மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இராவண காவியம் கூறும் கல்வியின் சிறப்புகள்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 12, 2020

siragu raavana kaaviyam1

செல்வ மில்லவர்க்  கிவ்வுல கினிற்சிறப் பிலையச்
செல்வ மோசிறப் புருவது கல்வியாற் றெளிவாம்
கல்வி யில்லவர் செல்வத்தாற் கணிப்புற லிலையால்
கல்வி யேசிறப் பாகுமற் றதனிலுங் காண்பீர்

செல்வம் இல்லாதார்களுக்கு உலகில் சிறப்பில்லை. எனினும் அந்தச் செல்வம் சிறப்பது கல்வியால். கல்வி இல்லாதவர் செல்வத்தால் மதிப்படைதல் முடியாது. அதனால், ப்ரூட் செல்வத்தைவிட கல்விச் செல்வமே சிறப்புடையது என்று இராவண காவியம் கூறுகிறது.

சென்று புல்லுணு மானினுக் கப்புலே செல்வம்
என்ற போதிக்கும் பகுத்தறி விலமையா லியாரும்
நின்ற வானிலை மகனென வுரைப்புது நிலத்தில்
ஒன்று கல்வியில் லாருமாவ் வானிலை யொப்பர்.

காட்டில் மேயும் பசுவுக்குப் புல்லே உணவு , அந்த உணவே அதற்குச் செல்வம். என்றாலும் அந்தப் பசுவிற்குப் பகுத்தறிவு இளமையா யாரும் அங்கு நின்ற பசுவை மனிதன் என்று உரைக்க மறுப்பார். கல்வியில்லாதவரும் அந்த பசு போன்றவரே.

குறைந்த ழிந்துபோய் வெறுமையிற் குப்புற வீழ்த்தும்
நிறைந்த செல்வமுங் கொடுக்கினு நிறைவுற லன்றிக்
குறைந்தி டாமையாற் கல்வியே குறைவிலாச்  செல்வம்
அறைந்து போயின ராமென வறிவுநூற் புலவர்

நிறைந்த செல்வம் கொடுக்க கொடுக்க நாளடைவில் ஒன்றுமில்லாமல் அழிந்துவிடும். ஆனால் கொடுக்க கொடுக்க குறையாமல் நிறையும் செல்வம் கல்வி ஒன்றே ஆகும்.

புலவர் பாடிலாப் பழந்தமிழ்ப் புரவலர் பெயரை
நிலவு லகினிற் கேப்பதுன் டோநெ நீரில்
இலகு தாமரைப் பூமண மொடுநிற மின்றேல்
உலகில் யாரதைப் பூவென வடையின்றி யுரைப்பர் .

புலவர்கள் புகழ்ந்து பாடத்தைப் புரவலர்கள் பெயரை நிலவுலகில் சிறப்பாக மக்கள் கேள்விப்பட மாட்டார்கள். ஏனெனில் புலவர்கள் தான் அதாவது கல்வி தான் செல்வம் கொடுத்தோரையும் நினைவில் வைக்க உதவுகிறது.  நீர் நிலையில் திகழும் தாமரை மலர் மணமொடு நிறமும் இல்லையென்றால் உலகில் அதனை யாரவது அதனை பூ என அழைப்பார்களா? அது போல ஒருவனுக்குக் கல்வி இல்லை என்றால் அவனை மனிதன் என்று ஏற்றுக்கொள்வது இயலாது.

தன்பெ யார்குறித் தோதிடாத் தற்குறி தன்னை
இன்ப துன்பமோ டுப்பினுள் கிருப்பிட மாகி
என்பெ னும்பெயர் தாங்கிய தென்பதல் லாமல்
மன்ப தைக்குளோர் மகனென வழைப்பது மதியோ.

தனது பெயரை எழுதத் தெரியாத தற்குறியாகிய படிப்பறிவற்றவனை இன்ப துன்பமொடு உண்பதற்கு ஏற்ற ஓர் உண்கலமாகி, உடம்பு என்று பெயர் தங்கியது என்பது ஒன்றை அல்லாமல் மக்கட் கூட்டத்தில் அவனை மனிதன் என மதிப்பது அறிவுடைமையாகுமோ?

முன்னை யோர்நடை முறைகளை முறையொடு புலவர்
இன்ன வென்றியாத் திருத்திய பழத்தமி ழியனூல்
தன்னை யாய்ந்துபொன் ன்னனவர் தகுதியில் வாழப்
பன்னு கல்வியல் லாளேவ துணையுறும் பார்க்கின்.

நமக்கு முன்னிருந்த மூதாதையர்களின் நடைமுறை நெறிகளை எல்லாம் முறையாக இன்னவை என்று புலவர்கள் இயற்றிய பழந் தமிழ் இயல் நூலினை ஆய்ந்து பொன் போன்ற அவர்களின் தகுதிப் பாட்டில் வாழ்ந்திடக் கல்வி அல்லது எவை நமக்குத் துணையாக இருக்கும்? எனவே கல்வியே ஒரு மனிதனுக்கு மிகத் தேவை.

