மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயிரைக் குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை, இனியும் அனுமதியோம்!

சுசிலா

Jan 5, 2019

siragu sterlite2

உலகின் பல நாடுகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுக்காத நிலையில், இந்தியாவில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது என்றால், என்றைக்கும் இந்தியாவில், மனித உயிருக்கு மதிப்பு இருப்பதில்லை, மனித வளத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை அதிலும் ஏழை, எளிய மக்களின் பாதிப்புகள் என்றால் அரசும், அரசைச் சார்ந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது வருத்தப்படக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது.!

மக்களின் உயிரை குடிக்கும் தொழிற்சாலைகள் நாட்டிற்குத் தேவை தானா, இதன் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறதா என்ற பல கேள்விகள் நம்முள் எழத்தான் செய்கிறது. தூத்துக்குடியில் நிறுவப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை ஒரு உயிர்கொல்லி நிறுவனம். இதை ஆரம்பிக்கும்போதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் இது இயற்கைக்கு மாறானது, மண், நீர், காற்று, என அனைத்தையும் மாசுபடுத்தக் கூடியது என்று கடுமையாக எதிர்த்தனர். இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவரப்படும் தாமிரத் தாதுக்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் ஸ்டெர்லைட் ஆலை தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தை நடத்தும் வேதாந்த குழுமத்தின் தலைவர் அணில் அகர்வால் வசிக்கும் இங்கிலாந்திலும் கூட ஸ்டெர்லைட் ஆலை தடைச் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.!

இனி, இந்த ஸ்டெர்லைட் ஆலையின் தொடக்கம் முதல் தற்போதைய நிலை வரை காண்போம். இது ஒரு செம்பு உருக்கும் தொழிற்சாலை. இது சுரங்கத்தொழில் மற்றும் உலோகங்களில் உலகளவில் ஈடுபடும் வேதாந்தா ரிசொர்ச் நிறுவனத்தின் அமைப்பாகும். இங்கு செப்பு கம்பி, கந்தக டை ஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

siragu sterlite6

1994-யில் மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரி என்ற இடத்தில், ஸ்டெர்லைட் ஆலை 700 லட்சம் ரூபாய் செலவில் முதன்முதலாக நிறுவப்பட்டது. அதன் பின், இரண்டு மாதங்கள் மட்டுமே ஆலை செயல்பட்டது. ஆலையை மூடவேண்டும் என்ற மக்களின் கோரிக்கை வலுக்கவே மூடப்பட்டது. அதனை எதிர்க்க காரணம், ஆலையை சுற்றியுள்ள மாந்தோப்பு முழுவதும் நிலத்தடி நீரின் பாதிப்பால் சேதமானது. பழங்கள் மாசுபட்டு அழுகின. அந்த மாம்பழங்களை ஏற்றுமதி செய்யமுடியவில்லை. ஏற்றுமதியும் ரத்து செய்யப்பட்ட நிலையில், அம்மக்கள் போராடத் தொடங்கினர். இது மட்டுமல்லாமல், விசவாயு வெளியானது. உடனே மாவட்ட அதிகாரி, மாநில அரசை தொடர்புகொண்டு, ஆலையை மூட கோரிக்கை விடுத்தார். அம்மாநில அரசும் நிரந்தரமாக தடைவிதித்து ஆலையை மூடிவிட்டது.

இதன்பிறகு, குஜராத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவுவதற்கு ஆலை நிர்வாகம் அனுமதி கேட்டது. அப்போது அந்த அரசும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனுமதி தரவில்லை. பிறகு, நம் அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவிலும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தான், தமிழகத்தில் துவங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

1994 ஆம் ஆண்டு அதிமுக அரசு முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில், தூத்துக்குடியில் ஆலை நிறுவப்பட்டது. ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேடினை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வந்தனர். இருப்பினும், அப்போது 1995 ஜனவரியில் அப்போதைய பிரதமராக இருந்த திரு.நரசிம்மராவ் தலைமையில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சி அனுமதி அளித்து நிறுவனம் தொடங்கப்பட்டது. அதிக ஆபத்தைக்கொண்ட ஆலைக்கு சிகப்பு நிறுவனம் என்ற படத்தைக் கொண்டு நிறுவப்பட்டது. இது அரசாலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்படக்கூடிய ஒன்றாகும்.

