மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஈசன் என்ற சொல்லின் பழமையும் மகிமையும்! (பகுதி – 28)

முனைவர். ந. அரவிந்த்

Oct 16, 2021

அருகாமையில் உள்ள இரு பிரதேசங்களுக்குள் மொழி மற்றும் கலாச்சார ஒற்றுமைகள் இருப்பது சகஜம். உதாரணமாக, அரேபிய மொழியில் வணக்கம் சொல்ல ‘சலாம்’ என்ற சொல்லினை பயன்படுத்துகிறார்கள். எபிரேய மொழியில் இச்சொல் ‘ஷாலோம்’ (Shalom) என்றழைக்கப்படுகிறது. ஆனால், தொலை தூரத்தில் இருக்கும் இரு நாடுகளில் ஒரே அர்த்தம் உள்ள வார்த்தைகள் பயன்படுத்துவது அதிசயமே. இதற்கு காரணம், ஏதாவது ஒரு மொழி பழமையான மொழியாக இருக்க வேண்டும்.

ஈஸ்வரன் அல்லது ஈசுவரன் என்ற சொல்லிற்கு அனைத்து உலகங்களுக்கும், உயிரினங்களுக்கும் தலைவன் அல்லது அனைத்தையும் படைத்து ஆள்பவன் என்று பொருள். ஈசன் என்ற சொல்லிற்கு அரசன், தலைவன், ஆட்சி செய்பவன் என்று பொருள். ஒரு நாட்டினை ஒரு மாமன்னன் உருவாக்கி ஆட்சி செய்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனுடைய மகன் ஆட்சிக்கு வரும்போது மக்களை காப்பதில் மட்டுமே கவனமாக இருக்கவேண்டும். இதுபோல்தான் ஈசுவரனும் ஈசனும். இறைவனாகிய ஈசுவரன் இந்த பிரபஞ்சத்தை படைத்து ஆட்சி செய்கிறான். இறை அவதாரமாகிய ஈசன் மக்கள் பாவங்களுக்காக தன்னையே பரிகாரியாக்கிக்கொண்டு உலகை காக்கிறான்.

ஈசனுக்கு ‘இயேசு’ என்றும் பெயர் உள்ளது. இயேசு என்னும் சொல்லிற்கு ‘விடுதலை செய்பவர்’, ‘காக்கிறவர்’ மற்றும் ‘உதவி செய்பவர்’ என்று பொருள். இயேசு பேசிய மொழி ‘அராமைக்’ மொழி’யாகும். இன்று வரை ‘சிரியா’ நாட்டினில் உள்ள ‘மாலூலா’ கிராம மக்கள் இம்மொழியை வாழையடி வாழையாக பேசிவருகின்றனர். இயேசு என்று இன்றைய காலகட்டத்தில் தமிழில் அழைக்கப்படும் சொல்லானது, அராமைக் மொழியில் ‘ஈஷோவா’ (Eashoa) என்று அழைக்கப்படுகிறது. இதற்கான வரலாற்று ஆதாரம் கீழே உள்ள குறிப்பினில் (Reference) தரப்பட்டுள்ளது. ஈஷோவா என்னும் இச்சொல் அரேபிய மொழியில் ‘ஈஸா நபி’ (Issa) என்றும், எபிரேய மொழியில் ‘யேஷுவா’ (Yeshua) என்றும் அழைக்கப்படுகிறது. இச்சொல்லானது கிரேக்க மொழிக்கு செல்லும்போது ‘இயேசுஸ்’ (Iesous) என்று மொழி பெயர்க்கப்பட்டது.

இப்பெயர் ஆங்கில மொழியில் ‘ஜீசஸ்’ (Jesus) என்று வழங்கப்படுகிறது. இது அராமைக் – எபிரேய – கிரேக்க சொற்களின் மொழிபெயர்ப்பாகும். 16 ஆம் நூற்றாண்டில் தமிழர் பகுதிகளுக்கு முதலில் கிறித்துவ மதம் பரப்பப்பட்டபோது ‘இயேசுஸ்’ என்ற பெயர்தான் போர்ச்சுக்கீசியர்களால் பயன்படுத்தப்பட்டது. பின்னர் ‘ஸ்’ என்ற வடமொழி எழுத்து தவிர்க்கப்பட்டு ‘இயேசு’ என்று பயன்படுத்தப்பட்டது. இயேசு என்ற சொல்லின் வயது சுமார் 500 ஆண்டுகளாகும்.

