மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இரண்டாம் பசுமைப்புரட்சி துவங்குகிறது

தேமொழி

Dec 3, 2016

siragu-green-revolution3

“பண்ணையெல்லாம் பொன் கொழிக்க செய்திடுவோம்

அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்,

கண்மணி போல் நெல்மணியை வளர்த்திடவே

நாளும் கருத்துரைக்கும் ஒலிபரப்பைக் கேட்டிடுவோம்,

பட்டி தொட்டி குப்பம் எங்கும் பாடுபட்டே

நம் பாரத சமுதாயத்தை உயர்த்திடுவோம்”

என்று இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பிய ஒரு விவசாய நிகழ்ச்சியின் பாடல், 1970 மற்றும் 1980-களில் பலரையும் கவர்ந்த பாடல். அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது குடியரசுத் தலைவர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்றவாரம் சண்டிகாரில் நடந்த வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கில் நிகழ்த்திய ஓர் உரையும் (12th edition of CII Agro Tech 2016 in Chandigarh on November 20, 2016), ஒரு அறிவியல் ஆய்வறிக்கையின் வெளியீடும்.

இந்தியாவின் பசுமைப் புரட்சி:

siragu-green-revolution4

பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பாராட்டப்படும் “நார்மன் எர்னஸ்ட் போர்லாக்” (Norman Ernest Borlaug, 1914 – 2009) என்ற அமெரிக்க வேளாண் அறிவியலார் 1940-களில் தனது ஆய்வின் மூலம் மெக்சிகோ நாட்டின் பசுமைப்புரட்சிக்கு வித்திட்டவர். இவரது தாவரவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் உலகில் சுமார் 25 கோடி(245 மில்லியன்) மக்களைப் பசியில் இருந்து காப்பாற்றியதாகக் கணக்கிடப்படுகிறது. இவரது ஆய்வுகளின் வழிமுறைகளை விரும்பி ஏற்றுக் கொண்ட சுதந்திர இந்தியாவும் நாட்டின் வளரும் மக்கள்தொகையின் உணவுத் தேவையில் தன்னிறைவு எய்திட 1960 களில் “பசுமைப்புரட்சி” கொள்கையைக் கடைப்பிடித்தது. இம்முயற்சியால் கோதுமையை பிறநாட்டில் இருந்து விலைகொடுத்துத் தருவித்து மக்களுக்கு வழங்கும் நிலையை இந்தியாவால் குறைக்கவும் முடிந்தது.

இவ்வாறு இந்தியாவின் பசுமைப்புரட்சிக்கு உதவியதால் 2006 ஆம் ஆண்டு இந்தியாவின் பத்ம விபூஷண் பட்டம் அளிக்கப்பட்டு பாராட்டப் பட்டவர் நார்மன் போர்லாக். இவரது பங்களிப்பு சமூகத்தின் பொருளாதார மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்தது என்பது சென்ற நூற்றாண்டு எதிர்கொண்ட மறுக்கமுடியாத மாறுதல். இவரது பசுமைப்புரட்சி பங்களிப்பு பசியால் உருவாகக் கூடிய போர்களைத் தவிர்த்திருக்க உதவியது என்ற அடிப்படையில் 1970 இல் உலக சமாதானத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

பசுமைப் புரட்சி திட்டத்தில் …

siragu-green-revolution2

(1) அதிக மகசூல் தரும், நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களின் விதைகள் கலப்பின முறை மற்றும் மரபணு மாற்றங்கள் மூலம் உருவாக்கப்பட்டன.

(2) பயிரிடும் காலங்களில் மாற்றங்கள், சாகுபடி சுழற்சி போன்ற பயிரிடும் முறையில் திட்டமிடப்பட்ட மாற்றங்கள், புதிய நீர் மேலாண்மை வழிமுறைகள், மண் வள ஆய்வு அடிப்படையில் பயிர், உரம் ஆகியவற்றைத் தேர்வு செய்தல், கூட்டுறவு பண்ணை உழவுமுறை, உழவுத்தொழிலில் இயந்திரங்களின் பயன்பாடு போன்றவை நவீன வேளாண் தொழில் நுட்ப முறைகளாகப் பரிந்துரைக்கப்பட்டன.

(3)புதிய வேளாண் முறைகளாக வேதியல் அடிப்படையில் பூச்சிகொல்லிகள், களைகொல்லிகள் போன்றவை பயிர்களின் நோய் எதிர்ப்புக்கும்புதிய உரங்கள் ஊட்டச் சத்தாகவும் பயன்படுத்தப்பட்டு அதிக விளைச்சலுக்கு வழிவகுத்தன.

