மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கை தெதிகமகோட்டாவேரா – யானை விளக்கு

தேமொழி

Jan 30, 2021

மின்விளக்குகள் காலத்தில், வாழும் நமக்கு ஒளி வழங்க எண்ணெய் விளக்குகள் என்பவை தேவையற்றுப் போனாலும், எண்ணெய் விளக்குகளையும் மெழுகுவர்த்திகளையும் மரபுசார் விழாக்கள் மற்றும் வழிபாடுகள் காரணமாகநாம்விடாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையும் இன்று வழக்கில் உள்ளது.எண்ணெய் விளக்குகள் இல்லாத நாளில்லை வாழ்வுமில்லை என்று சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் நம் முன்னோர்கள் வாழ்ந்திருந்தனர்.வகைவகையான எண்ணெய்களை எரியூட்டவும், பற்பல உருவங்களில் வடிவமைக்கப்பட்ட விளக்குகளையும் பயன்படுத்தி வந்தனர்.

பெரும்பாலும் எண்ணெய் விளக்குகள் என்பவை எண்ணெய் நிரப்பி வைக்கும் ஒரு கிண்ணமும் அதில் ஒரு திரியும் போடப்பட்ட எளிய மண் அகல் விளக்குகள் அமைப்பில் துவங்கி, சரம் சரமாகத்தொங்கும் பல அடுக்குகள் கொண்ட உலோக விளக்குகள், சற்றே உயர்த்தி அமைக்கக் கீழே தாங்கிகள் கொண்ட குத்து விளக்குகள், காற்றில் அணையாமல்இருக்கும் வகையில் ஒரு சில தொழில்நுட்ப முன்னேற்றங்களும் இவற்றில் உண்டு.இருப்பினும், அடிப்படை அமைப்பு என்னவோ விளக்கு என்றால் அதற்கு எண்ணெய் கொள்ளும் ஒரு கிண்ணமும் திரியும் என்பதாக மட்டுமே இருந்தது.இவற்றிலிருந்து மாறுபட்டு தொழில் நுட்பத்தை பயன் கொண்டு, மனித உதவியின்றி தானே எண்ணெய்நிரப்பிக் கொண்டு நீண்ட நேரம் எரியக் கூடிய விளக்குகளும் இருந்தன.அவற்றில் ஒருவகை இலங்கையில் கோட்டாவேரா தொல்லியல்ஆய்வில் சென்ற நூற்றாண்டில் (1951இல்) கிடைத்த ‘எத்பஹானா (தெதிகம) கோட்டாவேரா’ என்ற சரவிளக்கு ஆகும். பஹானா (Pahana) என்றால் சிங்கள மொழியில் விளக்கு என்று பொருள்

siragu Eth Pahana Lampபன்னிரண்டாம் நூற்றாண்டில் இலங்கையின் தென்பகுதியை ஆட்சி செய்த அரசர் மனாபாரனா (Manabharana), அரசி இரத்னவல்லி ஆகியோரின் மகனாகஇளவரசன் ‘தெதிகம’ பிறந்தார்.இவர் பராக்ரமபாகு (Parakramabahu) என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டு (கி.பி 1153 – 1186) ஆட்சி செய்த புகழ் பெற்ற சிங்களப் பேரரசர் ஆவார். இப்பகுதியில் ‘தெதிகம கோட்டாவேரா’ (Dedigama Kotawehera அல்லது ‘சுத்திகர சைத்யா’ – Suthighara Chaitya) என்று அறியப்படும் கோபுரமற்ற தட்டையான ஸ்தூபியை இவர் கட்டினார். கோட்டாவேரா (7.2086, 80.2628) ஒரு தொல்லியல் சிறப்புப் பெற்ற பகுதி.இப்பகுதி பங்ககம / ஜடகம / தெதிகம / பிலகம (known as Punkhagama/Jatagama/Dathigama/Pilagama) என்ற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.