வரலாற்று ஆதாரங்களின்படி, இயேசுவின் சீடரான தோமா கிபி 52 ம் ஆண்டில் கேரளாவிற்கும், கிபி 72 ம் ஆண்டில் தமிழ்நாட்டினில் உள்ள மயிலாப்பூருக்கும் வந்தார் என்பது வரலாறு. தோமா கேரளாவிற்கு வந்த காலகட்டத்தில் அங்கு தமிழ்மொழியே பேசப்பட்டது. அராமைக் மற்றும் அரேபிய மொழிகளில் இறைமகனை குறிப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட ‘ஈஷோவா’ மற்றும் ‘ஈஸா’ என்ற சொல் தமிழிலும் ‘ஈசன்’ என்ற பெயரில் இறைமகனை குறிப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்டது நிச்சயம் தோமாவிற்கு ஆச்சரியத்தினை உண்டு பண்ணியிருக்கும். அது அவருக்கு எளிதாகவும் இருந்திருக்கும்.

siragu eesan endra sol1

தமிழில் ‘ஈசன்’ என்ற சொல்லுக்கு அரசன், ஆள்பவன், இறைவன், குரு, தலைவன், ஈர நெஞ்சமும், ஈகை குணமும் கொண்டவன் என்று பொருள்படும். திருவிவிலியத்தின்படி, இறைவன் தீர்க்கதரிசியின் மூலம் மக்களுக்கு வாக்களிக்கும்போது ‘நான் உங்களுக்கு ஒரு ராஜாவை கொடுப்பேன்’ என்றுதான் கூறியுள்ளார். ஈசன் என்ற நாமத்தை தமிழர்களாகிய நாம் இறை அவதாரத்தை அழைக்க பயன்படுத்துகிறோம். ஈசா, இஸ்ஸா, ஈஸா நபி என்பவை அரேபிய மொழியில் இறை அவதாரத்தின் பெயர்களாகும்.

திருமூலர், ‘ஒன்றெனக் கண்டோம் ஈசன் ஒருவனை’ என்று திருமந்திரம் 1775 யில் ஒரு பாடல் பாடியுள்ளார். திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். திருமூலர் வாழ்ந்த காலம் துல்லியமாக கணக்கிட முடியவில்லையென்றாலும் கி.மு 3000 வருடங்களுக்கு முந்தயது என்று கூறப்படுகிறது. ஈசன் என்ற சொல் கிமு 3000 காலத்தில் இருந்தே தமிழில் இருப்பதால், ‘ஈசன்’ என்ற சொல்லில் இருந்துதான் ‘ஈஸா’ மற்றும் ‘ஈஷோவா’ போன்ற சொற்கள் வந்திருக்க வாய்ப்புள்ளது என்பது தெரிகிறது.

இயேசுவும் அவருடைய சீடர்களும் இயேசுவை ‘அராமைக்’ மொழியில் ‘ஈஷோவா’ என்றே அழைத்தனர். இயேசுவின் சீடர்களில் ஒருவரான ‘தோமா’ என்ற ‘தோமையார்’ ஓமான் தேசம் வழியாக தென் இந்தியா வந்தடைந்தார். இவர் மதத்தினை பரப்ப வரவில்லை. இவருடைய காலத்தில் கிறித்துவ மதம் என்று ஒன்று தோன்றவே இல்லை. இறைமகன் பிறந்து மக்களின் பாவங்களுக்காக உயிரை விட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று இந்தியர்களுக்கு இறைவார்த்தையை சொல்வதற்காகவே இவர் இந்தியா வந்தார்.

தோமா தமிழ்நாடு வரும்போது அவர் இறைமகனை குறிப்பதற்காக ‘ஈசன்’ என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார். கிபி 16 ம் நூற்றாண்டிற்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் இறைமகனை குறிப்பிட ‘ஈசன்’ என்ற சொல் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இதற்கு உதாரணமாக, பதினெண் சித்தர்கள் எழுதிய நூல்களை கூறலாம்..

பதினெண் சித்தர்கள் தமிழகத்தில் காவிரிக்கரை மற்றும் அமராவதி கரையில் வாழ்ந்தார்கள். பதினெண் சித்தர்கள் ஈசனைப்பற்றி சில தகவல்களை எழுதி வைத்துள்ளனர்.

