மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்றும் சம்பூகன்களும் இராமன்களும்

இராமியா

Dec 28, 2019

சம்பூகன் எனும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓர் இளைஞன் தவம் செய்ததால் ஒரு பார்ப்பன இளைஞன் மரணம் அடைந்து விட்டதாகக்கூறி, சம்பூகனை இராமன் தலைகீழாகத் தொங்கப்போட்டு, கழுத்தை வெட்டிக்கொன்றார். இதே போன்ற நிகழ்வு ஒன்று ஒரிசா மாநிலம், மல்கங்கிரி மாவட்டம், இண்டகுடா கிராமத்தில் நடைபெற்று உள்ளது.

siragu samboogangalum1

யாகங்கள் செய்வதினாலும், மந்திரங்களை உச்சரிப்பதினாலும் ஒரு நரை மயிரைக் கருப்பாக்கக்கூட முடியாது. ஆனால் இவற்றினால் அரிய பெரிய நன்மைகள் கிடைக்கும் என்று நம்பும் ஒரு பெரும்மக்கள் திரள் நம்மிடையே இருக்கவே செய்கிறது. கூடவே இந்த யாகங்களையும் மந்திரங்களையும் பார்ப்பனர்களும் பார்ப்பனர்களின் “ஒப்புதல்” பெற்றவர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். அதிலும் சாதிப்படி நிலையில் தங்கள் சாதியைவிட உயர்ந்த சாதியில் உள்ளவர்கள்தான் இவற்றைச் செய்யத் தகுதி பெற்றவர்கள் என்று மனமார நம்புகிறார்கள். அதுகூடப் பரவாயில்லை. தங்கள் சாதியைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்கள் இவற்றைச் செய்தால் கோபம் பொத்துக் கொண்டுவந்து விடுகிறது.

ஒரிசா மாநிலம், மல்கங்கிரி மாவட்டம், இண்டகுடா கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இர்மாகர்த்தமி (Irma Kartami) என்ற 25 வயது இளைஞர் அருள் வாக்குகூறுதல், பில்லிசூனியம் செய்தல் / எடுத்தல், மந்திரம் உச்சரித்தல் போன்ற வேலைகளைச் செய்துகொண்டு இருந்தார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவன் இதுபோன்ற (ஏமாற்று) வேலைகளைச் செய்வதா என்று அக்கிராமத்தில் உள்ள “உயர்” சாதியினர் பொங்கி எழுந்து விட்டனர். வரணாசிரம முறையை மதிக்காத அவனை 21.12.2019 அன்று கிராமப் பஞ்சாயத்துக் கூட்டத்தின்முன் இழுத்து வந்து நிறுத்தினர். அக்கூட்டத்தில் அவருடைய பில்லி சூனிய வேலைகளால் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜகமதி (Jaga Madhi) என்ற 23 வயது இளைஞர் மரணம் அடைந்து விட்டதாகக் குற்றம் சாட்டினர். அந்த மந்திரவாதி தன்னிலை விளக்கம் அளிப்பதற்கு முன்பேயே கூட்டத்தில் இருந்தவர்கள் அவரைத் தடியால் அடித்துக் கொன்று விட்டனர்.

siragu samboogangalum2

இதன் தொடர்ச்சியாக 22.12.2019 அன்று அப்பகுதி ஆளுகையில் வரும் களிமேலா (Kalimela) காவல்நிலையம் நான்கு பேர்களைக் கைது செய்து விசாரித்து வருகிறது.

வர்ணாசிரம அதர்மம் வெளிப்படையான சட்டமாக இருந்த காலத்திலும் சரி; மறைமுகமாகப் பின்னிப் பிணைந்து உள்ள இந்தக் காலத்திலும் சரி கடவுள், பிசாசு, பில்லி சூனியம் போன்ற ஏமாற்று வித்தைகளைப் பயன்படுத்துவதை முற்றுரிமையாகப் பார்ப்பனர்களே பெற்று உள்ளனர். அந்த ஏமாற்று வித்தைகளை ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள்கைக் கொண்டால் காவல்துறை, நீதிமன்றம் போன்ற அரசின் எந்த அங்கத்திற்கும் செல்லாமல் அவர்கள் ஊர்க் கூட்டத்திலேயே தண்டிக்கப்பட்டு விடுகிறார்கள்.

அறநிலைக்கும், அறிவு நிலைக்கும் எதிரான இப்படிப்பட்ட கடினமான இருளும், சூறாவளியும் சூழ்ந்து உள்ள சூழலில்தான் மக்களின் விடுதலைக்காகப் போராட வேண்டி உள்ளது.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்றும் சம்பூகன்களும் இராமன்களும்”

அதிகம் படித்தது