மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உடன்பிறப்பு(சிறுகதை)

வெங்கடேஷ்.மு

Jan 2, 2016

udanpirappu1டிசம்பர் மாதக் கடுங்குளிர் -7 டிகிரியைத் தொட்டிருந்தது. காலை 9 மணியான போதும் போர்வைக்குள் இருந்து வெளிவர மனமில்லை. நண்பன் யோஹான் வீட்டில் மதிய உணவிற்கு வருவதாக வாக்கு கொடுத்தது ஞாபகத்துக்கு வர, வேறு வழியில்லாமல் எழுந்து கிளம்பினேன்.

வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தால் லூவன் நகரமும் வெள்ளைப் போர்வையைப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து வெள்ளை வெளேரெனக் காட்சியளித்தது. ஆள் அரவமற்ற தெருக்களின் வழியே, எதிரே தென்பட்ட இந்தியரைப் பார்த்து “நமஸ்தே ஜி” சொல்லிவிட்டு, குளிரில் நடுங்கியவாறு லூவன் ரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். சனிக்கிழமை என்பதால் பெரும்பாலான கடைகள் பூட்டி இருந்தன.

ஹசல்ட். நான் வசிக்கும் லூவன் நகரிலிருந்து ஒரு மணி நேர ரயில் பயணம். சரியாக 11.12 க்கு ஹசல்ட் செல்லும் ரயில் வந்து நின்றது. அதனுள் ஏறி அமர்ந்தபின்தான் சற்று இதமாக உணர்ந்தேன். படத்தில் மட்டுமே பார்த்திருந்த பனி சூழ்ந்த இடங்களை நேரில் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவில் ரயிலில் செல்வது வியப்பாகவும், ஆனந்தமாகவும் இருந்தது. மதியம் 12.15 க்கு ஹசல்ட் ரயில் நிலையத்தை வந்தடைந்தேன்.
என்னை வரவேற்க நண்பன் யோஹான் காத்துக் கொண்டிருந்தான். பின் இருவரும் அவனுடைய காரில் ஏறி, அவன் வீட்டை நோக்கிச் சென்றோம். வீடு வரவும், அவன் மனைவி ஷானா வாசலில் வந்து என்னை வரவேற்கும் விதமாக கன்னத்தில் மூன்று முத்தங்கள் கொடுத்தாள். பெல்ஜியம் நாட்டில் விருந்தினரை வரவேற்க கன்னத்தில் மூன்று முத்தங்கள் கொடுப்பது வழக்கம்.

நான் வாங்கி வந்த ஒயின் பாட்டிலையும், பூங்கொத்தையும் அவளிடம் கொடுத்துவிட்டு, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து “சாப்பிடலாமா” என்றாள். நான் சரி என்றதும், தான் தயார் செய்த பாஸ்தா மற்றும் சிக்கன் சாஸை ஒரு தட்டில் வைத்து நீட்டினாள். மூவரும் சாப்பாட்டில் மூழ்கினோம்.

“நாளைக்கு என்ன பிளான்” என்றாள் ஷானா.
“பெருசா ஒன்னுமில்ல சும்மா வீட்ல படுத்து தூங்கவேண்டியதான். நீங்க?” என்றேன்.
நாளைக்கு எங்க “காட் சைல்ட்” க்குப் பிறந்தநாள். அதனால நாங்க ஆண்ட்வெர்ப் போறோம்.
” காட் சைல்ட் ” னா?

எங்க நாட்ல ஒரு குழந்தை பிறந்ததும், அதுக்கு ஒரு ” காட் பாதர் ” ஐயும், ” காட் மதர் ” ஐயும் கண்டு பிடிப்போம். அவர்கள் பெரும்பாலும் அக்குழந்தையின் தாய் வழி அல்லது தந்தை வழி சொந்தமாகவே இருப்பார்கள். சில நேரங்களில் நண்பர்களும் இருக்க வாய்ப்புண்டு. பின்னாளில் அக்குழந்தையின் பெற்றோருக்கு ஏதாவது நடந்து விட்டால், அக்குழந்தையை அந்த ” காட் பாதர் ” உம், ” காட் மதர் ” உம் பார்த்துக் கொள்வார்கள். நாங்க ஒரு குழந்தைக்கு ” காட் பாதர் ” ஆகவோ ” காட் மதர் ” ஆகவோ இருந்தால் அவ்வப்போது அக்குழந்தையை நேரில் சென்று பார்த்து வருவோம். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் பரிசுகள் வாங்கித் தருவோம். இது அனைத்தையும் சொல்லி முடித்தவள் “உங்கள் நாட்டில் இப்படி எதுவும் இல்லையா?” என்றாள்.

