மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலகின் எளிமையான அதிபர் ஹோஸே முயீகா பதவியிலிருந்து விடைபெற்றார்

தேமொழி

Mar 7, 2015

Former guerrilla leader and Uruguay's leading presidential candidate Jose Mujica gestures during a Reuters interview in Montevideoஇந்த வாரம் (மார்ச் 1, 2015 அன்று), உலகிலேயே ஏழ்மையான அதிபர் என்றும், எளிமையான அரசுத்தலைவர் என்றும், “கொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்” என்றும் பிபிசி தமிழோசை வியப்புடன் குறிப்பிட்ட அதிபர் “ஹோஸே முயீகா” (ஹோஸே அல்பெர்ட்டோ “பெப்பி” முயீகா கர்டானா – José Alberto “Pepe” Mujica Cordano) அவரது ஆட்சி காலம் நிறைவு பெற்றதால், அதிபர் பதவியை “டாபெறி வாஸ்க்வெஸ்” (Tabaré Vázquez) இடம் ஒப்படைத்துவிட்டு, பொறுப்பிலிருந்து விலகி மீண்டும் தனது முந்தைய செனட் உறுப்பினர் பதவிக்கே திரும்பிச் செல்கிறார்.

உருகுவே நாட்டின் ஹோஸே முயீகா போல இனி ஒரு தலைவரைக் காண்பது அரிது. ஏழைப் பங்காளனாக, பெரும்பான்மையான மக்களின் குரலாக, அவர்கள் ஆதரவுடன் நாட்டின் அதிபரானவர். நம் நாட்டில் அமைச்சர் ஒருவரது வண்டி சாலையில் வரப்போகிறது என்றால் போக்குவரத்து பலமணி நேரங்களுக்கு தடத்தில் தடை செய்யப்பட்டு, இயல்பு வாழ்க்கை குலைந்து, உச்சி வெய்யிலில் மண்டை காய்ந்து துன்பங்கள் பல அடைந்து பழகிப் போன நமக்கு, நாட்டின் அதிபரே அவசர தேவைக்குச் சவாரி ஏற்றி செல்கிறார் என்றால் உச்சி வெய்யில் நம் தலைமீது காயாமலே நமக்கு தலை சுற்றி மயக்கமும் வரும்.

இருமாதங்களுக்கு முன்னர், சென்ற ஜனவரியில், காகிதத் தொழிற்சாலையில் பணிபுரியும் “ஜெர்ஹால்ட் அக்காஸ்ட்டா” (Gerhald Acosta) வீடு திரும்ப சவாரி கேட்டு சாலையில் செல்லும் வண்டிகளில் உள்ளோரிடம் உதவி கோரிய வண்ணம் நின்றிருந்தார். யாரும் அவரைப் பொருட்படுத்தாது கடந்து சென்றவண்ணம் இருக்கும் பொழுது அரசு பதிவு எண் தாங்கிய வண்டி ஒன்று அவரை ஏற்றிக் கொண்டது. உள்ளே அமர்ந்த பின்னர் பயணிகளைப் பார்த்த ஜெர்ஹால்ட் அக்காஸ்ட்டா வியப்பு கலந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். அவருக்கு சவாரி கொடுத்தது அவரது நாட்டின் அதிபர் ஹோஸே முயீகாவும் அவரது மனைவியும். வண்டியை ஏற்றிக் கொண்டதுடன் மட்டுமல்லாது, அவரைக் கனிவுடன் உபசரித்த அதிபரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்த அவர் தனது அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பெருமையுடன் குறிப்பிடிருந்தார்.

கடவுள் மறுப்புக் கொள்கையும், இடதுசாரிக் கொள்கை பிடிப்புள்ளவரும், மார்க்சிட்டுமான 79 வயதான உருகுவேயின் முன்நாள் அதிபரான ஹோஸே முயீகா, “பெப்பி” என்று உருகுவே மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். இவரது எளிமையான வாழ்வினால் உலகின் கவனத்தைக் கவர்ந்தார். இவரது சொத்து 1,800 டாலர் மதிப்புள்ள இவரது பழைய நீலநிற ‘வோல்க்ஸ் வாகன்’ கார் மட்டுமே. இவரது காருக்கு ஒரு மில்லியன் டாலர் வழங்கி, அவர் ஒரு புது ஊர்தி வாங்க உதவ வந்த அரேபிய ஷேக் ஒருவரின் உதவியைப் புறக்கணித்து, அவ்வாறு பணம் கிடைத்தால் அதையும் நன்கொடையாக உதவி தேவைப்படும் மக்களுக்கே அளிக்க விரும்புவேன் என்றும் கூறினார். பாடகர் ‘ஏரோஸ்மித்’ (Aerosmith) தனது கையொப்பமிட்டு அன்பளிப்பாக வழங்கிய கிடார் இசைக் கருவியையும் ஏலத்தில் விட்டுப் பணம் பெற்று வீடுகள் கட்டும் சேவைக்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்ட பெப்பி அதற்குச் சொன்ன காரணம், அவருக்கு கிடார் வாசிக்கத் தெரியாத காரணத்தால் அதற்கு பயன் ஒன்றுமில்லை என்பதே.

