மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இறையன்புவின் இலக்கியத்தில் மேலாண்மை நூல் பற்றிய திறனாய்வு

சு. தொண்டியம்மாள்

Apr 9, 2022

siragu ilakkiyaththil melaanmai1

இந்நூல்  இலக்கியத்தில் மேலாண்மை என்ற கட்டுரையை முதலாகக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பதினைந்து தலைப்புகளில் ஆசிரியர் கட்டுரைகளை எழுதியுள்ளார். முதல் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்பாக வைக்கப்பெற்றுள்ளது. இந்நூலில் இலக்கியத்தில் மேலாண்மை, நீரின்றி அமையாது உலகு, உண்மை நம்பிக்கை பொய்ப்பதில்லை, எல்லோருக்கும் நல்லவராக இருந்தால், போருக்குச் சமமான போட்டி உலகம், சிறந்த நிர்வாக இரகசியங்கள், திட்டமிடு! வெற்றியடை!, பேசும் கலை வளர்ப்போம், அமைதியாய் ஆளுக, முடிவில் வேண்டும் முனைப்பு, முயற்சிசெய் முடிச்சு அவிழும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், மனத்தில் உள்ளது கைகளின் திறன், வர்த்தகமும் போரே,  தலையே அடையாளம் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. இக்கட்டுரைகள் அனைத்தும் மேலாண்மைச் சிந்தனைகளை அடியொற்றியவை என்பதால் இந்நூலின் தலைப்பு பொருத்தமுடையதாக வைக்கப்பெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.

இலக்கியத்தில் மேலாண்மை என்ற முதல் கட்டுரை தமிழ் இலக்கியங்களில் காணப்படும் மேலாண்மைச் சிந்தனைகளை முன்வைத்து எழுதப்பெற்றுள்ளது. மேலாண்மை எப்போது தொடங்கியது என்று ஒரு கேள்வி கேட்டார் அதற்கு இந்நூலாசிரியர் மனித இனம் தொடங்கியபோதே மேலாண்மையும் துளிர்க்க ஆரம்பித்துவிட்டது என்று பதில் தருகிறார்.

மேலாண்மை என்பது நிறுவனங்களுக்கு மாத்திரம் தேவைப்படும் பண்பல்ல. மனித வாழ்க்கையின்  வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் அது கலந்திருக்கிறது என்று உரைக்கிறார் ஆசிரியர்.  வீடு தொடங்கி நாட்டை நிர்வகிப்பது வரை மேலாண்மைப் பண்பு  அமைந்துள்ளது என்பது அவரின் உறுதியான கருத்தாக உள்ளது.

கம்பராமயணத்தில் தசரதன் தன் நாட்டை மிகவும் நுட்பமாகவும் நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதை விளக்க முற்படும்போது கம்பர், வறியவன் ஒருவன் பாதுகாக்கும் ஒரு வயலைப்போல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச் சிறந்த முறையில் தசரதன் ஆட்சி செய்தான் என்று குறிப்பிடுகிறார் இந்நூலாசிரியர்.

‘‘வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்

செய் எனக் காத்து இனிது அரசு செய்கிறான்”

என்ற கம்பராமாயணப் பாடலடி ஏழை காத்த வயல் போல அயோத்தி நாடு தசரத மன்னனால் காக்கப்பெற்றது என்பதைக் காட்டுவதாக உள்ளது, சின்ன வயல் மட்டுமே சொத்தாகக் கொண்டவன் தன் கவனம் முழுவதையும் அதன்மீதே திரட்டி, ஒரு பூச்சி விழுந்தாலும் உடன் அகற்றி, கதிர்விட்டதும் இராப்பகலாகக் காவல் காத்து அறுவடை செய்து கதிர்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வரை அக்கறை காட்டி, உள்ளத்தை வயலிலேயே நட்டு வைத்திருப்பான். உயிரைப் பயிரின் மீதே வைத்திருப்பான். தன் பரந்த நாட்டை அந்த அளவிற்கு அக்கறையுடன் எந்தப் பகுதியும் தகுதி குறையாமல் சிறக்கும்படி தசரதன் நிர்வகித்தான்.அவன் தன் நாட்டிலே உள்ள உயிர் எல்லாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் என்று கம்பர் மேலும் அவனின் நாடு காவலைச் சிறப்பித்துக் குறிப்பிடுகிறார்.

