மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய விவசாயிகளின் போராட்டமும் திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களும்

பேராசிரியர் பு.அன்பழகன்

Nov 27, 2021

siragu farmers-law2

செப்டம்பர் 5, 2020ல் மூன்று வேளாண் சட்டங்களான அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்’, ‘விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்’, ‘விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம்போன்றவைகள் நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக தாக்கல் செய்யப்பட்டு எந்தவித விவாதமுமின்றி மக்களவை-மாநிலங்களவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 27, 2020 அன்று சட்டமாக நடைமுறைபடுத்தப்பட்டது. இச்சட்டங்களின் முதன்மை நோக்கங்கள் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பது, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நாட்டின் எப்பகுதியிலும் நல்ல விலைக்கு விற்க தடையற்ற நிலையினை உருவாக்குவது, தனியார் மண்டிகளை ஊக்குவித்து வேளாண் விவசாயிகளுக்கு வருவாய் பெறும் நோக்கினை மேம்படுத்துதல்வேளாண் விலைபொருட்களை அறுவடைகாலங்களில் கொள்முதல்செய்து அவற்றை சேமித்துவைத்தல் போன்றவைகள் ஆகும். இதனால் வேளாண் உள்கட்டமைப்புகள் தனியார் முதலீடுகளால் வலுப்பெரும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் இதனால் விவசாயிகள் லாபமடைவார்கள் என்று எடுத்துரைக்கப்பட்டது. இச்சட்டங்கள் விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் இச்சட்டங்களை கடுமையாக எதிர்த்தனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிங்களைச் சார்ந்த விவசாயிகள் பெருமளவிற்கு திரண்டு டெல்லி சலோஎன்ற முழக்கத்துடன டெல்லியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் அறவழியில் முற்றுகைப் போராட்டத்தினை நவம்பர் 25, 2020இல் முன்னெடுத்தனர். இந்தியாவில் உள்ள 500க்கு மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து அனைத்து இந்திய விவசாயிகள் போராட்ட கூட்டு ஒருங்கினைப்பு குழு (All India Kisan Sangharsh Coordination Committee) இப்போராட்ட களத்தில் விவசாயிகள் இயக்கம் நீடூழி வாழ்க என்ற கோசம் எழுப்பப்பட்டது. இப்போராட்ட காலங்களில் 750க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். 358 நாட்கள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்திற்கு இந்திய அரசு முதன்முதலில் அடிபணிந்து மன்னிப்பு கேட்டு இந்த மூன்று சட்டங்களையும் சீக்கியர்களால் கொண்டாடப்படும் குருநானக் ஜெயந்தி நாளான நவம்பர் 19, 2021 அன்று திரும்பப் பெறுவதாக இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார். ஆனால் விவசாய போரட்ட ஒருங்கிணைப்புக் குழு நாடாளுமன்றத்தின் வாயிலாக இந்த சட்டங்களை திரும்பப் பெற்றபின்பே தங்களின் போராட்டம் விலக்கிக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளன. அதற்கான நடைமுறைகள் தற்போது நாடாளுமன்றத்தில் துவங்கியுள்ளது.

