மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயிர்களை தன்னடக்கிய மொழிகளும் மொழிகளை தன்னடக்கிய உயிர்களும்

திவான்

Feb 7, 2015

mozhigal6மௌனம் தான் நம் பிறப்பிலிருந்தே வந்தது. மொழி நாம் நமக்காக ஏற்படுத்தி கொண்ட கருவி.

அரபு நாடுகளில் பிற மொழி பேசுபவர்களை ஊமை என்பார்கள். காரணம் அரபு மட்டுமே மொழி, மற்றவை மொழிகளே அல்ல என்பது தான் அவர்களின் மொழிப் பற்று.

இன்றும் ஒரு நாடு தன் ஆதிக்கத்தை பிற நாடுகளில் செலுத்த வணிகத்தை கருவியாக பயன்படுத்துகிறது. அத்துடன் மொழியை அந்நாடுகளில் உலாவ விட்டுவிடுகிறது. அவர்களின் விற்பனை பொருட்களை காட்டிலும் மொழி வேகமாக பரவி விடுகிறது. அதன் பிறகு அவர்கள் தங்கள் மதங்களை நிறுவுகின்றனர். ஆனால் நாடு பிடிக்கும் வேளைகளில் அவர்கள் அவர்களின் மதங்களை விட மொழிகளையே அதிகம் நம்புகின்றனர். அவர்கள் மதங்கள் கூட இரண்டாம் பட்சமாக தான் செயல்படுகிறது.

இவ்வாறு மொழியின் முக்கியத்துவத்தை அடுக்கி கொண்டே போகலாம்.

mozhigal1எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள் முதன்மையானது. மனிதனுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களாலும் ஒலி எழுப்ப முடிந்தவைகள் உயிர் எழுத்துக்கள். அந்த உயிர் எழுத்துக்களை தமிழ் மொழி பதிமூன்று எழுத்துக்களாக பிரிக்கிறது. ஆனால் ஆங்கிலம் வெறும் ஐந்தே எழுத்துக்களையே உயிர் எழுத்தாக முன் வைக்கிறது. ஐந்திற்கும், பதிமூன்றுக்குமான வித்தியாசம், தமிழ் – உலக உயிர்களால் ஒலி எழுப்ப முடிகிற அனைத்தையும் உள்ளடக்குகிறது. ஆங்கிலம் பதிமூன்றில் எட்டை விட்டு விடுகிறது. இவ்வாறு பல எழுத்துக்களை உதறி தள்ளிவிட்டு இருபத்திஆறாக மட்டுமே உருப்பெருகிறது.

பொதுவாக உடற்பயிற்சிகளில் கை, கால், கண் என ஒவ்வொரு பயிற்சிகள் சொல்லி தரப்படுகின்றன. இவை மூலம் அந்தந்த உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. இவையனைத்தும் தசைகளுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகள். உடலில் உள்ள நரம்புகள் சீராக இயங்க கொடுக்கபடும் பயிற்சிகளில் முதன்மையானது தியானம். தியானம், நம் நரம்புகளை சாந்தமாக வைத்து கொள்ள பயன்படுத்தப்படும் கருவி என்பதை தாண்டியும் தியானத்தின் தேவைகள் நீண்டு கொண்டே போகும். ஆனால் தியானம் நரம்புகளை சீர்படுத்த, ரத்த ஓட்டத்தை சமன்படுத்தும் வேலைகளையும் செய்கின்றது. அதே வேலைகளை மொழிகளும் செய்கின்றது. நாக்கசைவு, வாயசைவு, முகசைவுகள் அந்த வேலைகளை செய்கின்றன. சாந்தமாக பேசுவதில் இருந்தே இதை நாம் உணர முடியும். அதிலும் அழுத்தம் திருத்தமாக வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுது இன்னும் அழுத்தமாகவே உணரமுடியும்.

mozhigal3மொழிகள் தியானத்தின் பலனை தருவதில்லை. ஆனால் தியானத்தின் பலனில் இருந்து சிறிதளவு எடுத்து தந்து கொண்டே இருக்கிறது. தினமும் தந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாளைக்கு நாம் பேசுவதற்கும், ஐந்து நிமிடம் தியானத்தில் இருப்பதற்கும் சமமானதாகிறது. சரியான உச்சரிப்பிருக்கு ஏற்றவாறு பலன்கள் வேறுபடுகின்றது.

ஆனால் அது வெறும் இருபத்தியாறு எழுத்துகளில் நடைபெறுவதில்லை. ஓவ்வொரு உயிர்களிடமிருந்து, பொருட்களிடமிருந்து பெறப்பட்ட ஒலிகளே அந்த வேலைகளை செய்கிறது.

