மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இராமநாதபுரம் மாவட்ட இலக்கிய ஆளுமைகள் – பாகம்-2

முனைவர் மு.பழனியப்பன்

May 23, 2020

siragu ramanathapuram1

தற்கால ராமநாதபுர இலக்கிய ஆளுமைகள்

வேல . ராம்மூர்த்தி

பெருநாழி என்ற ஊரைச் சார்ந்தவர் வேல. ராம்மூர்த்தி. இவர் எழுத்தாளராகவும், நடிகராகவும் விளங்குகிறார். இவர் சிறுகதைகள் பலவற்றையம், இரு நாவல்களையும் எழுதியுள்ளார். இவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அ. சையத் இப்ராஹிம் 

சையத் இப்ராஹிம் என்னும் பெயரை இவரை பெற்றிருந்தாலும் ஹிமானா சையத் எனும் பெயரால் இவர் அறியப்படுகிறார். இவர் சித்தார் கோட்டை என்ற ஊரைச் சார்ந்தவர். இவர் ஒரு மருத்துவர். இவர் கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், ஆய்வுகள், ஆய்வுக்கட்டுரைகள் போன்ற பல வகைகளை எழுதிவருகிறார். தற்போது இவர் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் 650 சிறுகதைகளும், 10 புதினங்களும், 700 கட்டுரைகளும், 500 கவிதைகளும் எழுதியுள்ளபார். இவர் ஆங்கில மொழியிலும் அவ்வப்போது எழுதிவருகின்றார். இவர் தமிழ் மாமணி, பாரத் ஜோதி,சிறந்த குடிமகன் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

இன்குலாப் (1944-2016)

இன்குலாப்பின் இயற்பெயர் செ. கா. சீ. சாகுல் அமீது கீழக்கரை என்பதாகும். இவர் கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தவர். சென்னை புதுக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இன்குலாப் கவிதைகள் (1972), வெள்ளை இருட்டு (1977), சூரியனைச் சுமப்பவர்கள் (1981 திசம்பர்), கிழக்கும் பின்தொடரும் (1985 பிப்ரவரி), கூக்குரல், இன்குலாப் கவிதைகள் – தொகுதி இரண்டு, பொன்னிக்குருவி (2007 நவம்பர்), புலிநகச்சுவடுகள், காந்தள் நாட்கள் (2016) – (2017 ஆம் ஆண்டிற்கான சாகித்யா அகாதெமி விருது பெற்ற நூல்), ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் (2017 திசம்பர் 1 – அனைத்துக்கவிதைகளும் அடங்கியது) போன்ற கவிதைத் தொகுதிகளையும் இவர் படைத்துள்ளார்.

இவர் பாலையில் ஒரு சுனை என்று சிறுகதைத் தொகுப்பினையும், யுகாக்கினி, ஆனால் போன்ற கட்டுரைத் தொகுப்புகளையும், ஒளவை, மணிமேகலை, குரல்கள், துடி, மீட்சி, இன்குலாப் நாடகங்கள் (அனைத்து நாடகங்களும் அடங்கியது) போன்ற நாடக ஆக்கங்களுயும்,அகிம்சையின் குரலை ஆதிக்கவாதிகள் கேட்பதில்லை, மானுடக்குரல் இன்குலாப் நேர்காணல்கள் (அனைத்து நேர்காணல்களும் அடங்கியது) என்ற நேர்காணல்களையும், இவர் அளித்துள்ளார்.

“காந்தள் நாட்கள்” என்னும் கவிதைத்தொகுதிக்காக 2017ஆம் ஆண்டில் இவருக்கு சாகித்யா அகாதெமி விருது மரணத்திற்குப் பின்னர் வழங்கப்பட்டது. அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். இவர் சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது போன்றவற்றையும் பெற்றவர்.

2006ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதினை திருப்பி அளித்தார். ஈழத் தமிழர்களை காக்க அரசு தவறிவிட்டதாக இதற்கு காரணம் தெரிவித்தார்.