சொல்லி னின்பமுஞ் சொற்பொரு லின்பமுஞ் சொல்லிற்
செல்லு சொன்னடை யின்பமுஞ்  செறிந்தசொற் பொருளைக்
கல்லி யின்புறுங் கருத்தின தின்பமு மொருங்கே
புள்ளி யின்புறாத் தற்குறி தமிழகப் பொறையே

சொல்லின் இன்பம், சொற் பொருளின் இன்பம் , சொல்லிலே இயலும் நடை இன்பம் ஆகியவைச் செறிந்த சொல்லையும் பொருளையும் ஆழ்ந்து தோண்டி இன்பம் தரும் கருத்தையும் ஒருங்கே பொருத்தி இன்பமடையாத  கல்வி அற்றவன் தமிழகத்திற்கு வெறும் சுமையே ஆவான்.

சென்ற நின்றவின் றியல் பொருட் செயலினைத் தேர்ந்தே
இன்று செய்வன தவிர்வன விவையென வோர்ந்தே
நன்று செய்துதீ தொழிந்துமே நலம்பெற வாழ
ஒன்று நூலறி வலாலெவை யோதுதற் குரிய

இறந்த காலம், எதிர்காலம், நிகழ் காலங்களில் விளங்கும் பொருள் செயல்வகையினைத் தேர்ந்து ஆய்ந்து இன்று நாம் செய்வன இவை, தவிர்வன இவை என ஆய்ந்து , நன்மை செய்து தீமையை நீக்கி நலம் பெற்று வாழ நூலறிவு ஒன்று மட்டுமேயல்லாமல் வேறு சொல்வதற்கு எவை உள்ளன? கல்வி முக்காலத்தையும் உணர்த்திக் கொடுக்கும் சிறப்பு வாய்ந்தது.

மாவின் வேறுரு வேயலால் வேறிலா மாக்கள்
மேவி மக்களென் றொருபெயர் மிகைபட வாழ
ஆவி யன்னமுன் னோர்புரந் தாக்கிய வெழுதா
ஓவ் மனநோ லறிவலான் வேறியா துண்டோ

இத்தகையோர் விலங்கின் வேறுபட்ட ஊர் உருவமுடையவர். இது தவிர வேறு சிறப்பில்லை இத்தகு விலங்குகள், மிகையான ஒரு சொல்லால் மக்கள் என்று வாழ்வது ஆகும். உயிர் போல நம் முன்னோர்கள் காப்பாற்றி ஆக்கிவைத்த எழுதா ஓவியம் போன்ற நூலறிவு அல்லாமல் வேறு எவரால் மனிதராக முடியும்? எனவே நூலறிவு கொடுக்கும் கல்வி மிக முக்கியம்.

மடிமை வாழ்வினை யகன்றுமே செயன்முறை வாய்த்து
மிடிமை வாழ்வினை யகன்றுமே பெரும்பொருள் மேவி
அடிமை வாழ்வினை யகன்றுமே யுயர்நிலத் தமருங்
குடிமை வாழ்வினை யறிவியர் கல்வியே கொடுக்கும்.

சோம்பலை, அகற்றிச் சுறுசுறுப்பை, வறுமையை நீக்கி வளத்தை, அடிமை வாழ்வை அகற்றி நல்ல குடிமை வாழ்வைக் கொடுப்பது அறிவு சார்ந்த கல்வியே ஆகும். எனவே கல்வி ஒருவனுக்கு மிக அவசியம்.

தானு மின்புறீஇக் கேட்டவ றின்புறூஉந் தகைகண்
டீனு மின்புறூஉ மியப்பிலார் நாவுறூஉ மின்பத்
தேனும் பாலுமுக் கனிபிழி தேறலு மன்றி
ஊனு முள்ளமு முயிருமின் புறுமின்ப மோரார்

கல்வி அறிவற்றவர் நாவுக்கு இன்பம் தரும் உணவை மட்டுமே எண்ணுவர். உடலும் , உயிரும் ஒருசேர இன்பத்தைத் தரும் கல்வி அறிவினைப் பற்றி அந்தச் செல்வத்தினைப் பற்றி அவர்கள் அறிய மாட்டார்கள்.

எனைய றத்தையு மியல்புடை னாக்குதற் கியன்ற
மனையை றத்தினை யாக்கிடுங் காதலின் வாழ்க்கை
தனைய றத்தொடும் பொருளோடுந் தகுந்தவின் பத்தும்
அனைய றத்தொடு தாக்குத நூலறி வன்றோ.

அறம் , பொருள் இன்பம் என்ற அனைத்து அறத்தையும் உண்டாக்குவது நூலறிவு தான் . எனவே ஒருவன் கல்வி கற்பது மிக அவசியம்.

தாய ருந்துமென் றூட்டுபா ளுண்டவர் தாயால்
சேய ருந்துமென் றூட்டிய தாய்மொழி தேறா
தேயி ருந்துவா ணாள்வறி தேகழித் திருத்தல்
வாயி ருந்தும்பே சாமுழு வூமையின் வகையே.

தாயானவள் தாய்ப்பாலைப் பிள்ளைக்கு ஊட்டி வளர்ப்பதோடு தாய்மொழியையும் ஊட்டி வளர்ப்பாள். அப்படிப்பட்ட இனிமையான தாய்மொழியான தமிழ்மொழியை கற்காதவர் பேச வாயிருந்தும் ஊமை போன்றோரே.

இவையே இராவண காவியம் கூறும் கல்வியின் சிறப்புகள் .

உரை உதவி : இராவண காவியம் பேராசிரியர் ந. வெற்றியழகன்


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இராவண காவியம் கூறும் கல்வியின் சிறப்புகள்”

அதிகம் படித்தது