மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியர்களின் சமய நம்பிக்கைகளும் வாழ்வும்

தேமொழி

Jul 10, 2021

siragu stats on indian religionஉலக மக்களில் ஆறில் ஒரு பங்கு அளவிற்கு, 140 கோடி (1.4 பில்லியன்) மக்களைக் கொண்டது இந்தியா. இவர்களில் 80 விழுக்காட்டினர் சமயம் அவர்களின் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளதாகக் கூறுகிறார்கள். இந்தியா பல சமயங்கள் தோன்றிய ஆன்மீகத் தொட்டில் ஆக இருக்கும் நிலைக்கு, ஆன்மீகத்தை வாழ்வின் ஒரு பகுதியாகக் கருதும் மக்களின் இத்தகைய மனநிலையும், அதே சமயத்தில் ஆன்மிகம் குறித்த மாற்றுச் சிந்தனைகளைச் சகிப்புடன் ஏற்றுக் கொள்ளும் மனநிலையுமே முக்கிய காரணம் ஆகும். இந்திய மண்ணில் தோன்றிய சமயங்களான வைதீக சமயத்தின் பற்பல பிரிவுகளும், பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற வேதத்தைப் பின்பற்றாத பிற சமயங்களும், அயல்நாட்டவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற சமயங்களும் தொல் பழங்குடியினர் சமயங்களும் என பற்பல சமயங்கள் இந்தியர்களால் பின்பற்றப்படுகிறது.

இந்தியாவின் மக்கட்தொகையில், அதிக அளவு மக்கள் தழுவியுள்ள சமயம் இந்துமதம். உலக அளவில் அதிக அளவில் இந்துக்கள் (94%) வாழுமிடமும் இந்தியாவே. இதற்கு அடுத்த நிலையில், இஸ்லாம் அதிக அளவு இந்தியர்களால் பின்பற்றப்படும் சமயமாக உள்ளது. இந்தியா அதிக அளவு இஸ்லாமியர் வாழும் இடத்தில் இரண்டாவது நாடாக தற்பொழுது இந்தோனேசியாவிற்கு அடுத்த நிலையில் உள்ளது. ஆனால், விரைவில், 2050 ஆண்டு வாக்கில் உலகில் அதிக அளவு இஸ்லாமியச் சமயத்தவர் வாழும் நாடாக, சுமார் ஒரு 311 மில்லியனாக இஸ்லாமியர் எண்ணிக்கை உயர்ந்து இருக்கப்போவதும் இந்தியாவில்தான் என்று மக்கட்தொகை வளர்ச்சி குறித்த அமெரிக்க பியூ ஆய்வு மையத்தின் புள்ளியியல் தரவுகள் கணிக்கிறது. அப்பொழுது சமயங்களைப் பின்பற்றுவோர் நிலை; இந்தியர்கள் மத்தியில் ஐவரில் ஒருவர் இஸ்லாமியராகவும், மற்றும் ஒருவர் வேறு ஏதேனும் ஒரு சமயத்தைப் பின்பற்றுபவராகவும், மற்றும் மூவர் இந்துக்களாகவும் இருக்கும் நிலையை அடையும். தற்பொழுது இந்தியர்கள் ஐவரை எடுத்துக் கொண்டால் அதில் நால்வர் இந்து என்ற நிலை உள்ளது (81%). இந்திய மக்கட்தொகையில் பிற சமயத்தினர் என்று எடுத்துக் கொண்டால், 13% இஸ்லாமியர், 2% கிறிஸ்துவர், 2% சீக்கியர்கள், 1% பௌத்தர்கள், மற்றும் 1% சமணர்களும், தொல்குடியினர் உட்பட மற்ற பிற சமயத்தினரும், சமயம் சாராதவரும் மற்ற அனைவரும் என்ற அளவுகளில் இருக்கிறார்கள் என்பதே இன்றைய நிலை.