வேளாண்மையில் சீர்திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டுவரவேண்டிய முக்கிய நிர்பந்தங்கள் பல உள்ளன. வேளாண்மை துறையில் கடந்தகாலங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் ஒன்றிய அரசினால் கொண்டுவரப்பட்டன. ஆனால் இந்த மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்களும் எதிர்கொண்ட அளவிற்கு எதிர்ப்பினை அவைகள் எதிர்கொள்ளவில்லை. 1991ஆம் ஆண்டு இந்தியாவில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதன் ஒருபகுதியாக மானியங்களை குறைத்தல் இடம்பெற்றிருந்தது, உலக வர்த்தக அமைப்பானது வேளாண்மைக்கு அளிக்கப்படும் மானியங்களை குறைக்க தொடர்ந்து நிர்பந்தித்ததும், வேளாண்மைக்கு அளிகக்கூடிய மானிய அளவு தொடர்ந்து அதிகரித்ததும் அரசுக்கு பெரும் சுமையாகக் கருதப்பட்டது. 1980-81ஆம் ஆண்டு ரூ.1228.5 கோடி மானியங்கள் உரம், மின்சாரம், நீர்பாசனத்திற்கு வழங்கப்பட்டது. இது 2000-01ஆம் ஆண்டு ரூ.55339.7 கோடியாகவும் 2017-18ஆம் ஆண்டு ரூ.120500 கோடியாகவும் அதிகரித்துள்ளது. அதாவது 98 மடங்கு மானியம் 1980-81 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளுக்கிடையே அதிகரித்துள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களை வேளாண்மையில் அனுமதிப்பதன் மூலம் இம்மானியங்களைக் குறைக்க முடியம் என்று ஒன்றிய அரசு நம்பியது. அதன் விளைவாகவே சீர்திருத்தங்கள் என்ற பெயரில் விவசாயிகளை பல்வேறு வடிவங்களில் அச்சுறுத்தி வந்துள்ளது.

siragu farmers-law

வேளாண் வளர்ச்சிக்கான அடிப்படை வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலை, மானியம், கடன், சந்தைப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கமாகும். இந்த அடிப்படையிலே பசுமைப் புரட்சி 1960களில் நடைமுறைப்படுத்தப்பட்டபின் தொடர்ந்து கடைபிடித்து வந்தது. அதன்பின் வேளாண் உற்பத்தியில் இந்திய தன்னிறைவினை அடைந்தது. தற்போது இந்தியா உலக அளவில் உணவுதானிய உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியவின் வேளாண் பொருட்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. எனவே பன்னாட்டு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய முனைகின்றன. இந்தியவில் வேளாண்மையில் குறைந்த உள்ளீட்டுச் செலவுகளினால் அதிக லாபம் பெறமுடியும் என்பது இந்த நிறுவனங்களை ஈர்ப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது. உலகில் அரிசி மற்றும் அதன் மதிப்பு கூட்டல் பொருட்களுக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது (2008-09ஆம் ஆண்டில் அரிசி நுகர்ச்சி 437.2 மில்லியன் மெட்டிரிக் டன்னாக இருந்தது 2020-21ஆம் ஆண்டு 504.3 மில்லியன் மெட்டிரிக் டன்னாக அதிகரித்துள்ளது). இந்தியா உலக அளவில் நெல் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசைப் பட்டியலில் சீனாவிற்கு அடுத்த நிலையில், இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் பூகோளரீதியான தகுந்த காலச்சூழல் காரணமாக இந்தியாவில் பல்வேறுபட்ட உணவுதானியங்கள் உற்பத்தி செய்யமுடிகிறது.

குறிப்பாக, நெல் சாகுபடிக்கு ஏற்ற சூழ்நிலை இந்தியாவில் நிலவுவதும் ஒரு காரணியாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வேளாண்மையில் முதலீடு செய்ய விரும்புவதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கருதலாம். புவிசார் அரசியலும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வேளாண்மையில் முதலீடு செய்ய முன்வருவதற்கான ஒரு காரணமாகும். நெல் உற்பத்திக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இதை வளர்ந்த நாடுகளில் உள்ள நீர்வளத்தினை பயன்படுத்துவதை தவிர்த்து ஆசிய நாடுகளின் நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தி பயிர்செய்யும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு பல்வேறு அழுத்தங்களின் காரணமாகவே இந்த மூன்று வேளாண் சட்டங்களும் கொண்டுவந்தற்கான முக்கிய காரணங்களாகப் பாரக்கப்படுகிறது.

