மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலக அரசியலில் ஈழம்

ஆச்சாரி

Mar 22, 2014

தமிழர்களைப் பொறுத்தவரை ஈழம் என்பது நீதி ஆனால், உலகநாடுகளுக்கு அது ஒரு அரசியல் வியாபாரம். இதில் நாம் எப்படி வியாபாரம் செய்கிறோம் என்பதில் தான் ஈழஅரசியல் உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு நாட்டின் நிலைப்பாட்டையும் நாம் அறிவது நம் போராட்டத்தை அறிவார்ந்த பாதையில் இழுத்துச்செல்லும்.

ஐநா அரசியல் :

உலகப்போர் முடிந்து பின் உருவான இந்த உலக அமைப்பு ஆரம்ப காலங்களில் மீண்டும் ஒரு உலகப்போர் நடக்காமல் இருப்பதற்காக நாடுகளுக்கிடையே உள்ள சிக்கல்களை பேச்சுவார்த்தையின் மூலம் சரி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. பின்பு அது மனிதாபிமானதுக்காகவும் உள்நாட்டு சிக்கல்களை தீர்த்துவைக்கும் அமைப்பாகவும் செயல்பட்டது. ஆரம்ப காலங்களில் அமெரிக்காவுக்கும் ருசியாவுக்கும் பனிப்போர் நடந்த காலங்களில் உலகம் இரண்டு சமமான அணியை கொண்டிருந்தது. அப்பொழுது அமெரிக்கா எதை ஆதரிக்கிறதோ, ருசியா அதை எதிர்க்கும். இந்த சமநிலை ஓரளவு உலகில் மனிதாபிமானம் வர்த்தகம் ஆகாமல் காத்தது. இதற்கு முதன்மை காரணம் இடதுசாரி வலதுசாரி கொள்கை அடிப்படையிலான உலகஅரசியல். 1990 களில் ருசியா உடைந்த பின் அமெரிக்காவின் கை மேலோங்கியது. அதற்குப்பின் எல்லா நாடுகளும் உலக பொருளாதார கொள்கையின் மூலம் தன்வர்த்தக நலனை முன்னிறுத்த ஆரம்பித்தது அல்லது குறுகிய அரசியல் நலனை முன்னிறுத்த ஆரம்பித்தன. சீனா, ருசியா, அமெரிக்க என எல்லா நாடுகளும் இன்றைய சூழலில் இதே நிலைப்பாட்டைத்தான்  கொண்டுள்ளன. ஐநா என்ற அமைப்பு இருக்கும் வரைதான் வல்லரசுநாடுகள் பாதுகாப்பாக தங்கள் ஆதிக்கத்தை செலுத்தமுடியும். இன்று ஐநா ஒரு அரசியல்வர்த்தகம் செய்யும் இடம்.

ஐரோப்பிய அரசியல் :

ஐரோப்பிய நாட்டு மக்கள் மனிதாபிமானம், விடுதலை போன்றவற்றில் அதிகம் நம்பிக்கை உள்ளவர்கள். அரசுகளுக்கு ஈழம் பிறப்பதால் பெரிய நட்டமும் இல்லை இலாபமும் இல்லை. ஆனால் அவர்களின் இன்றைய கவலை தங்களை ஆட்டிப்படைக்கும் பொருளாதார சூழல். ஐரோப்பிய கூட்டமைப்பு, பொருளாதார வீழ்ச்சி அடைந்தவுடன் அந்த நாட்டு அரசுகள் தங்களுக்கு 1% சதவீதம் தங்கள் நாட்டின் நலனை பாதிக்கும் சூழல் இருந்தால் கூட அதைச் செய்ய தயங்குவர். அதனால் அவர்கள் அமெரிக்காவை முன்னிறுத்தவே விரும்புகின்றனர். மற்றும் இதில் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளவும்  அவர்கள் விரும்பவில்லை. கேரள மீனவர்கள் கொல்லப்பட்டதில் கூட இத்தாலி தனித்துவிடப்பட்டுள்ளதை கவனிக்கவும். இவர்களை நம்புவதில் எந்தப்பயனும் இல்லை.