ராக்கஃபெல்லர் மற்றும் ஃபோர்ட் அறக்கட்டளை (Rockfeller Foundation, Ford Foundation) அமைப்புகள் இந்தப் பசுமைப்புரட்சி அறிவியல் ஆய்வுகளை ஆதரித்து வளர்ப்பதில் இன்றியமையாப் பங்கேற்றன. ஆய்வின் விளைவுகளைக் கண்ட பின்னர் பசுமைப் புரட்சி கொடுக்கும் பலனால் ஈர்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய அரசாங்கங்களும் புதிய வேளாண் தொழில்நுட்ப முறைகளை ஏற்றுக் கொண்டன. இந்நாடுகளில் 1950 களில் கோதுமை உற்பத்தி எடை அளவில் (kilograms per hectare) அதிகரித்தது. மகசூல் ஹெக்டேருக்கு 500 கிலோ என்பதிலிருந்து வளர்ச்சியடைந்து,2000 களில் ஹெக்டேருக்கு 2500 கிலோ மகசூல் என்ற நிலையை எட்ட முடிந்தது. குறிப்பாக இது அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட இந்தியா ‘உணவு உற்பத்தியில் தன்னிறைவு’ என்ற நிலையை எட்ட உதவியது. பத்துமடங்கு அதிக மகசூல் தரும் ஐ.ஆர்8 (IR8) நெல்வகை இந்தியாவின் அரிசி உற்பத்தியில் பெரும் மாறுதலைக் கொண்டு வந்தது. இந்திய உணவு அமைச்சராகப் பணியாற்றிய சி. சுப்பிரமணியம் அவர்கள் முயற்சியில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு நிலையை எட்டியதுடன், இந்தியா தானியங்களை இறக்குமதி செய்யும் நிலையும் மாறியது. இன்று உலகில் அதிக அளவு அரிசி உற்பத்தி செய்யும் நாடாகவும், அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாகவும் அறியப்படும் நிலையை இந்தியா அடைந்துள்ளது.

சென்ற நூற்றாண்டின் இந்தியாவின் பசுமைப்புரட்சி திட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் உணவு உற்பத்தியில் முன்னிலை வகித்தன. இம்முறை ‘இரண்டாம் பசுமைப்புரட்சி’யின் துவக்கமாக இந்தியாவின் வடகிழக்கு மற்றும் கிழக்குப்பகுதிகள் பசுமைப்புரட்சியை முன்னெடுத்து வளர்ச்சியடைய வேண்டும் என்றும், இதற்காக புதிய வேளாண் தொழில்நுட்ப முறைகளையும், நவீன வேளாண் முறைகளையும் இந்தியா முன்னெடுக்கத் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்..

இரண்டாம் பசுமைப்புரட்சி – தாவரங்களின் ஒளிச்சேர்க்கைத்திறன் அதிகரிப்பு:

siragu-green-revolution8

சூரிய ஒளியில் இருந்து கார்போஹைட்ரேட் தயாரிக்க உதவுவது ஒளிச்சேர்க்கை முறை. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைத் திறனை அதிகரிக்கும் முயற்சி அறிவியலார்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாம் பசுமைப்புரட்சியின் அடிப்படை எனக் கருதப்படுகிறது. உலகில் அடுத்து வரும் இருபதாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஈடுசெய்யும் விதமாக உணவு உற்பத்தி அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டும், ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளின் மக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டும் ‘பில்கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம்’ (Bill & Melinda Gates Foundation) வேளாண் தொழில்நுட்ப ஆய்வில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டுள்ளது.

மேகங்கள் கடப்பதினால் மாறுபடும் சூரியஒளி நிலை ஏற்படுகிறது, இதனால் இயற்கையில் தாவரங்கள் வேறுபடும் சூரியஒளி அளவை எதிர்கொள்கின்றன. அதிக அளவு சூரிய ஒளியில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள சூரியனில் இருந்து பெறும் சக்தியைத் தாவரங்கள் வெப்பமாக வெளியேற்றி விடுகின்றன (nonphotochemical quenching – NPQ). மீண்டும் சூரிய ஒளி குறைந்த தக்கச் சூழலை எதிர்கொள்ளும்பொழுது ஒளிச்சேர்க்கையைத் துவக்கி சூரிய சக்தியை கார்போஹைட்ரேட்களாக மாற்றி செடிகளில் சேமித்துக் கொள்கின்றன.

இவ்வாறு மாறுபடும் சூரியஒளியை எதிர்கொள்ளும் சூழலில் வெப்பத்தை வெளியேற்றும் செயலில் இருந்து ஒளிச்சேர்க்கைக்குத் தகவமைத்து மாறும் செயலுக்காக தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறைப்பதில் தாவரவியல் ஆய்வாளர்கள் இப்பொழுது மாறுதலைக் கொண்டு வந்துள்ளார்கள், இதனால் ஒளிச்சேர்க்கைத் திறன் அதிகரிக்கப்படுகிறது (faster light adaptation improves photosynthetic efficiency) என்றும்; தாவரங்களின் வளர்ச்சியும் மூன்று வாரங்களில் 20% (up to a 20% increase in biomass)வரை விரைவுபடுத்தப்படுகிறது என்பதும் மாற்றம் செய்யப்படாத அதேவகை தாவரங்களுடன் ஒப்பிடும்பொழுது தெரியவந்துள்ளது.