மனமே ஒரு வேளாண்மை சார்ந்த மேலாண்மைப் பண்பினைப் பெற்றது என்பதை ஒரு பழம்பாடல் கொண்டுத் தெளிவிக்கிறார் நூலாசிரியர்  இறையன்பு அவர்கள்.

இன்சொல் விளைநிலமாய் ஈதலே வித்தாக

வன்சொற்களைக் கொட்டு வாய்மை எருவூட்டி

அன்புநீர்ப் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்

பைங்கூழ்சிறு காலைச்செய்”

என்கிற நெறியில் செல்பவர்களே சிறந்த மேலாளர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருப்பார்கள்  என்கிறது இப்பாடல். மனிதனின் இனிய சொற்கள் என்பன விளை நிலமாக அமைகின்றன. அதில் ஈதல் என்னும் கொடைப்பண்பே விதையாக விதைக்கப்படுகின்றது. வாய்மை என்னும் எருவினை இட்டு அன்பு நீர் பாய்ச்சி வேளாண்மை செய்ய அறம் என்னும் கதிர் விளையும். என்று மனத்தின் வேளாண்மையே மேலாண்மை என்கிறார் ஆசிரியர்.

இவ்வாறு அன்பு, இனிய சொற்கள், கொடை, வாய்மை போன்ற பண்புடையவர்களே சிறந்த நிர்வாகிகள் ஆவர். அவர்களிடம் பணிபுரிபவர்கள் பணியைப் பாரமாக்காமல் சாரமாக்குவார்கள் என்பது உண்மையாகும். இவ்வாறு இல்லாமல் வலிய சொற்கள் , வன்மைக் குணம் போன்றன கொண்டு நிர்வாகம் செய்தால்  சத்துள்ள மனிதர்கள் வெளியேற, தக்கையானவர்களே தலைதூக்கி நின்று சக்கைகளை உற்பத்தி செய்வார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆசிரியர்  அடிப்படையில் வேளாண்மைப் படிப்பினைப் படித்தவர் என்பதால் அ்வரிடம் வேளாண்மைக் கருத்தும் மேலாண்மைக் கருத்தும் ஒருசேர அமைந்து சிறக்கின்றன.

உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலாண்மைக் கருத்துகள் மென்மையாகப் பரவிக்கிடக்கின்றன. அவை பன்னீர் புஷ்பங்கள் காற்றில் பரவவிடும் மணத்தைப் போல வசீகரமானவை. அவற்றை அப்படியே சிதைத்துக் குப்பிகளில் அடைக்க அவர்கள் முனையவில்லை. மகத்தான மனிதர்களின் வீழ்ச்சிகளைச் சித்தரிக்கும் அவர்கள், பலவீனங்களைக் கோடிட்டு எச்சரித்தும் நன்னெறிகளை நம் மனதில் எழுத உச்சரித்தும், உள்மனதில் இவை எதிரொலித்து அறிவறுத்த – காவியங்கள் மூலமாகவும், நாடகங்கள் மூலமாகவும் கவிதைகள் வாயிலாகவும், உருவக்கதைககள் ஊடாகவும் நம்முன்னோர்கள் முயன்றனர். இவ்வாறு மேலாண்மைக் கருத்துகள் உலக அளவில் பரவியுள்ள தன்மையை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

நீரின்றி அமையாது உலகு என்பது இந்நூலில் உள்ள இரண்டாவது கட்டுரையாகும். நீர் மேலாண்மை என்று சொல்லுகிறபோது நீர்நீலைகளை அமைத்தல், மழைநீரைச் சேமித்தல், நிலத்தடி நீரை அதிகரித்தல் தடுப்பு அணைகள் அமைத்தல் ஒவ்வொரு சொட்டு நீரையும் முறையாக பயன்படுத்துதல் நீர்த்தேக்கங்களைச் சரியான அளவில் அமைத்தல், தண்ணீர் தேக்கத்தைக் குறைத்தல், வெள்ளச் சேதங்களை முறியடித்தல் போன்ற பலகூறுகள் உண்டு என்று நூலாசிரியர் நீர் மேலாண்மை பற்றிய பல கருத்துகளை இக்கட்டுரையில் தொகுத்து உரைக்கின்றார்.

