மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலக்கியங்களில் கல்வி

முனைவர் மு.பத்மா

Jul 20, 2019

siragu-kalviyiyal1
செம்மொழி இலக்கியங்களில் கல்வி பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன. சங்க காலத்தில் கற்றறிந்த புலவர்கள் அவையாகத் தமிழ்ச்சங்கங்கள் அமைந்திருந்தன. பெண்பாற் புலவர்கள் முப்பதுக்கும் மேலாக இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இவ்வகையில் கல்வி நிலையில் சிறப்புற்ற சமுதாயமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழினம் இருந்துள்ளது. சங்ககால கல்வி நிலையை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

தொல்காப்பியத்தில் கல்வி

பண்டைய இலக்கணமான தொல்காப்பியத்தில் கல்வி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
“ஒதல் பகையே தூதிவை பிரிவே” அகத்திணையியல்-27
“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” அகத்திணையியல் 28
ஆகிய நூற்பாக்கள் கல்வி சார்ந்த செய்திகளை அளிக்கும் நூற்பாக்கள் ஆகும்.
தொல்காப்பிய காலத்தில் பிறநாட்டுக்குக் கல்வி கற்கச் செல்வது வழக்காக இருந்தது. கல்வித்தரத்தில் உயர்ந்தோரை மன்னன் மதிப்பான் என்ற நிலைய இருந்தது. கல்வியில் உயர்ந்தோர் சான்றோர் எனப்பட்டனர். கற்றோரையே தூதாக மன்னன் அனுப்பினான். தூது உரைப்பார்க்கு ஆராய்ந்த சொல்வன்மையும் நூல் வல்லவனாக விளங்கும் திறமையும் தேவை. எனவே கல்வியின் பொருட்டும் தூதின் பொருட்டும் பிரிவு என்பது நிகழ்வதாயிற்று.
“வேண்டிய கல்வியாண்டு மூன்றிறவாது’ கற்பியல்
கல்வியின் பொருட்டு ஒருவன் பிரியும் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்பது தொல்காப்பிய வரையறையாகும். இக்கால இளநிலைக் கல்வி போன்றே அக்கால எல்லையில் கல்வி வாய்ப்பும் இருந்தமை இதன் வழி தெரியவருகிறது.

சங்க காலத்தில் கல்வி

சங்க காலத்தில் பலரும் கற்றிருந்தனர். கணியன், கூலவணிகன், பாணன், பொருநன், புலவன் போன்ற பல பிரிவினர் கற்று இருந்தனர். கல்வி பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அறிவித்தல் பொருட்டு கபிலர் குறிஞ்சிப் பாட்டின எழுதினார் என்ற செய்தி அக்கால கல்வி நடைமுறையைக் காட்டுவதாக உள்ளது.
“தள்ளாப் பொருள் இயல்பின்
தண்தமிழ் ஆய்வந்திலார்”
“தமிழ் நிலைபெற்ற தாங்கரும் மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை”
என்று சிறு பாணாற்றுப்படை சங்க காலத்தில் தமிழ்கல்வி சிறந்திருந்தமையைக் காட்டுகிறது.
ஒரு தந்தையின் கடன் தன் மகனைச் சான்றோன் என்னும் நிலையில் உயர்ந்திப் பார்த்தல் ஆகும். இதற்குச் சிறந்த வழி கல்வியாகும். ஆகவே புறநானூற்றுப் புலவன், “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்று தந்தையின் கடமையாக்குகின்றது.
“தொல்லாணை நல்லாசிரியர்” மதுரைக்காஞ்சி என்ற பெயரின் வழி ஆசிரியர்கள் வழியாக மாணவர்கள் பாடம் கேட்டனர் என்பதை உணரமுடிகின்றது.
பாண்டிய மன்னர்களும் கல்வியுடன் அமைந்த நிலையில் விளங்கியுள்ளனர். இதனைப் பின்வரும் இலக்கியச் சான்றுகள் எடுத்துக்காட்டும்.
“தமிழ் வையைத் தண்ணம் புனல்” பரிபாடல் எட்டுத்தொகை
வைகை நதியில் கூட தமிழ் கல்வியின் மணம் வீசுகிறது
“சோமன் வழிவந்த பாண்டிய நின்
நாடுடைத்து நல்ல தமிழ்” திருமுருகாற்றுப்படை
என்ற இலக்கிய படைப்பிலக்கிய அடிகள் தமிழ்க்கல்வியின் சிறப்பைக் காட்டுவனவாக விளங்குகின்றன.
அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக அறிவு பெற்றோர், கல்லாதவர் என்று இருநிலை இருந்தமையை உணரமுடிகின்றது. வள்ளுவரும் கற்றோர் கல்லாதவர் என்று இரு பிரிவினரையும் குறிக்கிறார்.

கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் அரிய நெல்லிக்கனியை ஒளவைக்கு கொடுத்தது அவர் கற்ற கல்வியின் சிறப்பிற்கே ஆகும். சிறுபாணாற்றுப்படையில் நல்லியக்கோடனின் குணங்கள் குறிக்கப்பெறுகின்றன. இக்குணங்களில் “ஓதியது உணர்தல்” என்பதும் சுட்டப்படுகிறது. இதற்குக் கற்ற கல்விக்கு ஏற்றவாறு ஆட்சி நடத்துதல் என்றுபொருள்.
சங்கம் மருவிய காலத்தில் கல்வி
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண்படுமே”
திணை மொழிக்காஞ்சி குறிப்பிடும் நிலையில் கல்வி இருந்துள்ளது. கல்வியை செலவு செய்து கற்கவேண்டும் என்ற நிலைப்பாடு பதினெண் கீழ்க்கணக்கு காலத்தில் இருந்துள்ளது. ஒரு தாய் வயிற்றில் பிறந்த இளைய மகன்கல்வி கற்பின் மூத்தவனைவிட இளையவனுக்கே சிறப்பு அதிகம் என்ற நிலைப்பாடு இங்கு எண்ணத்தக்கது.
திருக்குறளும் கல்வியும்
திருக்குறளில் பொருட்பாலில் கல்வி பற்றிய செய்திகள் அடுக்கி உரைக்கப்படுகின்றன. “கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்தக’
கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்கவேண்டும்.
2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு’
எண்ணும், எழுத்தும் மக்களுக்கு இரு கண்கள் போன்றது.
3. “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்’
கண்ணுடையவர் என்பவர்கள் கற்றவர்கள் கல்லாதவர்கள் புண்ணுடையவர்கள்.
4. “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்’
இனி இவரை எப்போது காண்போம என்று வருந்துவதே புலவர் தொழிலாகும்.
5. “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லாதவர்’
கல்வி கற்றவர்கள் உயர்ந்தோர், கல்லாதவர்கள் தாழ்ந்தோராவர்
6. “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனை தூறம் அறிவு’
கற்ற கல்விக்கு ஏற்றவாறு அறிவு தோன்றும்.
7. “யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துனையும் கல்லாதவாறு’
கற்றவனுக்கு எல்லா நாடும் தன் நாடு போலவே ஆகும்.
8. “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து’
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்லி ஒருவற்கு ஏழு பிறப்பிற்கும் தொடரும்.
9. “தாமின்புறுவது உலகின் புறம் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்’
தாம் இன்பமடைந்ததை இவ்வுலகமும் இன்பம் அடைய வேண்டம் என்று அறிஞர் மேலும் கல்வி கற்பர்.
10. “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றையவை’
ஒருவனுக்கு அழிவில்லாத செல்வம் கல்வி மட்டுமே
என்ற நிலயில் திருக்குறளில் கல்வி அதிகாரம் கல்வி நிலைப்பாட்டைச் சொல்லுவதாக உள்ளது. கல்வியால் தாம் இன்புறுவது மட்டுமில்லாமல் உலகமும் இன்புறவேண்டும் என்பது வள்ளுவம் தரும் செய்தியாகும். இதுவே கல்வியின் வெற்றியுமாகும். கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்கிறது திருக்குறள்.
நாலடியாரும் திருக்குறளும்
நாலடியார்- சமண முனிவர்கள்- பொருட்பால் கல்வி
1. “கல்வி அழகே அழகு’
நடுவு நிலைமை உடைய ஒழுக்க வாழ்க்கை தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகு
2. ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
3. மம்மர் அறுக்கும் மருந்து
எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை நாம் கண்டதில்லை.
4. “தலை நிலத்து வைக்கப்படும்’
கீழ்க்குடியிற் பிறந்தவர்களானாலும் கற்றறிந்தவராயின் அவர்களை மேலான குடியினும் உயர்ந்த இடத்தில் வைத்து மதித்தல் வேண்டும்.
5. “விச்சை மற்றல்ல பிற’
ஒருவன் தன் மக்கட்குச் செல்வம் எனச் சேர்த்து வைக்கத்தக்கது கல்வியே.
6. “கல்வி கரையில கற்பவர் நாள் சில”
கல்விகள் முடிவில்லாதது ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சிலகாலம் தான்.
7. “மகன் துணையா நல்ல கொளல்”
நல்ல நூல்களை கற்ற கீழ் மகனாக இருந்தாலும் அவன் துணைகொண்டு நூல்களை கற்கவேண்டும் . படகோட்டி எந்த சாதி என்று பார்க்காமல் அவன் துணை கொண்டு போவது போல
8. “உம்பர் உறைவார் பதி’
கற்றோருடன் சேர்ந்து பெறும் இன்பம் தேவர்களோடு வாழ்வது போன்றது.
9. “தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு’
பாதிரிப்பூ தண்ணீருடன் சேர்ந்து நறுமணம் தருவது போல கற்றவருடன் கல்லாதவர் சேர்ந்தால் அறிவு உண்டாகும்.
10. “போலும் துணையறிவார் இல்’
மெய்ஞான நூல்களை கற்காமல் உலக அறிவு நூல்களை கற்பது வீணான சலசலப்பே பிறவி தடுமாற்றத்தை போக்க முடியாது.
என்று நாலடியாரில் கல்வி பற்றிய செய்திகள் தரப்பெறுகின்றன.