பற்பல சமயப் பின்பற்றல்கள் எனவும், பல இனங்களின் வழிபாட்டு முறைகள் எனவும், அத்துடன் மக்களாட்சியின் பன்முகத் தன்மை கொண்ட உலகிலேயே பெரிய நாடு என்ற தனியிடத்தைப் பெற்றிருப்பது இந்தியாவின் சிறப்பு. இதற்குக் காரணம், இந்தியாவின் அரசியலமைப்பும்,  சட்டங்களும் மக்களுக்கு இத்தகைய சமய வழிபாட்டுச் சுதந்திரத்தை அளித்துள்ள நிலையும், சமயப் பரப்புரை செய்யும் உரிமையையும் அளித்துள்ள நிலைதான். மதம் அல்லது சாதி வேறுபாடுகளின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிராகவும், பேதம் காட்டுவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், சிறுபான்மையோருக்குத் தங்கள் உரிமையைப் பயன்படுத்தும் பாதுகாப்பான ஒரு சூழலைக் கொடுக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சமய நடவடிக்கைகளில் அரசின் கட்டுப்பாடு அதிகம் என்று பியூ ஆய்வுமையத்தின் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

அரசியல் சட்டப்படி இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்றாலும், இந்துக்களின் நம்பிக்கையை ஆதரிக்கும் வகையில் பசுக்கொலைக்கு எதிரான சட்டங்கள் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன என்பதும் ஒரு முரண். மதமாற்றம் செய்யும் நோக்கில் சமயப் பரப்புரை செய்யும் கிறிஸ்துவர்களையும் இஸ்லாமியரையும் அச்சுறுத்தும் நோக்கில் மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்கள் கொண்ட மாநிலங்களும் உள்ளன. அத்துடன்; பௌத்தம், சமணம், சீக்கியம் பின்பற்றுவோரைச் சட்டப்படி இந்துக்களாகக் கருதி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சிறுபான்மையினருக்கான வாய்ப்புகள் கொடுக்கப்படாத நிலையும் உள்ளது. சாதி பேதங்களிலிருந்தும், தீண்டாமையில் இருந்தும் தப்பிக்க இஸ்லாம் அல்லது கிறிஸ்துவச் சமயத்தைத் தழுவிய ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு, இந்து சமய ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு அளிக்கப்படும் அதே சலுகைகள் சமய அடிப்படையில் மறுக்கப்படுகிறது. தேவையான சில சூழல்களில் உச்சநீதிமன்றம் இடையிட்டு சிறுபான்மையினர் நலத்தையும் காத்துள்ளது.

இருப்பினும் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியர்கள் சமயத் தொடர்பான அடக்குமுறைகளையும் அதிக அளவில் தொடர்ந்து எதிர்கொண்டவண்ணமே உள்ளார்கள். 2007ஆம் ஆண்டு முதற்கொண்டு பியூ ஆய்வு மையம் ஆய்வு நோக்கில் கணக்கெடுக்கத் தொடங்கியதிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் மூலம், ஒடுக்கப்பட்டப் பிரிவு சிறுபான்மையினருக்கு எதிராகக் குற்றங்கள் அதிக அளவு நிகழ்ந்த வண்ணமே உள்ளதும் தெரிய வருகிறது. எந்த ஒரு சிறுபான்மை சமயத்தினர் நிலையும் இதற்கு விதி விலக்கல்ல. குறிப்பாக மாட்டிறைச்சி உணவு உண்கிறார்கள் என்ற அடிப்படையில் இஸ்லாமியரும் ஒடுக்கப்பட்ட இனத்தவரும் இந்துத்துவப் பிரிவு தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கதை. ஒடுக்கப்பட்ட இனப் பெண்கள் அதிக அளவில் பாலின வன்புணர்வுகளுக்கும் தாக்குதலுக்கு உள்ளாவதும் தொடர்கிறது. இவற்றை இந்தியாவில் நிகழும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையும் குறிப்பிட்டுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.

சாதி சமய சச்சரவுகள் வன்முறைகளால் இந்தியர்கள் நெடுங்காலமாகவே பாதிக்கப்பட்டு வந்திருப்பதால் அது குறித்து ஓரளவு எச்சரிக்கையும் கவனமும் அவர்களிடம் குடி கொண்டிருந்தாலும் கூட, இவற்றைவிடவும் மற்ற பிற பாதிப்புகள் குறித்தும் அவர்கள் அக்கறைகாட்ட வேண்டிய நிலையை இந்தியா தொடர்ந்து எதிர்கொண்ட வண்ணம் இருக்கிறது என்பதே இன்றைய சூழ்நிலை. அதிகரித்து வரும் மக்கட்தொகை இந்தியாவிற்குப் பல சவால்களைக் கொடுத்த வண்ணம் உள்ளது என்பதும் உண்மை. இதுதான் இன்றைய இந்தியாவின் பல்வேறு சமய இன மக்களின் வாழ்க்கை நிலைப்பாடு.