தூத்துக்குடி, மன்னார் வளைகுடா 21 தீவுகளை உள்ளடக்கிய பகுதி. மன்னர் வளைகுடாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் தான் ஆலை அமைக்கப்படவேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், வெறும் 14 கிலோ மிட்டர் தொலைவிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்பதுவும் ஒரு விதி மீறலாக இருக்கிறது. இதனால், கடலில் உள்ள மீன்களின் இனப்பெருக்கம் குறைந்தும், மீன்கள் பல இறந்துபோகின்றன என்பது வேதனையான உண்மை. மேலும் இந்த ஆலையைச் சுற்றி 250 மீட்டர் அளவில் மரக்கன்றுகள் நட வேண்டும். ஆனால், அதுவும், வெறும் 20% தான் நடப்பட்டிருக்கின்றன. மேலும், ஆலைக்கென எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நீரின் அளவை விட அதிகமாக எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. மற்றும் ஆலையின் கழிவுகள் ஆலைக்குள்ளேயே சுத்திகரிக்கப் பட வேண்டும். ஆனால், அதுவும் சட்டத்திற்குப் புறம்பாக, விவசாய வாய்கால்களுக்குள்ளும், மற்றும் மன்னார் வளைகுடாவிலும் கலப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இந்த ஆலையினால், மண், நீர், காற்று மிகவும் மாசு அடைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படும் மக்கள் தூத்துக்குடி மக்கள் என்று மருத்துவர்கள் குழு தகவல் அளித்துள்ளது.

siragu sterlite1

1997 சூலை மாதத்தில், ஆலையிலிருந்து வெளியான சல்பர் டை ஆக்சைட் வாயு தூத்துக்குடி மாவட்டத்தையே இருளாக்கியது. அதில் 100 பேருக்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர். கண் எரிச்சல், தொண்டை வலி முதலான பாதிப்புகளும் ஆலைப் பகுதியில் இருந்த மரங்கள் கருகிப் போதலும் ஏற்பட்டன.

அதில், 50 க்கும் மேற்பட்ட பெண்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைபெற்று, அதில் இருவர் உயிரிழந்தனர். அதன்பிறகு போராட்டம் எழுந்த நிலையில், 20 நாட்கள் ஆலை மூடப்பட்டது. இதுபோல் தவறு இனி நடைபெறாது என்று மேல்முறையீடு செய்து ஆலையை மீண்டும் துவங்கியது ஆலை நிர்வாகம்.

அதற்கு பின், இரு ஆண்டுகளுக்கு பிறகு 1999-யில் ஏற்பட்ட வாயு கசிவால், ஆலை அருகில் உள்ள ஆல் இந்திய ரேடியோ ஊழியர்களும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். மேலும் 82 முறை விசவாயு கசிந்தன என குற்றம்சாட்டி, தமிழக அரசு மூடவேண்டும் என்று கூறியது. இதையெல்லாம் கருத்தில் கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2013 மார்ச் மாதத்தில், ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், சுவாசக்கோளாறு காரணமாக ஆலை மூடப்பட வேண்டும் என்று கூறி சீல் வைத்து மூடியது.

அதன் பின், திரு.மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய காங்கிரஸ் ஆட்சி காலத்திலான, 2013 ஆம் ஆண்டு மே மாதம் தனது தீர்ப்பில், சுற்றுப்புற சூழல் மாசுகேட்டை இந்த நிறுவனம் ஏற்படுத்தி இருப்பதைக் கூறி, அக்குற்றங்களுக்காக மூடுவது என்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்றும் கூறி உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தது.

