மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உதிர்ந்த மலர் (சிறுகதை)

ஸ்ரீதரன்

Jan 27, 2018

siragu udhirndha malar

நான்  கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை மணி ஆறு ஆகிவிட்டது என்பதைப் பார்த்ததும் அரக்கப் பரக்க எழுந்தேன். அடடே, நேரம் ஆகிவிட்டதே என்று அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். நான் தி.நகரிலிருந்து  திருவான்மியூர் போக வேண்டும். பேருந்து நிலையத்தில் ராதிகாவைப் பார்த்தேன். அவளை  தினந்தோறும் அங்கு பார்க்கிறேன். அவள் தோழி சந்தியாவுடன் மைலாப்பூர் பேருந்தைப் பிடிக்க நின்றிருப்பாள். அவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். ”ஹலோ” என்றால் அவளும் ”ஹலோ” என்பாள். ராதிகா கொடிபோல் வசீகரமாய் இருப்பாள். சந்தியாவை விட ராதிகா அழகானவள். என்னைப் பார்த்தவுடன் புன்னகை பூப்பாள்.மிகவும் மென்மையானவள்,சுவையாகப் பேசுவாள். புத்திசாலியும்கூட  எதையும் சட்டென்று புரிந்து கொள்வாள். குறும்பு அவள் கூட பிறந்த குணம். ஒரு முறை வெளுத்து கட்டறே! என்று வாட்ஸ்அப்பில் மெசெஜ் போட்டிருந்தேன். ”நான் துணியெல்லாம் நல்லா வெளுக்கிறதில்லேன்னு வீட்டிலே சொல்றாங்க“! என்று குறுநகை பதில் வந்தது.

அன்று ஏனோ தெரியவில்லை. சந்தியாவை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ராதிகா தென்படவில்லை. அவள் இல்லாமல் ஒரு வாரம் போனது. பொறுக்க முடியாமல் “எங்கே உங்க தோழியைக் காணோம். விடுமுறையில் வெளியூருக்குப் போயிருக்காங்களா? நான் சந்தியாவிடம் கேட்டு விட்டேன்.

“அவள் எங்க நிறுவன வேலையை விட்டுவிட்டு வேறு வேலையில் சேர்ந்து விட்டாள்”

”எங்கே?”

”தெரியாது. அவ மொபைல் நம்பர் தரேன். அவளையே கேட்டுக்கோங்க”.

அவள் அலைபேசி எண்ணை நான் குறித்துக் கொண்டேன்.

அடுத்த நாள் ராதிகாவை அலைபேசியில் அழைத்தேன். ஓரிடத்தில்  வேலைக்குச் சேர்ந்துவிட்டதாகச் சொன்னாள்.

எங்கள் நட்பு வாட்ஸ் அப்பில் வளர்ந்தது. காலையில் காலை வணக்கம் அனுப்புவாள். நான் ஏதாவது மெசேஜ் அனுப்புவேன். அவள் பதிலுக்கு ”நைஸ்” என்று பதில் அனுப்புவாள். டங்கலீஷ் அதாவது தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்வது. மிகவும் வல்லமையுடன் டங்கலீஷில் பதில் வரும். பதில் எப்பவும் சுருக்கமாக இருக்கும். சாதரணமாய் நான் அனுப்பும் மெசேஜ்க்கு அவள் பதிலே அனுப்பமாட்டாள். இப்படி இருக்கும்போது ஒரு நாள், அவள் பாடும்  காணொளி  அனுப்பியிருந்தாள். ”பாட்டு அருமை. உன் கண்கள் பேசுதடி” என்று மெசேஜ் அனுப்பினேன். தேங்ஸ் என்னும் பதில் வரவில்லை.

”பதிலுக்காக காத்திருக்கேன்” என்று மெசேஜ் அனுப்பினேன்

பதில் இல்லை.

வாட்ஸ் அப்பில் அவளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. என் நம்பரை பிளாக் செய்து விட்டிருக்கிறாள்.

நான் என்ன தவறு செய்தேன் என்று மனம் சஞ்சலப்பட்டது. அவள் இப்போது அலுவலகத்தில் இருப்பாள், போன் செய்து கேட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்தேன். அவள் அலுவலகத்திலிருக்கும்போது போன் செய்வதை தவிர்த்து விடுவேன் அவள் வேலைக்கு இடைஞ்சலாய் இருக்குமென்று. இப்போது வேறுவழியில்லை. அவள் அலைபேசிக்குப் பலமுறை  போன் செய்தேன். அவள் எடுக்கவே இல்லை. குறுஞ்செய்தி அனுப்பினேன். எதற்கும் பதில்லை. இப்படியே ஒரு மாதம் முயற்சி செய்தேன் பலன் எதுவுமில்லாமல். ராதிகாவை  பார்க்க முடியவில்லை. அலைபேசியில் பேச முடியவில்லை. வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்ப முடியவில்லை.

