மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஈழம் மலருமா…?(கவிதை)

மகேந்திரன் பெரியசாமி

Jul 11, 2015

eezham malarum1

அகண்ட பரவெளியில் – கடல்

வளைத்த சிறுபரப்பில்

விழிநீர்த் துளி வடிவில்

இலங்கை எனும் மாத்தீவு- அது

வடிக்கும் கண்ணீரால்

கடல்மட்டமும் மேல்எழும்பும்!

 

அஃறிணை உயிர்கள்கூட

அகமகிழ்ந்து இருக்கையிலே

அடிப்படை வாழ்க்கைக்கே

எத்தனை கோடி அல்லல்கள்?

பிறந்த மண்ணில் அகதிகளாய்

உறவிழந்து பொருள் இழந்து

ஊர்மறந்து ஊர்வலமாய்

உருக்கலைந்து அலைய வைத்தீர்!

 

ஒருலட்சம் புத்தகங்கள்

அறிவுப் பெட்டகங்கள்

அருந்தமிழ் வரலாற்று

ஆவணத்தின் மூளைஎல்லாம்

யாழ்ப்பாண நூலகத்தில்

தீத் தின்ன ஊட்டிவிட்டீர்-

தீமைக்குத் தூபமிட்டீர்!

 

மரண தண்டனையில்

மரிக்கும்முன் சிந்தித்து

மாவீரன் ஒருவன் தன்

வேண்டுதலை முன்வைத்தான்-

 

‘தான் மரித்துப் போனாலும்

தன் இரு கண்களேனும்

விடுதலை பூமியில்

விழிக்கட்டும்- செய்வீரா?’ என்று!

 

கண்கள் தானம் செய்த

குட்டிமணிக் கண்களைக்

கொலைவாளில் உருவிப் போட்டு

தரையில் கால்செருப்பில்

நசுக்கி நகைத்திட்டீர்!

 

உயிரின் உன்னதம் உலகறியும்

உயிரினும் உன்னதம் எது உரைப்பீர்?

‘உரிமை!’ என்றான் உணர்வோங்க

உயிரையும் பொருட்டாய் உணராத

உயர்பெரும் வீரன் திலீபன் அவன்

உயிரை அகிம்சையில் உதிர்த்திட்டவன்!

 

eelam

 

உயிரினும் உயர்ந்தது ‘உரிமை’யென

உணவைத் துறந்தார்; உயிர்துறந்தார்!

திலீபன்போல் எத்தனை உயிர் பறித்தீர்-

தெருவெங்கும் கொலைவெறி உடன் அலைந்தீர்!

 

அம்மண்ணில் பிறந்ததற்காய்

அம்மணமாய் அலைக்கழித்து

எம்மினப் பெண்களை

ஏராளமாய்ச் சிதைத்துவிட்டீர்! – பெண்

கொழுந்தைப் பொசுக்கி விட்டீர்!

 

கருவைச் சுமந்த

தாய்மையின் மடிகள்

அணுகுண்டு சுமந்தனவே-பின்

சிதறுண்டு மாய்ந்தனவே!

 

பிறக்கப் போகும் பிஞ்சுகளும்

கருமுதலாய் வலிதாங்கி

பிறந்ததற்குப் பின்னரும்

வீர விழுப் புண்தாங்கி

போரினில் மாண்டனரே- பெரும்

தலைமுறையே வீழ்ந்ததுவே!

 

வரலாற்றின் வாசனையே

எதுகாறும் வீசாமல்

மனிதஉடல்  தீபங்களை

மண்எங்கும் எரியவைத்தீர்! - அதன்

வெப்பத்தில் குளிர் காய்ந்தீர்!

 

இடுகாட்டின் ஓலங்கள்தான்

வாழ்க்கை என்றானபின்பு

பெருந்திரளாய் இனத்தோரை

பூமிதோறும் சிதற விட்டீர்!-பயத்தினில்

ஓட ஓட விரட்டி விட்டீர்!

 

தன் கால்வயிற்றைக் கழுவுதற்குப்

படகில் வந்த மீனவரை

பலூன்கள் என ஏளனமாய்ச்

சுட்டு சுட்டு ஏப்பம் விட்டீர்!