பியூ ஆய்வுமையம் நடத்திய இந்தியச் சமயங்கள் ஆய்வு:

அண்மையில் பியூ ஆய்வுமையம் இந்தியச் சமயங்கள் குறித்த ஆய்வை இந்தியாவில் மேற்கொண்டது. இந்தியாவின் ஆறு பகுதிகளில் (வடக்கு-24%, தெற்கு-19%, மத்தியப்பகுதி-7%, மேற்கு-22%, கிழக்கு-23%, வடகிழக்கு-5%) வாழும், பல பின்புலங்களைக் கொண்ட 30,000 இந்தியர்களிடம் சமயம் குறித்த அவர்கள் கருத்துகள் அறியப்பட்டது. இவர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், சமணம், பௌத்தம், சீக்கியம் என்ற ஆறு சமயப் பின்புலங்களிலிருந்தும், 18 வயதிற்கும் மேற்பட்ட ஆண்-பெண் இருபாலரிலும் பல வயதுப் பிரிவுகளிலும் இந்தியர்களின் பிரதிநிதிகளாக அமைந்தனர். சற்றொப்ப 75க்கும் மேலான சமய நம்பிக்கைகள், வழக்கங்கள் குறித்த கேள்விகளுக்கான கருத்துக்களைச் சேகரித்து, 100க்கும் மேலான அட்டவணைகளில் இந்த ஆய்வின் மூலம் கிடைத்த தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 17 மொழிகளில் நேர்காணல் செய்யப்பட்ட கள ஆய்வு இது என்பதும், அமெரிக்கா தவிர்த்து ஓர் அயல்நாட்டில் பியூ ஆய்வுமையம் செய்த மிகப்பெரிய ஆய்வு இது என்பதும், இந்த ஆய்வை நிறைவு செய்ய 3 ஆண்டுகளுக்கும் மேல் தேவைப்பட்டது என்பதும் பியூ ஆய்வு மையம் கொடுக்கும் செய்தி.

siragu Religion in Indiaஇந்த ஆய்வின் முக்கியமான முடிவாக வெளிப்படுவது, இந்தியர்கள் அனைத்துச் சமயத்தையும் மதிக்க வேண்டியது முக்கியம் என்ற எண்ணம் கொண்டவர்கள். சமயங்களுக்கு இடையே எந்தப் பொதுத்தன்மையும் இல்லை என்று கருதும் அவர்கள், சகிப்புத் தன்மையுடன் அவரவர் போக்கில் அவரவர் சமயத்தை வழிபடும் மனப்பான்மையுடன் உள்ளார்கள். தங்கள் சமயத்தைப் பின்பற்றவும் வழிபடவும் இந்தியாவில் தங்களுக்குச் சுதந்திரம் இருப்பதாகவும், தடைகள் எதுவும் இல்லை என்றே அனைத்துச் சமயத்தினரும் கருதுகிறார்கள். மக்களிடம் உள்ள மத சகிப்புத்தன்மையே இந்தியா என்ற நாட்டின் கட்டமைப்பின் அடிப்படை மையக் கருத்து என்றும், ஓர் உண்மையான இந்தியராக ஒருவர் இருக்க வேண்டுமானால் அவர் அனைத்துச் சமயத்தையும் மதிக்க வேண்டும் என்பதில் எல்லாச் சமயத்தினருமே மாறுபாடின்றி உறுதியாக உள்ளார்கள். சகிப்புத் தன்மை என்பது சமயப் பண்பு என்று மட்டுமல்லாமல் அது சமூகத்தின் பண்பு என்ற மனப்பான்மை கொண்டவர்களாகவும் உள்ளார்கள். பிற சமயத்தை மதித்தல் என்பது தாங்கள் சார்ந்துள்ள சமயம் கற்பித்த சமூகப் பண்பாட்டு அடையாளம் என்பதே இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் வாழும் அனைத்துச் சமயத்தினரின் எண்ணமாக இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது.

சமயம் குறித்து இன்றைய இந்தியாவின் இந்தியர்கள் என்ன கருதுகிறார்கள்; சுருக்கமாக:

