மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இரு பாதைகளும் ஒரு பயணமும்

தேமொழி

Nov 25, 2017

siragu iru paadhaigalum2

அமெரிக்கப் பண்பாட்டில் மிகவும் போற்றப்படுவது ஒருவர் தனித்தன்மையுடன் விளங்கும் பண்பு (empowered individualism). ஒருவரது தனித்தன்மை மிகவும் ஊக்கப்படுத்தப்படும், பாராட்டப்படும் (appreciation of / encouraging individualism, choice, and empowerment). குழந்தைகளை வளர்க்கும் பொழுதே நீ இவ்வாறு பிற்காலத்தில் உருவாக வேண்டும் என்று போதிக்கப்படுவதில்லை. வளர்ந்த பிறகு நீ என்னவாக விளங்க வேண்டும் என்பது உனது விருப்பம் என்றுதான் அவர்களிடம் சிறு வயது முதல் கேள்விகள் வைக்கப்படும். புதுமைகளைப் படைப்பதும், அதற்காகத் துணிச்சலாக மாறுபட்ட வாழ்க்கை முறையையோ கல்வியையோ சோதனை செய்வதும் உற்சாகப்படுத்தப்படும்.

பலர் சென்ற வழி இது, இதில் வெற்றி நிச்சயம், தடைகளும் தடங்கல்களும் குறைவு, வாழ்க்கை சீராக இருக்கும் என்ற கோணத்தில் பிள்ளைகளை வளர்ப்பது இந்தியப் பண்பாடு. தங்கள் பிள்ளைகள் மருத்துவராக வேண்டும், பொறியாளராகத் தொழில் செய்ய வேண்டும், சமூகத்தில் அதிகம் மதிக்கப்படும் புகழ் செல்வம் தரும் கல்வியைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வளர்ப்பது அமெரிக்காவில் இருக்கும் இந்தியப் பின்புலம் கொண்ட பெற்றோர்களின் அணுகுமுறையாக இருக்கும். அவ்வாறு தாங்கள் வளர்க்கப்பட்டு, வழி நடத்தப்பட்டு வந்ததால்தான் அயல்மண்ணில் அந்நாட்டு மக்களுக்கு இணையாக தங்களால் வாழ முடிகிறது என்பது அவர்கள் நடைமுறையில் அறிந்தது. தாங்கள் பெற்ற கல்வியும் வளர்ப்பும் தங்களை வாழ வைத்துள்ளது என்று அவர்கள் தங்கள் வாழ்வையே சான்றாக எடுத்துக் கொள்ளும் அவர்களது கோணத்தைக் குறை சொல்லவும் வழியில்லை. அவ்வாறு அவர்கள் வளர்க்கப்பட்ட முறை இந்தியப் பண்பாட்டுக் கூற்றின் அடிப்படையில் அமைந்தது. அத்துடன் அவ்வாறு வழிநடத்தும் முறையைப் பிள்ளைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட பெற்றோரது கடமை எனப் பார்ப்பதும் இந்தியப் பண்பாட்டுக் கோணம்.