சீன அரசியல் :

சீனாவைப் பொறுத்தவரை எல்லா நாடுகளிலும் ஒரே நிலைப்பாடு தான். அது அந்த நாட்டின் ஆளும் அரசாங்கத்தை ஆதரிப்பது. ஆளும் அரசை ஆதரித்து அதனோடு வர்த்தகத்தை பெருக்கிக்கொள்வதே அதனுடைய நோக்கம். நாளை ஈழம் பிறந்தாலும் அது தமிழர்களை ஆதரிக்கும். ஆனால் அதுவரை தமிழ்ஈழத்தை ஆதரிக்காது. இந்தியாவைப்போல் பாலஸ்த்தீனியத்தில் ஒரு நிலைப்பாடு இலங்கையில் ஒரு நிலைப்பாடு என்றில்லாமல் நேர்மையாக தாங்கள் ஒரு நிலைபாட்டில் இருப்பதை பாராட்டியே ஆகவேண்டும்.

இந்திய அரசியல்:

இந்தியா என்றுமே தனி ஈழம், இனப்படுகொலை என்ற ஒரு வலுவான தீர்மானத்தை ஆதரிக்காது. முக்கியமாக காங்கிரஸ், பா.ஜ.க இருக்கும் வரை நடக்காது.

அதற்கான காரணங்கள் :

1. இந்தியாவே இந்தப் போரில் நேரிடையாக ஈடுபட்டுள்ளது. அதற்கு இலங்கை நிறைய சாட்சியங்களை வைத்துள்ளது. சர்வதேச விசாரணை வந்தால் அதில் அதிகம் மாட்டிக்கொள்வது இந்தியாவாகத்தான் இருக்கும்.

2. என்றுமே தமிழர்களுக்குகென்று ஒரு நாடு அமைவதை இந்தியா விரும்பாது. இதன் காரணமாகவே விடுதலைப்புலிகளை அழிக்க நினைத்தது.

3. விடுதலைப் புலிகளை அழிப்பதன் மூலம் இந்தியாவிலும் தமிழர்களை அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் மொழி இனத்தை முன்னிறுத்தும் அரசியலை முடிவாக வலுவிழக்க செய்யமுடியும் என்பது இந்தியாவின் எண்ணம்.

இப்பொழுதும் இலங்கையை மிரட்டி பணியவைத்து 13 ஆம் அம்ச கோரிக்கையை நிறைவேற்ற முடியும். ஆனால் இந்தியாவுக்கு உள்ளப்பூர்வமாக அந்த எண்ணம் இல்லை. அது இலங்கைக்கு கால அவகாசம் கொடுத்து மொத்த தமிழர்களையும் அழிக்கவே நினைக்கிறது.

அமெரிக்க அரசியல் :

போருக்குமுன் ஈழம் உருவாவதில் அமெரிக்காவுக்கு உடன்பாடு இல்லை. அது ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தீர்வு என்பதையே விரும்பியது. விடுதலைப் புலிகள் உள்ளவரை இது சாத்தியமில்லை என்பதால் அது விடுதலைப்  புலிகளை ஒழிக்க இலங்கைக்கு உதவியது. போருக்கு பின் இலங்கை, இனப்பிரச்சனைக்கு முடிவு கொண்டுவரும் என்று நினைத்தது. அந்தஅடிப்படையிலே அது இலங்கைக்கு உதவியதால் அதற்கு ஏமாற்றமே. இந்த நிலையில் போருக்குப்பின் அமெரிக்காவின் நிலைப்பாடு கண்டிப்பாக மாறியிருக்கக்கூடும்.

அப்படி இருந்தும் அமெரிக்கா ஏன் ஒருவலுவில்லாத தீர்மானத்தை கொண்டுவரவேண்டும். அதற்கான காரணங்கள் என்ன?