மனைவிக்குச் சொந்தமான பண்ணையில் உள்ள இரு அறைகள் மட்டும் கொண்ட வீட்டில் மனைவியுடனும், முடமான நிலையில் மூன்று கால்களுடன் நடமாடும் இவரது நாயுடனும் தகரக் கொட்டகை வீட்டில் வசித்து வருகிறார். நாட்டின் அதிபர் பதவி ஏற்ற பொழுது அரசு வழங்கிய அதிபர் மாளிகையையும், உடன் அளித்த பணியாட்களையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். நகருக்குப் புறத்தே, கப்பிச் சாலை தடத்தில் அமைந்த அவரது தகரக் கொட்டகை வீட்டிற்குப் பாதுகாப்பும் இரு காவலர்கள் மட்டுமே. தனது காரை தானே ஓட்டிச் செல்வார். மனைவியுடன் அவரது பண்ணையில் சாமந்திப்பூ பயிரிட்டு விற்று தனது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார். அரசு வழங்கிய அதிபர் பதவிக்கான மாதம் பன்னிரெண்டாயிரம் டாலர் ஊதியத்தில் 90 விழுக்காட்டை நன்கொடைகளாக வழங்கி வந்தார். நுகர்வோர்மயமாக மாறிவிட்ட உலகில் அதனை விரும்பாது கழுத்து ‘டை’ (டை அணிவது நுகர்வோர் கலாச்சாரத்தின் அடையாளம் என்பது பெப்பியின் கருத்து), காலில் ஷூ அணிவது போன்ற ஆடம்பரங்களை வெறுத்து, எளிமையான உடையுடன், காலில் காலணியாக செருப்பு மட்டுமே அணிபவர் எளிமையின் மறு உருவமான பெப்பி.

ஐந்து வயதிற்குள் தந்தையை இழந்து, விவசாயத் தொழில் புரிந்த தாயினால் வளர்க்கப்பட்டார். 1960களில், இவரது இளவயதில் பொதுவுடமைக் கட்சியான “டுப்பமாரொசு” என்ற தீவிர இடதுசாரி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு ‘கொரில்லா’ போராளியாக அரசு செய்த அடக்குமுறையை எதிர்த்தார். போராட்டத்தில் ஆறுமுறை துப்பாக்கி சூடு பெற்று, 14 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வாழ்ந்த பொழுது மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார். தப்பிக்க முயன்றாலும், மீண்டும் பிடிபட்டு கடுமையான தண்டனைகளை அடைந்தார்.   துன்பமயமான சிறைவாழ்க்கைதான் அவருக்கு வாழ்க்கையைப் புரிய வைக்கும் பாடமாக அமைந்தது, வாழ்க்கையில் மன உறுதியைத் தந்தது எனக் கூறுகிறார் பெப்பி. பிறகு நாட்டின் இராணுவம் சர்வாதிகாரியை ஒடுக்கி நாட்டைக் கைப்பற்றிய பிறகு புதிய மக்களாட்சிக் குடியரசு 1985 இல் பொறுப்பேற்றது. புதிய அரசு, அரசியல் கைதிகள் யாவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கிய பொழுது பெப்பியும் விடுதலை பெற்றார்.

வாக்களிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் இருந்து மாறுபட்ட சொகுசு, ஆடம்பர வாழ்க்கை வாழும் மற்ற அதிபர்களைப் போல அல்லாமல், சராசரி உருகுவே குடிமக்களின் வருமானத்தை மட்டும் வைத்துக் கொண்டு, பிறவற்றை மற்றவருக்கு நன்கொடையாக அளித்துவிடும் பெப்பி, என் செய்கைகளைப் பார்த்தால் நான் ஒரு பைத்தியக்காரக் கிழவனோ என்று நகைக்கத் தோன்றும். ஆனால், இந்த வருமானத்தில் பெரும்பான்மையான நாட்டு மக்கள் வாழும் பொழுது என்னாலும் ஏன் வாழ முடியாது? இந்த எளிய வாழ்க்கைமுறை எனக்குப் பழக்கமானதுதான் என்றும் கூறியவர் அவர். என் வாழ்வின் பெரும்பாமைக் காலத்தில் இப்படித்தான் வாழ்ந்துள்ளேன், இது நான் விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கைமுறை, அதனால் என்னால் நன்றாகவே வாழமுடியும், என்று அலட்சியமாகவும் கூறியவர் பெப்பி.