பத்தாவது பதினெண் சித்தர் பீடாபதி, சித்தர் அமராவதி ஆற்றங்கரையில் கிமு 100 முதல் கிபி 150 வரை வாழ்ந்தார் என வரலாறு கூறுகிறது. அவருடைய நூல்களின்படி, ‘தேவ குமாரன் ஈசன் அறியாமை நிறைந்த மக்களால் அழிக்கப்பட்டபோதும் மீண்டும் உடலோடு உயிர்த்தெழுந்து தன் தெய்வ வடிவினை உலகோர்க்குக் காட்டினார்’ என எழுதியுள்ளார்.

பதினொன்றாவது பதினெண்சித்தர் (கி.பி.785-1040), ‘தேவகுமாரனான ஈசன் சிலுவையில் மாண்டு, மீண்டு உயிர்த்தெழுந்தார்’ என்று கூறியுள்ளார். ஏசுவை ஈசா, ஈசன், தேவகுமாரன், சித்தர் குருவழி வாரிசு, ஞானசித்தர், நவநாத சித்தர், சீவன்முத்தர் என்று பல பெயர்ச் சொற்களால் பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் குறிப்பிட்டுள்ளார்.

இவர், ‘உலகம் முழுவதும் அருளாட்சி அமைக்க, அற்புதங்களை, வியப்புக்களை, இயற்கையால் முடியாத செயல்களை, அதிசயங்களை செய்த ஈசா மாண்டார், மீண்டார், அருளாளர்களை ஆண்டார்’ என்று ஈசனைப்பற்றி விவரித்துள்ளார். இறை அவதாரத்தைப் பற்றி, ‘ஈசன் தேவ குமாரர்தான்; தேவ குமாரராகத் தோன்றிய செருசலத்து ஈசா; அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தது உண்மைதான்’ போன்ற பல வாசகங்கள் இக்கருவூராரால் வாக்குகளிலும் நூல்களிலும் கூறப்பட்டுள்ளன.

மகாகவி பாரதியார் கிபி 1882 – 1921 காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும் இவர் இறைமகனை குறிப்பிட ஈசன் மற்றும் இயேசு (யேசு) ஆகிய இரு சொற்களையும் பயன்படுத்தியுள்ளார். பாரதியார் ஈசனைப்பற்றி இரு பாடல்களில் பாடியுள்ளார். பாரதியார் உயர்ந்த சிந்தனை உள்ள ஒரு ஞானி. தன்னுடைய அறுபத்து ஆறாவது பாடலில், பாரதியார் இவ்வாறு பாடியுள்ளார்.

நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்

இதன் விளக்கம் யாதெனில், நோயினால் புத்தரும், சிலுவை மரத்தில் யேசுவும், அம்பினால் கண்ணனும், ஆற்று வெள்ளத்தில் இராமனும் மாண்டார்கள் என்பதாகும்.

அவர், தன்னுடைய மற்றொரு பாடலான ‘சுதேச கீதங்கள், பாகம் 2’ யில், இவ்வாறு பாடியுள்ளார்.

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரிய மக்தலேனா
நேரிலே இந்த செய்தியைக் கண்டாள்;
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தம் காப்பார்,
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.

இப்பாடலின் விளக்கம், ஈசன் சிலுவையில் மாண்ட பின்னர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தான்; நேச மா மரியாள் இச்செய்தியை அறிந்தாள் என்பதாகும். மனிதர்கள் தம்மிடம் உள்ள அகந்தைச் செயல்களை அகற்றி அழித்தொழித்தால் ஈசன் நம் மனதிற்குள் நுழைந்து, மனிதர்கள் வாழ்வில் துன்பமின்றிப் பேரின்பம் அடையலாம் என்றும் இப்பாடல் மூலம் வழிகாட்டியுள்ளார்.

அன்பு காண் மரியாள் மக்தலேனா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்,
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மக்தலேனா
ஆஹா!சாலப் பெருங்களி யிஃதே.

தன்னிடம் உள்ள தீமையைக் கொன்றதால், மரியாள் ஈசனைக் காணும் பாக்கியம் பெற்றாள். ஈசனை நல்லுயிர் என்றும் மரியா மக்தலேனாவை அன்புக்கு நிகரானவள் என்றும் கவிஞர் வாழ்த்துகின்றார்.

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்,
வண்மைப் பேருயிர்- யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்.
பெண்மை காண் மரியாள் மக்தலேனா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும்.