siragu iru paadhaigalum4

துணிச்சலான செயல்பாடுகளுக்கு (risk taking behavior) இந்திய மண்ணில் வரவேற்பு குறைவு. மாறாக புதிய பாதையில் அச்சமின்றி சென்று சாதனைகள் படைப்பதை ஊக்கப்படுத்துவது அமெரிக்கப் பண்பாடு. தொழில் முனைவோர் பலர் அமெரிக்காவில் உருவாவதற்குக் காரணமும் அதுவே. இந்தியர்கள் போல, நன்கு படித்து போட்டிகளைச் சமாளித்து நிரந்தர அரசுப்பணியில் நிம்மதியாக வாழ்வதுதான் வாழ்க்கையின் லட்சியம் என அமெரிக்காவில் கருதப்படுவதில்லை. அரசுப்பணியே எனது குறிக்கோள் என்று யாரும் சொல்வதைக் கேட்கவும் முடியாது. இராணுவத்தில் பணிபுரிய விரும்பினாலும் அதிலும் நாட்டைக் காக்க என்ற நோக்கம்தான் வெளிப்படும். இன்று புதிய உலகம் எனப்படும் அமெரிக்கா உலகிற்கு அறிமுகமான விதமே கொலம்பஸ் அனைவரும் சென்ற பாதையைத் தவிர்த்து மாறுபட்ட வழியில் மேற்கொண்ட பயணத்தின் காரணமாக விளைந்ததுதானே. அதுவே அமெரிக்கப் பண்பாட்டின் மூலக்கூறாக அமைந்துவிட்டது. உலகின் எந்த மூலையில் இருந்து குடிபெயர்ந்திருந்தாலும் வந்தவர்களின் சந்ததியினர் பள்ளியில் கல்வி கற்கும் பொழுதே பிற அமெரிக்க மாணவர்களின் தாக்கத்தினாலும் வளரும் சூழ்நிலையின் தாக்கத்தாலும் அவர்களை ஒத்த மனப்போக்கை கொள்ளத் தொடங்கிவிடுவர். இதுபோன்று பண்பாட்டுக் கொள்கைகள் மோதும் பொழுது இந்தியக் குடும்பங்களில் சச்சரவுகள் வெடிப்பதும் இயல்பு.

அமரிக்கக் கல்வி நிலையங்களில் மாணவர்களின் பட்டமளிப்பு விழாக்களில் அவர்களை வாழ்க்கையில் முன்னேற ஊக்கமூட்டும் வண்ணம், அவர்கள் தனித்தன்மையை வளர்த்தெடுக்கும் நோக்கில் (celebration of individualism) பட்டமளிப்பு விழா உரைகள் அமைந்திருக்கும். அந்த உரைகளில் பெரும்பாலோர் மேற்கோளாக எடுத்தாள்வதும், மாணவர்களை உற்சாகமூட்ட ஊக்கமூட்டச் சொல்லும் உரைகளில் இடம் பெறுவதும் அமெரிக்க கவிஞர் ராபர்ட் ஃப்ரோஸ்ட் எழுதிய, ‘தி ரோட் நாட் டேக்கன்’ என்ற கவிதையின் வரிகள்.

சென்ற நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃப்ரோஸ்ட் எழுதிய கவிதைகளைப் பாராட்டுபவர் உலகில் பலரும் உள்ளனர். ராபர்ட் ஃப்ரோஸ்ட் எழுதிய கவிதைகளில் ‘ஸ்டாப்பிங் பை உட்ஸ் ஆன் எ ஸ்னோயி ஈவினிங்’ (Stopping by woods on a snowy evening) என்ற கவிதை மறைந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் மிக விருப்பமான கவிதை. அக்கவிதையில் ‘வாழ்வு இனிமையானது, வாழ்வில் ஓயும் முன்னர் நிறைவேற்ற எனக்குக் கடமைகள் பல உள்ளன’ என்ற பொருள் கொண்ட, வாழ்க்கையைப் பயணத்துடன் உருவகப்படுத்தும் கீழ் காணும் வரிகளை அவர் மிகவும் விரும்பினார்.

“The woods are lovely, dark and deep.

But I have promises to keep.

And miles to go before I sleep.

And miles to go before I sleep.”

(- Stopping by woods on a snowy evening)

அதே போன்ற வாழ்க்கையைப் பயணத்துடன் உருவகப்படுத்தும் மற்றொரு கவிதை ‘தி ரோட் நாட் டேக்கன்’. இன்று அமெரிக்கர்களால் தனித்தன்மைக்கு அடையாளமாகக் காட்டப்படும் இக்கவிதையை ராபர்ட் ஃப்ரோஸ்ட் 1916 இல் எழுதினார். வாழ்வில் நாம் எடுக்கும் முடிவொன்று நம் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கும், அவ்வாறு தனது வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய முடிவை எடுத்தது குறித்து முடிவெடுத்தவர் கொள்ளும் மனநிலையைக் காட்டுவது கவிதையின் நோக்கம். இந்தக் கவிதை அனைவராலும் தவறாகப் புரிந்து கொண்டு தவறாகவும் பயன் கொள்ளப்படுகிறது என்பது இலக்கியவாதிகளின் கருத்து.

