மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இராவண காவியம் தடை – ஓர் பார்வை!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Oct 19, 2019

siragu-raavana-kaaviyam2

இராவண காவியம் புலவர் குழந்தை இயற்றியது. ஏன் இராவண காவியம்? என்ற கேள்விக்கு எதிர் கேள்வி தான் கேட்க முடியும்! ஏன் கம்ப இராமயணம்? அதற்கு பதில் சொல்ல முடியாதவர்கள் அனைத்தும் கற்பனை கதை தானே என்கின்றனர்.

“ஆம் கதை தான், ஆனால் கதை சொல்லும் காரியம் தான் கவனிக்கத்தக்கது”. வான்மீகி தன் ராமகாதையில் கூறாதவற்றையும் ஏற்றி கம்பர் இராமாயணத்தை படைத்தார். அந்த கம்ப இராமயணத்திற்கு தான் எத்துனை கருத்தரங்குகள்? மாநாடுகள்? ஏன்? அதில் தான் உள்ளது நுட்பம். அது ஒரு கூட்டத்தாரின் தன்னலம்! இந்த தன்னலத்தை பொதுநலம் என்போர் தான் இராவணகாவியத்திற்கு தடை போட்டோர்! என்ன இலக்கியத்திற்கு தடையா? அதுவும் தமிழ் இலக்கியத்திற்கா? என சிலர் வினவலாம்! இலக்கியம் என்பது ஒரு கூட்டத்தாரின் நன்மைக்காகவே பயன்படுத்திக்கொண்டு திரியும்போது அந்த நன்மைகளை தகர்த்தெறியும் இலக்கியம் ஆள்வோரின் கண்களை உறுத்துவது இயற்கை தானே?

சரி, ஏன் இராவண காவியம் என்ற கேள்விக்கு இலக்கிய ரீதியாக – இன ரீதியாக பதில் சொல்ல வேண்டுமாயின் வான்மீக்கி ஒரு சாதாரண அரசகுமாரனாக கூறியுள்ள இராமனை திருமாலின் அவதாரம் ஆக்கியதும், சனகனால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சீதையை திருமகளின் அவதாரம் ஆக்கியதும், மானமிக்க தமிழர்களை வானரங்கள்- குரங்குகள் – ஆக்கியதும், தம் இனத்தை காட்டிக்கொடுத்த துரோகிகளுக்கு ஆழ்வார் பட்டம் கொடுத்ததும் கம்பர், இந்த பொய்க்கூற்றுகளைப் போக்கி மயக்கத்தன்மையில் இருந்து தமிழர்களை மீட்க இயற்றப்பட்டதே இராவண காவியம்!

இராவண காவியம் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறும்போது, அயோத்தி மன்னனான இராமனை வான்மீகி நல்லவனாக கூறியதால், இன்று இராமன் கடவுளாக கருதப்படுகிறான். இலங்கை மன்னனான இராவணனை வான்மீகி கெட்டவனாகக் கூறியதால் இன்று இராவணன் இராட்சதனாகக் கருதப்படுகிறான். இருவரும் நாட்டையாண்ட மன்னர்கள்தாம். இவர்களில் ஒருவன் கடவுள், மற்றவன் இராட்சதன்! சண்டையிட்டவர்களில் வென்றவன் நல்லவன் மட்டுமல்ல, கடவுளுமாகிறான். தோற்றவன் கெட்டவன் மட்டுமல்ல, இராட்சதனுமாகிறான். இவை எந்த வகையில் நியாயம் என்று புலவர் குழந்தை அவர்கள் தம்முடைய நூலான இராவண காவியத்தின் வாயிலாக கேட்கிறார். என்று கூறுகிறார்!

இந்த சிறப்பு வாய்ந்த இராவண காவியத்திற்குத்தான் அன்றைய காங்கிரசு ஆட்சி தடை விதித்தது.

கலைஞர் அவர்கள் இராவண காவியம் தடை பற்றி 1948 இல் அறப்போர் என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்.

“ஓமந்தூராரை அழைத்துக்கொண்டு கம்பராமாயணச் சோலையிலே உலவி வந்தோம். அங்கே பூத்துக் குலுங்கியிருந்த மலர்களில் பூநாகங்கள் நெளிவதை அவருக்கு காட்டினோம், நாமம் போட்டிருப்பது இராமனல்ல நம் இனத்தைக் கடிக்க வந்த நல்ல பாம்பு என எச்சரித்தோம், அதோ சலசலவென ஓடுவது நீரோடையல்ல நம் கலைவளத்தை நாசமாக்கும் நச்சுவாய்க்கால் என விளக்கந் தந்தோம், அத்தோடு விட்டோமா? மிதிலாபுரியைக் காட்டினோம். மிதிலையின் மாளிகையில் சனகன் மகள் சானகியைக் காட்டினோம். வில்லொடித்துச் சீதையை விவாகம் செய்ய விசுவாமித்திரருடன் வரும் இராமனைக் காட்டினோம். சீதையின் கண்களும் இராமன் கண்களும் கவ்விக் கொண்ட காட்சியைக் காட்டினோம். இராமனின் காட்சியால் புளகாங்கிதமுற்று பூரிப்புத் தாங்க முடியாமல் – பொங்கி நின்ற பூமாதா சீதா தேவியைப் பற்றி கம்பர் பாடிய பாடலிலே, மகிழ்ச்சி தாங்க முடியாமல் சீதையின் மறைவிடம் திடீரென விம்மியதையும், அதனால் மேகலாபரணம் அறுந்து விழுந்ததையும் கம்பர் வருணித்திருக்கிற பாங்கைப் படித்துக்காட்டினோம். மகாலட்சுமி அவதாரத்திற்கு “வாம மேகலையினுள் வளர்ந்த தல்குலே” என்று மட்டரகமாக வருணனை தந்த கம்பனின் இழிதன்மையைக் காட்டினோம்.