1. தனிஈழம், இனப்படுகொலை என்ற வாசகங்களை எந்தநாடுகளும் கண்டிப்பாக ஆதரிக்கப்போவதில்லை. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பின்னே தான் நிற்கும். இந்த நாடுகள் தங்களின் அரசியல் வியாபார நலனை விட்டுக்கொடுக்காது. இலங்கையை புறக்கடையில் வீழ்த்தத்தான் பார்க்கும். மற்ற ஆசிய நாடுகளுக்கு தங்கள் நாட்டிலே இது போன்ற உள்நாட்டு சிக்கல்கள் உள்ளன. தேவையில்லாமல் இந்த தீர்மானத்தை ஆதரித்து தங்களின்வருங்காலத்தை சிதைத்துக்கொள்ளாது. மாறாக போர்குற்றம் அதன் விசாரணையின் முடிவில் இனப்படுகொலை என்று அறிவிக்கப்படுவதையே விரும்பும். தோற்கடிக்கப்படும் தீர்மானத்தைக் கொண்டுவருவதில் அமெரிக்காவுக்கு பின்னடைவையே தரும். சுய நினைவு கொண்ட எந்த நாடும் இதை செய்யாது. அந்தவகையில் அமெரிக்காவின் நிலைப்பாடு கண்டிப்பாக தவறு இல்லை.

2. இந்த வலுவில்லாத தீர்மானத்தால் இந்தியாவை ஒரு இக்கட்டான சூழலில் விடுவதே தற்போதைக்கு அமெரிக்காவின் எண்ணம். வலுவான தீர்மானத்தை கொண்டுவந்தால் அதை வலுவில்லாமல் ஆக்கி இலங்கையிடம் நல்ல பெயர் வாங்க இந்தியா முயற்சி செய்யும்.

ஈழம் அமைவதில் அமெரிக்காவுக்கு உடன்பாடு இல்லையா?

இதை நாம் உறுதியாகச்சொல்லமுடியாது. ஈழம் அமைவதால் அமெரிக்கா எதையும் இழக்கப்போவதில்லை. அதுவும் சீனமயமாகிய இலங்கையின் நட்பை விட, ஒரு புதிய நாடு உருவாகுவதைத்தான் அது விரும்பும். ஆனால் ஈழத்திற்கான பேரத்தை அது ஈழத்தமிழர்களிடம் பேசுவதை விட ஆறுகோடி மக்கள் கொண்ட தமிழகஅரசியல் பிரதிநிதிகளிடமே பேசவிரும்புகிறது.

இதற்கு என்ன  ஆதாரம்?:

2009 இல் போர் முடிந்தபின், அமெரிக்கா இலங்கையின் நகர்வுகளை நெருங்கி பார்த்துக்கொண்டுதான் இருந்தது. விடுதலைப்புலிகளை ஒழித்தவுடன் நாட்டை சீரமைத்து தமிழர்களுக்கு சமஉரிமை கொடுக்க 13 ஆம் அம்ச கோரிக்கையை நிறைவேற்றும் என்றுதான் நம்பியது. 2009 இல் இருந்து 2011 வரை இலங்கைக்கு கால அவகாசம் கொடுத்து அந்த இடைப்பட்ட காலங்களில் நல்லெண்ண தூதின் மூலம் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தது. முதலில் கண்ணிவெடிகளை அகற்றுவதாக பிதற்றிக்கொண்டு தீர்வுகளை தள்ளிக்கொண்டிருந்தது. அமெரிக்கா இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கையும் கொடுத்தது. ஆனால் சீனா இந்தியாவின் ஆதரவை வைத்துக்கொண்டு, இலங்கை அமெரிக்காவின் கோரிக்கையை மதிக்கவில்லை.