பயிர்களை நேசிக்கவும், இயற்கையை உணரவும் அடுத்த தலைமுறைக்குக் கற்றுத் தருவதும் படிப்பின் ஒருபகுதியே என நாம் உணர வேண்டும். மனித நாகரிகம் வேளாண்மையிலிருந்தே தொடங்கியது என்பதை நாம் ஒரு போதும் மறக்ககூடாது.

ஒரு நாட்டின் வளம் என்பது அதன் நீர் மேலண்மையைப் பொருத்தே அமைகிறது. இதை உணர்த்தும் பொருட்டுக் குடபுலவியனார் என்கின்ற சங்க காலப் புலவர் மன்னனுடைய கடமை, நீர் மேலாண்மையைப் பேணிக் காப்பது என்று புறநானூற்றுப் பாடல் ஒன்றில் புலப்படுத்துகிறார் .

“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே

வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்

வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்.”

உணவு எனப்படுவது நிலத்தோடு சேர்ந்த நீரும் ஆகும். நீரும், நிலமும், திருத்தி விளைச்சலுக்கு உதவியவர்கள் உடலும் உயிரும் அளித்துக் காக்கிறவர்கள் ஆவார். அகண்ட நிலப்பரப்பில் விதையை விதைத்துவிட்டு வான்மழையை எதிர்நோக்கும் நிலத்தால் மன்னவனுக்குப் பயன் விளையாது. இன்றும் தரிசுநிலங்கள் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதைப் பார்க்கிறோம்.

பழந்தமிழர்கள் நீரை மிகவும் நேர்த்தியாக பராமரித்தார்கள் என்பதற்கு நீர்நிலைகளுக்கு அவர்கள் வைத்த பெயர்களே சிறந்த சான்றாகும். ஐம்பதுக்கு  மேற்பட்ட பெயர்களை நீர் நிலைகளுக்குத் தமிழர்கள் சூட்டியிருந்தார்கள். இது அக்காலத்தில் மழைநீரை எவ்வளவு நுட்பமாகச் சேமித்து வறண்ட காலங்களுக்கும் பயன்படுத்தினார்கள் என்பதை நாம் உணர வழிவகுக்கிறது என்ற ஆசிரியர் கருத்து நீர் மேலாண்மை என்பது பல்வகை வளர்ச்சிகளுக்கு நாட்டை உட்படுத்துகிறது  என்பதை உணர வைக்கின்றது.

அகநானூற்றில் பெரிய நீர்நிலைகளைக் காப்பதற்கு காவற் பணியாளர்கள் இருந்தார்கள் என்கிற விவரமும், இவர்கள் மழைக்காலங்களில் இரவில் துயிலாமல் பணிபுரிந்தார்கள் என்பதும் குறிக்கப்பட்டுள்ளது.

தொழில் மழைபொழிந்த பானாட்கங்குல

எறி திரைத்தி விலைதூஉம் சிறுகோட்டுப்

பெருங்குளம் காவலன்போல

அருங்கடி அன்னையும் துயில் மறந்தனனோ?

என்ற பாடலடிகளை இதற்குச் சான்று காட்டலாம். அன்னையானவள் பெருங்குளம் காக்கும் காவலன் போல தூங்காமல் இருந்து தன் மகள் தலைவனைச் சந்திக்கவிடாமல் காத்துநின்றாள் என்று சங்க அகப்பாடல் நீர் காப்பவனை உவமையாக வைத்துப் பாடியுள்ளது. தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு கரிகாலன் கட்டி வைத்த கல்லணையே சான்று என்று நீரின்றி அமையாது உலகு நீர் மேலாண்மை பற்றிக் காட்டி  நிற்கிறது.

