மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலக்கியச் சுவையும் எழில்மிகு அணியும்

தேமொழி

Dec 10, 2016

பன்மணிக் கோவை: நூல் மதிப்புரை

panmanik-kovai

தமிழிலக்கியம் காட்டும் புரட்சிப்பெண், அறவாழ்வு மேற்கொண்ட மணிமேகலையைப் போற்றும் விதத்தில் பெயர் சூட்டப்பட்டு,   அமெரிக்க வாழ் தமிழர்களால் மேகலா இராமமூர்த்தி என அறியப்படுபவர் “பன்மணிக் கோவை” நூலின் ஆசிரியரான மேகலா. முதுகலை தமிழிலக்கியமும், முதுகலை கணினிப் பயன்பாட்டியியலும் படித்து, தற்பொழுது ஃப்ளோரிடா பாலிடெக்னிக் (Florida Polytechnic University) பல்கலைக்கழகத்தில் கணினிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழார்வத்தால் “வல்லமை” இணைய இதழின் துணை ஆசிரியராகவும் தொண்டாற்றி வரும் மேகலா அவர்கள், மறைந்த தமிழறிஞர் இராம. இராமமூர்த்தி அவர்களின் அருமை மகளும் ஆவார். தந்தையின் வழியொட்டி தமிழிலக்கியச் சுவையைத் தானும் துய்த்து, மற்ற தமிழ் ஆர்வலர்களும் படித்து மகிழும் வகையில் வெளியிட்டுள்ள பன்மணிக் கோவை அவரது நோக்கத்தைச் சிறப்புடன் நிறைவு செய்துள்ளது.

சங்க இலக்கியச் சுவை, ஒப்பிலக்கிய ஆய்வு, வாழ்வியல் விளக்கம், அறநெறி வழிப்படுத்துதல், நன்னெறி அறிவுரைகள், மானுடவியல் கட்டுரைகள், உயிரியல் தகவல்கள் என எக்கோணத்தில் மணிமணியாகக் கட்டுரைகள் அமைந்தாலும், அக்கட்டுரைகள் அனைத்தையும் இணைத்து ஊடாடிச் செல்லும் பொன்னிழை தமிழிலக்கியப் பாடல்களில் இருந்து எடுத்தாண்ட மேற்கோள்களே. கூறப் போந்த எக்கருத்திற்கும் ஒரு இலக்கியப் பாடல் ஆசிரியரின் நினைவில் நிழலாடுவது ஒரு சிறப்பு என்றால் அதனைத் தக்கமுறையில் கட்டுரையில் அமைத்திருப்பதும் மற்றொரு சிறப்பு. மேகலாவின் இத்தகைய விவரிப்பினால் தமிழிலக்கியத்திற்கு புதியவர் ஒருவரும், கற்றுத் துறைபோகிய தமிழறிஞர் ஒருவரும் இந்நூலை ஒருசேரப் படித்து மகிழலாம் என்பது திண்ணம். பள்ளிப்படிப்புடன் தமிழிலக்கியம் படிக்க வாய்ப்பின்றி மேற்படிப்பிற்குப் பிற துறைகளைத் தேர்வு செய்து தடம் விலகிச் சென்றவர்களுக்கு இந்த நூல் தமிழிலக்கியக் கருவூலத்தை அறிமுகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என்பது மிகையன்று.

தமிழர்க்குக் காலத்தில் முந்தியதாகக் கிட்டியுள்ள, தமிழின் தலையாய இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கும் முற்பட்டதுமான ‘அகத்தியம்’ என்ற இலக்கண நூலை எழுதிய அகத்தியரில் துவங்கி, இக்கால புரட்சிக் கவியான பாவேந்தர் பாரதிதாசன் வரையில் தமிழ்ப் புலவர்கள் பலரும் தமிழுக்கு வழங்கிய இலக்கியச் செல்வங்களை பார்வைக்கு வைக்கிறார் ஆசிரியர். தமிழிலக்கியத்திற்கான ஓர் இலக்கிய அருங்காட்சியகத்தின் தேர்ந்த வழிகாட்டிப் போன்றதொரு பணியை செம்மையாகக் கையாண்டுள்ளார். நாம் முற்றிலும் அறிந்திராத சில இலக்கிய முத்துக்கள் பற்றி இந்நூலின் வழி தெரிந்து கொள்ள முடிவதும், முன்னர் அறிந்த பாடல்கள் குறித்து மேலும் பல சிறப்புச் செய்திகளைப் பெற முடிவதும் இந்நூல் படிப்பவர் பெரும் மனநிறைவாக இருக்கும்.

