டும் என்ற உலக வங்கியின் பழமைக் கொள்கையை ஏற்கிறார்கள். 1997இல் இந்திய அரசாங்கம் இந்தத் தர்க்கத்தை ஏற்றுக்கொண்டது. தொடக்கநிலைக் கல்விக்கு அப்பாலுள்ள கல்வி, அரசு தலையிடத் தகுதிபெறாத சேவை என அறிவித்தது. உயர்கல்விக்கு வழங்கப்படும் மானியம் அநியாயமானது என்றும், கல்லூரியில் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவுசெய்து படிக்க வேண்டிய பணக்காரர்களுக்கு ஆதரவானது என்றும் வாதிட்டது.

ஆனால் உயர்கல்விக்கு அளிக்கப்படும் மானியங்கள் மிகச் சிறிதளவாக இருந்தபோதும், பணக்காரர்களை மட்டுமே சேர்க்கின்றன என்று சொல்வது சரியல்ல. அரசாங்க மானியம் இல்லாதிருந்தால், இந்தியாவில் பெண்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடியினர்களில் இன்று நாம் காண்கின்ற முதல் தலைமுறைக் கல்லூரிக் கல்வி பெற்றோர் தோன்றவே வாய்ப்பிருந்திருக்காது. தேவேஷ் கபூர், பிரதாப் பானு மேத்தா ஆகியோர் சுட்டிக்காட்டுமாறு:

“அரசு மானியங்கள் காரணமாக விளிம்புநிலை மக்கள் கல்விபெற அதிக வாய்ப்புக் கிடைத்துள்ளது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. 1950களில் உயர்கல்வி பயில்வோரில் ஆண்-பெண் விகிதம் 8.29:1 என்ற விகிதமாக இருந்தது. இது 1980களின் பிற்பகுதியில் 1.5:1 எனக் குறைந்து, இன்னும் குறைந்து வருகிறது….பெற்றோர் (மகள்களைவிட) மகன்களுக்கே தனியார் கல்விக்கெனச் செலவுசெய்யத் தயாராக உள்ளனர்…. கல்வி மானியங்கள் வசதிபடைத்தவர்களுக்கே செல்கின்றன என்ற வாதத்திற்கு மற்றுமொரு எதிரான சான்று இது: பட்டியல் சாதியினர் (எஸ்சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) ஆகிய இந்தியாவின் மிக விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், (மருத்துவ, பொறியியல்) தொழிற்கல்வி பெறுவது ஐம்பதுகளின் பிற்பகுதியில் 12:1 என இருந்தது, எண்பதுகளின் பிற்பகுதியில் 8:1 எனக் குறைந்துள்ளது.”

யதார்த்த நிலை இவ்வாறிருக்கும்போதும், உயர்கல்வி வணிகமயமாக்கப்படுவதற்கு ஆதரவு பெருகியே வந்திருக்கிறது. பிஜேபி வழி நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், நடைமுறையில் உயர்கல்வி, வெள்ளித்தட்டில் வைத்துக் கூட்டுக்குழுமத் தொழிலதிபர்களுக்குப் படைக்கப்பட்டது. இந்திய முன்னணி வணிகக் குடும்பங்களின் முக்கியஸ்தர்களான முகேஷ் அம்பானியையும், குமாரமங்கலம் பிர்லாவையும் இந்திய அரசாங்கம் கல்விக் கொள்கையில் அறிவுரை கூற அழைத்தது.

கடந்த ஆண்டுகளில் உற்பத்தியான தொழிற்சாலைப் பணியாளர்களைப் போலன்றி, இருபத்தோராம் நூற்றாண்டுக்குத் தேவையான அறிவுப் பணியாளர்களை உற்பத்திசெய்யும் பரந்த நோக்குடன் இவர்கள், மானிடக்கல்வித் துறைகள், நுண் கலைகள், நிகழ்த்துகலைகள் ஆகிய துறைகளில் தவிர அனைத்துக் கல்வியையும் கட்டுப்பாட்டு நீக்கத்திற்கும், தனியார் மயமாக்கத்திற்கும் பரிந்துரை செய்தனர்.

Siragu engineering6

மாணவர்கள் தங்கள் பட்டங்களுக்கான விலையைத் தருவதற்காக ‘கல்விக்கடன் தொழில்துறையை’ உருவாக்குவதோடு அரசாங்கத்தின் பங்கு குறைந்துபோனது. [அதானி, ரிலையன்ஸ் போன்ற பெரும் கூட்டுக்குழும நிறுவனங்களுக்கு இலட்சம் இலட்சமான கோடிகள் கடனளித்து, அவற்றை வசூலிக்கத் திராணியற்ற இந்த வங்கிக் கல்விக் ‘கடன் தொழிலகங்கள்’ (அவை வாராக் கடனாம்!), மாணவர்களிடமும் ஏதுமற்ற விவசாயிகளிடமும் அடியாட்களை வைத்துக் கடன் தொகையைப் பறிமுதல் செய்கின்றன!]