சேக்-உசைன் முகமது கமால் என்னும் எசு. எம். கமால்

(1928 அக்டோபர் 15 – 2007 மே 31)

இவர் சிறந்த வரலாற்று ஆய்வாளர். மேலும் இவர் பதிப்பாளர், இதழாசிரியர், வானொலி வடிவ எழுத்தாளர், சமுதாயத் தொண்டர் போன்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். இவர் இராமநாதபுரத்தைச் சார்ந்தவர். இவர் வட்டாட்சியராகப் பணியாற்றியவர். இவர் இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள், விடுதலைப் ,போரில் சேதுபதி மன்னர், மாவீரர் மருது பாண்டியர், வள்ளல் சீதக்காதி திருமணவாழ்த்து, முஸ்லீம்களும் தமிழகமும், அலிபாத்துஷா காப்பியம், மன்னர் பாஸ்கர சேதுபதி, சேதுபதி மன்னர் செப்பேடுகள், சேதுபதியின் காதலி, சீர்மிகு சிவகங்கைச் சீமை, சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும், திறமையின் திரு உருவம் ராஜா தினகர், செந்தமிழ் வள்ளல் சீதக்காதி, .மறவர் சீமை மாவீரன் மயிலப்பன்,சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள், சேதுபதி மன்னர் வரலாறு, இராமர் செய்த கோயில், நபிகள் நாயகம் வழியில் போன்ற நூல்களை இவர் எழுதியுள்ளார். இவை தவிர 7 நூல்கள் அச்சேறாமல், கையெழுத்துப்படிகளாக, இருக்கின்றன. இந்நூல்கள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இவரின் பணிகளுக்காக, இமாம் சதக்கத்துல்லா அப்பா விருது, தமிழ்ப்பணிச் செம்மல் விருது, சேதுநாட்டு வரலாற்றுச் செம்மல் விருது, பாஸ்கர சேதுபதி , விருது, சேவா ரத்னா விருது, ராஜா தினகர் விருது. தமிழ்மாமணி விருது, தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது, வள்ளல் சீதக்காதி விருது, பசும்பொன் விருது, அமெரிக்கா தக்சான் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம் போன்ற பல விருதுகளையும் சிறப்புகளையும் இவர் பெற்றுள்ளார்.

எஸ்.எம். கனிசிஸ்தி

எஸ். எம் கனிசிஸ்தி என்பவர் எழுத்தாளர், பத்திரிக்கையாளர். இவர் எழுதிய நூல்கள், இன்றைய முஸ்லிம் பெண்மணிகள், சமுதாய வீதியில் சன்மார்க்கப் பித்தன் போன்றனவாகும்.

தைக்கா ஷுஐபு

தைக்கா ஷுஐபு  என்பவர் கீழ்க்கரையில் பிறந்தவர். . இவர் அரபு,ஆங்கிலம்,தமிழ்,மலையாளம்,உர்து,பராசீகம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் ஆவார். இவர் தென்னிந்தியாவை சார்ந்த இஸ்லாமிய மார்க்க‌ அறிஞரும், சூஃபி ஞானியும், எழுத்தாளரும் ஆவார். இவர் 1994-ஆம் வருடம் “சிறந்த அரபு மொழி அறிஞர்” என்ற‌ தேசிய விருதை பெற்றார். இவரின் பரம்பரை இசுலாமிய மார்க்க நெறி வளர்க்கும் பரம்பரையாகும். இவர் செய்த ஆய்வு “இலங்கை மற்றும் தமிழ் நாட்டில் அரபு,அரபுத்தமிழ் மற்றும் பாரசீகம்” என்பதாகும்.

மா.தவசி

மா. தவசி  தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள முதுகுளத்தூரில் பிறந்தவர். இவர், தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர். தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் இவர் சமூக அவலங்கள் தொடர்பான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதி இருக்கிறார். தென்னிந்தியாவில் நிகழும் சேவல் சண்டை தொடர்பான சேவல் கட்டு என்ற புதினத்திற்காக 2011 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்றார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  (1908- 1963)

பசுமபொன் என்ற ஊரில் பிறந்தவர் முத்துராமலிங்கத் தேவர். சிறந்த பேச்சாளர். சமுதாயப் போராளி. இவர் “நேதாஜி” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கி அவரே அதன் ஆசிரியராக விளங்கினார். ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் வள்ளலார் வாழ்ந்த வடலூரில் இவரின் பேச்சு இடம்பெறும். தேசியமும் தெய்வீகமும் இவரின் கண்களாக விளங்கின.

வா. மு. சேதுராமன் 

இவர்  முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள ஆண்டநாயகபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். பல முறை தமிழ் தழைக்க நடைபணம் மேற்கொள்பவர். பெருங்கவிக்கோ என்று புகழப்படுபவர். இவரின் படைப்புகள் நெஞ்சத் தோட்டம், தாயுமானவர் அந்தாதி, ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம்,வாழ்க நீ எம்மாள் (காந்தி பற்றிய பன்மொழிக் .கவிதை), எண்ணச்சுடர் (கவியரங்கக் கவிதைகள்), தாய்மண் (காவியம்), 20 கட்டளைகள் (இந்திராகாந்தி ),ஐயப்பன் அற்றுப்படை, உலகை உயர்த்திய ஒருவன், பற்றிலான் பற்று

மலைநாட்டின் மீதினிலே (பயணக் காவியம்), காலக்கனி (கவிதை நாடகம்),போன்றன இவரின் படைப்புகள் ஆகும்.