உடைமைகளை சேகரித்துக் காப்பது ஓர் அடிமைவாழ்வு, பிறகு அவற்றைக் காப்பாற்றப் பொறுப்பேற்க வேண்டும்.   நமது சுதந்திரம் அதனால் பறிபோகும். உடைமைகளற்ற வாழ்க்கை வாழ்வது சுதந்திரத்தைத் தருகிறது. நமக்கு பிடித்ததை செய்ய அதனால் நேரமும் கிடைக்கிறது. குறைவான செல்வம் கொண்டவர்கள் ஏழைகள் அல்லர். அதிகம் பொருள் வேண்டும் என்று அலைபவரே இல்லாதவர் என்று இவர் கூறும் தத்துவம் யாவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. நான் வறுமையில் வாழவில்லை, எளிமையாக வாழ்கிறேன். என் எளிமையான வாழ்க்கை முறைதான் உலகைக் கவருகிறது என்றால், மக்கள் சராசரியான வாழ்க்கைமுறையைப் பற்றி சரிவர அறிந்திருக்கவில்லை என்று பொருள் என்கிறார் இவர்.

நுகர்வோர் கலாச்சாரத்திற்கு அடிமையான பிறகு வாழ்க்கையின் அடிப்படைத் தேவை என்ன என்பதை நாம் முற்றிலும் மறந்துவிட்டோம். வாழ்க்கைக்கு நிலையான மகிழ்ச்சியைக் கொடுக்க இயலாத தேவையற்ற ஆடம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றைத் துரத்துவதில் நம் சக்தியை விரயம் செய்கிறோம். எனது தேவைக்கும் அதிகமாக எனக்கு வருமானம் வருகிறது. அதனால், அதை இல்லாதவருக்கு கொடுப்பது தியாகமல்ல, அது எனது கடமை. அதிபரானதற்காக என் வாழ்க்கைமுறையை நான் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அரசியலில் உயர ஆரம்பித்ததும் தலைவர்களுக்கு அரசர்களைப் போல ஆடம்பரம், பெரிய மாளிகை, சிவப்புக் கம்பள விரிப்பு வாழ்க்கை முறை, பின்னால் ஆமாம் சாமி போட ஒரு கூட்டம் என்ற தேவைகளும் வந்துவிடுகிறது. ஆனால் அது ஏன் என எனக்குப் புரியவில்லை என்றார்.

அரசியல்வாதிகள் பெரும்பான்மை மக்களைப்போலவே வாழ வேண்டும். ஒரு நாட்டின் அதிபர் என்ற பதவி நாட்டிற்குத் தேவையான வேலைகளைச் செய்ய மக்கள் தேர்தெடுத்து அளித்த ஒரு உயர்பதவி மட்டுமே. அதனால் அதிபர் தன்னை அரசர் என்றோ, கடவுள் என்றோ நினைத்துவிடக்கூடாது. அதிபர் என்பவர் தனது மக்களை நல்வழிப் படுத்த பிறவியெடுத்த எல்லாம் அறிந்த இனத் தலைவரும் அல்ல. அதிபர் என்பவர் ஒரு அரசு ஊழியர் மட்டுமே. அதனால் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்கள் வாழும் வாழ்க்கை முறையைப் போன்றே ஒவ்வொரு ஆட்சியாளரும் வாழ்வதை அவசியமானதாக கருதுகிறேன் என்று “அல் ஜசீரா” (Al Jazeera) செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றின் போது பெப்பி கருத்துரைத்துள்ளார்.

முற்போக்குக் கொள்கைகளின் ஆதரவாளரான பெப்பி கஞ்சா போதைப் பொருள் விற்பனையை சட்டப்படுத்தினார். அதனால் கஞ்சா கடத்தல்காரர்களின் அதிகாரம் குறைந்து, அவர்கள் அட்டகாசமும் அடங்கியது. சட்டப்படி கஞ்சா செடி வளர்ப்பதும், மருந்தகங்களில் கஞ்சா பெற்றுக் கொள்வதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. உலகிலேயே அரசே கஞ்சா விற்பனை செய்த முதல் நாடு லத்தீன் அமெரிக்க நாடான உருகுவேதான் என்பதற்கு இவர் ஆட்சி வழி வகுத்தது. இந்த மாறுபட்ட நடவடிக்கையால் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படுவது மறைந்து. அவர்களது மற்றபிற போதைமருந்துக்கு அடிமையானவர் நிலை போலவே கருதப்படும் நிலை ஏற்பட்டது. குடிக்கு அடிமையானவர்கள் நடத்தப்படுவது போலவே தக்க மருத்தவச் சிகிச்சை பெறும் வழியும் ஏற்பட்டது. போதைக்கு அடிமையாவது ஒரு தண்டனை. அன்புக்கு அடிமையாவது மட்டுமே சரியான முறை என்பது பெப்பியின் கருத்து. சட்டப்படி கஞ்சாவை உற்பத்தி செய்ய, விற்க, பயன்படுத்த அனுமதிக்கும் பொழுது, சட்டப்படியே அதைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க முடிகிறது என்கிறார் இவர். புகைப்பதற்கும் இவர் ஆட்சியில் நாட்டில் கட்டுப்பாடுகள் அதிகரித்தது.