கல்வியை வணிகமயமாக்குவதற்குச் சட்டரீதியான ஆதரவும் உள்ளது. டி.எம்.ஏ. பாய் நிறுவனத்திற்கும் கர்நாடக அரசுக்குமான வழக்கில், 2002இல் உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பை வழங்கியபோது, இலாபநோக்குத் தனியார் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் தன் ஆசீர்வாதத்தை வழங்கியது. மத, மொழிச் சிறுபான்மையினர் தங்கள் கல்வி நிறுவனங்களைத் தங்கள் விதிகள், மதிப்புகளுடன், அரசின் நிதிக்கொடை மறுக்கப்படாமல் நிறுவிக் கொள்ளலாம் என்று அரசியல் சட்ட உரிமை (பிரிவு 30) கூறுகிறது.

இதற்குப் புதிய விளக்கமளித்த உச்சநீதிமன்றம், இதே உரிமைகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என முடிவு செய்தது. மேலும் இலாபம் என்பதற்கு “நியாயமான உபரி” என்று மறுவரையறை செய்து, தனியார் கல்லூரிகள் தங்கள் கட்டணத்தையும் சேர்க்கை விதிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் அனுமதித்தது.

தனியார் மயமாக்கல், காவிமயமாக்கலுக்கு முடிவு என்றும் அர்த்தமல்ல. இந்துப் பாரம்பரியங்களை நவீனத் தோற்றமளிக்கும் பாடத்திட்டத்தில் புகுத்துதல், தீங்கற்றதாக முழுமையாகத் தோற்றமளிக்கின்ற ‘மதிப்புக் கல்வி’ என்பதை அளிக்கும் நோக்கத்தின்மூலம் செயல்படுகிறது. மதிப்புக் கல்வியை மூன்றாம் நிலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் கூடத் தனியார் துறை எதிர்க்கவில்லை. சொல்லப்போனால், மேற்கத்திய அறிவில் சிறப்பானவற்றை பாரதீய (அதாவது இந்து) மதிப்புகளுடன் கலப்பது அவர்களின் வியாபார உத்தியின் ஒரு பகுதி.

தீங்கற்றதாகத் தோன்றினாலும், எல்லா அரசியல் கட்சிகளின் பாரம்பரியவாதிகளுக்கும் பள்ளிக் கல்வித்திட்டத்தில் இந்தியாவின் இந்து, முஸ்லீம், கிறித்துவ மரபினை விமரிசனமின்றிப் பாராட்டுவதைப் புகுத்துவதற்கு மதிப்புக் கல்விதான் உகந்த கருவியாக இருக்கிறது. பிஜேபி வழிநடத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 2000இல் கல்வித்திட்டத்தை மாற்றியபோது, பள்ளிக் கல்வி யை அது காவிமயமாக்கியது என்று சரியாகவே விமரிசனம் செய்யப்பட்டது. ஆனால் மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் 2005இல் புதிய தேசியக் கல்வித்திட்டச் சட்டகத்தை உருவமைத்தபோது, மாணவர்கள் தங்களுடன் வகுப்பறைக்குள் கொண்டுவரும் ‘உள்ளூர் அறிவு’, ‘உள்ளார்ந்த விவேகம்’ என்பவற்றை மதிக்கும் போர்வையில் எல்லாவிதமான அறிவுக்கெதிரான செய்திகளையும் அறிமுகப்படுத்துவதற்குத் தன் ஆசீர்வாதத்தை வழங்கியது.

“ஒரே உண்மை என்பது இல்லை, அறிவுக்குப் பலவேறு விதமான தோற்றங்களே உள்ளன என்ற பின்நவீனத்துவ வாதத்தைப் பயன்படுத்தி, உள்ளூர் அறிவையும், அறிவியல் கொள்கைகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தால், இரண்டு வித ஒழுங்கமைவுகளிலிருந்தும் மாணவர்கள் தாங்களாகவே சொந்தமாக அர்த்தத்தை உருவாக்கிக்கொள்வார்கள் என்று புதிய கல்வித்திட்டம் ஆசிரியர்களுக்கு அறிவுரைக்கிறது. அறிவின் பல்வேறு சாத்தியமான வடிவங்களுக்குள் ஆன்மிக அல்லது மதஅறிவை இணைப்பதற்குத் தடை எதுவமில்லை ஆதலின் மதத்தைப் பள்ளிக்கல்விக்குள் திருட்டுத்தனமாகக் கொண்டுவந்துவிட முடிகிறது. அரசியல் பொருளாதாரத்தில் தனியார்மயமாக்கலும், சிந்தனைக் களத்தில் சார்புநிலையும் மிக நன்றாக ஒத்துப் போவதுபோலத் தோன்றுகிறது.