மீன் பிடிக்க வந்தவரை

மீன்களுக்கே உணவளித்தீர்!

 

eezham malarum3

மிஞ்சியதில் எஞ்சியோரைப்

பாழ்சிறையில் அடைத்து வைத்தீர்-

நடுக்கடலில் படகுகளைப்

‘பாடை’யாக்கித் திருப்பி விட்டீர்!

கடற்கரையில் அவர் உறவைத்

தவியாய்த் தவிக்க விட்டீர்!

 

மேற்புவி மண்ணுக்காய்

மாய்ந்திடும் மாக்களே-

உட்புவியைப் பாதியாய்

உடைத்திட முயல்வீரோ?

 

கடலுக்கும் கோடுபோட்டு

கருணையின்றிக் கொல்கிறீரே-

வானுக்கு வரப்பிட்டு

சூரியகோள் உடைப்பீரோ?

வெண்ணிலவைச் சிதைப்பீரோ?

 

ஒன்று மட்டும் நிச்சயம்-

உலகமே உங்களை -இன்று

உற்று உற்றுப் பார்க்கிறது-

வெறிஉச்சம் தலைக்கேற

அரக்கன் என நிற்காதீர்-

அகலப்பெரு வாய் திறந்து

அரற்றி அரற்றி மிரட்டாதீர்!

 

அகிம்சை அறப்போர் விடுத்தோம்

ஆணவத்தில் தூள் செய்தீர்-

புறநானுற்றுப் போரெடுத்து

போனவரை(யும்) வதம் செய்தீர்-

 

பாடுபட்டு எவ்வளவோ

படிப்படியாய்த் தாங்கி நின்றோம்-

இதயம் மட்டும் இங்கே விட்டு

எங்கெங்கோ திசையளந்தோம்!

 

நாடு நாடாய்த் தஞ்சம் சென்றோம்!

நடுநிலையில் ஒன்றிணைந்தோம்!

 

பகைவனுக்கும் அருள்கின்ற

பண்பட்ட தேசமிது-

பட்டதெல்லாம் போதும்- வா!

தவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்று

சரிசெய்வாய் இப்பொழுதே!

 

மனம்திருந்தி மதிதிரும்பி

மன்னிப்பைக் கோரி விடு-

மன்னித்து ஏற்றருள்வோம்!

இனியேனும் பகை களைவாய்

இனி சமைப்போம் சமநீதி!

 

முறத்தால் வீரப் புலியை விரட்டிய

மறத்தில் உயர்ந்ததும் நம்மினம் – நாட்டை

வெள்ளையர் சூழ்ச்சியில் பீரங்கிப் போரினை

அகிம்சையால் வென்றதும் நம்மினம்!

 

படர்கின்ற மானுடப்

பேரன்பு வெள்ளத்தில்

கடுகெனும் மனத்தினோர்

கரைந்தொன்றாய் சேரட்டும்-

உலக நாடுகள் ஒன்றென ஒருங்கி

உயிர்கள் யாவும் உணர்வால் ஒன்றட்டும்!

 

வியர்வை இறைத்து – செந்நீர் உதிரம் உதிர்த்தமண்ணில்

புதியபயிர் முளைக்க வேண்டும்-

அதில் அமைதிப்பூ மலர வேண்டும்!

 

உறக்கம் தவிர்த்து -

கண்ணில் நெருப்பைப் பரப்பி

நெடுந்தவத்தின் வரம்

நெருங்கும்நேரம்!

 

புவிமண் புரட்டி – தடைப்

பாறை பிளந்து மண்ணில்

முளைக்கும் வித்துக்களின் ஈரம்!

 

இலைகளின் வீழ்ச்சியும்

வேர்களின் தேடலும்

மரத்தின் வளர்ச்சியை கணிக்கும்-

 

eezham malarum2

எங்கள் தலைகளின் வீழ்ச்சியில்

வீர அறப் போரினில்

ஈழம் பூவென மலரும்- ஆம்!

ஈழம் பூவென மலரும்!!


மகேந்திரன் பெரியசாமி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஈழம் மலருமா…?(கவிதை)”

அதிகம் படித்தது