பழமொழி நானூறும் கல்வியும்

பழமொழி நானூறு என்ற சங்கம் மருவிய இலக்கியத்தில் கல்வி பற்றிய பல செய்திகள் தெரிவிக்கப்பெற்றுள்ளன.
1. “சுரம் போக்கி உல்கு கொண்டாம் இல்லை’
கற்பதற்குரிய இளம் பருவத்தில் கல்வியைக் கல்லாதவன் முதுமையில் கற்று வல்லவன் ஆக முடியாது.
2. “கற்றொறும் தான் கல்லாதவாறு’
தளர்ச்சியில்லாது தான் கல்லாதவனாய் எண்ணிக் கற்க வேண்டும்
3. “பொருளைக் கொடுத்து இருளை கொள்ளார்’
ஞானநூலைக் கற்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டது.
4. “ஆற்றுணா வேண்டுவதில்’
கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அவன் கட்டுச்சோறு கொண்டு செல்ல வேண்டும்.
5. “கற்றலின் கேட்டலே நன்று’
கற்ற வல்லவரிடம் நிறைய செய்தி கேட்க வேண்டும்
6. “குலவிச்சை கல்லாமல் பாகம்படும்’
கரிகாலச்சோழன் இளம் வயது திறமை கற்காமலேயே வரக்கூடியது.
7. “பாம்பறியும் பாம்பின் கால்’
அறிவுடைய வரை அறிவுடையாரே அறிவர்.
8. “அயிலாலே பேழ்ப அயில்’
இரும்பை இரும்பால் அடிப்பது போல் கற்றவரை கற்றவர் அறிவர்.
9. “நிறைகுடம் நீர்தளும்பல் இல்’
கற்றார் தம்மை புகழ்ந்து பேசிக் கொள்ளமாட்டார்
10. “மதிப்புறத்துப் பட்ட மறு’
அறிஞர் சிறு பிழை செய்தாலும் கல்வி, அறிவு அது எல்லாரும் அறிய விளங்கித் தோன்றும்.
நான்மணிக்கடிகையும் கல்வியும்

நான்மணிக்கடிகையிலும் கல்வி பற்றிய பல செய்திகள் அறிவுறுத்தப்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு.
“கற்றறிவு இல்லா உடம்பு’ அவைக்குப் பாழாவது கல்வி, கேள்வி வீண் சான்ற பெரியோர் இல்லாமை. தனக்குப் பாழாவது கல்வியறிவு இல்லாத புலால் உடம்பு உள்ளமை.
“கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்” கல்வி அறிவு கொண்டவரை விரும்புவர் அக்கல்வியுடைய வரைப்போன்றவர்.
“கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான் இளமை பாராட்டும் உலகு’ ஒரு குடியில் படிக்காமல் வயதால் முதிர்ந்தவனை மதிக்காமல் விட்டுப் படித்தவனின் இளமைப் பருவத்தையே உலகத்தார் பாராட்டுவார்.
“தேவரனையர் புலவரும் தேவர்’கல்வி அறிவுடைய புலவரும் தேவரைப் போன்றவர் ஆவர்.
“கல்லா ஒருவர்க்குத் தம் வாயிற் சொற் கூற்றம்”கல்லாத ஒருவருக்குத் தம் வாயினின்று வரும் சொல்லே இயமன் ஆகும்.
“துகாதற் புலவர்க்குக் கல்வியே கல்விக்கும் ஓதிற் புகழ்சால் உணர்வு’ பெற்றோர் உள்ளத்துக்கு புதல்வர்க்கு கல்வி அறிவே ஒளி, கல்வி அறிவிற்கு நிலைத்த மெய் உணர்வே ஒளி!