சுதேசி (இந்திய) வல்லரசு: உலகமயமாக்கலை விற்பனை செய்தல்

Siragu Indian Economy-L4

ஆழமாகும் சமமின்மை, வளரும் பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவற்றின் இடையில் எழும் இயற்கையான கேள்வி, எப்படி இந்த உலகமயமாக்கல் வடிவத்தை மக்கள்திரள் ஏற்றுக்கொள்ளுமாறு செய்தனர் என்பது. மாநில, தேசியத் தேர்தல்களில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையேனும் மக்களின் ஒப்புதலைப் பெறவேண்டிய அரசியல் கட்சிகள், முதலீட்டு நீக்கம், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் என்பவற்றை எவ்விதம் அவர்களிடம் விற்பனை செய்கின்றன?

கல்வியாளர்கள்-கொள்கை வகுப்போர் இடையில் இன்னும் விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, மேட்டுக்குடிக் கட்டத்திலிருந்து சீர்திருத்தங்கள் நகர்ந்து, வெகுமக்கள் கட்டத்திற்குச் சென்ற போதுதான் (1990களின் இடைப்பகுதியிலிருந்து) சாதாரணமக்கள், தாராளமயமாக்கலின் தாக்கத்தை உணரத் தொடங்கினர். தாராள மயமாக்கலின் வெகுமக்கள் கட்டத்தின் பெரும்பகுதியின்போது, பிஜேபி வழிநடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தது (1998-2004). காங்கிரஸ் வழிநடத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் அதைத் தொடர்ந்தது.

பழைய காந்திய இலட்சியமான சுதேசி அல்லது சுயசார்பு என்பதை இரண்டு கட்சிகளுமே “உலக அரங்கில் இந்தியாவை வல்லமையுள்ளதாக ஆக்கக்கூடிய எதுவும்” என்று அர்த்தப்படுத்தும் விதமாக மெதுமெதுவாக மறுவரையறை செய்தன. கொஞ்சம் கொஞ்சமாக நாம் சுதேசியைப் பற்றிக் குறைவாகவும், வல்லரசு என்பதைப் பற்றி மிக அதிகமாகவும் கேட்கத் தொடங்கினோம்.

1998இல் பிஜேபி அரசாங்கம் நடத்திய அணுச் சோதனைகளுக்குப் பிறகு வல்லரசு என்ற பேச்சு அடிக்கடி கேட்கப்படலாயிற்று. உலக அரங்கில் இந்தியாவின் கௌரவத்திற்கு மிகப்பெரிய சக்தி கொடுப்பனவாக இச்சோதனைகள் விளக்கப்பட்டன. ராப் ஜென் கின்ஸ் என்பவருடைய கூற்றுப்படி, பொருளாதார வட்டத்திலும், பிஜேபி அதேவித கௌரவத்தை உருவாக்கும் என்று உறுதியளித்தது.

Siragu Economic - India1

“பிஜேபி-யின் பார்வையில், சர்வதேசச் சமூகத்தில் இந்தியா தனக்குரிய இடத்தை எடுத்துக் கொள்ளும் என்பதற்கு உலக மயமாக்கல் களமாக அமைந்தது; உலகப் பாதுகாப்புத் துறையில் 1998இன் அணுச் சோதனைகளால் இது அடையப்பட்டது போலவே, இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப நிபுணத்துவமும், வணிக புத்திக்கூர்மையும் இந்தியாவை உலகப் பொருளாதாரத் துறையிலும் செழிக்கவைக்கும்.”

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கின் பின்வரும் கூற்று வல்லரசு சுதேசி (வல்லரசு இந்தியா) என்ற சொல்அலங்காரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்.

“அறிவுத்தொழில்துறையில் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள்….நாம் உலகத்தைச் சென்றடைந்து நமது இருப்பை உலகமயமாக்கலின் மூலமாகப் பதிவுசெய்து கொண்டிருக்கிறோம். இன்று இந்தியத் தொழில் முனைவோர் கொண்டாடப்படுகின்றனர். டாடா, டேவூ நிறுவனத்தை வாங்குவதையும், ரிலையன்ஸ் ஃப்ளாக் நிறுவனத்தை வாங்குவதையும் பாருங்கள். ஆய்வு வெளிநாடு செல்கிறது. மருந்துக் கம்பெனிகள் வெளிநாடு செல்கின்றன. இந்திய நிறுவனங்கள் வெளியே சென்று உலகமயமாகின்றன. இதுதான் சுதேசி.” (அழுத்தம் என்னால் தரப்பட்டது).

