மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியா என்றால் ‘இந்தி’யாவா?

ஆச்சாரி

Feb 15, 2013

இந்தியா உண்மையான மக்களாட்சி நாடு எனில் தாய்மொழி வாயிலாகக் கல்வியும், வேலைவாய்ப்பும் அமைந்து அனைவருக்கும் சம வாய்ப்புரிமை இருக்க வேண்டும். ஆனால்,  நடைமுறையில் இந்தி படித்தவரே, இந்தியாவில் வாழ இயலும் என்ற மோசடியான சூழலே விளங்குகிறது.  சான்றாகத் தமிழ்நாட்டில் உள்ள படைத்துறைப் பள்ளியான சைனிக் பள்ளியில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும்.  இந்திக்காரர்கள் தம் தாய்மொழியில் எளிதில் பெறக்கூடிய வாய்ப்பைப் பிற மொழியினர் பெற இயலாது. படைத்துறையில் சேர்ந்த பின்பும் இந்தி, இந்தி, இந்திதான். நமக்குத் தேவை ‘இந்தி’  யாவா? இந்திய ஒருமைப்பாடா?

                நடுவண் அரசின் நோக்கம் இந்தியா என்றால் ‘இந்தி’ என்பதுதான். காற்றில் வீசும் வாள்வீச்சைப் போன்ற நம் எதிர்ப்பு கண்டு நடுவண்  அரசு மிரளாது. எந்த அளவிற்கு விரைவாக நாம் பொங்கி எழுகிறோமோ அந்த அளவிற்கு நாம் அடங்கி விடுவோம்.  சான்றாக ‘சடுகுடு’ இடத்தைக்  ‘கபடி’ பிடிக்க முயன்ற பொழுது எழுந்த எதிர்ப்பு ‘சடுகுடு’  தொலைக்கப்பட்டது போல் தொலைந்து போயிற்று அல்லவா? எனவேதான் நடுவண்  அரசின் திட்டங்கள் & ஊரக வளர்ச்சியாகட்டும், சிறு சேமிப்பாகட்டும், காப்பீடாகட்டும், வங்கியாகட்டும் எங்காயினும் எதுவாயினும் இந்தியே வீற்றிருக்கிறது.

                எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணாக்கர் பயிலும் தொழிற்பயிற்சி நிலையங்களின் வினாத்தாள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் உள்ளது போல், இந்தியா முழுமைக்கான எதுவாயினும் இந்திதான் இடம்பெறுகிறது. ஆங்கிலம் அயல்மொழி எனக்கூறி இடம்பெயர்க்கப்பட்டு அந்த இடத்தில் அயல்மொழியான இந்திமொழி கால் பதித்து வருகிறது.

                தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் ஒட்டுநர், நடத்துநர் பதவி உயர்விற்கான தேர்வை ஆங்கிலத்தில் தான் நடத்துகிறது. இக்கொடுமையிலும் கொடுமையாக ஒரே நாடு, ஒரே முறையான பயிற்சி என்று நாளை இங்கு இந்திதான் வரப்போகிறது.

                தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனையினருக்கான நோய்கள் பெயர்ப்பட்டியல் குறிப்பிட்டு எண் தொகுப்பு, சிறுதொழில், குறுதொழில் பெருந்தொழில்களுக்கான தொழில்வகைப் பெயர்ப்பட்டியல் குறியிட்டு எண்  தொகுப்பு போன்ற அனைத்து இந்திய அளவிலான அனைத்து தொகுப்புகளும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் உள்ளன. நடுவண் அரசு, நடுவண் அரசு சார் அமைப்புகளின் பணிகளுக்கு இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களையும் முனைவர் பட்டம் பெற்றவர்களையும் அமர்த்தச் செய்கின்றார்கள். ஆனால் தமிழ் நாட்டிலோ தமிழ் வளர்ச்சித் துறையிலேயே தமிழ் படித்தவர்கள் துரத்தப்படுகிறார்கள்.

