மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இப்பல்லாம்….??

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jun 2, 2018

siragu ippellaam3

இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறா? இந்த ஒற்றை வரியை நாம் கேட்காமல் இருந்ததில்லை. தங்களை சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் எனப் பறைச்சாற்றி கொள்வோரும் தங்கள் சாதியைப் பற்றி குறை கூறிவிட்டால் தங்கள் சாதிப் பிணைப்பை, பாசத்தை விட்டுவிட முடியாது சாதியின் பெயரில் நடக்கும் கொடுமைகளை, ஆதிக்கத்தை தட்டிக் கேட்போரை விசமிகள் என்றும் வெறுப்புரை பரப்புவோர் என்றும் வசை பாடுவதை பார்க்கின்றோம். சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியின் பாடலைப் பாடுவோர், தங்கள் முதுகில் சாதியை வெளிப்படுத்தும் குறியீட்டை சுமந்து கொண்டே அதை பாடுகின்றனர். ஏணியின் முதல் படியில் இருக்கின்றவனின் திமிர் தான் இப்படி என்றுப் பார்த்தால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் உள்ள மக்கள், முதல் அல்லது இரண்டாவது தலைமுறையாக படிப்பின் நீரோடை தடையின்றி கிடைக்கப்பெற்றவர்களும் தங்களின் சமூக இழிவின் காரணமான கூட்டத்தையும், வேத உபநிடந்தங்களையும் விட்டுவிட்டு, தங்களின் சாதிய அதிகாரத்தை நிலை நாட்டிக்கொள்ளத் தனக்கு கீழ் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் மக்களிடம் வன்மமாக, மனிதம் மறந்து நவீன பார்ப்பனியத்தை கடைப்பிடிக்கும் போக்கு கண்டிக்கப்பட வேண்டிய செயல். அந்த வகையில் மீண்டும் சாதியம் தன் கோர முகத்தை, கச்சநத்தத்தில் காட்டியுள்ளது.

மானாமதுரை வட்டம், திருப்பாச்சேத்தி அருகில் உள்ளது கச்சநத்தம். கச்சநத்தம் கிராமத்தில் தேவேந்திரகுல பிரிவைச் சேர்ந்த ஐம்பது குடும்பங்களும், ஆதிக்க சாதிப் பிரிவினர் ஐந்து குடும்பங்களாகவும் வசிக்கிறார்கள். இதில் சுமன் குடும்பம் கஞ்சா வியாபாரம் செய்துவருகிறார். இதை எதிர்த்து அங்கு வாழும் தலித் மக்கள் காவல்துறைக்கு புகார் கொடுத்தும், காவல்துறையினர் இதில் உறுதியான நடவடிக்கை எடுக்கமால் ஆதிக்க சக்திக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

siragu ippellaam1

இதன் காரணமாக கடந்த நான்கு வருடத்துக்கு மேலாக இப்பிரச்சனை இருந்துள்ளது. நேற்று கச்சநத்தம் கிராமத்தில் திருவிழா முடிந்த நிலையில் ஆதிக்க சாதியினர் வெளியூரிலிருந்து ஆட்களை கொண்டு வந்து தலித் மக்கள் மீது வன்கொடுமை கொலைவெறி தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் மூவர் படுகொலை செய்யப்பட்டும், ஏழுபேர் படுகாயம் அடைந்துள்ளனர் என ஒரு செய்தியும், கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் தான் இந்த கொலைகள் நடத்தப்பட்டன என்ற செய்தியும் வருகின்றன. மீசையை முறுக்கி விட்டக் காரணத்தால், அம்பேத்கர் டாலர் அணிந்திருந்த காரணத்தால், குதிரை மீதமர்ந்து ஓட்டி வந்த காரணத்தால் என தலித் மக்கள் மீது ஏவப்படும் கொடுமைகள் புதிது அல்லவே. ஆண்டாண்டு காலமாக சூத்திர மக்கள் தானே பார்ப்பனர்களின் பார்ப்பனியத்தின் காலாட் படையாக செயல்பட்டு இந்தக் கொலைகளை நிகழ்த்துகின்றனர்.?