இன்று எல்லாக் கட்சிகளுமே வல்லரசு அந்தஸ்தை இந்தியா அடையப்போகிறது என்ற உறுதிமொழியைத் தங்கள் தேர்தல் பேச்சுகளில் பயன்படுத்துகின்றன. அயல்நாட்டு முதலீட்டுக்கு எதிராகக் காவலிருக்கும் சங்கப் பரிவார அமைப்பான சுதேசி ஜாக்ரண் மஞ்ச்-சும்கூட இந்தப் பார்வைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நீண்டகாலமாகக் கடுமையான விமரிசனம் செய்துவந்த சுதேசி ஜாக்ரண் மஞ்ச்சின் தலைவரான எஸ். குருமூர்த்தி, இந்துத்துவ நோக்கில் உலகமயமாக்கலை ஆதரிக்கின்ற சிந்தனையமைப்பான இந்தியன் ஃபர்ஸ்ட் ஃபவுண்டேஷனின் இயக்குநர்கள் குழுவில் அமர்ந்துகொண்டு, “உலகப் பொருளாதார பலத்தைப் பெற அளவிட்ட உலகமயமாக்கல் கருவியாகும்” என்று பேசுகிறார்.

ஆனால் இந்துத்துவ அணிகளின் உள்ளிருந்தே தனியார்மயமாக்கலுக்கும் உலகமயமாக்கலுக்கும்-குறிப்பாக ஆர்எஸ்எஸ்-ஸின் கூட்டுத் தொழிற்சங்கமான பாரதிய மஜ்தூர் சங்கத் (பிஎம்எஸ்)திடமிருந்தும், சிறு உற்பத்தியாளர்களிடமிருந்தும் -எதிர்ப்பு இருக்கிறது. இவர்களால் (பெரும்பாலும் சீனாவிலிருந்து) மலிவாக இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு எதிராகப் போட்டியிட முடியவில்லை. சங்கப் பரிவாரத்தின் அதிகப் போர்க்குணமுடைய பிரிவுகளிலிருந்து, மேற்கத்தியக் கலாச்சார இறக்குமதிகளுக்கும் (உதாரணமாக, காதலர்தினக் கொண்டாட்டம், அழகிப்போட்டிகள், மதுபான விடுதிகள்) குறிப்பிட்ட அளவில், அவ்வப்போது வன்முறை சார்ந்தும் எதிர்ப்பு இருக்கிறது. இதுபோன்ற நாசவேலைகள் செய்பவர்களை பிஜேபி மறைமுகமாக ஆதரிக்கிறது; அதேசமயம், மத்தியவர்க் கத்தினர்கள் இடையே தனக்கு வளர்ந்து வரும் வாக்கு ஆதரவினை பாதிக்காத அளவில் தன்னை அவர்களிடமிருந்து தொலைவுபடுத்திக் கொள்ளவும் செய்கிறது.

சுதந்திரச் சந்தைகளை சற்றும் தயக்கமின்றி ஆதரிக்கும் கருத்தியல் சொல்லாடலை மேற்கொள்பவர்களில் மேலும் இரண்டு குழுவினர் உள்ளனர். முதலாவது குழுவினர், சங்கப் பரிவாரத்தின் மதவாத திட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள். “இந்துமதம், தனிநபரை மேம்படுத்தும் மதம்” என்ற விளக்கத்தை ஆதரிப்பவர்கள் இவர்கள். இவர்களில் முக்கியமானவர்களும், செல்வாக்கு மிகுந்தவர்களும் என, (முந்தியபகுதி ஒன்றிலேயே ஒரு விசித்திரமான அரசியல்-பொருளாதாரவாதி என்று நாம் கண்ட) சுப்பிரமணியம் சுவாமி, (நன்கு அறியப்பட்ட பொதுமனிதரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அரசுமுதலீட்டுநீக்க அமைச்சராகப் பணிபுரிந்தவருமான) அருண் ஷோரி ஆகியோரைக் கூறலாம்.

உலகெங்கிலுமுள்ள தொழிலதிபர்கள், பெருவணிகர்களின் செல்லப்பிள்ளை ஆகியுள்ள, குஜராத்தின் முதலமைச்சரான [இப்போது இந்தியப் பிரதமர்!] நரேந்திர மோடியையும் இவர்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். இம்மாதிரிக் கருத்து நோக்கினைக் கொண்டவர்களை இந்துத்துவ நவதாராளவாதிகள் எனலாம்.