அவளிடம் நட்புடன் தான் பழகினேன். வரம்பு மீறவில்லை. எனக்கு அவள் மீது காதலும் கிடையாது. எனக்காக என் அத்தை பெண் திருமணம் செய்ய காத்திருக்கிறாள். நான் தான் அடுத்த வருடம் திருமணம் என்று தள்ளிப் போட்டிருக்கிறேன். ஆனால் அது ராதிகாவுக்குத் தெரியாது.

”ராதிகா வெளிப்படையாய் பேசி நட்புக்கு ”பை” என்று சொல்லி விட்டிருந்தால் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன். அவள் எதுவும் பேசாமல் தீடிரென்று தொடர்பை துண்டித்ததால் என் மனம் மிகவும் காயப்பட்டது. அதைவிட கத்தியால் குத்தியிருக்கலாம். வலியைப் பொறுத்துக் கொண்டிருப்பேன். அவள் என் நட்பை தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். கேள்வி தெரிந்தால்தானே விடை தர முடியும்.”

”சீ, போனால் போகட்டும், அவளால் எனக்குக் காரியம் எதுவுமில்லை என்று ஒதுக்கிவிட என்னால் முடியவில்லை. என்னை நிராகரித்ததிற்குக் காரணம் அறிய துடித்தேன். ஒரு வேளை நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அல்லது அவள் மனத்தைக் காயப்படுத்தியிருந்தால், ஒரே ஒரு முறை அவளைப் பார்த்து அவளிடம் மன்னிப்பு கேட்க விழைந்தேன். அவள் எப்போதும் என் சிந்தையிலே இருந்ததால் என்னால் அலுவலக வேலைகளைக்கூட சரியாகச் செய்ய முடியவில்லை. என்னுடைய மேனேஜர் எனக்கு இரண்டு முறை மெமோ கொடுத்தார். இருசக்கர வண்டி ஓட்டும்போதும் அவள் நினைவுதான். ஒரு நாள் பெரிய விபத்து நடந்திருக்கும். தெய்வாதீனமாய் பிழைத்தேன்.”

நண்பன் சீனு, ”குமார், ஏன் எதையோ இழந்ததைப் போல்  இருக்கிறாய். உன் முகத்தில் வாட்டம் தெரிகிறதே. ஏதாவது பிரச்னையா? என்னிடம் சொல். என்னால் முடிந்ததை செய்கிறேன்” என்றான். நாங்கள் இருவரும் தெருவில் பேசிக் கொண்டே நடந்து சென்றோம்.

”ராதிகாவைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கேன். அவள் மெளனத்தை என்னால் தாங்க முடியவில்லை. என்னால்  அலுவலகத்தில் வேலையே செய்ய முடிவதில்லை. என் சிந்தையில் அவள் இருபத்திநாலு மணி நேரமும் இருக்கிறாள். உடனே காதல், கத்திரிக்காய் என்று நினைத்து விடாதே. வெறும் தோழமைதான். நட்பை அவள் கத்தியால் குத்தி விட்டாள்” என்றேன்.

”அவ கிடக்கிறா. விட்டு தள்ளு. ஒண்ணுமில்லாத விசயத்துக்கு நீ ஏன் கவலைப் படவேண்டும்.”

”என்னாலே முடியல. நன்றாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு தீடிரென்று இப்படி நட்பை கத்திரித்து விட்டாளே பாவி. ஒரு செடியிலிருந்து உதிர்ந்த மலர் போல் அவள் வாட்ஸ் அப் வட்டதிலிருநது நட்பு சங்கலியிருந்து உதிர்ந்து விட்டேன்”.

”குமார் நான் ஒண்ணு சொன்னால் கேட்பியா? உன் மேல் உள்ள அன்பினால் நண்பன் என்னும் உரிமையோடு சொல்லுகிறேன். தவறாக நினைக்கக்  கூடாது.”

”சொல். நீ என் நல்லதுக்குதானே சொல்வாய்.”

”எனக்குத் தெரிந்த மனநல மருத்துவர் ஒருவர் இருக்கிறார். அவருடைய கிளினிக் கோடம்பாக்கத்தில் இருக்கிறது. நாளை அவரிடம் போகலாம். உனக்குத் தேவை மனமாற்றம். அதற்குத் தேவையான மருந்தை அவர் தருவார்” என்றான்.

”எனக்கு எதுவுமில்லை. நான் எதுக்கு மனநல மருத்துவரிடம் போகவேண்டும். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.” என்றேன்.

அப்போது எங்கள் எதிரே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வாயில் ஒரு விசிலை வைத்து பலமாக ஊதினார். இரண்டு தடவை ஊதிவிட்டு எங்களுக்கு எதிரே கையை நீட்டினார். நாங்கள் அதைச் சட்டை செய்யவில்லை. ”தப்பா”  என்றார்.

அவரைக் கடந்து சென்றோம். ”பார் இந்த மாதிரி நீ ஆகக்கூடாது. அதனால்தான் மனநல மருத்துவரிடம் போக வேண்டுமென்கிறேன்” என்றான்

சீனு என்னுடைய ஆருயிர் நண்பன் அவன் செய்தால் எதுவும் சரியாகத்தான் இருக்கும் என்பதால் ”சரி” என்றேன்.