ஈழப் போரின் போதும், முழுமையாக முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு மண்மூடப்பட்டவர்கள் தலித் மக்கள் என்பது தானே உண்மை. ஏன் இந்த இனப்பகையை ஒரே இன மக்களின் ஒரு பகுதிக்கு சாதி வெறி ஊட்டி பார்ப்பனியம் தீர்த்துக்கொள்கின்றது?

வரலாற்றில் இறுதி வரை பார்ப்பனியத்தை ஏற்றுக்கொள்ளாமல் பௌத்தத்தை விட்டுக்கொடுக்காது போர் புரிந்தவர்கள் தான் இன்றைய தலித் மக்கள். அவர்களை தங்களுக்கு ஏதுவான அரசையும் , அரசனையும் வைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே தள்ளி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்களின் உரிமைப் போரினை நேரடியாக நசுக்காமல், தங்களுக்கு கீழ் ஏற்படுத்தி வைத்திருக்கும் சாதிய அடிமைகளைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்கின்றது பார்ப்பனியம்.

கச்சநத்தம் படுகொலைகளை பொறுத்தவரையில் இது தமிழ் நாட்டிலா நடக்கின்றது என்று நாம் வியக்க வேண்டியத் தேவை இல்லை. தமிழ் நாட்டில் தான், எந்த மண்ணில் சமூக நீதியை, சாதி ஒழிப்பை தந்தை பெரியார் ஊர் தோறும் பேசி வெற்றி கண்டாரோ அந்த மண்ணில் தான் அண்ணல் அம்பேத்கரின் சிலைகளை கூண்டில் இருந்து வெளிப்படுத்த முடியாமல், நாம் தோற்றுப்போகின்றோம். ஒரு சிலையை கூட ஆதிக்க சாதி மனப்பான்மை சகித்துக் கொள்ளாத இடத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்கள் என்பதற்காக கொல்லப்படுவதில் என்ன வியப்பு? சாதிய மன நிலையை கேள்வி கேட்க முடியாமல் தலித் என்று கூறாது தமிழ்க் குடிகள் என்று சொல்வதால் சாதிய படுகொலைகள் நடக்காது என்று சொல்வது எவ்வளவு பெரிய திசை திருப்பல்? என்பதை சிந்திக்க வேண்டும் .

siragu ippellaam2

சாதி ஒழிய வேண்டும் என்றால் முதலில் ஒருவர் தங்கள் சொந்த சாதிக்கு துரோகம் செய்ய வேண்டும் என்பார் பெரியார். அனைவரும் சாதி ஒழிய வேண்டும் என்று தான் நினைக்கின்றனர், தங்கள் சாதியைத் தவிர்த்து என்பார் பேராசிரியர் சுபவீ அவர்கள். அந்த நிலை தான் இன்று உள்ளது.

சாதிய மன நிலையை உளவியல் ரீதியாக தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். தனக்கு கீழ் ஒரு சாதி என்ற கட்டமைப்பே சாதி என்றும் நிலை பெறுவதற்கு காரணம். தோளில் கைப் போட்டு பேசுகிறான் அதனால் சாதி ஒழிந்து விட்டது என்பதெல்லாம் எவ்வளவு பெரிய பித்தலாட்டம்? கோயில் கருவறையில், திருமணங்களில், குல தெய்வ வழிபாடுகளில் சாதியை வைத்துக் கொண்டும், உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கப் போகும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்வதில் இருந்தும் சாதியும் இந்த அளவிற்கு நம்மை சிதைக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தூத்துக்குடி நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் கூட அரச பயங்கரவாதத்தை பற்றி வாய் திறக்காமல், இந்திய நாட்டின் முதல் பிரச்சனை ஊழல் என்பதுப் போல் சித்தரிப்பது எல்லாம் சமூக ஊழல்களை மறைக்கவே என்பதை எப்போது நம் மக்கள் புரிந்து கொள்வது ?

இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்கறா? என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்(ல்)வோம் !!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இப்பல்லாம்….??”

அதிகம் படித்தது