siragu iru paadhaigalum3

கவிஞரும், தனது நண்பருமான எட்வர்ட் தாமஸ் என்பவருடன் இங்கிலாந்தில் 1915 இல் வாழ்ந்த பொழுது நடைப்பயிற்சிக்குச் செல்வாராம் ராபர்ட் ஃப்ரோஸ்ட். நண்பர்கள் இருவரும் செல்லும் பொழுது எந்தப் பாதையில் செல்வது என்பதில் முடிவெடுக்காமல் தடுமாறுவாராம் எட்வர்ட் தாமஸ். ஒரு பாதையைத் தேர்வு செய்து சென்ற பின்னர், இந்தத் தடத்திற்குப் பதில் அந்தப் பாதையில் சென்றிருந்தால் வேறு பல நல்ல காட்சிகளைப் பார்த்திருக்கலாமே, தவற விட்டு விட்டோமே என்றும் பிறகு வருந்துவாராம். நண்பரின் முடிவெடுக்க முடியாது தடுமாறும் மன நிலையும், பிறகு கொள்ளும் வருத்தமும் ராபர்ட் ஃப்ரோஸ்ட்டுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. அமெரிக்கா திரும்பிய பின்னர் நகைச்சுவை நோக்கில் நண்பரின் குணத்தை நையாண்டி செய்து ‘தி ரோட் நாட் டேக்கன்’ என்ற கவிதையை எழுதி எட்வர்ட் தாமஸுக்கு அனுப்பி வைத்தார்.

அதை வாழ்வில் முடிவெடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு அருமையான கவிதை என்றே எட்வர்ட் தாமஸ் நினைத்தார். தன்னைப் பற்றிய நகைச்சுவைக் கவிதை என்றே அவருக்குத் தோன்றவில்லை. இது ராபர்ட் ஃப்ரோஸ்ட்டுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. அவர் அதை எட்வர்ட் தாமஸுக்கு விளக்கிச் சொன்ன பொழுது, எட்வர்ட் தாமஸ் கவிதையின் நகைச்சுவை நோக்கம் பெரும்பாலோருக்கு புரியப் போவதில்லை என்றே மறுமொழியளித்தார். பிறகு இக்கவிதையை ராபர்ட் ஃப்ரோஸ்ட் பல்கலைக்கழக உரையொன்றில் மாணவர்களிடம் படித்துக் காட்டிய பொழுது அதன் விளைவோ இன்றைய பட்டமளிப்பு விழாக்களின் ஊக்கமூட்டும் உரைகளின் நோக்கில் பொருள் கொள்ளப்பட்டது. இது ராபர்ட் ஃப்ரோஸ்ட்டே எதிர்பாராத விளைவு. பெரும்பாலோருக்குப் புரியப் போவதில்லை என்று எட்வர்ட் தாமஸ் அவரை எச்சரித்தது மெய்யாகிப் போனது. கவிதையின் உண்மை நோக்கம் தெரிந்த பிறகு, எட்வர்ட் தாமஸுக்கு கவிதை வேறு வழியில் தாக்கம் ஏற்படுத்தி, அதனால் அவர் முதல் உலகப் போரில் பங்கு பெறுவது என்ற முடிவை எடுத்துப் போர்முனைக்குச் சென்றார், போரில் இறந்தும் போனார். அவர் போருக்குச் செல்ல எடுத்த முடிவுக்கு ராபர்ட் ஃப்ரோஸ்ட் எழுதிய கவிதையும் காரணம் என்று சிலரால் கருதப்படுகிறது.

