மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியாவில் திருமணத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு (Marital Rape ) -ஒரு பார்வை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 19, 2016

thirumanaththil2அண்மையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. மேனகா காந்தி அவர்கள் இந்தியாவைப் பொருத்தவரை திருமணத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு(Marital Rape) சட்டப்படி குற்றமாகப் பார்க்கப்பட மாட்டாது என்று அறிவித்தது, மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை திருமணம் என்பது புனிதமாகப் பார்க்கப்படுவதாலும், மதங்களும், சமூகக் கட்டமைப்பும் பெண்கள் என்பவர்கள் ஆணின் உடைமை என்பதை அங்கீகரிக்கும் காரணத்தினாலும் இந்த நாட்டில் திருமண உறவில் பெண் வல்லுறவு செய்யப்பட்டால் அது தவறு இல்லை என்று சட்டம் சொல்கின்றது.  இது மிகப் பெரிய மனித உரிமை மீறல் என்பதை நாம் ஏற்க மறுக்கின்றோம். இந்தியாவில் திருமணத்தில் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை, தெரியாத பிற ஆண்களிடம் வன்புணர்விற்கு ஆளாகும் பெண்களை விட 40 மடங்கு அதிகம் என்பதுதான் அதிர்ச்சித் தரும் தகவல் என்று  2014-இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

குற்றவியல் சட்டம் (திருத்தம்) 2013 -The Criminal Law (Amendment )Act 2013- இல் “15 வயதிற்கு உட்பட்டவராக மனைவி இல்லாத பட்சத்தில் கணவன் தன் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்தால் அது குற்றம் இல்லை.” என்று கூறுகின்றது.

thirumanaththil4திருமணத்திற்குப் பின் பெண் என்பவள் தனக்கான இச்சையைக் கூட தீர்மானிக்க அருகதை அற்றவள் என்பதைத்தான் இந்தியச் சட்டங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அதற்கு மதங்களும் சமூகக் கட்டமைப்பும், திருமணம் என்பது புனிதம் என்று வைத்திருக்கும் கற்பிதமே காரணம். குடும்பங்கள் என்ற அமைப்பு சிதறிவிடக் கூடும் என்று 21-ஆம்  நூற்றாண்டிலும் திருமணத்தில் பாலியல் வன்புணர்வு குற்றமாகாது என்று கூறுவது மிகப் பெரிய தவறு.

இந்திய தண்டனைச் சட்டம் 375-இன் படி மனைவிக்கு 15 வயதிற்கு கீழ் இருக்கும் நிலையில் பாலியல் வன்புணர்வு குற்றம் என்றும், 15 வயதிற்கு மேல் இருப்பின் குற்றமாகாது என்றே கூறுகின்றது. குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் திருமணத்தில் பாலியல் வன்புணர்வு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதாகவும்,  பெரும் காயம் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தால் மட்டும் குற்றமாகும் என்று கூறுகின்றது. மேற்கண்ட அனைத்தும் உரிமையியல் தீர்வுகள் மட்டுமே (civil remedies) சட்டப்படியான குற்றச் செயல் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

குழந்தை மணம் தடுப்புச் சட்டத்தின் படி பெண்ணிற்கு திருமண வயது 18. ஆனால் திருமண உறவில் மட்டும்  15 வயதிற்கு மேற்பட்ட பெண் தன் விருப்பம் இல்லை என்றாலும் கணவன் என்ற ஆண் அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்யலாம் என்பது  மிகப் பெரிய முரண்.

thirumanaththil32012 -இல் தில்லி நீதிமன்றம் தன் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்த கணவனை விடுதலை செய்தது. பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டப்படியான மனைவியாக இருந்தால், மனைவிக்கு உடன்பாடு இல்லாத நிலையில் அல்லது கட்டாயத்தின் பெயரில் உடலுறவு இருந்தாலும் பாலியல் வன்புணர்வு ஆகாது என்று தீர்ப்பளித்தது.

இந்தியாவில் ஏன் இந்த மன நிலை இருக்கின்றது? என்பதற்கு மன நல அலோசகர் திரு. தீபக் கஷ்யப், இந்தியாவில் உடலுறவு என்பது பெண்ணின் கடமையாகப் பார்க்கப்படுகின்றது. இங்கே பாலியல் தேவைக்கும் – இன்பத்திற்கும் வேறுபாடு அறியாத மக்கள் இருப்பது வேதனை என்று தெரிவித்தார்.