இந்தியர்கள் மத சகிப்புத்தன்மையை மதிக்கிறார்கள், ஆனால் அவர்கள் சமயம் அடிப்படையில் பிரிந்து வாழும் வாழ்க்கையையே வாழ்கிறார்கள். இந்துக்கள் பெரும்பான்மையினருக்கு இந்து சமயத்தைப் பின்பற்றுவதும் இந்தி பேசுவதும் ‘தேசிய அடையாளம்’ என்ற அளவில் சமயம் மற்றும் மொழி குறித்த நம்பிக்கை இந்துக்கள் பலரின் மனதில் இழையோடிச் செல்கிறது. இந்துக்களிடையே நிலவும் இந்தக் கருத்து அரசியலிலும் ‘தேசியத்துவம்’ என்பதை முன்வைக்கும் ஆட்சியைத் தேர்ந்தெடுக்க வைத்துள்ளது. உணவுப்பழக்க வழக்கங்களில் மாட்டிறைச்சி உண்பது இந்துசமயத்திற்கு எதிரானதாகவும், உண்பவர்களை இந்துக்களின் எதிரிகளாகவும் பார்க்கும் மனப்பான்மை நிலவுகிறது. இஸ்லாமியரும் பன்றி இறைச்சி உண்பவரைத் தங்கள் சமயத்தவராக ஏற்கும் மானப்பான்மையில் இல்லை. இஸ்லாமியர் தங்கள் சமயத்திற்கான சட்ட அடிப்படையில் நீதிமன்றங்களை விரும்புகிறார்கள். மற்ற இந்தியர்களுக்கு அது போன்ற சமயங்களுக்கான தனிச் சிறப்பு நீதிமன்றம் என்ற கருத்தில் உடன்பாடில்லை.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவு என்ற முடிவு இந்து-முஸ்லீம் உறவுகளைச் சீர்குலைத்ததாக பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள், தங்கள் மாநிலம் பிரிவினையில் துண்டுபட்டுப் போனதால் சீக்கியர்களும் அவ்வாறே இந்தியா-பாகிஸ்தான் பிரிவு என்பது சரியான முடிவல்ல என்று கருதுகிறார்கள். இந்தியர்கள் சாதி- சமயக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறுவதில் முனைப்பாக இல்லை, மாறாக சாதி-சமயக் கலப்புத் திருமணங்களைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள். மதமாற்றங்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறிப்பிடும் அளவிற்கு எண்ணிக்கையில் நிகழ்வது இல்லை, அவ்வாறு நிகழ்ந்தாலும் சமயங்களின் உறுப்பினர் எண்ணிக்கையில் அதனால் எந்தவிதத் தாக்கமும் இருப்பதில்லை. பெரும்பாலான இந்தியர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதுடன், சமயம் அவர்கள் வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாகவும் கருதுகிறார்கள்.  இந்தியாவின் பல்வேறு சமயத்தினரிடமும் சமயங்களுக்கு இடையேயான சில பொதுவான நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் உள்ளன.

இந்தியர்களின் சமய சகிப்புத்தன்மையின் பரிமாணம்:

இவ்வாறு பல கருத்துகளிலும், நம்பிக்கையிலும் இந்தியாவின் வெவ்வேறு சமயத்தினரிடையே ஒற்றுமை இருந்தாலும், அவர்கள் மற்ற சமயத்தவரைவிட தாங்கள் வேறுபட்டவர் என்றும், சமயத்தவரிடையே பொதுத்தன்மை எதுவும் இல்லை என்ற உறுதியான எண்ணமும் கொண்டுள்ளார்கள். இந்துக்கள் தாங்கள் எந்த அளவு இஸ்லாமியரிடம் இருந்து வேறுபட்டவர்கள் என்று நம்புகிறார்களோ, அதே அளவு இஸ்லாமியரும் தாங்கள் இந்துக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என்றே எண்ணுகிறார்கள். மாறாக சீக்கியர்களில் சிலரும், சமணர்களில் சிலரும் இந்து சமயத்துடன் தங்களுக்கு ஒற்றுமை இருப்பதாகக் கருதுகிறார்கள். இருப்பினும், பொதுவான நோக்கில், வெவ்வேறு பெரிய சமயத்தைப் பின்பற்றும் பெரும்பான்மையினர் தாங்கள் மற்ற சமயத்தினரிடம் இருந்து வேறுபட்டவர் என்று நம்புகிறார்கள். இது போன்ற வேறுபட்டவர் என்ற உறுதியான நம்பிக்கையே இந்தியாவில் சமய மாற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. சமயங்களை வெவ்வேறாக பிரித்து வைக்கிறது. அவ்வாறே தங்கள் சமயத்தைச் சாராத வேற்று சமயத்தவரை மணம் செய்வதை ஏற்புடையதாகக் கொள்ளாத நிலையையும் சமூகத்தில் தோற்றுவிக்கிறது. சமயக் கலப்பு மணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்துக்களில் பெரும்பான்மையினரும், இஸ்லாமியரில் பெரும்பான்மையினரும் கருதுகிறார்கள்.