இரண்டாவது குழுவினர், மதச்சார்பின்மையை (அல்லது குறைந்தபட்சம், இந்துத்துவம் அற்ற) முன்நிறுத்தும் வலதுசாரிக் கட்சியினர். இவர்கள் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸின் பிரிவுபடுத்தும் முஸ்லிம் எதிர்ப்பு, கிறித்துவ எதிர்ப்புத் திட்டங்களை ஒதுக்குபவர்கள். தனிநபர் உரிமைகள், சுதந்திரம், சிறு அரசாங்கம், மதத்தையும் அரசையும் வேறுபடுத்தல் ஆகியவற்றில் செவ்வியல் தாராளவாத நிலைப்பாடுகளைப் பிரபலப்படுத்துபவர்கள். ஒருவிதமான இன்றைய சுதந்திராக் கட்சிக்காரர்கள். இந்தக் கருத்தியலைப் பகிர்ந்துகொள்பவர்களை நியாயமாக இந்துத்துவம்-சாராத நவதாராள வாதிகள் எனலாம்.

இந்துத்துவ நவதாராளவாதிகள், அமெரிக்க மதவாத நவபழமைவாதிகளுக்கு (தியோகான்கள் அல்லது இறையியல் பழமையாளர்கள்) நெருங்கிய கருத்தியல் உறவினர் ஆவர். அமெரிக்கத் தியோகான்கள், ரோமன் கத்தோலிக்க மதத்தின் இயற்கைச் சட்ட மரபிலிருந்து பெறப்பட்ட இறையியல் உலகப் பார்வையிலிருந்து தங்கள் தீவிர ஆர்வத்துடன்கூடிய அமெரிக்க தேசியவாதத்தையும், முதலாளித்துவ விருப்பத்தையும் நியாயப்படுத்துபவர்கள். (ட்ரம்ப்பை நினைவு கொள்ளுங்கள்).

கொள்கை ரீதியிலாவது அமெரிக்க அடிப்படைக் கோட்பாடான திருச்சபை-அரசு பிரிவினையை ஏற்றுக் கொள்ளும் மைய நீரோட்டச் சீர்திருத்தக் கிறித்துவப் பிரிவுகளைப் போலன்றி, தியோகான்கள், மதச்சார்பின்மையை ஒரு தீட்டாகவும், அமெரிக்காவின் கலாச்சார நோய்களுக்கு முதன்மையான மூலமாகவும் நோக்குபவர்கள். ஜியார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் விசுவாச அடிப்படை (தொழில்தொடக்க) முயற்சிகளுக்குத் தத்துவரீதியான நியாயப்படுத்தலை வழங்கியவர்கள். அமெரிக்க தேசத்திற்கு முன்நிபந்தனையும் முதலாளித்துவ சுதந்திரச் சந்தைகளின் செயல்பாட்டுக்கு முதல் தேவையும் கிறித்துவமத விசுவாசமே என்று வலியுறுத்துபவர்கள்.

இதேபோல, இந்திய தேசத்திற்கு முன்நிபந்தனையும், இந்திய முதலாளித்துவம் முறையாகச் செயல்படுவதற்கான முன் தேவையும் இந்து மதமே என்ற கருத்தியலை இந்தியத் தியோகான்களாகிய இந்துத்துவ நவதாராளவாதிகள் முன் வைக்கின்றனர். இந்த நிலைப்பாட்டை சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துகள் எடுத்துக்காட்டுபவை. 1970களில் இந்து மறுமலர்ச்சியையும் முதலாளித்துவத்தின் தலையிடாக் கொள்கையையும் இணைக்கவேண்டும் என்று சுப்பிரமணியம் சுவாமி கூறியபோது சிரித்து ஒதுக்கப்பட்டார். ஆனால் இதே சிந்தனைகள், பலவேறு பத்திகளிலும், இணையதள வலைப்பூக்களிலும் மறுசிப்பம் செய்து இன்று தரப்படும்போது, உள்நாட்டிலும், அயல்நாட்டிலுள்ள அயலக இந்தியர்கள் இடையிலும் புதிய வரவேற்பைப் பெறுகின்றன.

நேருவின் சமதர்மவாத, சகிப்புத்தன்மையின் எல்லாக் கூறுகளையும் கலைத்தெறியவும், ஆண்டுக்கு 10 சதவீதம் என மொத்த உள்நாட்டு உற்பத்தி வளரும்படி தனியார் துறை செழிக்கும்படியாக உள்கட்டமைப்பையும், கொள்கைகளையும் வழங்குமளவுக்கு மட்டும் அரசைக் குறுக்கவும், தங்கள் ஆர்வங்களை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் செயல்தந்திர ஆர்வங்களுடன் ஒத்துச்செல்லவும் தேவையான அரசியல் விருப்புறுதியை இந்தியர்கள் வளர்த்துக் கொண்டால், 2025அளவில் இந்தியா ஓர் உலக வல்லரசாக மாறும் என்று சுவாமி வாக்களிக்கிறார்.