இவர் செந்தமிழ்க் கவிமணி, ஐயப்பன் அருள்கவி, கவிஞர் குலத் திலகம், செந்தமிழ்க் கொண்டல் போன்ற பட்டங்கள் வழங்கபட்டுள்ளன. 2001 ஆம் ஆன்டு தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் திருவள்ளுவர் விருது இவருக்கு வழங்கபட்டது.தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

முகவை ஹாஜி எஸ்.ஏ.சீனிமுஹம்மது

இராமநாதபுரத்தில் இஸ்லாமியப்பாடகர்கள் பலர் தோன்றினர். அவர்களுள் குறிக்கத்தக்கவர்கள் இஸ்லாமிய இசைமுரசு ஹாஜி மர்ஹூம் இ.எம். நாஹூர்ஹனிபா,மர்ஹும் எஸ்.எஸ்.ஏ.அப்துல் வாஹித் ஆகியோர் ஆவர். இவர்களுடன் இணைந்து நின்றவர் முகவை ஹாஜி எஸ்.ஏ.சீனிமுஹம்மது ஆவார். இவர் உலகு தழுவிய நிலையிலும், வானொலிகளிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு ஆ.பெ. ஜெ அப்துல்காலம்

இராமநாதபுரத்தில் பிறந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ. ஜெ. அப்துல் கலாம் ஆவார். இவர் அறிவியலிலும், தமிழிலும் ஆர்வம் கொண்டவர். திருக்குறள் வழி நின்றவர். இவர் சிறந்த கட்டுரையாளராகவும் விளங்குகிறார். இவர் எழுதிய நூல்கள் Turning Points; A journey through challenges 2012., Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999., இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998., Ignited Minds : Unleashing the Power Within India ; வைகிங், 2002., The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.,ஈ Mission India (திட்டம் இந்தியா) ; ஏ.பீ.ஜே. அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005.Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988. (Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது போன்றனவாகும்.

கந்தர்வன்

கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம் என்பதாகும். இவர்  இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் என்னும் ஊரைச் சார்ந்தவர். இவர் கிழிசல்கள், மீசைகள், சிறைகள், கந்தர்வன் கவிதைகள் போன்ற கவிதைத் தொகுப்புகளையும், சாசனம், பூவுக்குக் கீழே, கொம்பன், ஒவ்வொரு கல்லாய், அப்பாவும் மகனும் போன்ற சிறுகதைத் தொகுப்புளையும் படைத்துள்ளார். பலநாள்கள் புதுக்கோட்டையில் இருந்து படைப்பிலக்கியங்களைப் படைத்து வந்தவர்.

ஏர்வாடி ராதாகிருஷ்ணன்

ஏர்வாடி இராதா கிருஷ்ணன் கவிதை உறவு இதழின் சார்பில் ஆண்டுதோறும் பல பரிசுகளையும், பல கவியரங்குகளையும் நடத்தி வருபவர். நாற்பத்தோரு ஆண்டுகாலமாக கவிதை உறவு இதழினை நடத்தி வருபவர். இவர் உனக்காக ஒரு பாடல் என்ற இசைப்பாடல் தொகுப்பினை எழுதியவர். அமுதசுரபி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் கதை முதல் பரிசு பெற்றது. இவர் வானொலி நாடங்கள் எழுதியுள்ளர். இவரின் வானொலி நாடகங்கள் ஐநூறு என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளன. இவரின் நூல்கள் நூறினை நெருங்க உள்ளன.

சந்திரகாந்தன்

இராமநாதபுர மாவட்டம் காவனூர் என்ற ஊரில் பிறந்தவர் சந்திரகாந்தன் ஆவார். இவரின் இயற்பெயர் குப்புசாமி. இவர் வங்கியாளராகப் பணியாற்றியவர். இவர் நாவல்களையும், சிறுகதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரின் அண்டரண்டப் பட்சி, தழல் போன்ற நாவல்கள் குறிக்கத்தக்கன. இவர் இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் என்ற தொகுப்பினையும் தொகுத்தளித்துள்ளார். பாரதியார் கவிதைகளைப் பதிப்பித்துள்ளார். மொழி பெயர்ப்புப் பணியையும் செய்துவருகிறார். தொடர்ந்து தொடரும் என் ற இதழை நடத்தி வருகிறார்.