எல்லோருக்கும் நல்லவராக இருந்தால் என்ற கட்டுரை இலக்கியத்தில் மேலாண்மை என்ற தலைப்பிலான நூலில் மூன்றாவதாக அமைக்கப்பெற்றுள்ள கட்டுரையாகும். உண்மையான தலைமைப் பண்பு என்பது ஒரு செயலை எல்லோரும் அதிசயப்படும்படி அழகாகவும், நிறைவாகவும், விரைவாகவும் செய்து முடிப்பதில்தான் அடங்கியிருக்கிறது. அதிகத் தொழில் நுட்பம் இல்லாத பெரிய இயந்திரம் இல்லாத அந்தக்காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான கோயில்கள் நான்கு முக்கியமான அம்சங்களை உணர்த்துகின்றன..முறையான திட்டமிடுதல் சரியான நிர்வாகம் சீரிய தலைமை செம்மையான கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலமே தஞ்சைப் பெரியகோவில் போன்ற அதிசயங்கள்சாத்தியமாயின.

ஒரு சின்ன விழாவைக் கூடச் சிறப்பாக நடத்த திட்டமிட வேண்டியது அவசியம். ”டாவோடீச்சிங்” என்பது தாவோ அறிஞர் லாவோட்சு என்பவரால் எழுதப்பட்டு அறிஞர் அண்ணாவால் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட புகழ் பெற்றவாசகம் உள்ள நூல். ”மக்களிடம் செல் -அவர்களோடு வாழ் –     அவர்களைநேசி – அவர்களிடமிருந்துகற்றுக்கொள் – அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து – தொடங்கு அவர்களிடம் இருப்பதை வைத்துக் கட்டுமானம்செய் – பணிமுடியும்போது அவர்களாகவே செய்து முடித்த உணர்வை ஏற்படுத்து” என்பது அவ்வாறு அடிக்கடி எடுத்துக்காட்டப்படும் வாசகம் ஆகும். இது மக்களின் மக்களாகவே ஆட்சியாளர்கள் வாழ வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றது.

திட்டமிடுவதற்குக் கீழிருந்து தொடங்க வேண்டும் என்று இன்று சொல்வதை அன்றே லாவோட்சு கூறிவிட்டார். இருப்பதை வைத்துக் கொண்டு அதிகப் பயன்பாட்டை அடைவதே நல்ல திட்டமிடுதலாகும்.

எந்தத் திட்டமும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. அது சாத்தியமும் இல்லை எவ்வளவு சிறந்த திட்டத்தையும் குறை சொல்ல வேண்டுமென்று ஒரு கூட்டம் கட்டாயமிருக்கும். இன்று அரசு எந்தத் திட்டத்தைத் தொடங்கினாலும் அதற்கு எதிராகப் புரட்சி செய்பவர்களும் போராட்டம் செய்பவர்களும் உண்டு.

கன்பூசியஸ் சீனச் சிந்தனையை வடிவமைப்பதில் பெரும்பங்கு வகித்தார். அவர் கூறிய பல கருத்துகள் அனலெக்ட்ஸ் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய ஆளுமையை நிர்வாகம், மேலாண்மை போன்ற நடைமுறைக் கருத்தாங்களில் நம்மால் உணரமுடியும்  என்று இக்கட்டுரை அனைவருக்கும் நல்லவராக அமையத் தக்க நல்ல கருத்துகளை உலக அளவில் செயல்படுத்திய அறிஞர்களின் கருத்துகளை எடுத்துரைக்கின்றது. நல்லவர்கள் நம்மை நேசிக்க வேண்டும்.கெட்டவர்கள் வெறுக்க வேண்டும். அதுவே சரியான வாழ்க்கை முறை என்று இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இதன் வழி நல்லவர்களாக நாமும் இருக்க வேண்டும். நல்லவர்கள் நம்மை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்து தெரியவருகிறது.

இந்நூலின் அடுத்து கட்டுரையாக அமைவது சிறந்த நிர்வாக இரகசியங்கள் என்ற கட்டுரை ஆகும். இக்கட்டுரை ரகசியங்களை வெளிப்படுத்தும் கடடுரையாக விளங்குகின்றது. தலைமைப்பண்பு உள்ளவர்கள் தன் முனைப்பு அற்றவர்களாகக் காட்சிக்கு எளியவராக யாரும் தங்கள் கருத்தை எளிதில் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுபவர்களாக இருக்கவேண்டும். இராமர் மக்களைப் பார்த்துத் தானாகவே முன் சென்று அவர்கள் நலம் விசாரிக்கும் நல்ல நாயகனாக இருந்தார் என்பதைக் குறிப்பிடும்போது வால்மீகி அவரை பூர்வபாஷி என்று விளிக்கிறார். கம்பரும் இராமருடைய இந்தப் பண்பைச் சிலாகித்துப் பேசுகிறார்.

