மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?

தேமொழி

Oct 10, 2015

ulagaththil sirandha3“அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?” (http://siragu.com/?p=17849), “இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?” (http://siragu.com/?p=17950) எனச் சிறகில் முன்னர் வெளிவந்த கட்டுரைகளின் வரிசையில் இம்முறை “உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?” என்பதைக் காணும் கட்டுரை இது.

செப்டம்பர் 30, 2015 அன்று “தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்” (The Times Higher Education – THE, magazine) பத்திரிக்கை, உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 70 நாடுகளில் இருந்து 800 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கம் போல அமெரிக்க பல்கலைக்கழகங்களே பட்டியலை நிறைக்கின்றன. அடுத்து இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் அதிக இடத்தைப் பிடித்துள்ளன. இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த தரவரிசைப் படுத்தும் பட்டியலை வெளியிட்டது ஒரு இங்கிலாந்து பத்திரிக்கை என்பதை. பட்டியலில் காணப்படும் 800 பல்கலைக்கழகங்களில் 78 இங்கிலாந்தின் பல்கலைக்கழகங்கள்.

ulagaththil sirandha2மேலும், முதல் ஐந்து இடங்களுக்குள் இரு இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. கீழே முதல் பத்து இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது:

1. கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா

2. யூனிவர்சிட்டி ஆஃப் ஆக்ஸ்ஃபோர்ட், இங்கிலாந்து

3. ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டி, அமெரிக்கா

4. யூனிவர்சிட்டி ஆஃப் கேம்ப்ரிட்ஜ், இங்கிலாந்து

5. மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா

6. ஹார்வர்ட் யூனிவர்சிட்டி, அமெரிக்கா

7. பிரின்ஸ்டன் யூனிவர்சிட்டி, அமெரிக்கா

8. இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டன், இங்கிலாந்து

9. சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சூரிச், சுவிட்சர்லாந்து

10. யூனிவர்சிட்டி ஆஃப் சிக்காகோ, அமெரிக்கா

கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி தொடர்ந்து இவர்களது தரவரிசைப் பட்டியலில் ஐந்தாண்டுகளாக முதல் இடத்தைப் பிடித்து வருகின்றது. இது போன்று தரவரிசைப்படுத்தும் வேறு சில நிறுவனங்களின் பட்டியல்களில் தவறாது முதலிடத்தைப் பிடிக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், இவர்களது பட்டியலில் ஆறாவது இடத்தினில் உள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளாக 2010 ஆம் ஆண்டு முதல் ‘தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ இந்தத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டாலும், முன்னர் இவர்களுடன் இணைந்திருந்த ‘குவக்வரெல்லி சைமண்ட்ஸ்’ (Quacquarelli Symonds) என்ற ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ‘தி – கியூ எஸ் வேர்ல்ட் ரேங்க்கிங்க்ஸ்’ (THE–QS World University Rankings) என்று 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டவர்கள்தான் இந்த ‘தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ நிறுவனத்தினர். பின்னர் இரு நிறுவனங்களும் தனித்தனியே பிரிந்து வேறு வேறு வழிமுறையில் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு வருகின்றனர். பொதுவில் கிடைக்கும் ‘தாம்சன் ரூட்டேர்ஸ்’ (Thomson Reuters) மற்றும் ‘எல்சிவியர்’ (Elsevier) நிறுவனங்களிடம் இருந்து தரவுகளைப் பெற்று, தாங்கள் உருவாக்கிய தரவரிசை விதிகளுக்கு உட்படுத்தி உலகளாவிய அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி வருகின்றனர். ஆசிய நாடுகளுக்கு என்றும், பொருளாதாரத்தில் வளரும் பிரிக் நாடுகள் (Asia and BRICS & Emerging Economies) எனவும் தனிப் பட்டியல்கள் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

ulagaththil sirandha1இவ்வாறு உலகப் பல்கலைக்கழகங்களை வேறு சில நிறுவனங்களும் தரவரிசைப்படுத்துகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறையைப் பின்பற்றினாலும் தரம் அளவிடும் காரணிகள் பொதுவாகவே இருந்து வருகின்றன. பல்கலைக்கழகத்தின் புகழ், ஆய்வுகளில் பங்களிப்பு, ஆய்வுக்கண்டுபிடிப்புகளினால் ஈட்டும் வருமானம், பலநாடுகளின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டிருப்பது, கல்வி கற்பிக்கப்படும் சூழ்நிலை ஆகியவை முக்கியமான காரணிகள். இந்தக் காரணிகளுக்கு அளிக்கப்படும் மதிப்பெண் அளவு வேறுபடுவதால் இவர்கள் வெளியிடும் தரவரிசைப் பட்டியல்களும் சற்றே மாறுபடுவதுண்டு என்றாலும், வேறுபாடுகள் அதிகம் இருப்பதில்லை. பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் சற்று முன்னே பின்னே மாறுபடும், அவ்வளவே.

கீழே குறிப்பிடப்படும் நான்கு நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல்களும் ஆண்டுதோறும் வெளியிடப்படுவதுடன் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஊடகங்களின் கவனத்தில் உள்ளவை.