ஜெகாதா

இராமநாதபுர மாவட்டத்தைச் சார்ந்த இவர்
அமெரிக்கா இனி டிரம்ப்பின் அமெரிக்கா, சித்தர்கள் அருளிய மரண மீட்சி மருத்துவம், சுவாசப் பயிற்சியின் சுகங்கள், ஜல்லிக்கட்டு, நாத்திகம் பேச வந்த ஞானச்சித்தர்கள்ணு, குண்டலினி யோகா ரகசியம், சிகரம் தொட்ட பிறமொழி நூல்கள், வரலாற்றுத் தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள், ஜெகாதா குறுநாவல்கள், மறவர் சீமையின் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி , இந்திய நாடக மேடையில் கொடிகட்டிப் பறந்தவர்கள்சூப்பர் க்விஸ் பாக்ஸ் (3300 பொது அறிவுக் கேள்விகளும் பதில்களும்), உலக விளையாட்டுக் களஞ்சியம், கிராம தேவதைகள், சித்தர் களஞ்சியம் (பாகம் 1), சித்தர் களஞ்சியம் (பாகம் 2), சிகரம் கண்ட அமரர் சிறுகதைகள், ஜெகாதா சிறுகதைகள் (முழுத் தொகுதி), சித்தர்கள் கண்ட பேசும் மூலிகைகள், இந்தியாவில் கும்பெனியார் காலம்…, இதயம் தொட்ட இஸ்லாமிய இலக்கியம், நானிலம் போற்றும் நபிகள் நாயகம், புகழ்பெற்ற இந்திய வரலாற்றுக் கதைகள், புத்த லீலையும் முற்பிறவிக் கதைகளும் போன்ற பல நூல்களை இவர் ஆக்கியுள்ளார். இவர் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றவர் ஆவார்.

ஆடானை சுகுமார்

திருவாடானையைச் சொந்த ஊராகக் கொண்டவர் சுகுமார் ஆவார். இவர் தன் பெயரை ஆடானை சுகுமார் என்று அமைத்துக்கொண்டு பல நூல்களையும் எழுதிவருகிறார். இவர் மாத இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் பேசும் மழலையர் மனசு என்ற குழந்தை இலக்கியம் படைத்துள்ளார்.

அப்துல் சலாம்

இராமநாதபுரத்தின் தமிழ்ச்சங்கத் தலைவராக விளங்கும் அப்துல் சலாம் இராமநாதபுரம் சேதுபதி கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கியவர். மதநல்லிணக்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் இவர் இராமாயணம், கீதை சொற்பொழிவுகளை ஆற்றிவருவபவர். மாதந்தோறும் விழாக்களை நடத்தி போட்டிகளை நடத்தித் தமிழ் வளர்த்து வரும் அன்பர் இவர்.

மருத்துவர் சந்திரசேகரன்

மருத்துவர் சந்திரசேகரன் கண் மருத்த்துவத்துடன் தமிழ் உணர்வும் உடையவர். நல்ல கவிஞர். இவர் தமிழ்ச்சங்கத்தின் செயலளாராக விளங்குபவர். ஆன்மீகம் சார்ந்து பல நூல்களை வெளியிட்டு வரும் இவர் தன் இல்லத்தின் ஒரு பகுதியில் இராமநாதபுரம் தமிழ்ச்சங்கக் கூட்டத்தை நடத்திக் கொள்ள இடம் தருகிறார்.

மு. அர்ச்சுணன்

திருவாடானையில் வாழ்ந்து வரும் மு. அர்ச்சுணன் கண்ணன் கருணை என்ற நூலை எழுதியுள்ளார். இது நூற்றியெட்டு மரபுக் கவிதைகளை உடைய நூலாகும்.

இவை தவிர சின்ன அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்ற நூல் திருவாடானையில் நிகழ்ந்த விடுதலைப் போராட்ட நிகழ்ச்சி பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

இவ்வாறு இராமநாதபுர மாவட்டம் இலக்கிய ஆளுமைகளைப் பெற்று விளங்கிவருகிறது. இராமநாதபுரத்தில் தமிழ்ச்சங்கம், கம்பன் கழகம், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் போன்ற அமைப்பினரும் தமிழ் இலக்கியத்தை வளர்த்து வருகின்றனர்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இராமநாதபுரம் மாவட்ட இலக்கிய ஆளுமைகள் – பாகம்-2”

அதிகம் படித்தது