மெல்ல அமெரிக்கா இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முதல்படியை வைத்தது. அது ஜூலை 2011 ஆம் ஆண்டில் ஹிலரி கிளிண்டன் ஜெயலலிதாவை சந்தித்தது ஈழ வரலாற்றில் 2009 போருக்கு பின் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு. நாம் கருணாநிதியை இனதுரோகி என்றும் ஜெயலலிதாவை ஈழத்தாய் என்றும் வர்ணித்துக் கொண்டிருந்த காலங்களில்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இதை பல தமிழர்கள் கவனிக்கத் தவறி விட்டனர். மற்றும் இதன் முக்கியத்துவத்தையும் நாம் அறியவில்லை. இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்னரே இலங்கை சம்பந்தமான பேச்சுகள் எப்படி இருக்க வேண்டும் என்று இந்திய நடுவண் அரசும் உள்துறையும் ஜெயலலிதாவுக்கும் ஹிலாரிக்கும் அழுத்தம் கொடுத்தன. இந்த சந்திப்பைக் கண்டு இலங்கை மிகவும் அச்சத்தில் இருந்தது. இந்தியாவுக்கும் தன்னுடைய அழுத்தத்தைக் கொடுத்தது. இன்று அமெரிக்காவை வலுவாக எதிர்ப்பவர்கள் ஜெயலலிதா இலங்கை விடயத்தில் தமிழர்களின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்பதை உணரவேண்டும். இதற்குக்காரணம் அவருடைய அமெரிக்க எதிர்ப்பு அரசியல் மற்றும் அவரின் அரசியல் பிறப்பே. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின்னர் இந்தியத்தை முன்னிறுத்தி ஈழத்தையும், தமிழர் இனநலனை பின்னிறுத்தும் அரசியல் உருவானது. இந்த சந்திப்பின் முடிவில் ஹில்லாரி ஈழத்துக்கான அரசியலை இந்தியாவில் பேச முடியாது என உணர்ந்து அவரை அமெரிக்காவிற்கு அழைத்தார். தமிழகத்தின் முன்னேற்ற சாதனைகளை சொல்வதற்காக முதல்வரை அமெரிக்கா அழைத்ததாகக் கூறினார் (இதில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?). இதைச் சொல்லாமல் ஈழம் அமைக்கலாம் வாங்க என்று அமெரிக்கா அழைக்கமுடியுமா என்ன? இதைவிட தமிழர்களுக்கு என்ன மரியாதையை ஒரு மிகப்பெரியநாடு கொடுத்து விட முடியும்? .

அமெரிக்கத்  தீர்மானத்தை எதிர்க்கலாமா?

கண்டிப்பாக எதிர்க்கவேண்டும். அதையே தான் அமெரிக்காவும் விரும்புகிறது. ஆனால் எதிர்ப்பை தமிழ்நாட்டில் இருந்துதான் எதிர்பார்க்கிறது. அதுவும் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதியின் மூலம் எதிர்பார்க்கிறது. அமெரிக்காவை எதிர்ப்பது எப்படி இருக்கவேண்டும் என்று கடந்த கட்டுரையில் கூறி இருந்தேன்.

http://siragu.com/?p=13106

ஆனால் இனப்படுகொலை, தனிஈழம், பொதுவாக்கெடுப்பு இந்த வாசகங்கள் இல்லாமல் ஒரு வலிமையான தீர்மானத்தைக் கொண்டுவரவே அமெரிக்கா விரும்பும். அதுவே வெற்றிபெரும் என்பதால் அதையே தமிழர்களுக்கு முன்னிறுத்தும். அப்படி ஒரு தீர்மானத்தை இப்படி வலிமையடையச் செய்யலாம்.

1.  சர்வதேச அமைதிப்படையை ஈழத்தில் அமர்த்தி தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அல்லது கண்காணிப்பது.

[இது இலங்கையின் இராணுவத்தை தமிழ் மண்ணில் இருந்து அகற்றவும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் உதவும்]

2. இதற்குப் பின்பு போர்குற்ற விசாரணையை மட்டும் கொண்ட தீர்மானத்தை நாம் ஏற்பதில் தவறு இல்லை. இன்றைய தேவை ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்பு.  அதை நாம் உறுதி செய்யவேண்டும்.