தெதிகம கோட்டாவேரா ஸ்தூபிப் பகுதியில் கிடைத்த, 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரு வெண்கல யானை விளக்குகள் அவற்றின்தொழில்நுட்பத்திற்காகவும் கலையழகிற்காகவும் புகழ் பெற்ற சரவிளக்குகள்.கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் [Ancient Technology

Museum and Library, New Town, Polonnaruwa; (+94 71) 528 8490] இந்த விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

siragu lamp1

எத்பஹானா (தெதிகம) கோட்டாவேரா வெண்கல யானை விளக்கு; ஒரு ஆழியின் நடுவில் உள்ள மேடையில் ஒரு கம்பீரமான யானை நிற்கும் அமைப்பைக் கொண்டது.அந்த ஆழிதான் எண்ணெய் உள்ள கிண்ணம்.இரு பாகர்கள் கையில் அங்குசத்துடன் இந்த யானை மேல் அமர்ந்திருக்க ஒரு மகரதோரண நுழைவாயில் வழியேயானை நுழைந்து வருவது போல உருவாக்கப்பட்டுள்ளது.தோரணவாயிலின் மேற்புறம் உள்ள வளையத்தில் வேலைப்பாடமைந்த உலோகச் சங்கிலி விளக்கைத் தொங்க விடுவதற்காக இணைக்கப்பட்டுள்ளது.இச்சங்கிலி ஆடல் பாடல் நிகழ்த்தும் கலைஞர்கள் உருவங்களையும், இறுதியில் நாகப் பாம்பின் தலையின் உருவமும் கொக்கியாகக் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

siragu lamp2

siragu lamp3

siragu lamp4

siragu lamp5

யானை சிலையின் வயிறு உள்ளீடற்ற குடுவை போல எண்ணெய் நிரப்பும் எண்ணெய்த்தேக்கமாகப் பயன்படுகிறது.யானையின் முன்காலில் எண்ணெய் ஊற்றும் துளை அமைக்கப்பட்டுள்ளது. விளக்கைத் தலைகீழாகக் கவிழ்த்து, முன்காலின் துளை வழியே எண்ணெய் ஊற்றி நிரப்பி, அத்துளையை அடைத்தவாறே விளக்கை நிமிர்த்தி, யானையைச் சுற்றி உள்ள குழியிலும் எண்ணெய் நிரப்பிவிட்டு, அடைப்பையும் திறந்துவிட்டு, திரியிட்டு விட்டால் விளக்கு ஏற்றுவதற்குத் தயாராகிவிடும். விளக்கு எரிய எரிய, எண்ணெய் அளவு குறையக் குறைய, யானையின் முன்காலின் கீழ் உள்ள வெற்றிடம் வழியாகக் காற்று மேலே சென்று, நிரப்பியுள்ள எண்ணெய் மேல் காற்றழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் யானையின் வயிற்றுப் பகுதியில் இனப்பெருக்க உறுப்பு போல அமைந்துள்ள ஒரு துளையின் வழியே எண்ணெய் சொட்டுச்சொட்டாகக் கீழுள்ள எண்ணெய்க் குழியில் விழுந்து எண்ணெய்யின் மட்டத்தை அதிகரிக்கும். இவ்வாறு உயரும் எண்ணெய் மட்டம் முன்காலில் உள்ள துளையை அடைத்துவிடும்.இதனால் தொடர்ந்து எண்ணெய் சொட்டாமல் நிறுத்தப்படும். எண்ணெய்யும் நிரம்பி வழியாமல் இருக்கும்.மீண்டும் எண்ணெய் அளவு குறைந்தவுடன் காற்று உள்ளே செல்லல், காற்றழுத்தம் கொடுத்தல், எண்ணெய் சொட்டல், எண்ணெய் மட்டம் உயர்தல், காற்றின் துளை அடைபடல் எனச் சுழற்சியாக நடந்து விளக்கு தானே வேண்டும்பொழுது தேவைக்கேற்ப எண்ணெய்யை நிரப்பிக் கொண்டு நீண்ட நேரம் மனித கவனிப்பு இன்றி எரிய முடியும். இவ்வாறாக விளக்கு எரிவது ‘நீர்ம இயக்கவியல்’ (Hydraulics), ‘பாய்ம நிலையியல்’ (Hydrostatics) அடிப்படையில் செயல்படுகிறது.

References:

Ancient Micro-Scale Hydraulic Elements in Sri Lanka: Functionality and Interpretations of Dedigama Eth Pahana; Jayawardana, C. and Peiris, K., Published on 27 Jul 2009. Engineer: Journal of the Institution of Engineers, Sri Lanka, 42(3), pp.51–56. [DOI: http://doi.org/10.4038/engineer.v42i3.7052]

https://engineer.sljol.info/articles/10.4038/engineer.v42i3.7052/galley/5547/download/

Eth Pahana, Kotavehera-Histroy With An Innovative Teacher

https://youtu.be/ApGbuPnr2Ao?t=555

Eth pahana-The tusker lamp found in suthiyagara stupa

https://youtu.be/3j2BMF1rCBA


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கை தெதிகமகோட்டாவேரா – யானை விளக்கு”

அதிகம் படித்தது