இந்தியர்கள் தங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் அவர்கள் சார்ந்த சமயத்தவர்களாகவே குறிப்பிடுகிறார்கள், பெரும்பான்மையினரின் இந்து சமயமோ, சிறுபான்மையினரான சீக்கிய சமயமோ அல்லது சமண சமயமோ கூட இதற்கு விதிவிலக்கல்ல. தங்கள் அண்டை வீடுகளில் எந்த பிற சமயத்தவரும் வாழ்வதில் தங்களுக்குப் பொருட்டில்லை என்று கூறும் இந்தியர்களும் இருக்கிறார்கள், அதே அளவில் தங்கள் அண்டை வீட்டில் இஸ்லாமியர்கள் வாழ்வதை விரும்பாத இந்துக்களும் இருக்கிறார்கள். இதே போல சமணர்கள் சிலரும் தங்கள் பகுதியில் இஸ்லாமியர் குடியிருப்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. மத சகிப்புத் தன்மை முக்கியம் என்று கூறுபவர்களே தங்கள் இனத்துடன் மட்டும் வாழ விரும்புவதும், தங்கள் சமயத்திற்குள்ளேயே திருமண உறவுகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும் என்ற வகையில் முரணான கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியர்களின் இந்த மனநிலையைச் சுட்டிக்காட்டும் பியூ ஆய்வுமையம், சமய சகிப்புத் தன்மை என்பது இந்தியரைப் பொறுத்த வரையில் எல்லாம் கலந்த ஒரு கலவை அல்ல. பலவகைத் தூண்டுகளால் ஒட்டுப் போடப்பட்ட ஒரு துணி போலத் தெளிவாக சமயப் பிரிவுகளின் எல்லையை வரையறுத்துக் கொள்ளும் எண்ணப்போக்கு என்கிறது. அடுத்த சமயத்தவர் வாழ்க்கை முறை எப்படி இருந்தாலும் அது குறித்த அக்கறை இல்லை, அதைக் குறித்த கவலையும் இல்லை என்ற வகையில் சகிப்புத் தன்மை இந்தியர்களிடம் அமைந்துள்ளதாகக் கூறுகிறது. இது நமக்கு நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன, என் மீது பாயாத வரை சரி என்று சொல்லும் சொல்வழக்கையோஅல்லது அவரவரும் அவரவர் இடத்திலிருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே என்று கருடன் பாம்பிடம் சொல்லும் கதையையும் நினைவூட்டலாம்.

இந்தியாவில் இந்து தேசியவாதத்தின் பரிமாணம்:

“உண்மையான இந்தியர்” என்ற தகுதிக்கு; ஒருவர் இந்து சமயத்தைச் சார்ந்தவராகவும், இந்தி மொழி பேசத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது இந்து தேசியவாதத்தின் பார்வையாக இன்றைய பெரும்பான்மையான இந்திய இந்துக்களிடம் அமைந்துள்ளது. இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திரமோடியின் தலைமையில் ஆட்சி நடத்தும் பாரதீய ஜனதா கட்சி இத்தகைய கொள்கையை ஆதரிப்பதாக பியூ ஆய்வுமையத்தின் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மூன்று இந்துக்களில், இருவர் இந்து சமயத்தவராக இருப்பது ஓர் உண்மை இந்தியருக்கான தகுதி என்றும் அத்துடன் அவர் இந்தி அறிந்தவராக இருக்க வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள். இவர்களின் முழு ஆதரவு பாரதீய ஜனதா கட்சிக்கு உள்ளது.

இந்துசமயம், இந்தி மொழி, பாரதீய ஜனதா கட்சி ஆதரவு என்ற மூன்றும் ஒருங்கிணைந்தவர்கள் இவர்கள். இந்தியாவின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதியில் வாழும் இந்துக்களில் பெரும்பாலோர் இத்தகைய மனப்பான்மை கொண்டவராக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் பிற சமயத்தவர் தங்கள் அண்டை வீட்டில் குடியிருப்பதை விரும்புவதில்லை, அவர்கள் நட்பு வட்டத்தினரும் இந்துக்களே, தங்களது திருமண உறவுகள் இந்து சமயத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள், கலப்புத் திருமணங்களைத் தடுக்க விரும்புபவர்கள், சமயம் அவர்களுக்கு வாழ்வில் இன்றி அமையாத இடம் பிடித்தவர்களாக, தினமும் வழிபாடு செய்யும் வாழ்க்கை முறையைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இருப்பினும், இவர்களே இந்தியாவின் பன்முகத் தன்மையும், பலசமயப் பின்புலமும் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் சொல்லுகிறார்கள். மற்ற சமய இந்தியர்களைவிட எந்த வகையிலோ தாங்கள்தான் உண்மையான இந்தியர்கள் என்ற மனப்பான்மை இவர்களிடம் இருப்பதாகவும் பியூ ஆய்வறிக்கை கூறுகிறது.

