மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலகத்திலேயே உயரமான சிலை

இராமியா

Nov 17, 2018

siragu ulagaththile1

மக்கள் தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிப்பேசாமல் வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசவைப்பதன்மூலம், தங்கள் மக்கள் விரோதத் தன்மையையும், திறமை இன்மையையும் மறைக்க ஆதிக்கவாதிகள் முயல்வது ஒன்றும் புதிது அல்ல. சமூக இயக்கத்தைச் சரியாக வழிநடத்தும் திறமை இல்லாத இவர்கள் திசைதிருப்பும் கலையில் மிகுந்த திறமை உடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் இந்திய பிரதமர் மோடியும், அவரது கூட்டாளிகளும் ஒப்பு உவமை இல்லாதவர்களாகத் திகழ்கிறார்கள்.

கருப்புப்பணத்தை ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு, ரூ.500, ரூ1,000பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார்கள். ஆனால் கருப்புப்பணம் ஒழியவே இல்லை என்று ரிசர்வ்வங்கி அறிவித்துவிட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர். வரிவிதிப்பைச் சீரமைப்பதாகச் சொல்லிக்கொண்டு, பொருள் மற்றும் சேவைவரியை (ஜி.எஸ்.டி) விதித்தார்கள். இதில் ஆயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் அழிந்துபோயின.

வங்கிகளில் கடன் வாங்கிய பெருமுதலாளிகளை வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லவிடுதல், போர்விமான ஊழல், கடனை வசூல் செய்யாத வங்கி அதிகாரிக்கு உயர்பதவிக்கு ஏற்பாடுசெய்தல் என்று மோடி அரசின் ஒவ்வொரு அசைவும் காவிகளின் மக்கள் விரோதத்தன்மையையும், திறமை இன்மையையும் தெளிவாக வெளிச்சம் போட்டுக்காட்டிக் கொண்டு இருகிறது. இந்த மக்கள் விரோதத்தன்மையும், திறமை இன்மையும் மக்களிடையே விவாதப்பொருளாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக மோடியும், அவரது கூட்டாளிகளும் பல்வேறு விதமான விவாதங்களை ஊடகங்களில் அரங்கேற்றுகின்றனர்,நிகழ்வுகளை நிகழ்த்துகின்றனர்.

அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றுதான் உலகத்திலேயே உயரமான சிலை.

வரும் 31.10.2018அன்று பிரதமர் மோடி குஜராத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று புகழப்படும் வல்லபாய் படேலின் 182மீட்டர் உயரமான உருவச்சிலையைத் திறந்து வைக்கப்போகிறார்.(வாசகர்கள் இக்கட்டுரையைப் படிக்கும்போது இச்சிலை திறக்கபட்டு இருக்கும்)இச்சிலை உலகத்திலேயே உயரமான சிலையாக இருக்கப்போகிறது. இதன் தொடர்பான விழாவை 20.10.2018அன்று குஜராத் முதல்வர் விஜய் ருபானி தொடக்கிவைத்தார்.

காவிகள் ஏன் படேலை அதிகமாகக் கொண்டாடுகிறார்கள்? அவர் தனித்தனியாகச் சிதறிக்கிடந்த 562 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார். அது மட்டும்அல்ல,இந்தியாவுடன் இணையமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த ஐதராபாத் நிஜாமை இராணுவத்தை அனுப்பி அடிபணியச் செய்தார் என்பதுதான் இதில் சிறப்பு அம்சம்.

ஆனால் இந்தச் சிறப்பு அம்சத்தில் திட்டமிட்டு மக்களிடம் இருந்து மறைக்கப்பட்ட செய்திகள் உள்ளன. ஆனால் இவற்றை வெளிக்கொணர, தர்க்கரீதியான எளிய வினாக்களே போதுமானவை. ஐதராபாத் சமஸ்தானத்திற்கு 12.9.1948 அன்று இந்தியா இராணுவத்தை அனுப்பியது. அடுத்த ஐந்து நாட்களில் அதாவது 18.9.1948 அன்று நிஜாம் சரண் அடைந்துவிட்டார். ஆனால் இந்திய இராணுவம் 21.10.1951வரை போராடிக் கொண்டுஇருந்தது. இது யாருடன்? ஏன்?

இதற்கு விடை கூற வரலாற்றுப் பாடத்தை முக்கியப்பாடமாக எடுத்துப் படித்த மாணவனாலும் முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு அங்கு நடந்த நிகழ்வுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளன.

