மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்

சுசிலா

Mar 25, 2017

Siragu-students-sucide5

உயர் கல்வி மத்திய நிறுவனங்களில் தற்போது அதிகரித்திருக்கும் மாண்வர்களின் மரணங்கள் மிகவும் கண்டனத்துக்குரியவை. அங்கு நிலவும் சாதீய பாகுபாடுகள் நிச்சயம் களையப்பட வேண்டிய ஒன்று. ரோகித் வெமுலாவின் மரணத்தைப் பற்றிய நீதியே இன்னும் கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில், மேலும் மேலும் பல மரணங்கள். திருப்பூர் சரவணன், சேலம் முத்துகிருஷ்ணன் மற்றும் JNU நஜிப் அஹமது காணாமல் போயிருப்பது, கன்னஹையா மீது பல பொய் வழக்குகள் என பல அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.!

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் முடியும் தருவாயில் இருக்கும் நாம் இம்மாதிரி படுகொலைகள் நடப்பது, அதுவும் அரசு கல்வி நிறுவனங்களிலேயே நடப்பது மிகவும் அநீதி, நாட்டிற்கு பெருத்த அவமானம். வெட்கப்பட வேண்டிய ஒன்று. இவைகளை படுகொலைகள் என்றுதான் குறிப்பிடவேண்டும். பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட சாதியும், மதமும் ஒரு மனிதனின் உணர்வுகளைத் தூண்டி தற்கொலை செய்ய வைக்கிறது என்றால் அவைகள் நிச்சயம் பல்கலைக் கொலைகளாகத்தான் இருக்க முடியும்.!

ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த இம்மாணவர்கள் இந்நிலை எட்டுவதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள். உயர் கல்வி நிறுவனங்களில் போட்டியிட தங்களைத் தயார் செய்வதற்கு அவர்கள் எடுத்த முயற்சியும், அதற்கென உழைத்த உழைப்பும் வீணாக்கப்பட்டிருக்கிறதே. எத்தனை கொடுமை. எல்லாவற்றிற்கும் மேலாக மனித உயிர்கள் பலியிடப்படுவதை இனிமேலும் சகித்துக் கொண்டிருக்க போகிறோமா நாம்.!

சாதி எங்கே இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே, மறுபுறம் இந்த மாதிரி சாதீய பாகுபாடுகள் இருப்பதை இனி அனுமதிக்கக் கூடாது, மக்கள் பொங்கி எழுந்து இதற்கென மாபெரும் புரட்சியை உருவாக்க வேண்டும்.

மதத்தினாலும், சாதியினாலும் பிரிக்கப்பட்டிருக்கும் நாம் ஓன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் இனிமேல் இம்மாதிரி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்குக் கூட அச்சப்படும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிறுவனங்களின் ஆசிரியர்கள் நியமனங்கள் கூட சாதி அடிப்படையிலேயே தான் நடக்கின்றன. அதனால் கற்றுக்கொடுப்பதிலும், செய்முறை தேர்வுகளிலும் கூட மதிப்பெண்கள் இந்த ஏற்பாட்டின் மூலம் தான் நடக்கிறது என்பது முத்துக்கிருஷ்ணனின் வரிகள் நமக்கு உணர்த்துகிறது. தெளிவுப்படுத்துகிறது.

Siragu students sucide1

“இனி இந்நாட்டில், தங்களுக்குப் பிடித்தவற்றை சாப்பிடுபவர்களும், பிடித்ததை செய்பவர்களும், பிடித்ததை பேசுபவர்களும், பிடித்ததை எழுதுபவர்களும், எதிர்த்து கேட்கும் திறமைமிக்கவர்களும் அறிவுள்ளவர்களும் இனி கொல்லப்படுவார்கள்.!”

என்று எழுதி இருக்கும் அந்த மாணவன், எந்த அளவிற்குப் போராடி இருந்தால், இந்த உண்மைகளை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருப்பார். இந்த உணர்ச்சிமிக்க வரிகளை படிக்கும் போதே நம் உள்ளம் பதறுகிறதே. வீரத்திலும், அறிவிலும் சிறந்த விளங்கிய நம்மினம் இந்த சாதீய, மத சாக்கடைக்குள் வீழ்ந்து கிடக்கிறதே என சொல்லொண்ணாத் துயரில் நம்மை ஆழ்த்தி விடுகிறது.!