◦ தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் (The Times Higher Education World University Rankings)

◦ தி அக்காடெமிக் ரேங்க்கிங் ஆஃப் வேர்ல்ட் யூனிவர்சிட்டி (The Academic Ranking of World University)

◦ யு.எஸ். நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் (U.S. News & World Report)

◦ தி செண்ட்டர் பார் வேர்ல்ட் யூனிவர்சிட்டி ரேங்க்கிங்ஸ் (The Center for World University Rankings)

இந்தக் கட்டுரைக்காக, பொதுவாக இந்த நான்கு தரவரிசைப்பட்டியலிலும் எந்தெந்த கல்வி நிறுவனங்கள் முதல் 30 இடங்களுக்குள் இடம் பிடிக்கின்றன என்று ஆராய்ந்ததில், 19 பல்கலைக்கழகங்கள் நான்கு தரவரிசைப் பட்டியல்களிலும் முதல் 30 இடங்களுக்குள் இடம் பிடித்திருந்தன. இவற்றின் தரவரிசைகளின் “சராசரி” மதிப்பைக் கணக்கிட்டு வரிசைப்படுத்தியதில், கீழ் காணும் 15 பல்கலைக்கழகங்களையும் உலகில் முன்னணியில் இருக்கும் சிறந்த பல்கலைக்கழகங்கள் என நாம் முடிவு கட்டலாம். முதல் ஐந்து இடங்களுக்குள், முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. இவற்றைத் தவிர பிற யாவும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்.

நான்கு உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல்களின் தொகுப்பு:

1. ஹார்வர்ட் யூனிவர்சிட்டி (Harvard University)

2. ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டி (Stanford University)

3. மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Massachusetts Institute of Technology – MIT)

4. யூனிவர்சிட்டி ஆஃப் கேம்ப்ரிட்ஜ் (University of Cambridge)

5. யூனிவர்சிட்டி ஆஃப் ஆக்ஸ்ஃபோர்ட் (University of Oxford)

6. கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (California Institute of Technology)

6. யூனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா, பெர்க்லி (University of California, Berkeley)

8. பிரின்ஸ்டன் யூனிவர்சிட்டி (Princeton University)

9. யூனிவர்சிட்டி ஆஃப் சிக்காகோ (University of Chicago)

10. கொலம்பியா யூனிவர்சிட்டி (Columbia University)

11. யூனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் (University of California, Los Angeles) (Tie)

12. யேல் யூனிவர்சிட்டி (Yale University) (Tie)

13. ஜான் ஹாப்கின்ஸ் யூனிவர்சிட்டி (Johns Hopkins University)

14. கார்னெல் யூனிவர்சிட்டி (Cornell University)

15. யூனிவர்சிட்டி ஆஃப் பென்சில்வேனியா (University of Pennsylvania)

இந்தியப் பல்கலைக்கழகங்கள்:

தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் வெளியிட்டுள்ள 2015 ஆம் ஆண்டின் தரவரிசைப் பட்டியலில் உள்ள 800 பல்கலைக்கழகங்களில் 17 இந்தியப் பல்கலைக் கழகங்களும் இடம் பிடித்துள்ளன. இந்தியாவில் முதலிடம் பிடிக்கும் ‘இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ (Indian Institute of Science) இத்தரவரிசையில் பிடித்துள்ள இடம் 251-300 க்குள், 351-600 பிரிவுக்குள் ‘இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’ – பம்பாய், டெல்லி, காரக்பூர், சென்னை, கௌஹாத்தி, கான்பூர், ரூர்க்கி ஆகியவை வரிசையாக இடம் பிடித்துள்ளன.

மேலும்ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், அம்ரிதா பல்கலைக்கழகம், ஆந்திரா பல்கலைக்கழகம், பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கல்கத்தா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் ஆகிய ஒன்பது பல்கலைக்கழகங்களும் ‘தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ வெளியிட்டுள்ள 2015 ஆம் ஆண்டின் தரவரிசைப் பட்டியலில் 800 பல்கலைக்கழகங்களுள் இடம் பிடித்துள்ளன. தமிழகத்தில் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி – சென்னை தவிர வேறு எந்த ஒரு பல்கலைக்கழகமும் இந்த தரவரிசைப் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது வருத்தம் தரும் நிலை.

____________________________________________________________________

தகவல் உதவி:

(1)

The 2015 World University rankings: Are these really the planet’s best schools?

https://www.washingtonpost.com/blogs/answer-sheet/wp/2015/09/30/the-2015-world-university-rankings-are-these-really-the-planets-best-schools/

(2)

Top 100 world universities 2015/16 – THE rankings

http://www.telegraph.co.uk/education/universityeducation/11896268/Top-100-world-universities-201516-THE-rankings.html

(3)

The Times Higher Education World University Rankings 2015-2016 list the best global universities

https://www.timeshighereducation.com/news/world-university-rankings-2015-2016-results-announced

(4) The Academic Ranking of World University

http://www.shanghairanking.com/ARWU2015.html

(5) U.S. News & World Report- 2015 Best Global University Rankings

http://www.usnews.com/education/best-global-universities/rankings?int=9cf408

(6) The Center for World University Rankings (CWUR)

http://cwur.org/2015/

(7) Times Higher Education World University Rankings

https://en.wikipedia.org/wiki/Times_Higher_Education_World_University_Rankings


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?”

அதிகம் படித்தது