தமிழிலக்கியச்சுவை:

Siragu karpu3காதலையும் வீரத்தையும் விதந்தோதும் சங்க இலக்கியப் பாடல்கள் காட்டும் கவின்மிகு காட்சிகளுக்கோப் பஞ்சமில்லை. அவற்றில் சிலவற்றை எடுத்து தமிழிலக்கியச்சுவை விருந்து படைத்துள்ளார் நூலாசிரியர். ஒருநாளா இருநாளா? பலநாளாகத் தேடி வந்த தலைவனைக் காணவில்லையே என்று தலைவிக்காகவும், தலைவியின் மீது காதல் கொண்ட தலைவனுக்காகவும் மறுகுகிறது அன்புத் தோழி ஒருத்தியின் நட்பு நிறைந்ததும், தலைவியின் நன்மையையே நாடும் “நன்னர் நெஞ்சம்”;   பொருள்வளம் தேடிப் பிரிந்த தனது கணவன் தனது “நெஞ்சிற்கு அணியராக” இதயத்திலேயே குடிகொண்டுவிட்டதால் தலைவன் என்னைப் பிரிந்ததாக தான் உணரவில்லை என்று தோழிக்கு விளக்கும் தலைவியின் அன்பு நெஞ்சம்; தலைவன் ஓர் “நின்ற சொல்லர்” என்ற தலைவியின் எண்ணம் அவளது காதலுக்கு கை கொடுத்த நம்பிக்கையும் தன்னுடன் வடக்கிருக்கத் தனது நண்பர் பிசிராந்தையார் வருவார் என்ற கோப்பெருஞ்சோழன் தனது நட்பின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும்; தனது மகன்களை நாட்டைக் காக்க போருக்கு அனுப்பி அவர்களது வீரமரணத்தையும் பெருமையாகக் கருதிய “மூதின் மகளிரான” மறகுலப் பெண்களின் பெருமிதமும்; விளையாட்டிலும் வீரத்தை வெளிப்படுத்திய மறவர்குல மாண்பு எனவும் சங்கப்பாடல்களில்தான் எத்தனை சுவைமிக்க காட்சிகள். இவையாவற்றையும் கண்முன் கொணர்ந்து நிறுத்திவிடும் நூலாசிரியரின் கைவண்ணம் பாராட்டிற்குரியது.

இத்துடன் பாவேந்தரின் “குடும்பவிளக்கு” வழங்குகின்ற நகைச்சுவைக் காட்சி, கலிப்பகை என்ற வீரனை கணவனாகக் கைப்பிடிக்கும் தனது எண்ணம் கைகூடாது போனாலும், தனது தம்பி ‘மருள்நீக்கியார்” வாழ்வைச் சமணத்திலிருந்து சைவ “திருநாவுக்கரசராக” மாற்றி வழிநடத்தி சைவத் தொண்டாற்றிய திருவாமூர் திலகவதியார், காலத்தின் அருமையை, மனித வாழ்வின் நிலையாமையை விளக்கும் தமிழ்ப்பாடல்களை கோர்வையாக அமைத்துக் கொடுத்திருக்கும் சிறப்பு என மேலும் தமிழிலக்கியச்சுவை காட்டும் பகுதிகள் நீள்கிறது.

ஒரு சொல்லானது பிறிதோர் பொருளை சுட்டுவதோடு, தன்னையே, தன் (ஒலி) உருவத்தையே சுட்டுவதற்கும் உதவுகின்றது என்றும்; தனித்தனியாகப் பார்க்கும்பொழுது பன்மையில் தோன்றுபவை ஒன்றாய் இணைந்த பின்னர் ஒருமைத் தன்மை பெறும் பான்மை குறித்து அகத்தியத்தின் சூத்திரங்கள் காட்டும் பொருளுணர்த்துவதுடன், ஆய்வாளர்கள் இச்சூத்திரங்கள் குறித்து கொண்டுள்ள ஆய்வுக் கோணத்தையும் அறியத்தருகிறார் நூலாசிரியர்.

தமிழிலக்கியம் தரும் பண்புநெறி விளக்கங்கள்:

தமிழிலக்கியங்கள் வாழ்வதற்கான நெறிமுறைகளை மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளது என்பதை மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறார் இந்நூலாசிரியர். உண்மையான இறைத்தொண்டு என்பது என்ன? பாசாங்கற்ற இறைத்தொண்டர்தம் இயல்பு யாது? என்பதை விளக்க சேக்கிழாரைத் துணைக்கழைக்கிறார். திருத்தொண்டர் புராணம் வழங்கிய பாடல்கள் நாவுக்கரசப் பெருமானின் தூய்மையான தொண்டுள்ளத்தை விவரிப்பதைச் சுட்டிக்காட்டி தொண்டின் சிறப்பிற்கு விளக்கம் தருகிறார்.