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், தற்போதைய மதவாத பா.ச.க மோடி ஆட்சி இம்மாதிரி கல்வி நிலையங்களில் உள்ள மத, சாதீய பாகுபாடுகளைக் கண்டுகொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஊக்குவிக்கிறது என்றே சொல்லலாம். பின்னாலிருந்து ஆர்.எஸ்.எஸ் செயல்படுவதால், இது போன்ற கல்வி நிலையங்களில், ஏபிவிபி (ABVP) என்ற மாணவர் அமைப்பு தங்கள் ஆதிக்க மனப்பான்மையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. மாணவர்களை தவறான வழிகாட்டுதலின் பெயரில் வளரும் தலைமுறையினர் இந்த தீய சக்திகளிடம் மாட்டி சீரழிந்து வருகின்றனர்.!

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் கருத்துரிமை, பேச்சுரிமை, கல்வி கற்றலில் பாகுபாடு, மதிப்பெண் என அனைத்திலும் உரிமையின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முற்படுகின்றனர். இல்லையென்றால் படுகொலை செய்யப்பட்டு தற்கொலையாக மாற்றப்படுகின்றனர். கடந்த ஆண்டு சென்னையிலுள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் ரத்து செய்யப்பட்டு நீக்கப்பட்டது. அச்சமயத்தில், மாணவர்கள் சிறப்பாகப் போராடி தங்கள் உரிமையினை மீட்டனர். அது மட்டுமல்லாமல், டெல்லி, மும்பை, கொல்கொத்தா என பல நகரங்களிலும் புதிதாக அம்பேத்கர் -பெரியார் வாசகர் வட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.!

இந்துத்துவத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களும், தங்கள் உரிமைகளுக்குப் போராடுபவர்களும் இந்த வாசகர் வட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அங்குள்ள ஆதிக்கச் சக்திகள் இவர்களை பழிவாங்க எண்ணுகிறது என்பது தான் உண்மை. தீண்டாமை ஒழிந்து விட்டது என்று நம்பிக்கொண்டிருக்கும் நமக்கு, இது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தான் கொடுக்கிறது. இச்சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை ஒதுக்கி வைப்பது, அவர்கள் சாப்பிடும் இடத்தில் கூட மற்றவர்கள் வராமல் தடுப்பது, அவர்களை இழிவாகப் பேசுவது என அனைத்துத் தீண்டாமைக் கொடுமைகளும் அங்கே அரங்கேற்றிக் கொண்டுதானிருக்கின்றன.!

Siragu-students-sucide4

ஒரு மதச்சார்பற்ற நாட்டில், மதம், சாதி சார்ந்து கொடுமைகள் இன்னும் நடக்கின்றன என்றால், இந்நாடு வளர்ச்சி கண்டு என்ன பயன்?

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பும் நாம், தான் பிறப்பின் அடிப்படையில் சக மனிதனை இழிவாகப் பேசி துன்புறுத்தி கொல்கிறோம் என்றால், இதைவிட கொடுமையான, இழிவான செயல் உலகத்தில் வேறு ஏதாவது இருக்க முடியுமா.!

இந்நிலை நீடித்தால், மதமாற்றம் ஒன்றே வழி என்று மக்கள் முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். என்னை இழிவானவன் என்று சொல்லும் மதம் எனக்குத் தேவையில்லை என்ற எண்ணம், தற்போது மக்களின் மனதில் வேரூன்ற ஆரம்பித்திருக்கிறது.!

இவற்றையெல்லாம் முறியடித்து, சமத்துவம் மலர வேண்டுமென்றால், அந்நிறுவனங்களில் உள்ள நிர்வாகம் முதலில் திருந்த வேண்டும். பேராசிரியர்கள் நியமனம் சாதி இட ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்பட வேண்டும். உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றங்கள் இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். நீதி, நேர்மை காப்பாற்றப்பட வேண்டும். மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சமத்துவம், சமூகநீதி, மனிதநேயம் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிகள், ஆசிரியர்கள், ஊடகங்கள் என அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.!

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், நாராயணகுரு, ஜோதிபாபூலே போன்றவர்களின் கொள்கைகளை, நமக்கு இடைப்பட்ட சவாலாகக் கருதி, முழு மூச்சுடன் மக்களிடத்தில் பரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உறுதிபடுத்துவோம்.!

சக மனிதனை மதிப்போம். சமூகநீதி காப்போம்.!
சாதி, மத பேதங்களின்றி ஒற்றுமையுடன் வாழ்வோம்.!
சமத்துவ இந்தியாவை படைப்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்”

அதிகம் படித்தது