இந்த ஆபாச இராமாயணத்துக்குத் தடைவிதிக்கத் தைரியமற்ற சர்க்காரே! நீ எங்கள் இராவண காவியத்திற்கு தடை போட்டது நியாயமா? நேர்மையா? நாணயமா? என்று கேட்டோம். கண்களில் இரத்தம் தெறிக்க- அந்த இரத்தத்தில் மானங் கொப்பளிக்கக் கர்ச்சனை புரிந்த நாங்கள் ஈரோடு நோக்கினோம். பொறு மனமே பொறு என்றார் பெரியார், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது” என்கிறார்.

siragu raavana kaaviyam1

அதே போன்று நாரண துரைக்கண்ணன் அவர்கள் 1948 இல் பிரசண்ட விகடன் இதழில் சென்னை அரசாங்கம் இராவண காவியத்திற்கு தடைவிதித்து விட்டதன் மூலம், இராவண காவியத்திற்குச் செல்வாக்கும் சிறப்பும் ஏற்படும்படி செய்திருக்கிறார்கள், இதுவரை இந்நூலை படிக்காதவர்கள் கூட இனி இரகசியமாகவேனும் படித்துப்பார்க்க விரும்புவர். அத்துடன் ஒரு இராவண காவியத்திற்கு பதில் பல இராவண காவியம் புதுப்புது வழிகளில் உண்டாக வழி ஏற்படவும் முடியும் என்றார்.

காஞ்சி மணிமொழியார் அவர்கள், கரும்பு என்றால் சாதரணக் கரும்பு அல்ல அது. கிடைத்தற்கு அரியது, ஒவ்வொரு கணுவிலும் ஒரு கடல் இன்பம் செறிந்துள்ள பெற்றி வாய்ந்தது, தேனில் ஊறி எழும் இன்சுவை, தென்றலிலே தவழ்ந்து வரும் ஆனந்தம், யாழில் தெறிக்கும் நல்லிசை, செந்தமிழில் ஒளிவீசும் கருத்துச் செதில்கள் இவ்வளவையும் கூட்டி எடுத்து வடித்து இறக்கிய சுவைமிகு பொருள் போன்றது அந்தக் கரும்பின் சாறு. அந்தக் கரும்புக்கு நாட்டிலே வழங்கும் பெயர் இராவண காவியம் என்பது தமிழ் மக்கள் உள்ளத்தில் குடியேறிவிட்ட பெயர் திராவிட நாகரிகத்தின் அடையாளச் சின்னம் என்பது. உண்மையைச் சொல்வதனாலோ அது வருங்காலந் திராவிடத்தின் நுழைவு வாயில். அதைத்தான் சென்னை அரசு பறிமுதல் செய்திருக்கிறது என்றார்.

நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், இராம காதையில் காணப்படும் ஆபாசப் பகுதிகளை இராவணக்காவியத்தில் காண முடியாது, இருந்தும் இராம காதை சென்னை அரசியலர்க்கு இனிக்கிறது, இராவண காவியம் கசக்கிறது, இது ஏன்? இராமகாதை எழுதியவர் கம்பர், இராவண காவியம் எழுதியவர் குழந்தை. கம்பன் ஆரியனின் அடிகளைத் தாங்கத் தயங்கவில்லை. குழந்தை ஆரியனின் அடிகளைத் தாங்க மறுத்தார். இதனால் இராவண காவியம் மீது வேண்டாத குற்றஞ்சாட்டித் தடை விதித்து உள்ளார்கள்.

பேராசிரியர் அன்பழகன் அவர்கள், இன்று இராவண காவியத்தில் என்னென்ன குற்றங்கள் சாட்டப்படக்கூடுமோ அவை வேறு எந்தப் புராண இலக்கியத்திலும் இல்லாமல் இல்லை. இராமயணமே கூட அத்தகைய குற்றச்சாட்டுகளினின்றும் தப்ப முடியாது என்றே தோன்றுகிறது என்றார்.

இப்படித் தடை பல கண்ட இராவண காவியம் தமிழக அரசினால் தமிழ்வாழத் தாம் வாழும் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் 17.5.1971 அன்று தடை நீக்கி அறிவிக்கப்பட்டது. அது கண்டு தமிழ்நாடே அகம் மகிழ்ந்தது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இராவண காவியம் தடை – ஓர் பார்வை!”

அதிகம் படித்தது