Illustration of a graph where the figures suddenly fall through the floor

இவை அனைத்தும் தேவை என்றாலும், இந்தப் பொருளாதார, அயல்நாட்டுக்கொள்கைச் சீர்திருத்தங்கள் போதுமானவை அல்ல. மேலும் தேவையானது, இந்துஸ்தானத்தின் (இந்தியாவுக்கு அவர் விரும்பும் பெயர்) வெகுமக்களின் (முஸ்லிம்கள், கிறித்துவர்கள் உள்பட) இதயங்களிலும் மனங்களிலும், பள்ளிகள், அரசாங்கம், பெருவணிக நிறுவனங்களிலும் சமஸ்கிருத இந்துமதம் மீண்டும் அரியணை ஏறவேண்டும் என்பதே. பொருளாதார வல்லரசுத்தனம் என்பது இந்து மறுமலர்ச்சியோடு சேரும்போதுதான் வரும்:

“இந்தியா உலகப் பொருளாதார சக்தியாக மாறுவது போதாது. உலகமுறைமையில் அவள் உரிய இடத்தைப் பெற வேண்டுமானால், சுயசந்தேகம் அற்ற ஓர் ஆண்மையுள்ள மன அமைப்பினால் முழுமையான இணைப்பைப் பெறுவதோடு, கடந்த ஆயிரம் ஆண்டுகளாகச் சேகரித்த அழுக்கையும், தேவையற்ற மூட்டைமுடிச்சையும் சுத்தப்படுத்த ஓர் இந்து மறுமலர்ச்சிக்கும் ஆளாகவேண்டும்.”

வேடிக்கை என்னவெனில், தனியார் தொழில்களின் வழியிலிருந்து அரசு விலகியிருக்க வேண்டும், ஆனால் மக்களின் பொதுப்பணத்தை மட்டும் இந்துமத மறுமலர்ச்சியை ஊக்கத்தோடு மேம்படுத்த அது பயன்படுத்தவேண்டும் என்று சுவாமியும் அவருடைய சக இந்துத்துவ நவதாராளமய வாதிகளும் விரும்புகிறார்கள்.

அதாவது, பொருளாதார விஷயங்களில் அரசு குறைந்தபட்சப் பங்கும், இந்துமதத்தைப் பரப்புவதில் மிகப்பெரிய பங்கும் வகிக்கவேண்டும். இந்தியாவை ஆரியர்களின் தாயகமாக ஆக்கும் ‘சரியான வரலாற்றை’ அரசு கற்றுக்கொடுக்க வற்புறுத்தவேண்டும். மேலும், அறிவியலையும் இந்து ஆன்மிகத்தையும் வகுப்பறையில் ஒன்றாகக் கொண்டுவந்து ஒரு இந்திய முன்மாதிரிக் கல்வியை அரசு மேம்படுத்த வேண்டும். தங்கள் சொந்த மத நம்பிக்கைகள், மரபுகள் என்னவாக இருப்பினும் எல்லா இந்தியர்களும் இந்த ‘அறிவியல் ஆன்மிகத்தை’த் தங்கள் சொந்தப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ஏற்கவேண்டும்.

(இங்கும், அமெரிக்காவின் மத வலதுசாரியினரோடு இவர்களுக்குள்ள இணைவரைகள் மிக முனைப்பானவை. பழமைவாத நற்செய்தியினரும், கத்தோலிக்கக் குழுக்களும் புஷ்ஷின் வெள்ளை மாளிகையின் சக்தியைக் குழந்தை பெறும் உரிமைகள், ஸ்டெம்செல் ஆய்வு, விசுவாச அடிப்படையிலான முனைப்புகள் ஆகியவற்றில் சமூகத்தில் பழமைவாதச் சட்டங்களைக் கொண்டுவருவதற்குப் பயன்படுத்துவதில் எவ்வித உறுத்தலையும் அடையவில்லை. ஆனால் அரசாங்கத்தின் பொதுநலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியில் மிகப்பெரிய வெட்டுகளை மட்டும் ஆதரித்தார்கள்.)

இப்போது இந்துத்துவம் சாராத நவதாராளவாதிகளுக்கு வருவோம். 2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலகத்தில் பிஜேபி கூட்டாளியானதால் ஏமாற்றமடைந்து, சுந்திரச் சந்தையின் உற்சாகிகளில் பலர் பழைய சுதந்திராக் கட்சியை உயிர்ப்பிக்க தீவிரமாகச் சிந்தித்தனர். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தொழிலதிபர்களில் இருவர் இம்மாதிரி திட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தனர். பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட தகவல்தொழில்நுட்ப, அயல்சேவைப் பயன்பாட்டு நிறுவனம் எம்பசிஸ். இதன் நிறுவனரும் தலைமை அதிகாரியுமான ஜயதீர்த் (ஜெரி) ராவ், “மலிவான வெகுஜனத் திட்டங்களில் ஒளிந்துகொள்ளாமல், வெளிப்படையான, தற்காப்புவாதமற்ற, சுதந்திரச் சந்தைகளுக்கு ஆதரவு தருகின்ற சுதந்திரா போன்றதொரு புதிய கட்சியைத் தொடங்கவேண்டும்” என வாதிட்டுள்ளார்.