“நான் இதையொருப் பெருமூச்சுடன் சொல்வேன் என்றோ எங்கோ காலங்கள் பல கடந்த பிறகு,நான் சென்ற பாதை இரண்டாகப் பிரிந்தது, நான் . . . நான் அதிகம் பயணிக்கப்படாத பாதையொன்றில் பயணித்தேன் அந்த முடிவே வாழ்வில் எல்லா மாற்றங்களுக்கும் காரணமானது” என்ற அவரது வரிகள் தனித்தன்மையுடன் வாழ்ந்து சாதனை படைக்க உற்சாகமூட்ட எழுதப்பட்டதாகவே இன்றுவரை பலர் கருதுகிறார்கள். கவிதையை முழுவதும் படிக்காமல் மேற்கோளாகக் காட்டுபவர்களே அதிகம். இலக்கிய ஆய்வாளர்களோ ராபர்ட் ஃப்ரோஸ்ட் படம் பிடித்துக் காட்ட நினைத்தது வாழ்க்கையில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறி, ஒரு முடிவை எடுத்த பின்னர் மாற்று முடிவை எடுத்திருக்கலாமோ என்று குழம்பும் மனநிலையைக் காட்டுவதற்காக எழுதப்பட்டது என்பதைத்தான் கூறுகிறார்கள்.

பிரிந்து செல்லும் பாதைகள் இரண்டுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்பதைத்தான் கவிதையின் வரிகள்

மீண்டும் மீண்டும் வேறு வேறு வகைகளில் கூறுகிறது. பாதைகளில் வேறுபாடில்லை, ஆனால் பயணி தான் மாற்றுப் பாதையில் சென்றிருக்கலாமா என ஏங்குவதைத்தான் ராபர்ட் ஃப்ரோஸ்ட்டின் கவிதை வரிகள் காட்டுகின்றன என்பது இவர்கள் தரும் விளக்கம். கவிதையின் நோக்கம் ஊக்கமூட்டுவது எனப் பொருள் கொள்பவர்கள், கவிதை வரிகளை மேலோட்டமாகப் படிக்கிறார்கள். வார்த்தைகள் குறிப்பிடும் ஆழ்ந்த பொருளை உணர்வதில்லை என்பது இவர்கள் கருத்து. ராபர்ட் ஃப்ரோஸ்ட் தனது கவிதை குறித்து எட்வர்ட் தாமஸுக்குக் கூறிய கருத்துகளில் இருந்தும் அதுதான் தெரிய வருகிறது.

கவிதையில் பயணி விடுக்கும் பெருமூச்சு, இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற மனநிலையில் பயணி விடும் ஏக்கப் பெருமூச்சு என ராபர்ட் ஃப்ரோஸ்ட் காட்ட விரும்பினார். ஊக்கமூட்டும் கவிதையாக பார்ப்பவர்கள் அந்தப் பெருமூச்சை நான் எடுத்த முடிவு சரியே என்ற எண்ணத்தில் விடும் நிம்மதிப் பெருமூச்சாக உணர்வார்கள். இதற்கு மாறாகத் தவறான முடிவை எடுத்துவிட்டேன், நான் அந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும், என் வாழ்வில் எதிர்கொண்ட இத்தனை இன்னல்களுக்கும் காரணம் நான் எடுத்த தவறான முடிவே என்று நொந்து கொள்ளும் துக்கப் பெருமூச்சு அதுவென்று சிலர் பொருள் கொள்வதுண்டு. தங்கள் வாழ்வின் குறிக்கோளை எட்டமுடியாமல் போனவர்கள் பிற்காலத்தில் இவ்வாறு பொருள் கொள்வதும் கவிதை காட்டும் ஒரு மறுகோணம்தான். கவிதை கூறும் ‘மாற்றங்கள்’ எத்தகையது எனப் பொருள் கொள்வதுதான் பயணம் செய்த பாதை குறித்த கோணத்தைத் தீர்மானிக்கிறது என்பதால் அது படிப்பவர் கோணத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. அதுவே இக்கவிதையின் சிறப்பும் கூட.

