மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இனியாவது பேசுவோம் மறந்துபோன தொப்புள்கொடி உறவை!

தவமுதல்வன்

Sep 23, 2017

Siragu malayaga thamilargal1

ஆயிரத்து எண்ணூற்று இருபதுகளில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்து போன தமிழர்களின் வாழ்வு இருநூறு ஆண்டுகளை எட்டுகிறது. இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகத்திற்கு துரோக உடன்படிக்கையான, அதிபர் சிறிமாவோ பண்டாரநாயக்க – இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி செய்துகொண்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு தொடக்கம் இரண்டாயிரத்து பதினான்குடன் ஐம்பது வருடங்களை கடந்தாயிற்று. உலகில் வாழும் அனைத்து மக்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவை அத்தனையும் பெற தகுதியுள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்களை இரண்டு நாடுகளும் பண்டத்தைபோல பங்கு போட்டுக்கொண்டனர்.

கடலுக்கு அப்பால் இலங்கையில் இன்றைய கணக்கீட்டின்படி பதினைந்து லட்சம் பேர் மலையகத்தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ்வைத் தொடர்கின்றனர். இங்கே குறிப்பாக தமிழகத்தில் அதே எண்ணிக்கையில் பல மாவட்டங்களில் தாயகம் திரும்பிய தமிழர்களாக வாழ்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலிருந்து பிஜி, மொரிசியஸ், மலேசியா, பர்மா, தென்னாப்பிரிக்கா என பல நாடுகளுக்கு கூலிகளாக அழைத்து செல்லப்பட்டாலும் ஒப்பீட்டளவில் தேயிலை தோட்டங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையில் நவீன சமூகத்தின் எந்த ‘சுதந்திரமும்’ இதுவரை கிட்டவில்லை என்பதே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நமக்குக் கிடைக்கும் கசப்பான உண்மை.

Siragu malayaga thamilargal3

சுதந்திரம் அற்ற இந்தியாவிலிருந்து பஞ்சமும் சாதியமும் இலங்கையை நோக்கி மக்களை விரட்டியது. ஆறு ஏழு தலைமுறைகள் அங்கு வாழ்ந்த பிறகு ‘சுதந்திரம் அடைந்த இலங்கை சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கு’ அந்த மக்களை அங்கிருந்து விரட்டியது சிங்கள பேரினவாதம். இலங்கையில் இந்தியக்காரன், கள்ளத்தோணி, தோட்டக்காட்டான் என்னும் பெயரில் அவர்களை பழித்தனர். இந்தியாவில் சிலோன்காரன், கண்டிக்காரன், இப்படி பழிக்கிறது தமிழகச் சமூகம். அறுபதுகளில் தேயிலைத்தோட்டங்களில் கூலிகளாக வாழும் அந்த ஒட்டுமொத்த மக்களை மலையகம் என்னும் பொதுப்பெயரில் அடையாளப்படுத்தினர். தமிழகம் வந்தவர்கள் தாயகம் திரும்பியோர் என தங்களை அடையாளப் படுத்திக்கொண்டனர். இரண்டு நாடுகளிலும் முப்பது லட்சம் பேர் வாழ்கிறார்கள்.

சாதியில் ஒடுக்கப்பட்டோராகவும் வர்க்கத்தில் உழைக்கும் மக்களாகவும் இருக்கும் இவர்களின் சமூகப் பொருளாதார, பண்பாட்டு விடயங்கள் தமிழ்ச் சமூகம் அறிந்திருக்குமா? அறிவு ஜீவிகளாவது தெரிந்திருக்கிறார்களா? என்றால் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்குமேல் தமிழ் சூழலில் பேசப்பட்டுவரும் தொப்புள்கொடி உறவு எதுவென்றால் இலங்கையின் வடகிழக்கு தமிழர் பற்றிய உறவே. தமிழ்தேசிய அரசியலில் விடப்பட்ட அல்லது வஞ்சிக்கப்பட்ட ஓர் உறவு மலையகத்தமிழர் என்றால் அந்த கூற்று மிகையில்லை.

இதை நான் பேசுவதால் ஏதோ தமிழ்தேசியத்தின் எதிரிபோல யாரும் பேசக்கூடும். தமிழகத்தின் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மதுரை என எல்லா மாவட்டங்களிலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் உறவை பேணுகிற இவர்கள்தானே ஆய்வின்படி பார்த்தால்கூட உண்மையான தொப்புள்கொடி உறவு. ஏன் எல்லோருக்கும் இந்த உண்மை மறந்துபோகிறது? உலகின் வரலாறுகளை எல்லாம் ‘கரைத்து குடித்த’ அரசியல் ஆய்வாளர்களுக்கு, களப்போராளிகளுக்கு இந்த உண்மை ஏன் தெரியவில்லை.

Siragu malayaga thamilargal2

போரும் அதைச் சார்ந்த போராட்டங்களும், உரையாடல்களும் மட்டும்தானா ஈழப்போராட்டத்தின் அங்கம்? இலங்கையின் அரசியல் வரலாற்றில் உழைப்பைத்தவிர ஏதுமறியாத லட்சக்கணக்கான மக்களின் வரலாறு எப்படி மறந்து போகும்! நடந்துமுடிந்த இனப்படுகொலையில் நடந்துகொண்டிருக்கிற சனநாயக மறுப்பில் பாதிக்கப்படாதவர்களா இந்த மக்கள்.? தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய நாள்முதல் எல்லா அநீதிகளும் இவர்கள் மீதும் சுமத்தப்பட்டுவருகிறது என்பதும், போரில் ஆயிரகணக்கான மலையக இளைஞர்கள் மாவீரர்கள் ஆனார்கள் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்.

ஆக பெரும்பான்மையாக பலியானவர்கள் எந்தவித உடைமையும் அற்ற எளிய மக்களே என்பதை யார் சொல்லுவது. சொந்த காணியில்லை; சொந்த வீடில்லை; இன்னமும் அந்த நாட்டு மக்களே என ஏற்றுகொள்ளாத சமூகத்தின் பொதுபுத்தி; மாற்றாந்தாய் பார்வை இவற்றின் ஊடாகத்தான் மலையகத்தமிழர் வாழ்வு நகர்கிறது இன்றும். நாம் விடுதலையை விரும்புகிறோம், அதற்காக மற்ற சக்திகளோடு கை கோர்த்து நேச சக்தியாக அணியமாகிறோம். அதே வேளை ஒடுக்கு முறை எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்கிறோம். நாம் வேண்டுவது உழைக்கும் மக்களின் விடுதலை! அவர்களே அந்த மண்ணில் நின்று போராடுகிறார்கள். விடுதலை அதன் ஆழமான பொருளில் உழைக்கும் மக்களுக்கே! எந்தவித புனைவும் அற்ற உழைப்பின் மேன்மைக்கு அங்கீகாரம் கோருகிற மலையக இலக்கியத்தையும், இலங்கை என்கிற நாட்டின் சமூக அரசியல் பொருளியலில் எந்த வகையிலும் மற்றவர்களுக்கு குறைவின்றி இணையாக பங்கு வகிக்கும் அந்த மக்களை பற்றி இனியேனும் பேசுவோம்!


தவமுதல்வன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இனியாவது பேசுவோம் மறந்துபோன தொப்புள்கொடி உறவை!”

அதிகம் படித்தது