Women’s Media Center என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மே மாத இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் (May article) 27 வயது நிரம்பிய பெண்ணின் வலி மிகுந்த வரிகள் இவை,

“எங்கள் படுக்கை அறையில் நான் ஒரு பொம்மையைப் போன்று, அடிமை போன்றே நடத்தப்பட்டேன். மாத விடாய் காலங்களில் கூட எனக்கு ஓய்வு இல்லை. என் கணவனின் பிறந்த நாள் அன்று கட்டாய உடலுறவில் என் பிறப்புறுப்பில் செலுத்தப்பட்ட மின்கல விளக்கால் 60 நாட்கள் எனக்கு உதிரப் போக்கு ஏற்பட்டது”  என்று கூறியிருந்தார்.

உச்சநீதிமன்றத்திடம் அந்தப் பெண் திருமணத்தில் பாலியல் வன்புணர்வை குற்றச்செயல் என்று அறிவிக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.

ஆனால் உச்ச நீதிமன்றம், ஓர் நபருக்காக சட்டம் மாற்றப்பட மாட்டது என்று மனசாட்சி இன்றி ஆணாதிக்க சமூகத்தின் பிம்பமாய் அந்த மனுவை நிராகரித்தது.

law book and gavelஇந்தக் கொடுமையைச் செய்த கணவனுக்கு எந்த வித தண்டனையும் இந்திய நீதி மன்றங்கள் வழங்கவில்லை என்பதே வேதனை. இப்படி இந்தியா முழுவதும் தினமும் பல பெண்கள் அவதிப்படுகின்றனர்.

டெல்லி பாலியல் வன்புணர்வு நிகழ்வுக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா குழு, திருமண வல்லுறவை குற்றமாக அறிவிக்கும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளச் சொல்லி 2013-இல் பரிந்துரை செய்த போதும் இன்றும் அச்சட்டம் எட்டாக் கனியாகவே உள்ளது. 2012-இல்  கர்நாடகாவில் உள்ள உயர் நீதிமன்றம், மனைவி எந்தவித காரணமும் இன்றி கணவனிடம் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை எனின் அது கொடுமை என்று தீர்ப்பளித்தது. இதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றமும் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. இங்கே சட்டப்படி மனைவி என்ற பெண் கணவனின் பாலியல் அடிமை என்றே சட்டம் நிறுவியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. திருமணம் புனிதம் நிறைந்தது அதில் பெண் வன்புணர்வு செய்யப்படலாம் என்பது அறிவு வளர்ச்சி பெற்ற சமூகத்தின் வெளிப்பாடாக இருக்க முடியாது.

உலக அளவில்  போலந்து (1932), செகச்லோவாக்கியா (1950), சோவியத் யூனியன் (1960), ஸ்வீடன் (1965), நார்வே (1971), அமெரிக்காவில் 18 மாநிலங்கள், 3 ஆஸ்திரேலியா மாநிலங்கள், நியூ சிலாந்து, கனடா, இஸ்ரேல், பிரான்ஸ் என்று பல நாடுகள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே  திருமண பாலியல் வன்புணர்வை சட்டப்படி குற்றம் என்று அறிவித்து விட்டது.

நம்முடைய இந்திய அரசமைப்புச் சட்டம் சரத் 21 -இன் படி எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது. பெண் – அவளின் உடல் மீதான ஆதிக்கம் என்பது அடிப்படை இந்திய அரசமைப்புச் சட்டம் தரும் வாழ்வுரிமைக்கு எதிரானது. அந்த வகையில் எந்த மதமும், சமூகக் கட்டமைப்பும் அந்த அடிப்படை உரிமையை ஒரு பெண்ணிடம் இருந்து திருமணம் – கணவன் என்ற பெயரில் எடுத்துக் கொள்வது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை கருத்தில் கொண்டு இனியேனும் திருமணத்தில் பாலியல் வன்புணர்வு சட்டப்படி குற்றம் என்று சட்டம் இயற்ற வேண்டும்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவில் திருமணத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு (Marital Rape ) -ஒரு பார்வை”

அதிகம் படித்தது