மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஈன்ற பொழுதின் – சிறுகதை

அருண் காந்தி

Jul 25, 2015

eendra pozhudhin2“ஏய் கமல். இங்க வந்து பாட்டிகிட்ட பேசுடா.”

போனில் அம்மா என் பதின்வயது மகனுடன் பேச ஆவலுடன் காத்திருந்தார். இரண்டு வார்த்தைகள் அவனை என் பெற்றோருடன் பேச வைப்பதற்குள் நான் படும் பாடு!

ஆயிற்று, அமெரிக்கா வந்து ஆண்டுகள் பதினைந்து. இரண்டாண்டிற்கு ஒரு முறை தாயகம் சென்று வந்த போதிலும் கமலுக்கு என் குடும்பத்தாருடன் ஏற்படாத அந்நியோன்னியம். சதா சிங்கப்பூரிலிருக்கும் அண்ணாவின் குழந்தைகளுடன் செய்த ஒப்பீடு அவனை மேலும் தள்ளி வைத்தது.

ஒரு நாள், என் நெருங்கிய தோழி தன் குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். “வந்தவங்களை வாங்கன்னு கேளு.” என்று பலமுறை கூப்பிட்டபின் பேருக்கு ஒரு ஹலோ. அவள் கேட்ட கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தை பதில்கள். அவர்களிருந்த நேரம் முழுவதும் தன் அறையை விட்டு வரவில்லை.

வளர்ப்பில் ஏதேனும் தவறு செய்து விட்டேனோ? கலாசாரத்தையும், பண்பாட்டையும் எடுத்துச் சொல்லி வளர்த்திருக்க வேண்டுமோ? கமல் நல்ல பையன்தான். படிப்பில் படு சுட்டி. அமெரிக்க கலாசாரத்தின் தாக்கம்தான் அவனை இப்படி அந்நியப் படுத்துகிறதோ என்று என்னுள் பல கேள்விகள். அமெரிக்காவில் வாழ்வது அவன் முடிவல்லவே. நாம்தான் அனுசரித்துப் போகவேண்டும் என்று சமாதானப் படுத்திக்கொண்டேன்.

அன்று, இந்திய மளிகைக் கடைக்குக் காய்கறி வாங்கச் சென்றிருந்தேன். அருகிலிருந்த என் சமவயதுப் பெண் பேச்சுக் கொடுத்தாள். பேச்சு கடைக்கு வெளியிலும் தொடர்ந்தது. தாங்கள் வேறு ஒரு ஊரிலிருந்து சமீபத்தில்தான் இந்த இடத்துக்கு குடி பெயர்ந்ததாகவும், தனக்கும் என் மகன் வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் கூறினாள். அவனும், கமலும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன். தன் மகனுக்கு ஊர் மாற்றம் சிறிதும் பிடிக்கவில்லையென்றும், புதுப் பள்ளியில் நண்பர்கள் யாருமில்லாததால் மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் சொன்னாள். நான், அவளைக் கவலைப் படவேண்டாமென்றும், கமலை அவள் மகனுடன் பேசச் சொல்லுவதாகவும் கூறிவிட்டு வந்தேன். இரவு உணவின் போது, இது பற்றி கமலிடம் அவசியம் பேச வேண்டுமென்று எண்ணியிருந்தேன்.

பள்ளியிலிருந்து திரும்பிய கமல், “அம்மா. இன்று மதிய உணவு இடைவேளையின் பொது ஒரு இந்தியப் பையனைப் பார்த்தேன். தனியே அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தான். அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. நான் அவனை அழைத்து வந்து என் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து எங்களோடு அமரச் செய்தேன். அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. வேறு ஊரிலிருந்து வந்திருப்பதாகக் கூறினான். நல்ல பையனாக இருந்தான். தினமும் எங்களுடன் வந்து அமரச் சொல்லியிருக்கிறேன்.” என்றான்.

நான் மனதில் நினைத்ததை செயல்படுத்திய என் மகனைப் பெருமிதத்துடன் பார்த்தேன். கலாசாரத்தைக் கடந்த மனித நேயம் என் கண்களைக் குளமாக்கியது.


அருண் காந்தி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஈன்ற பொழுதின் – சிறுகதை”

அதிகம் படித்தது