இந்தக் கோரிக்கையில் இனப்படுகொலை என்பது விடுபட்டிருக்கலாம் ஆனால் இவை தமிழர்களை பாதுகாக்கவும் ஈழம் உருவாகவும் ஒரு விதையாக இருக்கும். மற்றும் இனப்படுகொலை, பொது வாக்கெடுப்பு, தனிஈழம் என்ற கோரிக்கையைக் கொண்ட தீர்மானம்  வெற்றிபெற வாய்ப்பில்லை. மாறாக தனித்தமிழ் ஈழம் தான் அமைக்கவேண்டும் என்று நினைத்தால் அது போரின் மூலமே அடைய முடியும். அதற்கு தமிழ்ச்சமூகத்திற்கு வலிமை உள்ளதா என்பதை உங்களின் தற்சோதனைக்கே விட்டுவிடுகிறேன்.

இதே தீர்வைத்தான் நோர்வேயின் மூலம் ஐரோப்பிய நாடுகள்  கொண்டுவர முயற்சித்தன. இது தோல்வி அடைந்தவுடன் நோர்வே இந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று அறிக்கை விட்டது. நோர்வே அப்படி செய்தது நல்ல செயல் அல்ல. அது மிகப்பெரிய பின்னடைவை விடுதலைப்புலிகளுக்குக் கொடுத்தது. 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் விடுதலைப்புலிகள் அமெரிக்காவால் ஐரோப்பிய ஒன்றியத்தால் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டது முதல் இலங்கை பல்வேறு நாடுகளிடம் ஆயுத உதவியும் நட்பும் இதை வைத்தே அது பெற முடிந்தது. போர் நடந்த பொழுது கூட மற்ற நாடுகள் விடுதலைப்புலிகள் ஒழிக்கப்படவேண்டும் என்றே விரும்பினர். இதற்கு நோர்வே குழுவின் அறிக்கையே காரணம். நடந்தவை நடந்தாகிவிட்டது. இன்று அதற்கான ஒரு வாய்ப்பை நமக்கு உருவாக்குவதுதான் நம்முன் இருக்கும் கடமை.

இன்று நமக்கு என்ன தேவை?:

ஈழ அரசியலை பொறுத்தவரை அமெரிக்கா  இந்தியாவை எள்ளளவும் மதிக்கவில்லை. தமிழ்நாடு அரசையே தன்னுடைய பிரதிநிதியாக பார்க்கிறது. இந்தியாவுக்கு பயந்து கடந்தமுறை அது தீர்மானத்தை மாற்றவில்லை. அதன் நோக்கம் தமிழகத்தில் இந்தியாவுக்கு எதிராக ஒரு கொந்தளிப்பை உருவாக்குவதே. அதை வெற்றிகரமாகவும் செய்தது. ஆனால் அதன் முடிவில் அது எதிர்பார்த்தது தமிழக அரசு தன்னிடம் நேரிடையாகப் பேசவேண்டும் என்பதே.