எவ்வாறு யோகா ஒவ்வொரு உயிர்களின் வடிவங்களில் இருந்து பெறபட்டவையோ அதே போல மொழிகளும் ஒவ்வொரு உயிர்களின் ஒலிகளில் இருந்து பெறப்பட்டவை. ஆசியா கண்டங்களில் பெரும்பாலும் மொழிகள் இவ்வாறு கட்டமைக்கபட்டவையாக தான் இருக்கிறது. அதிலும் அவ்வாறன மொழிகள் இந்தியாவில் அதிகமான மொழிகள் காணபடுகின்றன.

அவையனைத்தும் இந்தியாவின் தெற்கில் இருந்து தோன்றியதாக இருக்கிறது.

உருவாக்கப்பட்டவை அனைத்திற்கும் அழிவு என்பது நிச்சயமாக்கபட்டது. அது மொழிகளுக்கும் பொருந்தும். மொழிகளின் அழிவில், அந்த மொழிகளை சார்ந்த அறிவியல், பண்பாடு, நாகரீகம் அனைத்துமே அடையாளம் தெரியாமல் அழிந்து போகிறது. இதற்காகவே மொழிகளை நாடு பிடிக்கும் வேளைகளில் பயன்படுத்த முக்கிய காரணமாகிறது. மேலும் அந்நாட்டு மொழி சார்ந்த அறிவியலை, கண்டுபிடிப்புகளை தனதாக்கி கொள்ளமுடிகிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கருவிகளுக்கு அந்நாட்டு நிறுவனங்கள் வைத்த பெயரையே நாமும் பயன்படுத்தி பழகுகிறோம். அந்த கருவிகளுக்கு நம் தமிழ் அறிஞர்கள் பெயர் வைத்தாலும் அவை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுவதில்லை.

அதே போல தான் தொன்றுதொட்டு நம் மண்ணில் பயன்படுத்தப் பட்டு வரும் கருவிகளை, மருத்துவத்தின் பெயர்களை நாம் மறந்து விடுவதில் அல்லது பயன்பாட்டை குறைப்பதில் இருந்து அந்த மொழியும், மொழியை சார்ந்தவைகளும் அழிய தொடங்குகிறது.

mozhigal7இன்று ஏற்படுகின்ற டெங்கு போன்ற கொடிய நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தை விட நாட்டு மருந்து தான் வேலை செய்கிறது. ஆனால் ஆரம்ப காலங்களிலேயே நாட்டு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் பல உயிர்களை காவு கொடுத்து விட்டோம். பல மாதங்கள் பின்பே பப்பாளி இலை நியாபகம் வருகிறது, அதை தொடர்ந்து மலைவேம்பு சாறு, நிலவேம்பு சாறு என தொடர்ந்து மருந்துகள் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் இவையனைத்தும் டெங்குவிற்க்காக ஆங்கில மருந்து வரும் வரை மட்டுமே பயன்படுத்தபடும். பிறகு நம் நாட்டு மருந்து பணமில்லாதவர்களிடமே தங்கி விடும்.

mozhigal5இவையனைத்தும் ஒரு மொழிகளின் சிதைவின் போது ஏற்படும் அவலம். ஆங்கிலம் வழக்கு மொழியாகும் பொழுது அந்த மொழிகளை சார்ந்து தான் மருந்துகளை, தீர்வுகளை தேடுகின்றோம். எந்த மொழி பயன்பாட்டில் இருக்கிறதோ அந்த மொழியில் தான் நமக்கான அனைத்தையும் தேட முடியும். நமக்கான சரியான தீர்வுகள் உள்ள மொழிகள் பயன்பாட்டில் இருப்பதில்லை என்பதில் தான் சிக்கல்.

தமிழ் மொழி, அதன் மகத்துவத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு, பொதுவாக மொழிகளை பற்றிய மகத்துவம் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் தான் நாம் சரியான மொழியை அடையாளம் கண்டு ஊடுருவ முடியும். அது மலையாளமாக இருக்கலாம், கன்னடமாக இருக்கலாம், துளுவாக இருக்கலாம், சீன மொழியாக இருக்கலாம், ஜப்பான் மொழியாக இருக்கலாம், அது நம் மண்ணின் தமிழ் மொழியாகவும் இருக்கலாம்.


திவான்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயிர்களை தன்னடக்கிய மொழிகளும் மொழிகளை தன்னடக்கிய உயிர்களும்”

அதிகம் படித்தது