உண்மை என்ற சிலுவையில் உணர்வினை ஆணி என்னுந் தவங் கொண்டு அடித்தால் மனிதர்கள் அனைவரும் பயன் பெறும் விதத்தில் வாழ்க்கை அமையும். அதனை ஈகைக் குணப் பேருயிராக விளங்கும் யேசு கிறிஸ்து வழங்குவார். இதனை முதன்முதலில் மரியா மக்தலேநா என்ற பெண்ணுக்கு வழங்கிப் பெண்மையைப் போற்றியுள்ளார். இதைப் போன்று தம்முடைய பல்வேறு செயல்களாலும் உலக உயிர்கள் யாவற்றிற்கும் பேரின்பத்தைப் பயக்கும் நுண்மைப் பொருளாக யேசு கிறிஸ்து உள்ளார் என்று பாரதியார் குறிப்பிடுகின்றார். இந்தப் பாடலில் ஈசன் சிலுவையில் அறையுண்டது; மூன்று நாளில் உயிர்த்தெழுந்தது எல்லாவற்றிற்கும் தத்துவ விளக்கம் தரப்பட்டுள்ளது.

இயேசு என்ற சொல்லின் வயது சுமார் 500 ஆண்டுகள். ஈஷோவா மற்றும் ஈஸா சொற்களின் வயது சுமார் 2000 ஆண்டுகள். ஈசன் என்ற சொல்லின் வயது சுமார் 5000 ஆண்டுகள். உலகின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் என்பதில் ஐயமில்லை.

கிபி 16 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் மதத்தினை பரப்புவதற்காகவும், இந்தியாவை ஆட்சி செய்வதற்காகவும் மற்றும் வியாபாரம் செய்வதற்காகவும் இந்தியா வந்தனர். இவர்கள் இந்தியர்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டனர். தோமா இறைமகனைப்பற்றி கூறும்போதும் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். தோமாவும் மதத்தினைப்பற்றி பேசவில்லை. இறைமகன் ஈசன் மக்களின் பாவங்களுக்காக உயிரை விட்டார் என்பதனை நம்பிய மற்றும் நம்பாத மக்களிடையே ஒரு சிறு கலகம்கூட மூண்டதாக வரலாறு இல்லை. ஆனால், வெள்ளையர்கள் இறைமகனை பற்றி கூறுவதைவிட மதத்தினை வளர்க்கவே ஆர்வம் காட்டினார். இவர்களுக்கு வியாபாரமே முக்கியமாக இருந்தது. இதற்காகவே ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய நிறுவனத்தினை கல்கத்தாவில் நிறுவினர். இறைவன் என்ற சொல்லிற்கு நிகராக ‘கர்த்தர்’ என்ற சமஸ்கிருத சொல்லையும் ஈசன் என்ற சொல்லிற்கு பதிலாக ‘இயேசு’ என்ற சொல்லையும் வேதாகமம் எழுதும்போது பயன்படுத்தினர். இந்த இரு பெயர் சொற்களும் இணையான சொற்கள்தான். ஆனால், மக்களிடையே பிதா கர்த்தரும், இறைமகன் இயேசுவும் வேறு நாட்டு தெய்வங்கள் என்ற எண்ணத்தையும், இயேசுவை நம்பிய மற்றும் நம்பாத மக்களிடையே பிரிவினையையும் ஏற்படுத்தின. இது இன்றுவரை தொடர்கிறது என்பது வேதனைக்குரியது.

ஈசனாகிய இயேசு ‘கருணைக் கடவுள்’. பொறுமையின் சிகரம். அவர், ஒரே ஒருமுறை கோபம் கொண்டார். இறைவனின் கோயிலினில் வியாபாரம் செய்தவர்களை சாட்டையால் அடித்து விரட்டினார். இறைவனின் கோயிலை கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களை சாடினார். வியாபாரம் செய்யும் இடம் கோயில் இல்லை என்பது இறைமகனின் வார்த்தை. வியாபார நோக்கில் இந்தியாவிற்குள் நுழைந்த வெள்ளையர்களிடம் இறைவார்த்தைகளை எப்படி எதிர்பார்க்க முடியும்.

Reference:
We pronounce His name, Eashoa. How to pronounce the name Jesus in Aramaic, which is His own language https://www.youtube.com/watch?v=lLOE8yry9Cc

தொடரும்…


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஈசன் என்ற சொல்லின் பழமையும் மகிமையும்! (பகுதி – 28)”

அதிகம் படித்தது