அதன் பிறகும் கூட, மிகுந்த சிரமத்துடன் தான் அம்மக்கள் வாழ்ந்து வந்தனர். போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஆலை இயங்கிக்கொண்டு தான் இருந்தது. அப்பகுதியில், அனைத்தும் மாசுமடைந்து நிலையில், மனிதர்கள் உயிர் வாழ்வே முடியாத நிலை ஏற்பட்டபோது, மீண்டும் தூத்துக்குடி மக்கள் ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையை பலமாக வைத்தனர். 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். பின்பு 40 தினங்களாக குமரெட்டியார்புரம் மக்கள் மரத்தடியில் அமர்ந்து போராட்டம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மார்ச்சு 25, 2018 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் மற்றும் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 20,000க்கும் அதிகமானோர் இத்தொழிற்சாலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர். அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை அந்தக் குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் ஏப்ரல் 9, 2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது.

siragu sterlite3

மே 22, 2018 அன்று நூறாவது நாளான போராட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது கொடுமையிலும் கொடுமை. இது ஒரு திட்டமிட்ட செயல் என அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டின. மேலும் மக்களின் போராட்டத்தை ஒடுக்க அரசே, இந்த பயங்கரவாதத்தை செய்திருக்கிறது என மக்களின் கருத்தாக இன்றுவரை இருந்து வருகிறது. இதில் 17 வயது பெண் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் மீதும், முதலமைச்சர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு மக்கள் பாதுகாப்பிற்காக நடந்தது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மே 23, 2018 அன்று தூத்துக்குடி அண்ணா நகரில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் காவல்துறையினர் 132 பேரை கைது செய்துள்ளனர்.

siragu sterlite4

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் முத்திரை வைத்தனர். முத்திரை வைக்கப்பட்டதற்கான விளம்பரச் சீட்டை ஆலையின் வெளிப்புறக் கதவில் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி, 2018 ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ஏதுமில்லை, மேலும் அரசு தரப்பில் தகுந்த ஆதாரங்கள் இல்லையெனவும் கூறி, திறப்பதற்கான உத்தரவை பிறப்பித்தது. மூடப்பட்டிருந்த இந்த இடைப்பட்ட காலத்தில், காற்றின் மாசு அளவு குறைந்திருக்கிறது என்ற புள்ளிவிவரச் சான்று இருந்தபோதிலும், தீர்ப்பு மக்களுக்கு எதிராகவே அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திறக்கக் கூடாது என்ற நிலையினை தான் எடுத்திருக்கிறது. தீர்ப்பிற்கு, 15 நாட்களுக்குப் பிறகு தமிழக அரசு மேல் முறையீடு செய்திருக்கிறது.!

ஆலையை சீல்வைத்து மூடியபோது, இதை அரசாணையாக வெளியிடாமல், சட்டப்பேரவையைக் கூட்டி, அரசியல் கொள்கை முடிவாக எடுக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறியநிலையில், தமிழக அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது மேல்முறையீடு செய்யும் போதாவது, கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தின. தற்போதும் தமிழக அரசு அந்த ஆலோசனையை ஏற்க மறுத்துவிட்டது. இதனால், மத்திய, மாநில அரசுகள் இவ்விசயத்தில் தமிழக தூத்துக்குடி மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன!

எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும், எத்தனை சமாளிப்புகள் செய்தாலும், ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்பட கூடாது என்பதில், நாம் மிகவும் உறுதியுடன் இருப்போம். போராட்டக்களத்தில், நாம் அனைவரும் அம்மக்களுக்கு உறுதுணையாக நிற்போம்!

அனுமதியோம்.. அனுமதியோம்… ஸ்டெர்லைட் ஆலையை அனுமதியோம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயிரைக் குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை, இனியும் அனுமதியோம்!”

அதிகம் படித்தது