இந்தியாவில் மிகநன்கு அறியப்பட்ட மென்பொருள் குழுமமான இன்ஃபோசிஸின் நிறுவனரும் தலைமை அதிகாரியுமான நாராயணமூர்த்தி, பழைய சுதந்திராக் கட்சியை உயிர்ப்பித்து, அதன் தளத்தில் நின்று தேர்தல்களைச் சந்திக்கத் தனது சொந்தப் பணத்திலிருந்து நாற்பதுகோடி ரூபாய் வரை செலவுசெய்ய விருப்பமாக உள்ளார் என்று சொல்லப்பட்டது.

நவதாராளவாதிகள் இடையில் மிகச் செல்வாக்குமிக்க குரலாக எழுச்சி பெற்று வந்துள்ள குர்சரண் தாஸ், பின்வருமாறு செய்யக்கூடிய ஒரு கட்சியை உருவாக்கவேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்:

“அரசியல் காரியங்களைவிடப் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் தரும், அதிகாரி வர்க்கத்தைவிடச் சந்தைகளை நம்பும். இதுவரை எந்தக் கட்சியும் செய்யாததைச் செய்யக்கூடியதாக இருக்கும்….அதாவது, பொருளாதார, சமூக, நிர்வாகச் சீர்திருத்தங்களை மக்களுக்கு விற்பதாக இருக்கும் .… கடைசியாக, அது மதத்தைப் பொதுவெளியிலிருந்து அகற்றித் தனி(நபர்) வெளிக்குள் இருத்தச் செயல்படும்.”

சுதந்திராக் கட்சியைப் போற்றுபவர்களுக்கு, இப்படிப்பட்டதொரு கட்சி தேர்தல்களில் வெற்றிபெறும் வாய்ப்பு மிகக் குறைவு என்று நன்றாகத் தெரியும். ஆகவே அவர்கள் இரண்டாவது சிறந்த வாய்ப்பைத் தேர்வுசெய்யத் தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது. சுதந்திரச் சந்தையைப் பாதுகாக்கவும், வளர்ச்சிக்கு ஆதரவான தீர்வுகளைப் பொதுவட்டத்தில் தரவும், சிந்தனை அமைப்புகள், அரசுசாரா அமைப்புகளுடன் சேர்ந்து ஓர் இயக்கம் தொடங்கவேண்டும். தில்லியை அடிப்படையாகக் கொண்ட குடிமக்கள் சமூக மையம் (செண்டர் ஃபார் சிவில் சொசைட்டி), பிரகதி என்ற மாத இதழைக் கொண்டுவரும் வலைப்பூக்காரர்களின் சங்கமான ‘தி இந்தியன் நேஷனல் இண்டரஸ்ட்’ என்ற அமைப்பு உருவாக்கம், ஆங்கில நாளிதழ்களின் ஆசிரியவுரை, கருத்துப்பக்கங்கள் ஆகியவற்றில் காணப்படும் நவதாராளவாத நிலைப்பாடுகளின் அதிக அளவிலான நீடித்த தன்மை ஆகியவற்றால் இப்படிப்பட்ட இயக்கம் தோன்றுவதற்கான தொடக்கத்தை நாம் காணமுடியும். இம்முயற்சிகள் நாட்டின் தேர்தல் அரசியலில் ஏற்படுத்தும் நிஜமான தாக்கத்தைக் காலம்தான் கூற இயலும்.

இந்து வலதுசாரிகளின் கைகளில் பழைய சுதந்திராவைப் புகச்செய்த அதே தவறுகளையே நவ-சுதந்திராக்காரர்களும் செய்வதாகத் தோன்றுகிறது. ஏற்றத்தாழ்வுகள் ஆழமாக வேரூன்றியிருக்கும் இந்தியாவில், பெற்றுக்கொள்ளும் முனையிலிருக்கும் ஏழைகளுக்குத் தங்கள் முன்னோர்களைப் போல, நவசுதந்திராக்காரர்களும் “கீழ்நோக்கிக் கசிதல்” என்ற மந்திரத்தை மட்டுமே கொண்டுள்ளனர். தங்கள் முன்னோர்களைப் போலவே, அவர்களும், இந்தியக் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்து காணப்படும் படிநிலைசார்ந்த சிந்தனைப்போக்குகளின் மத அடிப்படைகளைப் புறக்கணிக்கிறார்கள், அல்லது மென்மையாகக் கையாளுகிறார்கள். அரசாங்கக் குறுக்கீட்டின் பாவங்கள் மீது மட்டுமே தங்கள் கோபத்தைக் குவிக்கிறார்கள்.