இதற்கு முற்றிலும் மாறாக, இந்தியாவின் தெற்குப் பகுதியில், மிகக் குறைந்த அளவில், 5% இந்துக்கள் மட்டுமே இந்தி அறிந்திருப்பதும் இந்து மதமும்தான் ஓர் உண்மையான இந்தியரின் அடையாளம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு வேறுபாடு. இந்தியாவின் தெற்குப் பகுதி என்பது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய பகுதி. இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பு துறை அதிகாரப்பூர்வமாகப் பின்பற்றும் வட்டாரப் பகுதிகளின் பிரிவு அடிப்படையிலேயே பியூ நிறுவனமும் தங்கள் ஆய்வுப் பிரிவுகளின் எல்லையையும் அமைத்துக் கொண்டார்கள். அதை அவர்களின் ஆய்வுமுறை விளக்கம் பகுதி விளக்குகிறது. இணைக்கப்பட்டுள்ள படத்தில் இந்தியப் பகுதிகள் எவ்வாறு அடையாளம் காணப்பட்டன என்பதை இந்திய வரைபடம் காட்டும்.

இந்தியர்களின் உணவுப்பழக்க வழக்கமும் சமயத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மாட்டிறைச்சி சாப்பிடும் ஒருவர் இந்துவாக இருக்க முடியாது என்பது இந்துக்களின் வலுவான நம்பிக்கை. அந்த அளவிற்குப் பசு என்ற விலங்கிற்கு மட்டும் புனிதத் தன்மை ஏற்றி அதைக் கொன்று உண்பது சமயத்திற்குப் புறம்பானது என்ற கருத்து இந்துக்களிடம் நிலவுகிறது. பெரும்பான்மையான இந்துக்கள், அதாவது, நான்கில் மூன்று இந்துக்கள் இக்கருத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். கடவுளை நம்பாதவரையும், கோவிலுக்கே போகாதவரையும், வழிபாடு செய்யாதவரை விடவும் மாட்டிறைச்சி உண்பது சமயத்திற்கு எதிரான குற்றமாகவும், அவ்வாறு உண்பவர் இந்து அல்ல என்றும் அடையாளம் காணப்படுகிறார்.

இந்தியாவின் இஸ்லாமியர்கள்:

இதே போன்று நான்கில் மூன்று இஸ்லாமியர் பன்றி இறைச்சி உண்பதைக் குற்றம் என்று கருதுகிறார்கள். இவர்களும் பள்ளிவாசல் போகாதவர்கள், தொழுகை செய்யாதவர்கள், கடவுளை நம்பாதவர்களை விடவும் பன்றி இறைச்சி உண்பவர்களை இஸ்லாத்திற்கு எதிரான குற்றவாளிகளாகக் கருதி அவ்வாறு உண்பவர் இஸ்லாமியராக இருக்க முடியாது என்று கூறுகிறார்கள். இஸ்லாமியர் தங்கள் சமயச் சட்டங்களுக்கு ஏற்ப நீதி வழங்கும் தனிப்பட்ட நீதிமன்றங்களை விரும்புகிறார்கள். இஸ்லாமிய ஷரியாத் (Shariah) சட்டங்களின் அடிப்படையில் இஸ்லாமியர்களின் குடும்ப வழக்குகள், சொத்து விவகாரங்கள் ஆகியவற்றுக்குச் சமய நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் தாருல் காஜா (Darul Qaza) இஸ்லாமியச் சிறப்பு நீதி மன்றங்களை அணுகுவதை நால்வரில் மூன்று இஸ்லாமியர் விரும்புகின்றனர். ஆனால் பெரும்பான்மையான இந்தியாவின் பிற சமயத்தினருக்கு இஸ்லாமியருக்கான தனிச்சிறப்பு நீதிமன்றம் என்ற இந்தக் கருத்து ஏற்புடையது அல்ல. இந்திய இஸ்லாமியர்கள் தாங்கள் வகுப்புவாத பிரிவினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினாலும், இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வதாகவே கூறியுள்ளனர். இந்தியப் பாகிஸ்தான் பிரிவு, இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் உள்ள உறவைச் சீர்குலைத்ததாக இந்துக்களை விடவும் இஸ்லாமியரே அவ்வாறு அதிகம் கருதுகிறார்கள். இது போன்றே, பெரும்பான்மையான சீக்கியர்களிடமும் இந்தியா பாகிஸ்தான் பிரிவு ஒரு தவறான முன்னெடுப்பு என்ற கருத்து நிலவுகிறது.