அரசியல் பேரம்பேச இன்று நமக்குத்தேவை தமிழகத்தின் பிரதிநிதி. அதை ஜெயலலிதா செய்வாரா? ஜெயலலிதாவை பொறுத்தவரை ஈழ மக்களுக்கு உள்ளப்பூர்வமாக இதுவரை எதையும் செய்ததில்லை. தன்னுடைய அரசியல் பலனுக்காகவே ஈழ அரசியலை இன்று பயன்படுத்துகிறார். அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் தமிழகஅரசுக்கு என்ன நெருக்கடியை கொடுத்தார்கள். தமிழர்களை சாகும் வரை தவிக்கவிட்டு எப்பொழுது தண்ணீர் கொடுக்கவேண்டும் எப்பொழுது ரொட்டி துண்டுகள் கொடுக்கவேண்டும் என்பதை அவர் நன்றாகவே அவர் அறிவார். சொந்த மண்ணில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு அரசியலை உருவாக்க வக்கில்லாத ஒரு இனம் அமெரிக்காவையும் ஐநாவையும் எதிர்த்து என்ன பயனை அடையப்போகிறது. ஜெயலலிதாதான் ஈழத்தின் குரல் என்று பேசுபவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் அவரை வைத்து தமிழகத்தில் கூச்சல் போடத்தான் முடியும். அதைத் தவிர்த்து எந்த நகர்வுகளையும் செய்யமுடியாது. ஜெயலலிதா நல்லவரா கெட்டவரா என்பது அல்ல இங்கு கேள்வி. அவர் ஈழ அரசியலுக்கு ஒவ்வாத ஒரு தலைவர். தமிழ் இனம் இதை புரிந்துகொள்ளவேண்டும். நமக்கு கிடைத்த 2014 தேர்தல் வாய்ப்பையும் நழுவவிட்டு விட்டோம். வரும் 2016 தேர்தலிலாவது ஈழ அரசியலை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்து ஒரே அணியில் கொண்டுவந்து ஒரு வலிமையான ஒரு போட்டியை உருவாக்கவேண்டும். இதன் முடிவில் ஆட்சியைப்  பிடிக்கவேண்டும் என்பதில்லை குறைந்தபட்சம் ஒரு 40 தொகுதிகளை கைப்பற்றினால் கூட நம்மால் ஒரு மக்கள் பிரதிநிதியாக அமெரிக்காவிடம் உலக நாடுகளிடம் பேச முடியும்.

முடிவாக :

ஈழத்துக்கான உலகஅரசியலில் கொள்கை அரசியலுக்கு இடமில்லை. எதார்த்த அரசியல் மட்டுமே வெற்றி அடையும். சூடானில் கிடைத்தது இங்கும் கிடைக்க வேண்டும் என்பது காஷ்மீர் சிக்கலையும் ஈழசிக்கலையும் ஒன்று என்று கூறுவது போன்று. நமக்கு தற்காலத்தில் என்ன சாத்தியப்படும் எதை நீண்ட காலத்துக்கு எடுத்துச்செல்கிறோம் என்பதில் தான் நம் அறிவார்ந்த அரசியல் உள்ளது. உணரவேண்டும் தமிழர்கள்.

Design www.order-essay-online.net decisions centred mainly on how best to transform topics into student e-learning experiences

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “உலக அரசியலில் ஈழம்”
  1. Rameshan says:

    The single most important reason that India will not allow any substantial initiative by US on Srilanka is that India is highly scared of outside intervention of any form within South Asia (except in Af-Pak). India abhors any precedent set in South Asia, whereby, other nationalities under Delhi’s yoke get ideas. Second most important reason is that, if SL is split into two nations with India’s help (or even if Colombo’s authority is weakened through some confederal solution), one of the sub-nation will immediately align with India’s enemies. Thus, it does not matter if it is Congress/BJP/CPI-M/ADMK/DMK in the center, as long the new PM listens to babus in the South Block and PMO, there will not be a just solution for Tamils. West can not really do much other keeping up the pressure on genocidal Rajapakshes and hope regime change happens (which I guess is India’s wish too!). Regime change will be an elegant solution most of India’s and US’s problems in SL (though will not fully address Eelam Tamils’ aspirations/demands).

    Within this context, the importance of TN Tamils becomes the most-important and indispensable. Any political or social force in TN which tries to distracts, dullens the focus on Eelam issue or uses unrealistic and useless rhetoric (DMK) has to be discouraged. We Tamils, have to be careful from conferring legitimacy through misleading titles such as eezha-Thai etc.., and always demand more from our representatives.

    Finally, even though US-led efforts fall far short of Tamil aspirations, we need to ask ourselves (TN and diaspora Tamils) how have organized and spent our time to even make these US-efforts successful.

அதிகம் படித்தது