சற்று யோசித்த நான்…..

எங்கள் நாட்டில் ஒருபோதும் நாங்கள் “காட் பாதர்” “காட் மதர்” ஐத் தேடி அலைவதில்லை. ஏனென்றால் எங்களுக்குத் “தாய் மாமன்” என்ற உறவு பிறக்கும்போதே இருக்கிறது. அது இயற்கையாகவே “காட் பாதர்” “காட் மதர்” என்று அமைந்து விடும் என்றேன்.

“தாய் மாமன் என்றால்?”

udanpirappu2எங்கள் நாட்டில் அண்ணன் தங்கை/அக்கா தம்பிப் பாசம் மிகவும் நெருக்கமானது. அது அந்தப் பெண் திருமணமாகிச் சென்ற பின்னும் தொடரும். எப்போது அந்தப் பெண், குழந்தை பெருகிறாளோ அப்போது அந்தக் குழந்தைக்கு அவள் சகோதரன் தாய் மாமன் ஆகிவிடுகிறான். மேலும் தாய் மாமன் என்ற பந்தம் உங்கள் 10 “காட் பாதர்”, 10 “காட் மதர்” க்குச் சமம். தாய் மாமன் தான் அக்குழந்தைக்கு எல்லாம். குழந்தை பிறந்ததில் தொடங்கி பெயர் வைத்தல், மொட்டை அடித்து காது குத்துதல், சடங்கு, திருமணம், பின் சீர் வரிசை செய்தல், என்று அவள் வாழ்நாள் முழுவதும் தாய் மாமன் உறவு தொடரும். அவரைக் கேட்காமல் அக்குழந்தைக்கு எந்த ஒரு நல்ல காரியங்களையும் செய்ய முடியாது. இன்னும் சொல்வதென்றால் அக்குழந்தையின் மீது அதன் தகப்பனைவிட தாய் மாமனுக்குத்தான் உரிமை அதிகம். ஒரு ஆண் தன் சகோதரியை எப்படியெல்லாம் நேசிக்கிறானோ அதுபோலவே தான் தன் சகோதரியின் குழந்தைகளையும் நேசிப்பான்.

இது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஷானா, ச்ச எங்கள் வீட்டில் நான் ஒரே பிள்ளை என்றாள் வருத்ததுடன்.

என் மகளுக்குக் கண்டிப்பாக ஒரு தம்பியைப் பெற்றுக் கொடுப்பேன் என்றாள் சிரிப்புடன். யோஹானும் சரி என்று தலையசைத்தான்.

மாலை 6 மணி, ஹசல்டிலிருந்து லூவன் செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தேன்.

மதியம் நாங்கள் பேசியது மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நம் நாட்டில் “ஒரு குடும்பம் ஒரு வாரிசு” என்றால் நம் பிள்ளைகளுக்கு அக்கா, தம்பி, தங்கை, அண்ணன் என்ற சொந்தம் ஒன்று இல்லாமலே போய் விடுமே. அது அதோடு நின்று விடுமா என்ன? பின் அடுத்த தலை முறையை யோசித்துப் பார்த்தால் தாய் மாமன், அத்தை என்ற உறவே இல்லாமல் நாமும் இவர்களைப்போல் “காட் பாதர்” “காட் மதர்” ஐத் தேடி அலைய வேண்டிவரும்.

இவ்வாறு யோசித்துக் கொண்டே முகநூலைப் பார்த்தேன்.
“சீனாவில் இரண்டு குழந்தை பெற்றுக் கொள்வதற்கான தடை நீக்கம்” என்பது பகிரப்பட்டிருந்தது.


வெங்கடேஷ்.மு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உடன்பிறப்பு(சிறுகதை)”

அதிகம் படித்தது