விவசாயிகளின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான இப்போராட்டம் உலக அளவில் மிக நீண்ட நாட்கள் அதிக அளவு விவசாயிகள் இன, மத, மொழி, அடையாளங்களைக் கடந்து ஒன்றிணைந்து வெயில், மழை, குளிர் போன்ற நிலையினை எதிர்கொண்டு நடத்தப்பட்டதாகும். இப்போராட்டத்தை ஒடுக்க பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அனைத்தும் தோல்வியினைச் சந்தித்தன. 11 முறை ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை, உச்சநீதிமன்றம் தலையிட்டு குழு அமைத்து ஆய்வு செய்தது தற்காலிகமாக இச்சட்டங்களை நிறுத்திவைத்தது என பல நிலைகளிலும் சமாதான நடவடிக்கைகள் தொடர்ந்திருந்தும் இம் மூன்று சட்டங்களின் விளைவுகளை விவசாயிகள் முழு அளவில் புரிந்திருந்ததால் இச்சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் போராடினார்கள்.

நீண்ட போராட்டத்திற்குப்பின் ஒன்றிய அரசு விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்பதை உணர்ந்தது, அனைத்து எதிர்கட்சிகளும் இந்த சட்டங்களுக்கு எதிரான நிலையை எடுத்ததும்அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறாததும், பஞ்சாப், உத்திரப் பிரதேசம், கோவா போன்ற ஐந்து மாநிலத்தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாலும் இச் சட்டங்கள் விலக்கிக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. பிரதமர் இச் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் ஒரு பிரிவு விவசாயிகளுக்கு இதனை சரியாக விளக்க முடியவில்லை என்றும் எனவே அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறினார். அதே நேரம் தொடர்ந்து வேளாண்மை முன்னேற்றத்திற்கும் விவசாயிகளின் நலனுக்கும் தொடர்ந்து பாடுபடப்போவதாகக் கூறியுள்ளார். அதன்படி, குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்திற்கு குழு அமைக்கப்படும் என்றும், விவசாயத்திற்கான இடுபொருட்களான உரம்,பூச்சிகொல்லி மருத்து தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும், விதைகள் தரமானதாகவும், குறைவான விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். பயிர் காப்பீடு, விவசாயக் கடன், நீர்பாசனம், தடையற்ற மின்சாரம் போன்றவைகள் உறுதிசெய்யப்படும் என்றார்.

வேளாண் விவசாயிகளின் மிக முக்கியமான நீண்டகால கோரிக்கையான வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலை கிடைப்பதைச் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்பதாகும். இதற்கான முன்னெடுப்பினை ஒன்றிய அரசு காலம் தாழ்த்தாமல் செயல்படுத்தவேண்டும். இதனை சட்டப்படி நடைமுறைப்படுத்தப்படும்போது விவசாயிகளின் வருமானம் உயரும், விவசாயகளின் கடன் சுமை குறையும், விவசாய தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்படும். பயிர் காப்பீடுகளை விரிவுபடுத்துதல், கடன் வசதிகளை உருவாக்கித்தருதல், அரசு நேரடியாக வேளாண் பொருட்களை கொள்முதல் செய்தல், வேளாண் உள்ளீட்டுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடையற்ற நிலையில் கிடைக்கச்செய்தல், நீர்ப்பாசன வசதி மற்றும் வடிகால் உறுதி செய்தல், தடையற்ற இலவச மின்சாரம் அளித்தல் போன்றவைகள் வேளாண்மையினை வளர்த்தெடுக்கவும், விவசாயிகளின் வருவாயினைப் பெருக்கவும் உதவும். மாநில-ஒன்றிய அரசுகள் இதற்கான முன்னெடுப்புகளில் போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து அளிக்கும் துறையாக இன்றும் வேளாண்மைத்துறை காணப்படுகிறது (43 விழுக்காடு மொத்த தொழிலாளர்களில்). ஆனால் விவசாயிகளின் சராசரி வருமானம் ஒரு நாளைக்கு ரூ.27 மட்டுமே. எனவே விவசாயிகளின் கோரிக்கையில் நியாயம் உள்ளது என்பதை உணர்ந்து விவசாயிகளை அழைத்து பேசி பிரச்சனைகளுக்கு ஒன்றிய அரசு நல்ல தீர்வினைக் காணவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய விவசாயிகளின் போராட்டமும் திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களும்”

அதிகம் படித்தது