உதாரணமாக, கோத்ரா குற்ற நிகழ்வுக்கு பிஜேபி உடந்தையாக இருந்தமை இறுதியாக அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்து வதற்கு முன்னால், அவர்கள் அதிகாரத்திலிருந்த பிஜேபியுடன் கூட்டுச்சேர்ந்து பணியாற்றத் தயாராக இருந்தார்கள். உரிமைகளைக் கொண்ட தனிமனிதருக்கு மரியாதை தருவதன் அடிப்படையிலான தத்துவரீதியான தாராள வாதத்தை, எந்தவகையிலும் பிஜேபி ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. குறைந்தபட்ச அரசு பற்றிய பிஜேபியின் கருத்தாக்கம், சாதிச் சமூகத்திலுள்ள சுயகட்டுப்பாட்டின் அடிப்படை ஒழுங்கை ஆதாரமாகக் கொண்டது. தங்கள் நற்செயலாக, நவதாராள வாதிகள் பிஜேபி, சங்கப் பரிவாரம் ஆகியவற்றின் நச்சுத்தன்மை கொண்ட மத வாதத்தைப் புறக்கணித்துவிட்டார்கள். ஆனால் இந்தியச் சமூகத்தின் பொதுப்புத்தியாக இன்னும் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மானிடத்துவம் (இது ஒரு சாதிச் சமூகத்தின் உலகநோக்கு) என்பதன் தாராளமற்ற உலகநோக்குடன் மோதிப்பார்க்க அவர்கள் சிரத்தை மேற்கொள்ளவில்லை.

இந்திய தாராளவாதிகள், இந்து பாரம்பரியத்தன்மையின் தாராளமற்ற உலகநோக்கிற்குச் செயலூக்கத்துடன் சவால் விடும் வரையில், இந்துத்துவ நவதாராளவாதிகளைத் தாங்களே சேர்த்துக்கொள்ளவும், அல்லது அவர்களால் சேர்த்துக்கொள்ளப்படவுமான அபாயத்திலிருந்து தப்பிக்கவே முடியாது. ஒரு புதிய மதச்சார்பற்ற கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான சவாலைச் செயலூக்கத்துடன் அவர்கள் மேற்கொள்ளும்வரை, மதத்தைத் தனிமனித அளவில் நிறுத்துவது பற்றிய அவர்களின் பேச்சு பொருளற்றதாகத்தான் இருக்கும்.

முடிவுரை

Siragu-Indian-economy-fi

இது வரை நாம் நோக்கியது இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் காணப்படுகின்ற அரசியல் பொருளாதாரப் பின்னணி பற்றிய ஒரு கண்ணோட்டம் ஆகும். இந்திய மேட்டுக்குடியினர், எவ்விதம் நேரு-காந்தியச் சிந்தனையான சுயசார்பு என்பதைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு, உலகச் சந்தைகளை நேசிக்கத் தொடங்கினார்கள் என்பதன் வரலாற்றை இது காட்டுகிறது.

இந்தியப் பொருளாதாரத்திற்கு மிக அதிகமாகக் குறுக்கிடுகின்ற அரசின்மீது சீர்திருத்தம் தேவை என்பதை முழுமையாக ஒப்புக்கொண்டே, இந்த இயல் இந்தியாவின் பேர்பெற்ற பொருளாதார அற்புதத்தின் இருண்டபகுதியை வெளிப்படுத்துகிறது. புதிய பொருளாதாரத்தின் இலாபங்களை மிகப் பெரும்பான்மையினரான பணியாளர்கள் (பெற இயலாமல்) மூடிவிட்ட அதன் அமைப்புக்கூறுகளை இந்தக் கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது.

புதிய பொருளாதாரத்தில் பங்கேற்கத் தேவையான கலாச்சார மூலதனத்தைப் பெறுவதற்கான திறவுகோலாகிய கல்வி, குறிப்பாக உயர்கல்வி, மேலும் மேலும் வணிகமயமாகி வருவதைக் காட்டுகிறது. கடைசியாக-ஆனால் குறைந்ததல்ல, வல்லரசு அந்தஸ்துக் கனவின் வாயிலாக வெளிப்படுகின்ற தேசியப் பெருமிதத்தின் வளர்ச்சியையும் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

 


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியப் பொருளாதார மாற்றம் –இறுதிப் பகுதி”

அதிகம் படித்தது