மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்திற்கு தொழிற்துறை கொள்கை தேவை

சௌமியன் தர்மலிங்கம்

Jan 31, 2015

tholirthurai kolgaigal1தொழிற்துறை கொள்கைகள் என்று நமது அரசுகளால் வகுக்கப்படும் அனைத்துமே உயர்ந்த குறிக்கோள்களை உள்ளடக்கியதாகவும், தொழிற்வளர்ச்சிக்கான பாதைகளை கோடிட்டு காட்டுவதுமாகவும் அமைகிறது. சில சமயங்களில் குறிப்பான திட்டங்களும், இலக்குகளும் கொள்கை ஆவணங்களிலேயே வரையறுக்கப்படுகின்றன. தொழிற்துறை கொள்கைகளை திட்டமிடுவது, வகுப்பது என்பதற்கு இந்தியாவில் பெரிய வரலாறு உள்ளது, அதற்கென தனி நடுவண் அமைச்சகம் அமைக்கப்பட்டிருக்கிறது. 1956ம் ஆண்டில் தொடங்கி இந்திய நடுவண் அரசு தொழிற் துறை கொள்கை ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக 1980ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆவணத்தில் ஏற்றுமதி வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி சார்ந்த விடயங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதுவே இந்தியாவின் கணிணித் துறை வளர்வதற்கும், மருந்துத் தயாரிப்பு அதிகரிப்பதற்கும், வாகன உற்பத்திக்கும் வித்திட்டது. 1991ம் ஆண்டு வகுக்கப்பட்ட கொள்கைகள் தாராளமயமாக்கல் பாதையை முன் வைத்தது. இது ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடு போன்ற வளர்ச்சிக்கான செயல்பாடுகளின் தடைகளை தகர்த்தெறிந்தது.

இந்திய மாநிலங்களின் தொழிற்துறை கொள்கைகள்:

tholirthurai kolgaigal3இந்திய அரசு தொழிற்துறை கொள்கை வகுப்பதிலும் செயல்பாடுகளிலும் சுறுசுறுப்பாக இருந்தாலும் மாநில அரசுகள் மிக மந்தமாக இருந்தன. ஆனால் தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு இந்த நிலை மாறியது. தொழிற்துறையில் முன்னேறிய மாநிலங்களான மராட்டியம் போன்றவை புதிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள தமக்கான கொள்கைகளை வகுத்தன. மராட்டிய தொழிற்துறை நிறுவனம் 1993ம் ஆண்டு மைல்கல் என்று குறிப்பிடத்தக்க தொழிற்துறைகொள்கையை இந்தியாவிலேயே முதன் முதலில் வகுத்தது. அதில்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், கூட்டு முயற்சி தொழில்கள் போன்றவை வெளியிடப்பட்டு வெளிநாட்டு முதலாளிகளை ஈர்த்தன. 2001ம் ஆண்டு அதைத் தொடர்ந்து வந்த கொள்கை ஆவணத்தில் கணிணி மற்றும் உயிர் தொழிற்நுட்பத் துறைகள் (Bio Tech), முதலீடுகளை ஈர்ப்பதற்கு திட்டங்கள் வெளியிடப்பட்டன. 2003ம் ஆண்டு குசராத் மாநிலம் உள்கட்டமைப்பு வளர்ச்சி, மின்சார உற்பத்தி ஆகியவற்றிற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து கொள்கை வகுத்தது. குசராத் மாநிலத்தில் உள்ள தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமாக இவை இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இது செய்யப்பட்டது. மேலும் குசராத் மாநிலம் வெளிநாடுவாழ் இந்தியர்களிடையே அமைந்திருந்த மூலதனத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வைக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அடைந்தது. வெளிநாடுவாழ் குசராத்தி மக்களிடமிருந்து முதலீடுகள் வரவேற்கப்பட்டது. மராட்டியமும் குசராத்தும் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற தொழிற்துறை மாநிலங்களாக இன்று விளங்குகின்றன. காரணம் அங்கு வணிகம் செய்யவும், வெளிநாட்டு முதலீடுகள் செய்யப்படவும் உகந்த நிலையை அந்த அரசுகள் உருவாக்கி வைத்துள்ளன. இந்த வெற்றி மற்ற மாநிலங்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