Siragu karpu2

பிறருக்கு விவரிக்க இயலாத காதல் என்னும் உள்ளத்து உணர்வை, காதலையும் வீரத்தையும் கருப்பொருட்களாகக் கொண்ட சங்க இலக்கியப்பாடல்கள் வாயிலாக விளக்குகிறார். குறுந்தொகைப் பாடல் காதலை நோயென்று கருதுவதிலோ, வெறி என்று அஞ்சுவதிலோ பொருளில்லை, அது தக்க துணை ஒன்றைக் கண்ட பின்னரே வெளிப்படும் என்று உணர்த்துவதை எடுத்துரைக்கிறார். தலைவி தனது தமக்கையாகவேக் கருதிய புன்னை மரத்தடியில் தலைவனை சந்திப்பதைத் தவிர்க்கும் பண்பினை நவிலும் நற்றினை காட்டும் காதலர் பண்பினையும் எடுத்துரைத்து இக்காலத் தமிழிளைஞர் காதல் என்றால் என்ன என்ற அறியாமையில் சிந்தை தடுமாறி பொதுவிடங்களில் பண்பு மீறுவதைக் கண்டிக்கிறார்.

ஒப்பிலக்கிய ஆய்வுகள்:

தமிழிலக்கியப் பாடல்களின் கருத்தாக்கங்கள் அன்றும் இன்றும், தமிழ்ப் புலவர்களின் சிந்தனைகள் அன்றும் இன்றும் என்பது போன்ற ஒப்புமை நூலாசிரியருக்கு இயல்பாய் அமைந்திருப்பது அவரது பரந்துபட்ட வாசிப்பைக் காட்டுகிறது. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் கொண்ட ஆடவல்லானையும், அவனைச் சிறப்பிக்கும் ஆதிரைநாள் குறித்தும் அறிய விரும்பினால் பரிபாடல் பகரும் வானவியல் தகவலில் தொடங்கி, தேவாரம் பாடல்கள் வரை இலக்கியம் காட்டும் ஆதிரையான் பெருமையை தொகுத்தளிக்கிறார்.

அவ்வாறே, கலைமகள் குறித்து ஐம்பெருங்காப்பியங்கள் முதல், குமரகுருபரின் “சகலகலாவல்லி மாலை” வரையிலும் கலைவாணியை ஒப்பிடுகிறார். கானப்பேரெயில் நகரையாண்ட வேங்கைமார்பனையும், அவனை வெற்றிகொண்டு “கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி” ஆகிய பழந்தமிழ் வீர மன்னர்கள் குறித்த புறப்பாடலில் துவக்கி,   இந்நாளில் காளையார் கோயில் என அழைக்கப்படும் கானப்பேரெயில் நகரையாண்ட மருதுபாண்டிய சகோதரர்களின் வீரத்தையும் விளக்கமுற உரைக்கிறார்.

siragu-panmanik-kovai1தமிழிலக்கிய படைப்புகள் என்ற எல்லையைத் தாண்டியும் இவரது ஒப்பிலக்கியக் கோணம் விரிகிறது. “ஷெல்லிதாசன்” எனவும் பெயர் புனைந்து மகாகவி சுப்ரமணிய பாரதி, ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியிடம் கொண்டிருந்த பிடிப்பையும் ஒருமித்த சிந்தனையையும் கண்டு பிரமிக்கிறார். இறைநம்பிக்கை என்ற ஒருகருத்தில் மட்டுமே வேறுபட்டவர்களாக – ஷெல்லி நாத்திகராகவும் பாரதி ஆத்திகராகவும் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டாலும், இருவரும் ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிராக எரிமலையாகக் குமுறியதையும், சிறுமை கண்டு சினந்து பொங்கியதையும் இருவரது பாடல்வரிகளில் இருந்து ஒப்பிட்டுக் காட்டுகிறார். இக்கட்டுரையில் “பீட்டர்லூ படுகொலை” நிகழ்வினால் கொதித்துப்போன ஷெல்லி “இங்கிலாந்து மக்களுக்கான பாடல்” (Song to the men of England) என்று எழுதிய கவிதையை ஷெல்லியின் எழுத்துக்கள் தந்த உணர்வுகள் மாறாது அப்படியே தமிழில் பிரதிபலிக்கும் வண்ணம் மொழிபெயர்த்து, அப்பாடலின் கருத்தை பாரதியின் பல தேசபக்திப் பாடல் வரிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி கவிஞர்கள் இருவரும் கொண்டிருந்த கருத்தொற்றுமையை வியக்கிறார். இருவரது வாழ்க்கைப்பாதையும் சுதந்திர உணர்வால் தடைகள் பல கண்டு குறைவாழ்வாக விரைவில் முற்றுப்பெற்ற ஒற்றுமையையும் கண்டு இலக்கிய உலகம் கண்ட இழப்பிற்காகவும் வருந்துகிறார்.