சாதிக் கட்டமைப்பும், சமய நம்பிக்கைகளும் சாதி சமய கலப்பு மணங்களும்:

பெரும்பாலான இந்தியர்கள் சாதிக் கட்டமைப்புகளை மீறிய திருமணங்கள் கூடாது என்று கருதுகிறார்கள். பழமையான வைதீகச் சமயச் சட்டங்கள் உருவாக்கிய படிநிலை சாதிப் பிரிவினைகள் இந்தியச் சமூகத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது என்கிறது பியூ ஆய்வறிக்கை. இந்தியர்கள் எந்தச் சமயத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சாதி அடிப்படையிலேயே அடையாளம் காணப்படுகிறார்கள். அடிமட்டத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குப் பொருளாதார வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுடன் பேதம் காண்பிக்கப்பட்டு வந்ததும் இந்திய வரலாறு. ஆனால் ஆய்வில் பங்கேற்றவர் பெரும்பாலோர், ஒடுக்கப்பட்ட பிரிவினர் உட்பட இந்தியாவில் சாதிக் கொடுமைகள் இல்லை என்று மறுத்துள்ளனர். இந்தியா அரசியல் அமைப்பும், சட்டங்களும் சாதிகளுக்கு எதிரான ஒடுக்குமுறை, வன்முறை, தீண்டாமை ஆகியவற்றை ஒழிக்கவும் ஒடுக்கப்பட்டவருக்குப் பொருளாதாரம் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. பெரும்பான்மை இந்தியர்களின் (70%) தங்கள் நட்பு வட்டங்களில் இருப்பவரும் தங்கள் சாதியினர் என்று கூறியுள்ளார்கள். மாற்றுச் சமயத்தவரைப் பெண்களும் ஆண்களும் மணப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது எல்லாச் சமயத்தவரின் எண்ணமாக இருக்கிறது. கலப்பு மண எதிர்ப்பு என்ற கருத்திலும் அனைத்து இந்தியச் சமயத்தவரும் அதற்குக் காட்டும் எதிர்ப்பிலும் பெரிய மாறுதல்களைக் காண முடியவில்லை.

மத மாற்றங்கள் இந்தியாவில் எண்ணிக்கையில் மிகக்குறைவு, அவ்வாறு நிகழும்பொழுதும், எவ்வளவு இந்துக்கள் இந்து சமயத்திலிருந்து வெளியேறுகிறார்களோ அதே அளவில் சிலர் மீண்டும் இந்து சமயத்துடன் தங்களை இணைத்துக் கொள்வதும் நிகழ்கிறது. ஒடுக்கப்பட்ட பிரிவினர்கள் பிற சமயங்களுக்கு, குறிப்பாக, கிறிஸ்துவத்திற்கு மாறுவது இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் இத்தகைய மதமாற்றங்களைக் கட்டுப்படுத்த சட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் படி மதமாற்றங்கள் ஒரு சமயத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பெரிதாகப் பாதிப்பதில்லை. ஆய்வில் அறுதிப் பெரும்பான்மையினர், அதாவது 98% தங்கள் பிறந்து வளர்ந்த சமயத்தைத்தான் இன்றும் பின்பற்றுவதாகக் கூறியுள்ளார்கள். பெரும்பான்மையான இந்தியர்கள் (97%) கடவுளை நம்புவதாகவும், சமயம் தங்கள் வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார்கள். விதிவிலக்காக, பௌத்தர்களில் மூன்றில் ஒருவருக்குக் கடவுள் என்ற கருத்தாக்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. இந்துக்கள் கடவுள் ஒருவரே அவர் பல வடிவத்தில் உள்ளார் என்ற கொள்கையையும், இஸ்லாமிய, கிறிஸ்துவ இந்தியர்கள் கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளார்கள். எல்லா பெரிய சமயத்தினரும் சமயம் அவர்கள் வாழ்வில் முக்கியமான இடம் பெற்றுள்ளதாகவும், இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருப்பதுடன், குறிப்பிடத்தக்க அளவில் அவர்கள் இறைவழிபாடும் சடங்குகள் செய்வதாகவும் கூறியுள்ளனர்.