குறு, சிறு, நடுத்தர தொழிற்நிறுவனங்களை பெரிதும் நம்பியிருக்கக்கூடிய டெல்லி, ஹரியானா, பஞ்சாப் பொன்ற மாநிலங்கள் சிறந்த தொழிற்துறை கொள்கைகளை உருவாக்கியுள்ளன. உத்திரபிரதேசம், கேரளா போன்ற பணப்பயிர் சாகுபடி மிகுந்த மாநிலங்கள் அவைசார்ந்த கொள்கைகளை உருவாக்கியுள்ளன. மிகச்சிறிய மாநிலமான, சுற்றுலாத்துறையை நம்பியிருக்கக்கூடிய கோவா மாநிலம் சுற்றுலாத்துறை கொள்கைகளை வெளியிட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட தெலுங்கானா போன்ற மாநிலங்கள் நடுவண் அரசு தமக்கு அளித்திருக்கும் வரிச்சலுகைகளை வளர்ச்சிக்காக பயன்படுத்துகின்றன.

தமிழ்நாட்டின் தொழிற்துறை கொள்கை:

tholirthurai kolgaigal4தமிழ்நாடு தொழிற்துறை மிகவும் வளர்ந்த ஒரு மாநிலமாகவும் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கக்கூடியதாகவும் இந்தியாவில் விளங்குகிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான காரணங்களாக அதன் புவியியல் அமைப்பு, துறைமுகங்கள், சாலை வசதிகள், கற்றறிந்த தொழிலாளர்கள் போன்றவற்றை குறிப்பிடலாம். ஆனால் இத்தகைய வளர்ச்சி, சந்தைப் பொருளாதாரம் மற்றும் தற்காலிக கொள்கை முடிவுகள் போன்றவற்றால் ஏற்பட்டதே அன்றி ஒரு ஒருங்கிணைந்த ஒருமுகப்படுத்தப்பட்ட திடமான தொழிற்கொள்கைகளால் அல்ல. 2003ம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கை ஆவணத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் மட்டும் இடம்பெற்றிருந்தன. அதன் பிறகு துண்டுதுண்டாக வெளியிடப்பட்ட ஆவணங்கள் உயிர் தொழிற்நுட்பம் (கணிணி துறை), தகவல் தொழில் நுட்பம், ஒப்பந்த விவசாயம், துணிகள் தயாரிப்பு போன்றவற்றை உள்ளடக்கியிருந்தன. 2007ம் ஆண்டு வெளியிடப்பட்ட வலுவான தொழிற்கொள்கையே புதிய தொழிற்கொள்கை என்று பெயரிடப்பட்டது. வலுவான கொள்கை முனைப்பு இல்லாமலேயே தமிழ்நாடு தொழிற்துறையில் வளர்ந்தது பெருமைக்குரிய ஒன்றாகும். ஆனால் இத்தகைய கொள்கை வலுவின்மை பல்வேறு பலவீனங்களை வெளிப்படுத்துகிறது.

•    மின்சார பற்றாக்குறை.
•    மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் (அதிவேக சாலைகள், அதிநவீன துறைமுகங்கள்).
•    ஐந்து நட்சத்திர தொழிற்பூங்காக்கள் இல்லாமை.
•    தொழில்கள் அனைத்தும் சென்னையைச்சுற்றி அமைந்துள்ளமை.
•    துணி தயாரிப்பு, வாகன உற்பத்தித் துறைகளில் அதீத சார்பு.
•    மிக அதிக வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, வணிக சாத்தியங்கள் கொண்ட விவசாயத்துறை புறக்கணிப்பு.
•    திறன் வளர்ச்சி, ஏற்றுமதி போன்றவற்றை ஊக்குவிக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் புறக்கணிப்பு.
•    சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அருகில் தொழிற்வளர்ச்சி இல்லாமை.
•    திறன் வளர்ச்சி, அறிவுப் பரவல் இல்லாமை.
•    தகவல் தொழிற்நுட்பத் துறை (IT), வணிக செயல்முறை (BPO) போன்ற சேவை துறைகளுக்கு ஊக்கமின்மை.
•    புதுமை காணல் (Innovation) மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு (start-up companies) ஊக்குவிப்பு இன்மை.
•    ஆராய்ச்சி வளர்ச்சிகளுக்கான கவனமின்மை.
•    வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க திட்டமின்மை.
• நாளைய வளர்ச்சி துறைகளான சூரிய சக்தி, கடற்சார் பொறியியல், விமானத்துறை போன்றவற்றுக்கான செயல்திட்டங்கள் இன்மை.

 - தொடரும்


சௌமியன் தர்மலிங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்திற்கு தொழிற்துறை கொள்கை தேவை”

அதிகம் படித்தது