விவசாயிகள் என்போர் இந்நாட்டின் புறக்கணிக்கப்பட்ட குடிமக்களாகவே எப்பொழுதும் இருந்து வருகின்றனர். ஐதராபாத் சமஸ்தானமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அந்த சமஸ்தானத்திற்கு உடபட்ட தெலங்கானா பகுதியில் இருந்த விவசாயிகள் இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர். அவர்களை எல்லாம் நிஜாமி படைகளும், பண்ணையார்களின் அடியாட்களும் கடுமையான முறையில் ஒடுக்கினர். இந்த அடக்குமுறையில் தொட்டிகொமரய்யா என்ற விவசாயி 6.7.1946  அன்று கொல்லப்பட்டுவிட்டார். இது தெலங்கானா விவசாயிகள் அனைவரையும் கொதித்து எழச்செய்துவிட்டது. அவர்கள் ஒன்று திரண்டு, காவல் நிலையங்களில் இருந்தும், நிஜாமின் படைத்தளங்களில் இருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்றி, நிஜாமுக்கும் பண்ணையார்களுக்கும் எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர்.

siragu ulagaththile2

siragu ulagaththile3

இதில் சிறப்புஅம்சம் என்னவென்றால் பெண்களும் ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டு ஆண்களுக்கு நிகராகப் போரில் ஈடுபட்டனர்.  இதனால் மிரண்டுபோன பண்ணையார்கள் கிராமங்களை விட்டு ஐதராபாத்தில் தஞ்சம் புகுந்தனர். நிஜாமும் ஐதராபாத் நகரை விட்டு வெளியேபோவதைத் தவிர்த்துக்கொண்டார்.

பண்ணையார்கள் இல்லாத கிராமங்களில், விவசாயிகள் ஒன்று சேர்ந்து, குழு (கம்யூன்) அமைத்து, நிலங்களைப் பகிர்ந்துகொண்டு விவசாயம் செய்தனர்.விளைச்சலைத் தங்களுக்குள் முறையாகப் பகிர்ந்து கொண்டனர். சுருக்கமாகச் சொன்னால் தெலங்கானா கிராமங்களில் சமதர்ம (சோஷலிச) அமைப்பு செயல்பட்டுக் கொண்டுஇருந்தது.

இந்நிலையில்தான் 15.8.1947அன்று ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.அவ்வாறு வெளியேறும்போது 562சுதேசி சமஸ்தானங்களையும் தனித்தனியாகவே விட்டுவிட்டுச்சென்றனர். புதிய ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல் அனைத்துச் சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் இணையுமாறு அழைப்புவிடுத்தார். திருவாங்கூர், ஐதராபாத் சமஸ்தானங்கள் இந்த அழைப்பை ஏற்க மறுத்தன. அவற்றில் திருவாங்கூர் சமஸ்தானம் பேச்சுவார்த்தை மூலமாக இணைய ஒப்புக்கொண்டது. ஆனால் ஐதராபாத் சமஸ்தானம் ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடித்தது. முரண்டு பிடித்த நிஜாமைப் பணியவைக்க வல்வபாய் படேல் இராணுவத்தை அனுப்பினார். இராணுவம் வந்த ஐந்தே நாட்களில் நிஜாம் சரணடைந்து விட்டார்.

சமதர்ம அமைப்பில் வாழ்ந்துகொண்டிருந்த தெலங்கானா விவசாயிகள் இந்தியஅரசின் கீழ் இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஆனால் இந்திய அரசோ நிலங்களை மீண்டும் பண்ணையார்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், விவசாயிகள் பண்ணையார்களை அண்டியே வாழவேண்டும் என்றும் கூறிவிட்டது. இதை ஏற்றுக்கொள்ள விவசாயிகள் மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மீது இந்தியஅரசு இராணுவத்தை ஏவி விட்டது.  மிகக்குறுகிய காலத்தில் நிஜாமின் இராணுவத்தையும், பண்ணையார்களின் அடியாட்களையும் வெற்றிகண்ட விவசாயிகளால், வலிமைமிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள முடியவில்லை.

ஆனாலும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முறையான போர்ப்பயிற்சி இல்லாத விவசாயிகள் வலிமைமிக்க இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டனர். அதன்பின் 21.10.1951அன்று தங்கள் போராட்டத்தைக் கைவிடுவது என முடிவெடுத்தனர். வீரம்செறிந்த இப்போராட்டம் வரலாற்று மாணவர்கள்கூட அறிந்துகொள்ள முடியாத வகையில் இருட்டடிப்பு செய்து வைக்கப்பட்டு உள்ளது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

உலகத்திலேயே உயரமான சிலை வைக்கப்படும் இவ்வேளையில், வல்லபாய் படேலின் சிறப்புக்குக் காரணமாகச் சொல்லப்படும் ஐதராபாத் இணைப்பு நிகழ்வில் மறைக்கப்பட்டு உள்ள தெலங்கானா விவசாயிகளின் வீரம்செறிந்த போராட்டத்தை நினைவுகொள்வோம்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகத்திலேயே உயரமான சிலை”

அதிகம் படித்தது