பல தலைமுறைகளாக ஒரே பண்பாட்டுச் சூழ்நிலையில் வாழ்ந்து வந்த காரணத்தினால் இந்தியாவின் வெவ்வேறு சமயத்தினரிடமும் பொதுவான சில சமய நம்பிக்கைகளும், நடைமுறைகளும் சமய எல்லைகளைக் கடந்தும் பரவியுள்ளது. சிறுபான்மை சமயத்தினரிடம் இந்து சமய நம்பிக்கைகளும் நடைமுறைகளும் காணப்படுகின்றன. குறைவான அளவே என்றாலும், இந்துக்களின் வழக்கமாக, பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது சில சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியப் பெண்களிடமும் காணப்படுகிறது. இது போன்ற ஒருமித்த சமயம் குறித்த கருத்துடன், சமய எல்லைகளைக் கடந்தும் கருத்து ஒற்றுமைகள் அவர்கள் சமய நம்பிக்கையில் இழையோடுகிறது. பெரும்பான்மையான இந்துக்கள் “கர்மா” என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அவர்களைப் போன்றே, அதே விகிதத்தில் இஸ்லாமியர்களும் கர்மாவை நம்புகிறார்கள்.

மறுபிறவி, விதி, தேவதைகள், ஆவிகள், கண்ணேறுகள், ஆரூடங்கள், பில்லி சூனியம் போன்றவற்றை இந்து சமயத்தவரைத் தவிரப் பிற சமயத்தவரும் நம்புகிறார்கள் என்பது தெரிகிறது. இந்துக்களில் சிலர் இஸ்லாமியர்களின் ஈத் பண்டிகையையும், கிறிஸ்துவர்களின் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடுவதாகக் கூறுகிறார்கள். அவ்வாறே, மூன்றில் ஒரு கிறிஸ்துவரும் பெரும்பான்மையான இந்துக்களைப் போலவே கங்கை ஆற்று நீருக்குப் புனிதத் தன்மை இருக்கிறது என்ற நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இஸ்லாமுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய சூஃபித்துவத்தை வட இந்தியாவில் வாழும் இந்துக்களில் சிலரும், சீக்கியர்களில் சிலரும், இஸ்லாமியர் சிலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். பல்வேறு சமயத்தின் இந்தியர்களில் அறுதிப் பெரும்பான்மையோர் வயதில் மூத்தவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என்பதிலும் ஒருமித்த கருத்தே கொண்டுள்ளனர்.

உலகிலேயே இந்துக்களும் சீக்கியர்களும் சமணர்களும் அதிக அளவில் வாழும் நாடாகவும், இஸ்லாமியரும், கிறிஸ்துவரும், பௌத்தர்களின் எண்ணிக்கையும் மற்ற பிற நாடுகளை ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையில் வாழும் இந்தியா என்னும் நாடு, அதற்கே உரியச் சமய வேறுபாடுகளையும், சமூகநீதியைக் கேள்விக்குறியாக்கும் சாதிக் கட்டுப்பாடுகளையும் சமாளித்துக் கொண்டு விடுதலை பெற்ற பிறகு 74 ஆண்டுகளைக் கடந்து விரைவில் 75ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது.

____________________________________________________________________

References:

Religion in India: Tolerance and Segregation, Pew Research Center, June 29, 2021.

https://www.pewforum.org/2021/06/29/religion-in-india-tolerance-and-segregation/

Key findings about religion in India, by Jonathan Evans and Neha Sahgal, Pew Research Center, June 29, 2021.

https://www.pewresearch.org/fact-tank/2021/06/29/key-findings-about-religion-in-india/

5 facts about religion in India, by Samirah Majumdar, Pew Research Center, June 29, 2018.

https://www.pewresearch.org/fact-tank/2018/06/29/5-facts-about-religion-in-india/

Measuring caste in India, by Kelsey Jo Starr, Pew Research Center, June 29, 2018.

https://medium.com/pew-research-center-decoded/measuring-caste-in-india-ba27c46d905b

Q&A: How Pew Research Center surveyed nearly 30,000 people in India, by Clark Letterman, Pew Research Center, July 1, 2021,

https://medium.com/pew-research-center-decoded/q-a-how-pew-research-center-surveyed-nearly-30-000-people-in-india-7c778f6d650e

Data – Religion in India: Tolerance and Segregation – Data summary statistics table.

https://www.pewforum.org/wp-content/uploads/sites/7/2021/06/PF_06.29.21_India_topline.pdf

Methodology – Religion in India: Tolerance and Segregation, Pew Research Center, June 29, 2021.

https://www.pewforum.org/2021/06/29/appendix-a-methodology-12/

___________________________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியர்களின் சமய நம்பிக்கைகளும் வாழ்வும்”

அதிகம் படித்தது