நிறுவனத்தை வழிநடத்துபவர்கள் தன்முனைப்பற்று இருக்கும்போது மிகப் பெரியசாதனைகளை ஆற்றமுடியும். திருவள்ளுவர் துணிவு, ஈகை, அறிவுடைமை, ஊக்கம் ஆகிய பண்புகள் நிறைந்திருப்பவனே தலைமைப் பண்பு உடையவராக இருக்க முடியம் என்று குறிப்பிடுகிறார்.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞசாமை வேந்தற்கு இயல்பு (382)

என்று மன்னனுக்கான தலைமைப் பண்புகளைக் காட்டுகின்றது திருக்குறள்.  தலைமைப் பண்பு உடையவர்கள் கற்றுக் கொள்ளவும், தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடையவும் தயாராக இருப்பவர்கள் ஆவார்கள். அவர்கள்  விரைவான முடிவுகளை அயராமல் எடுப்பவர்கள். அவர்கள் அறிவில் சிறந்து விளங்குபவர்கள் ஆவார்கள் என்று பல அடையாளங்கள் தலைமைப் பண்புடையவர்களுக்கு நூலாசிரியர் வெ. இறையன்பு அவர்களால் காட்டப்பெறுகின்றது.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலன் ஆள்பவர்க்கு

என்று திருவள்ளுவர் மேலாண்மைக்கான முக்கியமான பண்புகளாக தூங்காமை, கல்வி, துணிவுடைமை ஆகியவற்றை முக்கியமான பண்புகள் என்று குறிப்பிடுகிறார்.

சேரன்செங்குட்டுவன் சிலப்பதிகாரத்தில் காட்சிக் காதையில் கண்ணகி மதுரையை எரித்த சம்பவத்தைக் கேட்டு

”மன்பதை காக்கும் நன்குடிபிறத்தல்

துன்பமல்லது தொழு தகவு இல்”

என்று குறிப்பிட்டுத் தலைமைப் பண்பின் தகுதியை வரையறுக்கிறார். டாவோடீச்சிங் நூலில் லாவோட்சு நாட்டைச் சிறந்த முறையில் வழிநடத்துவது பற்றிக் குறிப்பிடும்போது பெரியநாட்டை ஆளுவது சின்ன மீனைச் சமைப்பது போல என்கிறார். அதிகம் கிளறினால் உறுப்புகள் தனித்தனியாக உதிர்ந்துவிடும் என்பது சின்ன மீன்களைச் சமைக்கும்போது எதிர்படும் சிக்கலாகும். எனவே நாட்டை ஆளும் ஆளுமை வாய்ந்தவர்கள் எப்போதும் விழிப்புடனும், சோர்வின்றியும் கடமையாற்ற வேண்டும் என்று இந்நூலாசிரியர் இறையன்பு குறிப்பிடுகிறார்.

திட்டமிடு வெற்றியடை  என்பது இலக்கியத்தில் மேலாண்மை என்ற நூலில் அமைந்துள்ள மற்றொரு கட்டுரையாகும்.

சூழல் பாதுகாப்பாக இருக்கும் போது பராமரிப்பது எளிது

அறிகுறிகள் தொடங்குவதற்குமுன்பே நிலமையைச் சமாளிப்பது எளிது.

பொருள் காய்ந்திருக்கும்போது ஒடிப்பது எளிது

நுண்ணியதாக இருக்கும்போதே ஒரு பொருளைக் கரைப்பது சுலபம்

ஒரு செயல் ஒன்றுமில்லாமல் இருக்கும்போதே அதைக் கவனிக்கக் கற்றுக்கொள்

ஒழுங்கீனம் வருவதற்கு முன்பே சூழலைக் கட்டுப்பாட்டில் வைத்திரு

மனிதனின் கைகளால் அளக்க முடியாத மரம் சின்ன துளிராகவே உதயமாகிறது

ஆயிரம் மைல் கொண்ட பயணம் ஓர் அடி முன்வைப்பதில் தொடங்குகிறது.

நிலமையைப் பரிசோதிப்பதற்கு அறிவும் ஆற்றலும் தேவை.