இன்னா நாற்பதும் கல்வியும்

இன்னா நாற்பதில் பின்வரும் நிலையில் கல்வி பற்றிய செய்தி இடம்பெறுகிறது. “கல்லாதானூருங் கலிமாப் பரிப்பின்னா’கல்வியைக் கல்லாதவன் கற்றார் அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாகும்.
இனியவை நாற்பதும் கல்வியும்

இனியவை நாற்பது இலக்கியத்திலும் “பிச்சை புக்காயினும் கற்றல் மிக் இனிதே’பிச்சை எடுத்து உண்டாயினும் கற்க வேண்டியவற்றைக் கற்றல் மிகவும் இனிதாகும். . கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே’ கற்றவர்க்கு முன்னர்த் தம் கல்வியை எடுத்துக் கூறுதல் மிகவும் இனிது. “கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே’ கற்க வேண்டிய நூல்களைக் கற்று அவற்றின் பொருளை உணர்ந்தவர் சொல்லும் காரியத்தின் பயன் இனிதாகும். “கற்றலிற் காழினியது இல்’ நன்மையுடைய நூல்களை கற்பதை போல் இனியது வேறொன்றும் இல்லை. என்று கல்வியின் சிறப்பு காட்டப்படுகிறது.

திரிகடுகத்தில் கல்வி

திரிகடுகம் நூலிலும் கல்வி பற்றிய செய்திகள் சுட்டப்பெற்றுள்ளன. கற்றவர் கடமை “கற்றறிந்தார் பூண்ட கடன்”உயிர்க்கு உறுதி பயக்கும் சொற்களைக் கீழ்க்குலம் அல்லாதவரிடத்து கூறுதலும் கற்றறிந்தவர் மேற்கொண்ட கடமை. “மறுமைக்கு அணிகலம் கல்வி’ மறுபிறப்பில் நன்மைபெற கற்கவேண்டும் என்கிறது இந்நூல்.
ஆசாரக்கோவையில் கல்வி
“கல்வியோடு ஒப்புரவாற்ற அறிதல்’ நலமுடையது என்கிறது ஆசாரகோவை. கல்வியை நோயின்மை என்றும் இந்நூல் காட்டுகிறது. எண்வகை ஒழுக்கங்களுள் கல்வியும் ஒன்று என்றும் இந்நூல் குறிக்கிறது.

முதுமொழிக் காஞ்சியில் கல்வி

“ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று’ நாம் அறியாத நாட்டின் ஒழுக்கங்களைக் குறை கூறக் கூடாது என்பது இந்நூலின் முடிவு.
இவ்வாறு கல்வி பற்றிய செய்திகள் இடம்பெறும் இலக்கியங்களாகச் சங்கம் மருவிய இலக்கியங்கள் அமைகின்றன.
மணிமேகலை – சிலப்பதிகாரம் ஆகியவற்றில் கல்வி பற்றி செய்திகள்
தென் தமிழ் நன்னாட்டுத் தீது தீர் மதுரை” என்று மதுரையில் தமிழ்க்கல்வி சிறந்திருந்ததைக் காட்டுகிறது சிலப்பதிகாரம். கோவலன் கனுக்கு மாதவி எழுதிய கடித்த்தின் மூலம் அவள் பெற்றிருந்த கல்விச் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு கல்வி பற்றிய பல செய்திகள் செம்மொழி இலக்கியப் பதிவுகளாக விளங்குகின்றன. இத்தலைப்பு பயிலரங்கத் தலைப்பு என்பதால் மாணவர்கள் செம்மொழி இலக்கியங்களில் கல்வி பற்றிய செய்திகளைத் தொகுக்கும் பழக்கத்திற்கு வரவேண்டும் என்பது கருதி இக்கட்டுரை பயிற்சியரங்கக் கட்டுரையாக வழங்கப்படுகிறது.


முனைவர் மு.பத்மா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலக்கியங்களில் கல்வி”

அதிகம் படித்தது