siragu-green-revolution7

அமெரிக்காவின் இல்லினாயிஸ் பல்கலைக்கழக தாவரவியல் ஆய்வாளர் “ஸ்டீஃபன் லாங்” (Stephen Long of University of Illinois in Urbana), கலிபோர்னியா பல்கலைக்கழக மரபணுவியல் ஆய்வாளர் “கிருஷ்ண நியோகி” (Krishna Niyogi of the University of California, Berkeley) மற்றும் இவர்களது ஆய்வுக் குழுவினர்களும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட புகையிலைச் செடிகளை ‘ஒளிச்சேர்க்கைத்திறன் அதிகரிப்பு’ ஆய்வுக்கு உட்படுத்தியதில் வெற்றி கிட்டியுள்ளது. புகையிலைச் செடிகள் ஆய்வுக்கு ஏற்ற எளிய தாவரம் என்ற அடிப்படையில் ஆய்வாளர்கள் புகையிலையில் மரபணு மாற்றங்களைச் செய்து ஆய்வு செய்துள்ளனர். பின்னர் இந்த மாற்றங்களை உலகில் அதிகம் உணவுப் பயிர்களாக வளர்க்கப்படும் அரிசி, சோளம் மற்றும் சோயா பீன்ஸ் ஆகிய பயிர்களில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. உணவுப் பயிர்களிலும் இந்த மரபணு மாற்றம் விரைவாக வளரும், விளைச்சலை அதிகரிக்கும் பயிர்களை உருவாக்குமானால் அது வளரும் உலக மக்கள்தொகையின் உணவுத் தேவையை நிறைவு செய்ய உதவும். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் திட்டமான வரும் 30 ஆண்டுகளில் 70% வரை உலகின் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளையும் அடைய உதவும்.

இந்த ஆய்வுக்குழுவைப் போன்றே, “சி 4 அரிசி ஆய்வுக் கூட்டமைப்பு”(C4 Rice Consortium)என்ற மற்றொரு ஆய்வுக் குழுவும் அரிசியில் ஒளிச்சேர்க்கையைத் துரிதப்படுத்துவதிலும், குறைந்த அளவு உரம் மற்றும் நீரையும் பயன்படுத்தி விரைவில் அதிக மகசூல் தரும் பயிர்களை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இரண்டாம் பசுமைப்புரட்சிக்கான வேளாண் ஆய்வு என்ற கோணம், தாவரங்களின் மரபணு மாற்றங்களின் மூலம் ஒளிச்சேர்க்கைத் திறனை அதிகரித்து, பயிர்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் செயலை குறிக்கோளாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. பில்கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனமே இந்த “சி 4 அரிசி ஆய்வுக் கூட்டமைப்பு” ஆய்வுகளுக்கும் நிதியுதவி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________

தகவல் பெற்ற தளங்கள்:

[1] Government programmes must succeed for India’s growth: President Pranab Mukherjee -

http://indianexpress.com/article/india/india-news-india/government-programmes-must-succeed-for-indias-growth-president-pranab-mukherjee-4386762/

[2] Improving photosynthesis and crop productivity by accelerating recovery from photoprotection. Johannes Kromdijk and Krishna K. Niyogi et al., Science 18 Nov 2016: Vol. 354, Issue 6314, pp. 857-861. DOI:10.1126/science.aai8878 -

http://science.sciencemag.org/content/354/6314/857

[3] How turning off a plant’s sunshield can grow bigger crops. Erik Stokstad. Nov. 17, 2016 -

http://www.sciencemag.org/news/2016/11/how-turning-plants-sunshield-can-grow-bigger-crops

[4] Super-Fast-Growing GM Plants Could Yield the Next Green Revolution: Scientists have used genetic engineering to make plants that grow 20 percent larger. Antonio Regalado. November 17, 2016, MIT Technology Review magazine -

https://www.technologyreview.com/s/602932/super-fast-growing-gm-plants-could-yield-the-next-green-revolution/

[5] Supercharged Photosynthesis: Advanced genetic tools could help boost crop yields and feed billions more people; Availability: 10-15 years, Kevin Bullis, MIT Technology Review magazine -

https://www.technologyreview.com/s/535011/supercharged-photosynthesis/

காணொளி:

[1] A Second Green Revolution: Tweaking Photosynthesis Boosts Plant Growth -

https://www.youtube.com/watch?v=d6xpQYaxiRc&feature=youtu.be

[2] The Second Green Revolution, Bayer Crop Science -

https://www.youtube.com/watch?v=7lbjHWoDIRw

படம்:

SCIENCE – American Association for the Advancement of Science, 18 November 2016 -

https://pbs.twimg.com/media/CxfHVr3UUAEAHTw.jpg

_______________________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரண்டாம் பசுமைப்புரட்சி துவங்குகிறது”

அதிகம் படித்தது