இவரது ஆட்சியில் கருச்சிதைவு செய்வதும், ஓரினச் சேர்க்கை திருமணங்களும் சட்டபூர்வமாகப்பட்டன. ஓரினச் சேர்க்கை வாழ்வுமுறை உலகில் தற்கால புதிய அதிநவீனக் கருத்தல்ல. இந்த வாழ்க்கைமுறை அலெக்சாண்டர், சீசர் போன்றோர் காலத்தில் இருந்தே இருப்பதாக அறியப்படுகிறது. அவர்கள் விரும்பும் முறையில் அவர்களை வாழவிடாமல் செய்வது அவர்களை துன்புறுத்துவதற்கு ஒப்பானது என்ற அவருடைய கோணமே பெப்பி ஓரின திருமணங்களுக்கு சட்டப்படி வழிவகுத்துக் கொடுத்ததற்குக் காரணம்.

கடந்த பன்னிரு ஆண்டுகளாக நல்ல பொருளாதார வளர்ச்சியை எட்டிய உருகுவே நாட்டில், 2010 மார்ச் முதல் 2015 பிப்ரவரி வரை, கடந்த ஐந்தாண்டுகளாக பெப்பி பொறுப்பேற்ற பிறகு வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்ததுடன், வறுமையும் 11% அளவிற்குக் குறைந்தது. மக்களின் வருமானம் உயர்ந்து, வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது. அண்டை நாடுகளான பிரேசிலும் அர்ஜென்டைனாவும் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிய பொழுதும், அந்நாடுகள் கஞ்சா கடத்தல்காரர்களின் அட்டூழியங்களில் நிலைகுலைந்து போன பொழுதும் பெப்பி தனது உருகுவே நாட்டை அப்பேரிடர்களைச் சந்திக்க விடாது தடுத்துள்ளார்.

இயற்கை வளங்களைக் காப்பது, போரை ஆதரிக்காதது, வறியோருக்காக குடியிருப்புகள் அமைப்பது போன்ற கொள்கைகளும் இவரது ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வழிகளாகும். பெப்பி தனது ஆட்சிக் காலத்தில் 70 விழுக்காடு மக்களின் ஒப்புதல் ஆதரவுடன் (approval rating) வெளியேறியுள்ளார். எவ்வாறு தனது பழைய நீலநிற வோல்க்ஸ் வாகன் காரை ஓட்டி வந்து பதவியேற்றாரோ அதே போலவே, பதவிக்காலம் நிறைவுற்றதும் அந்தக் காரை ஓட்டிக் கொண்டு வெளியேறியும் உள்ளார்.

வாழ்க்கையில் நன்மை, நல்ல வாய்ப்பு இனிமேல்தான் வரப்போகிறது என்ற நம்பிக்கை கொண்டு தினமும் வாழ்பவன் நான். வாழ்க்கை அருமையானது அதை முறையாக வாழ வேண்டும். வாழ்வை விட உலகில் உயர்ந்தது எதுவுமில்லை. விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் இயற்கையுடன் எனது வாழ்வை இணைத்துப் பார்க்கவே விரும்புகிறேன். எனக்கு சோர்வாக இருந்தாலும் எனது இறுதிநாள் வரை நான் உழைப்பேன். கடந்துபோனதை திரும்பிப்பார்த்து கவலைப்படுவது எனது வழக்கமல்ல, எதிர்காலம் எனக்குக் காத்திருக்கிறது. ஒவ்வொருநாளும் என் முன்னிருப்பது ஒரு புதிய சூரிய உதயம் என்பது பெப்பி வாழ்க்கையை அணுகும் முறை.   உலகத் தலைவர்களுள் ஹோஸே முயீகா போல ஒருவரை யாரேனும் கண்டதுண்டா ? உலகின் தலைசிறந்த தலைவரான இவரைப் போல ஒரு எளிமையான அரசுத் தலைவரை உலகம் இனி காணவே போவதில்லை என்பதை நாம் உறுதியுடன் கூறலாம்.

படங்கள் உதவி:

ஹோஸே முயீகாவின் ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/pages/Jos%C3%A9-Mujica/406640272742843


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகின் எளிமையான அதிபர் ஹோஸே முயீகா பதவியிலிருந்து விடைபெற்றார்”

அதிகம் படித்தது