டாக்டர் புத்ரனின் கிளினிக்கை நாங்கள் சரியாக பிற்பகல் நான்கு மணிக்குள் போய் சேர்ந்து விட்டோம். டாக்டர் என்னிடம் ஒரு மணி நேரம் பேசினார். நான் சொல்வதையெல்லாம் பொறுமையாய் கேட்டார். அவர் என்னிடம் சொன்னார்.

“குமார், அவளை மறந்து விடுங்கள். அவள் எப்படியாவது போகட்டும்.  நல்ல புத்தகங்களைப் படியுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். வாழ்க்கையில் ஏதாவது குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை அடைய முயற்சி செய்யுங்கள். இதுதான் என் பிரிஸ்கிருப்ஷன்“ என்றார்.

” சரி டாக்டர். உங்க பீஸ்……….. ?

ரிஷப்னிஸ்ட் கிட்டே கேளுங்கள் என்றார். நான் வெளியே வந்ததும் சீனுவிடம் ரிஷப்னிஸ்டிடம் டாக்டர் பீஸ் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லிவிட்டு  ரிஷப்னிஸ்ட் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி என் பார்வை சென்றது. அவளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். ராதிகாவை அங்குப் பார்ப்பேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. பழம் நழுவி பாலில் விழுந்தது போலிருந்தது எனக்கு.

”ஹா, நீயா?உன்னை இங்கு எதிர்பார்க்கவே இல்லை. ராதிகா, இப்படி பண்ணிட்டயே.. ஏன் அப்படி செய்தாய்? நான் செய்த தவறு என்ன? ஏன் என்னை கத்திரித்துவிட்டாய்?” என்று படபடவென்று கேட்டேன்.

அவள் சில நிமிடங்கள் மெளனமாக இருந்துவிட்டுப் பிறகு சொன்னாள்.

”என்னை வர்ணனைச் செய்வது எனக்குப் பிடிக்காது. ஒரு தோழிக்கிட்டே நீ அழகாயிருக்கிறாய் என்று சொல்வதோடு நிறுத்திக்கணும். அதுக்கு மேலே போகக்கூடாது. இது என் ஒப்பினியன்“ என்றாள்.

“நான் தவறாக எதுவும் சொல்லலியே.”

”வார்த்தை முதலில் கண்ணில் ஆரம்பிக்கும். பின் மற்ற அவயங்களைத் தொடும். எனக்குப் பிடிக்கல”.

”என்னை வெறுக்கிறாயா ?”

”நான் சொல்ல மாட்டேன்” என்றாள்

”என்னிடம் சொற்குற்றம் அல்லது பொருட்குற்றமோ இருக்கலாம். மனக்குற்றமில்லை. சத்தியமாய் சொல்கிறேன், உன்னை மிகவும்  உயர்வாய் நினைத்தேன், நினைக்கிறேன், நினைப்பேன். நான் தவறு செய்ததாகவே வைத்துக்கொண்டாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீ என்னை ஒதுக்கினாலும், வெறுத்தாலும், அவமானப்படுத்தினாலும் நான் உன்னை வெறுக்கமாட்டேன். என்னைப் பொறுத்தவரை தூய நட்பு மடிவதில்லை. ஆனால் அதில் விரிசல் உண்டாகலாம். என்றாவது ஒரு நாள் நான் தவறு செய்யவில்லையென்று நீ உணறுவாய். அப்போது  திரும்ப வருவாய் நம் நட்பு துளிர்க்கும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவரை நான் பொறுமையாய் காத்திருப்பேன்“ என்றேன்.

”அது என் விருப்பம். என்னை யாரும் வற்புறுத்தக்கூடாது” ராதிகா வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவளுடம் கூட இருந்த ஒருபெண், டாக்டர் பீஸ் இரண்டாயிரம் என்றதும் சீனு பணத்தைக் கொடுத்தான். நாங்கள் நகர்ந்தோம்.

”நண்பர்களுக்குள்ளே குறைகளை மன்னித்து பிளஸ், மைனஸ் பார்க்காமல் இருந்தால் நட்பு வலுப்படும். இல்லாவிட்டால் விரிசல்தான் விழும்” என்று சீனு சொன்னதை ஆமோதித்தேன்.

நாங்கள் வெளியே வந்துகொண்டிருக்கும்போது ராதிகாவின் அருகில் இருந்த பெண்மணி அவளிடம், ”அவர் அவ்வளவு கெஞ்சுகிறாரே. நீங்கள் ஏன் அவரை மன்னிக்கக் கூடாது” என்று  கேட்டதுக்கு ”அடி போடி, அது  ஒரு  பைத்தியம்” ராதிகா சொன்னது காதில் விழ அப்படியே  ஸ்தம்பித்தேன்.


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உதிர்ந்த மலர் (சிறுகதை)”

அதிகம் படித்தது