என்று பல மேலாண்மைக் கட்டளைகளைக் கொண்டு இக்கட்டுரை தொடங்குகிறது. இவை மந்திர வாசகங்கள் ஆகும். இவற்றை ஒருவர் தினமும் பார்ப்பதாலும் படிப்பதாலும் அவரின் மேலாண்மை குறித்தான அறிவு மேலும் மேலும் வலுப்பெறும்.

ஜாதகக்கதை ஒன்று உண்டு. செடிகளுக்கு நீர் வார்க்கும் பொறுப்பை ஒருவன் குரங்கிடம் ஒப்படைத்தானாம். அவை நீர் ஊற்றிய பிறகு ஒவ்வொரு செடியின் வேரும் ஒழுங்காக நனைந்திருக்கிறதா? என்று பிடுங்கிப் பிடுங்கிப் பார்த்தனவாம். அப்படிபட்டவர்களிடம் ஆய்வுப பணியை ஒப்படைக்கமுடியாது. வரப்போகும் பாதிப்புகளையும், நன்மைகளையும் அறியக்கூடியவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதைச் சொல்லி அவர்களையே இது போன்ற பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டுமென்று கம்பர் இராமயணத்தில்

உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்

மற்றது வினையின் வந்தது ஆயினும் மாற்றல்ஆற்றும்

பெற்றியார் பிறப்பின் மேன்மைப் பெரியவர் அரியநூலும்

கற்றவர் மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார்

என்று குறிப்பிடுகிறார் . இதன்வழி கம்பர் ஆளுமைப் பண்புகளை யாரிடம் தரவேண்டும் என்தை வரையறுத்துக் காட்டியுள்ளார்.

திருக்குறளைப் பொறுத்தவரை கட்டுப்படுத்துவதை வள்ளுவர் எளிய உதாரணத்தோடு விளக்குகிறார். பிரச்சினை துளிர்விடும்போதே அதைத் துணிந்துக் கிள்ளி எறிய வேண்டும். வளர விட்டால் வெட்டுகிறவர்கள் கைகளுக்கே அது வேட்டு வைத்துவிடும் என்பதை

இளையதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து (879)

என்று  சிறியதாக உள்ளபோதே முட்செடியை வேரோடுக் கிள்ளிவிட வேண்டும் என்று காட்டுகிறார் வள்ளுவர்.             வழிநடத்தும் யாரேனும் பாதை தவறினால் அவர்களை மேலாளர் கண்டிக்க வேண்டும். தேவைப்பட்டால் தண்டிக்கவும் வேண்டும். அது அவர்களை வருத்துவதற்கு அல்ல.. மற்றவர்களைத் திருத்துவதற்காக.

வினைத்திட்பம் என்பது  ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற   (612)

என்று வினைத்திட்பத்தின் செறிவுத்தன்மையை வள்ளுவர் காட்டியுள்ளார். தலைமையேற்று நடத்திச் செல்லும்போது எந்த இடத்திலும் நாம் மேற்கொள்ளும் பணியை விட்டு விடலாம் என்று நினைக்கக்கூடாது. எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அவற்றைப் புறந்தள்ளி முன்னே செல்வதே உண்மையான தலைமைப் பண்பு உள்ளவர்களின் உயரிய பணி.

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.  (612)

என்று வள்ளுவர் ஒரு வினை செய்யும்போது வினைகெடல் செய்யும் எண்ணம் வந்துவிடக் கூடாது என்பதைக் குறிப்பிடுகிறார்.

இலக்கை நிர்ணயிக்கும்போது நம்மால் முடியாது என்று நினைத்தால் காரணங்களைச் சொல்லிக் கொண்டடிருப்போமே தவிர, காரியத்தைச் செய்து முடிக்க மாட்டோம். இதைத்தான் திருவள்ளுவர்.

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.( 611 )

என்று குறிப்பிடுகிறார் என்று திட்டமிடு வெற்றியடை என்ற கட்டுரை மேலாண்மைச் செய்திகளை வழங்குகின்றது.

-தொடரும்


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இறையன்புவின் இலக்கியத்தில் மேலாண்மை நூல் பற்றிய திறனாய்வு”

அதிகம் படித்தது