                அன்றாடம் மக்கள் ‘வணக்கம்’ என்பதை மறந்து ‘குட் மார்னிங், குட் ஆப்டர்நூன், குட் ஈவினிங், குட்நைட்’ என்று ஆங்கிலத்தில் வாழ்த்தினைப் பரிமாறிக்கொள்ளும் அவலம் ஒரு புறம் இருக்க, மத்திய அரசு அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டால் இனிய தமிழ் மறந்து “நமஸ்காரம்’’ அல்லவா ஒலிக்கிறது? தொலைபேசி பொது எண்களுடன் தொடர்பு கொள்ளுகையில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக உள்ள இத்துறை தமிழ்நாட்டு மக்களிடம் தமிழில் வணக்கம் சொல்லக்கூடாதா?  என்ன பண்பாண்டுக் கொலை இது? கேள்வி கேட்பார் யாருமில்லையே?

                அதுபோல் மத்திய அரசு அலுவலகங்கள் என்றால் தமிழ்த் “திரு’’  மறைந்து  -’ ஸ்ரீ   ’ தான் ஆட்சி செய்கிறது, இதுதான் மத்திய அரசின் இந்திக் கொள்கை என்னும் பொழுது தமிழால் ஆட்சிக்கு வந்த ஆட்சியர்களாவது எதிர்த்து இம்முறையை ஒழிக்க வேண்டாமா?

                தொலைக்காட்சி, வானொலிகளில் விளையாட்டு குறித்த நேரடி வருணணையாகட்டும் பிற குறித்த நேர்முக விளக்க உரையாகட்டும் தமிழ் நாட்டிலே நடைபெறும் நிகழ்ச்சியாகட்டும் தமிழுக்கு இடமில்லையே! ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாறி மாறி வழங்கி, இந்த நாடு இந்தி  பேசுவோருக்கு மட்டுமே உரியது என மத்திய அரசு ஆணித்தரமாக அறைகிறதே!  மாநிலத் தன்னாட்சியாளர்கள் உறங்குவது ஏன்?

                தொலைக்காட்சி  வரிக்குச் சுருக்கப் பெயர்களைப் பதிந்து கொள்ளும் வாய்ப்பை அத்துறை தருகிறது. ஆனால் இப்பெயர் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் இது என்ன கொடுமை?  தமிழ்நாட்டு நிறுவனம் அல்லது அமைப்பு நிறுவனம் பெயரைச் சுருக்கமாகத் தமிழில் வைக்கக் கூட உரிமை இல்லையா?

                மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களும் சரி, மத்திய உதவியுடன் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் ஊர்கள், நகர்களின் பெயர்களும் சரி தமிழில் இல்லை. எந்த இந்திக்காரன் பணத்தில் இதனை அமைக்கின்றனர்? தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே? பிறகு ஏன் இந்த அவலம்? நமது பணத்தால் பெறும் உதவிகளுக்கு இந்தி பேசும் பகுதிகளுக்குத் தமிழ்ப் பெயரையா சூட்டுகின்றனர்? வெட்கமின்றித் நம் அரசும் ஏற்று நடைமுறைப் படுத்துகிறது. சூடு சொரணையின்றி நாமும் எற்றுக் கொள்கிறோம். இவ்வாறு பல செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்திய நாட்டில் தமிழர் அயலவராக நடத்தப்படும் பொழுது தமிழ் எங்கே வாழும்?  மலரும் தமிழ் நாட்டிலேயே தமிழ் தளரும் பொழுது பிற நாடுகளில் வாடத்தானே செய்யும்.

                                                             ( தொடரும்…)

You simply want to make sure http://celltrackingapps.com/ they’re safe and that they can have typical teen fun without any long-term consequences

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “இந்தியா என்றால் ‘இந்தி’யாவா?”
  1. தமிழ்வாணன் says:

    இந்தியைத்தேசிய மொழி எனத் தவறாகக் கூறுபவர்கள் படிக்க வேண்டிய கட்டுரை. அருமையாக உள்ளது.

அதிகம் படித்தது