இக்கவிதையின் வரிகளில், ஏதோ ஒரு உந்துதலினால், கவனமாகத் திட்டமிட்டு தேர்வு செய்யாது மேம்போக்காகத்தான் எடுத்த முடிவு ஒன்றை, பின்னாளில் அது தனது வாழ்க்கையையே மாற்றியமைத்ததாகக் கூறவிருப்பதாக கவிஞர் காட்டும் பயணி முன்னரே குறிப்பிட்டுவிடுகிறார். இது நம்மில் பலர் கொண்டிருக்கும் பண்பே. காலம் போகும் போக்கில் சென்றுவிட்டு பின்னர் அதைத் தனது திட்டமிட்ட பயணம் என்று பலர் எண்ண முற்படுவதுண்டு. கவிதையின் இறுதிப் பகுதியில், நான் . . . நான் என்று பயணி இருமுறை தடுமாறுவது அவர் பின்னாளில் கட்டுக்கதை சொல்லப் போவதை குறிப்பால் உணர்த்துவதாகவும், அதே நேரத்தில் கவிதை அழகுக்காக எதுகை மோனை அடிப்படையிலும் அமைந்துள்ளது என்பதும் இலக்கியவாதிகள் கருத்து (கீழே பொதுவுரிமைக் களத்தில் இருக்கும், ராபர்ட் ஃப்ரோஸ்ட்டின் ‘தி ரோட் நாட் டேக்கன்’ ஆங்கிலக் கவிதையின் மூலமும் அதற்கு எனது மொழிபெயர்ப்பும்).

“The Road Not Taken” — by Robert Frost

Two roads diverged in a yellow wood,

And sorry I could not travel both

And be one traveler, long I stood

And looked down one as far as I could

To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,

And having perhaps the better claim,

Because it was grassy and wanted wear;

Though as for that the passing there

Had worn them really about the same,

And both that morning equally lay

In leaves no step had trodden black.

Oh, I kept the first for another day!

Yet knowing how way leads on to way,

I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh

Somewhere ages and ages hence:

Two roads diverged in a wood, and I—

I took the one less traveled by,

And that has made all the difference.

***

பயணம் சென்றிராத பாதை

இலையுதிர்காலத்து காட்டிடைப் பயணத்தில்

இரண்டாகப் பிரிந்தது நான் சென்ற பாதை,

இரண்டிலுமே ஒருசேரப் பயணிக்க இயலாதது என் வருத்தம்,

நீண்டநேரம் இயன்றவரைத் தொலைவில் உற்று நோக்கினேன்

நெடுந்தொலைவில் மரங்களிடையே மறைந்த பாதையொன்றை,

பிறகு அதே தோற்றம் கொண்ட மறு பாதையில் நடந்தேன்,

பாதை சற்றே சிறந்தது எனக் கூட கூறலாம்,

பயணியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பசும்புல்தரை

பயணம் சென்று பார்த்த வரையில்

பாதைகளின் தேய்மானத்தில் மாற்றம் அதிகமில்லை

புலர்ந்திருந்தது பொழுது ஒன்றாகவே இரு பாதையிலும்,

பழுத்த இலைகளும் காலால் மிதிபட்டுக் கருமையேறவில்லை.

ஓ, அந்தப் பாதையில் நான் மற்றொருநாள் செல்வேன்

பயணம் எவ்வாறு தொடர்ந்துவிடுகிறது என அறிவதால்

நான் திரும்புவேனென்ற நம்பிக்கை எனக்கில்லை

நான் இதையொருப் பெருமூச்சுடன் சொல்வேன்

என்றோ எங்கோ காலங்கள் பல கடந்த பிறகு;

நான் சென்ற பாதை இரண்டாகப் பிரிந்தது, நான் . . .

நான் அதிகம் பயணிக்கப்படாத பாதையொன்றில் பயணித்தேன்

அந்த முடிவே வாழ்வில் எல்லா மாற்றங்களுக்கும் காரணமானது.

பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் ராபர்ட் ஃப்ரோஸ்ட்டின் ‘தி ரோட் நாட் டேக்கன்’ கவிதையை மனிதரின் தனித்தன்மையை வளர்த்தெடுக்க விரும்பும் கவிதையாகக் கருதி ஊக்கமூட்டும் உரைகளாகக் கூறி வருவதே இன்றைய நடைமுறை. மாணவர்களை ஆற்றுப்படுத்தும் ஆசிரியர் கூறுவதாக ‘டெட் போயட்ஸ் சொசைட்டி’ (Dead Poets Society) என்ற ஹாலிவுட் திரைப்படம் வரையிலும் இவ்வாறுதான் பொருள் கொள்ளப்படுகிறது. ‘தி ரோட் நாட் டேக்கன்’ என்பதை பக்கத் தலைப்புகளாகவும், அத்தியாயத்தின் தலைப்புகளாகவும் கொண்டு பல நூல்களும் வெளிவந்துள்ளன.

டாக்டர் எம். ஸ்காட் பெக் என்ற உளவியல் மருத்துவரால் ‘தி ரோட் லெஸ் ட்ராவல்ட்’ (The Road Less Traveled, Further Along the Road Less Traveled, The Road Less Traveled and Beyond by Dr. M. Scott Peck) என்ற தலைப்பில் எழுதப்பட்ட அவரது நூல்களும் சிலவும் இந்தக் கோணத்தில் எழுதப்பட்டவையே. பலர் ‘தி ரோட் நாட் டேக்கன்’ என்பதையும் ‘தி ரோட் லெஸ் ட்ராவல்ட்’ என்பதையும் ஒரே பொருளின் அடிப்படையில்தான் கையாளுகிறார்கள். இந்தத் தலைப்பிலும் பல பாடல்கள் வெளியாகியுள்ளன. பலர் ‘ராபர்ட் ஃப்ரோஸ்ட் எழுதிய தி ரோட் நாட் டேக்கன் கவிதை’ எனத் தேடுவதற்குப் பதில், பிழையாக ‘ராபர்ட் ஃப்ரோஸ்ட் எழுதிய தி ரோட் லெஸ் ட்ராவல்ட் கவிதை’ (“Frost’s poem the road less traveled”) என்றே இணையத் தேடல் செய்வதைக் கூகுள் நிறுவனத்தின் இணையத்தேடல் புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன. சென்ற மாதம் (அக்டோபர் 2017) ரோட் லெஸ் ட்ராவல்ட் என்ற தலைப்பில் ஒரு தொலைக்காட்சிப் படமும் வெளியாகியுள்ளது.

ராபர்ட் ஃப்ரோஸ்ட் தனது கவிதையின் நோக்கம் வேறு என்று கூறினாலும், இலக்கியவாதிகள் படிப்பவர்கள் பொருட்பிழை செய்வதாகக் குறிப்பிட்டாலும்,கவிதை வெளியாகி நூறாண்டுகள் கடந்த பின்னரும், அமெரிக்க மக்கள் மனதில் இருந்து ‘தி ரோட் நாட் டேக்கன்’ கவிதை ஆக்கப்பூர்வமாக முன்னேற ஊக்கமூட்டும் வரிகளைக் கொண்ட ஒரு கவிதை என்ற எண்ணம் மாறப்போவதுமில்லை, கவிதை வரிகளை தங்கள் அமெரிக்கப் பண்பாட்டின் எதிரொலியாகக் காண்பதை அவர்கள் நிறுத்தப் போவதுமில்லை.

________________________________________________________________________________

References:

Robert Frost: “The Road Not Taken”, Our choices are made clear in hindsight, by Katherine Robinson, https://www.poetryfoundation.org/articles/89511/robert-frost-the-road-not-taken

The Most Misread Poem in America, By David Orr September 11, 2015, The Paris Review, https://www.theparisreview.org/blog/2015/09/11/the-most-misread-poem-in-america/

The Road Not Taken – Wikipedia, https://en.wikipedia.org/wiki/The_Road_Not_Taken

The Road Less Traveled – Wikipedia, https://en.wikipedia.org/wiki/The_Road_Less_Traveled

M. Scott Peck, http://www.mscottpeck.com/html/scott-peck-books.php

Road Less Traveled (2017 TV Movie – 31 October 2017) – http://www.imdb.com/title/tt5990386/


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரு பாதைகளும் ஒரு பயணமும்”

அதிகம் படித்தது