சுந்தரத் தமிழால் நாடகத் தமிழினை உயர்த்திய சிந்தை கவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், லிட்டன் பிரபு எழுதிய “தி சீக்ரட் வே” (Lord Lytton’s The Secret Way) என்ற நூலினை ‘மனோன்மணீயம்’ என்ற நாடகமாகவும்; ஆலிவர் கோல்ட் ஸ்மித் எழுதிய “எட்வின் அண்ட் ஏஞ்சலினா: எ பாலட்” (Oliver Goldsmith’s “Edwin and Angelina: A ballad” in “The Vicar of Wakefield”) என்ற நூலினை நாடகத்தில் இடையே ‘சிவகாமி சரிதை’ என்னும் கதையாக அமைத்த பாங்கையும் அலசுகிறார் ஆசிரியர். ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பூண்ட தமிழன்னைக்கு கணைக்கால் சிறு விரலுக்கேற்ற அணியாக (மெட்டி) அணிவிக்க சுந்தரனார் அவர்கள் படைத்த   மனோன்மணீயம் என்ற இலக்கியம், தமிழ்த்தாய் வாழ்த்தை வழங்கிய இலக்கியம் என்பதும் அதன் ஒரு தனிப்பெரும் சிறப்பல்லவா என்று அதற்குத் தனியிடம் நல்கி விரித்து நோக்குகிறார் மேகலா.

இது போன்றே, காலத்தை வென்ற கவின்மிகு காவியங்களான ஹோமரின் கிரேக்கமொழி இலக்கியங்கள் இலியட்டும், ஓடிசியும் இந்தியாவின் மகாபாரத இராமாயண இதிகாசங்களுடனும் ஒப்பிடப்படுகிறது. ஹோமரின் நூல்களின் இரட்டைக்காப்பிய அமைப்பு முறை தமிழகத்தின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலையுடன் நூலாசிரியரால் ஒப்பிடப்படுவதுடன், ஹோமரின் இலக்கியங்கள் விரிவாகவும் விளக்கப்படுகின்றன.

படித்து இன்புறத்தக்கக் கவிதை நயமொத்த இலக்கிய நடையும், அதே சமயம் அந்த எழுத்து நடை மிக எளிமையாகவும் அமைந்திருப்பது மேகலாவின் எழுத்தாற்றலின் அளப்பரிய திறன். இதே திறமையை நூலின் கட்டுரை ஒன்றில், அவரது மொழிபெயர்ப்பு முயற்சியிலும் காட்டியிருக்கிறார். தினமணி போன்ற நாளிதழ்களிலும், வல்லமை, திண்ணை போன்ற இணைய இதழ்களில் வெளியான தனது கட்டுரைகளில் ஒரு சிலவற்றைத் தேர்வு செய்து, தொகுத்து இந்தப் பன்மணிக் கோவையை அழகுறக் கோர்த்திருக்கிறார். இவரது இளமுனைவர் பட்ட ஆய்வு நெறியாளரான முனைவர் ஔவை இரா. நிர்மலா (பேராசிரியர், புதுவை – காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்) அவர்கள் அளித்துள்ள அணிந்துரையில், “தமிழன்னைக்கு தம் பண்மணிக் கோவையை அணிவித்து அவளைப் பேரானந்தப் படுத்தியிருக்கிறார்” என்று பாராட்டி இருப்பது எவ்வளவு பொருத்தமான புகழாரம் என்பதை நூலின் இறுதிப்பக்கத்தை எட்டும்பொழுது மனதார உணரமுடிகிறது.

சுருக்கமாக: பன்மணிக் கோவை, இஃதோர் ஒளிரும் பண் மணிகளால் இழைக்கப்பட்ட கோவை நூல் மட்டுமன்று, ஒரு பல்சுவை இலக்கிய விருந்தும் ஆகும்.

நூல்: பன்மணிக் கோவை

ஆசிரியர்: மேகலா இராமமூர்த்தி

வகை: கட்டுரைத்தொகுப்பு

வெளியீடு: விழிச்சுடர் பதிப்பகம், காரைக்கால்

பதிப்பு: முதற் பதிப்பு, டிசெம்பர் 2015

மின்னஞ்சல்: மேகலா இராமமூர்த்தி <megala.ramamourty@gmail.com>


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலக்கியச் சுவையும் எழில்மிகு அணியும்”

அதிகம் படித்தது