மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலக காடுகள்: காடழிப்பு நடவடிக்கைகளும் அதன் விளைவுகளும்

தேமொழி

Mar 13, 2021

Deforestation

இன்றைய அளவில், உலகளாவிய காடழிப்பு நடவடிக்கையில் 95% வெப்பமண்டலப் பகுதியில் இருக்கும் பிரேசில் மற்றும் இந்தோனேசியா நாடுகளில் மட்டுமே நிகழ்கின்றது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 15 பில்லியன் மரங்கள் வெட்டப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 10 மில்லியன் ஹெக்டேர் பரப்புள்ள காடுகளை நாம் இழக்கின்றோம் என செயற்கைக்கோள்கள் தரும் படங்கள் மூலம் கணிக்கப்படுகிறது. காடழிப்பை ஈடுகட்டும் அளவில் அவற்றில் பாதியளவு மீண்டும் மரங்கள் நட்டு காடுகள் வளர்க்கப்படுகின்றன. இருப்பினும் அதைவிடவும் அதிக அளவில் காடுகளை நாம் இழக்கின்றோம் என்கிறது ‘தரவுகள் காட்டும் நமது உலகம்’ (ourworldindata.org) என்ற ஆய்வு நிறுவனம். ‘உலக காடுகள் மற்றும் காடழிப்பு’ குறித்து விரிவாக அறியும் நோக்கில் பல தரவுகளைச் சேகரித்து காடழிப்பு நடவடிக்கைகளால் இன்றைய உலகமும், உலகின் சுற்றுச் சூழலும், உயிரினங்களும் எதிர் கொள்ளும் விளைவுகள் என்ன என்று ஆராய விரும்பி, கீழ்க்காணும் வினாக்களை எழுப்பி, அவற்றுக்கான தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றது இந்த நிறுவனம்.

(1) இன்றைய நிலவரப்படி உலகம் அதன் மூன்றில் ஒரு பங்கு காடுகளை இழந்துவிட்டது, காடழிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர இயலுமா?

(2) உலகளாவிய வகையில் ஆண்டுதோறும் நிகழ்கின்ற காடழிப்பு நடவடிக்கை 1980களில் அதன் உச்சத்தை எட்டியது. காடழிப்பை நாம் முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வர இயலுமா?

(3) நிலப்பரப்பளவில் காடுகளின் பங்கு என்ன? உலக காடுகளின் அளவில் நிகழும் தொடர் மாற்றங்கள்: காடுகளின் அழிவுகளும் தோற்றங்களும் எதனால்?

(4) காடுகள் அழிப்புக்கு எவை தூண்டுதலாக இருக்கின்றன? அனைத்து காடுகளின் அழிவுகளும் ஒன்றல்ல, காடுகளின் அழிப்புக்கும் இழப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் எவை?

(5) காடழிப்புக்குக் காரணமாகும் வேளாண் வளர்ச்சி, காடழிப்பிற்குத் துணைபோகும் நடவடிக்கைகள் எவையெவை?

(6) காடழிப்பில் வணிகத்தின் தாக்கம் என்ன, பணக்கார நாடுகள் மற்ற நாடுகளின் காடழிப்பிற்குக் காரணமா?

(7) காடழிப்பில் தனிநபர் கரியமிலவாயுவின் பங்கென்ன? காடழிப்பினால் உருவாகும் கரிம வெளியீட்டிற்குக் காரணம் உள்நாட்டுத் தேவையா அல்லது அயல்நாடுகளுடன் மேற்கொள்ளும் வணிகப் பரிமாற்றங்களா?

(8) நமது சோயா பயிர் தேவைகளால் பிரேசிலில் அமேசான் பகுதி காடுகள் அழிக்கப்படுகின்றனவா?

(9) பாமாயிலை புறக்கணிப்பது அதிகத் தீங்கை விளைவிக்கும்? இந்தோனேசியா காடுகளின் அழிவிற்கு அது காரணமாக அமையக்கூடுமா?

முக்கால்வாசி வெப்பமண்டலக் காடழிப்பு நடப்பதற்கு அடிப்படைக் காரணம் வேளாண்மை விரிவாக்கம். ஆனால் அவை யாவும் வெட்டப்படுவது முற்றிலும் அப்பகுதி மக்களுக்காகவோ, உள்ளூர் சந்தைக்காக என்று சொல்ல வழியில்லை. உலகின்14% காடழிப்பு நடவடிக்கைகள் பணக்கார நாடுகளில் உள்ள நுகர்வோர் மாட்டிறைச்சி, தாவர எண்ணெய்கள், கோக்கோ, காபி மற்றும் காகிதம் போன்ற தேவைகளுக்காகச் செய்யும் இறக்குமதியால் வெப்பமண்டலப் பகுதியின் காடுகள் அழிக்கப்படுகின்றன. கரிமத் தடம் (carbon footprint) ஆய்வுகள் மேற்கொள்வோர் முன்வைக்கும் கருத்து; ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் விளையும் பொருட்களை உணவாகக் கொள்ளும் முறையே இயற்கைக்கு நன்மை தரும். இறைச்சி (ஆடு, மாடு), பால் வழங்கும் உணவு வகைகள் பெருமளவில் காடுகளை அழிப்பதில் மறைமுகக் காரணிகளாக அமைகின்றன. காடழிப்பு என்பது இன்றைய உலகின் புதுக் கருத்தாக்கமோ செயல்பாடோ அல்ல. மனிதர்கள் பலகாலமாக இதில் ஈடுபட்டும் வருகிறார்கள் என்பது வரலாறு. காடுகள் அழிக்கப்படுவதற்கான முதன்மையான காரணங்கள் இரண்டு. ஒன்று காட்டு வளங்களுக்காக – எரிபொருட்கள், கட்டுமானப் பொருட்கள் அல்லது காகிதம் போன்றவற்றுக்காக முற்றிலும் மரங்கள் அடியோடு வெட்டப்படுதல். மற்றொன்று நிலத்தின் தேவையை முன்னிட்டு – பயிர் வளர்ப்பதற்கு விளைநிலங்கள், கால்நடைகளை வளர்ப்பதற்கான மேய்ச்சல் நிலங்கள், அல்லது வாழிடங்கள் போக்குவரத்து சாலைகள் மற்றும் நகரங்களை உருவாக்கக் காடுகள் வெட்டி நாடாக்கப்படுதல் காடுகளின் பரப்பளவைக் காலந்தோறும் குறைத்து வருகின்றது.

பொதுவாக மக்கட்தொகைப் பெருக்கமும் அவர்களின் தேவையுமே இவற்றுக்கான தூண்டுதலாக அமைகின்றன. மரங்கள் தவிர்த்து மாற்று எரிசக்தி பயன்படுத்துதல், குறைந்த நிலத்தில் அதிக மகசூல் பெரும் தொழில் நுட்ப வளர்ச்சிகள் காடுகள் விரைவில் அழிக்கப்படுவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகளாக அமையும். அத்துடன் அழிக்கும் காடுகளை ஈடுகட்ட அவற்றை உருவாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். காடுகளின் பரப்பளவை அதிகரிப்பதில் ஐரோப்பாவின் பிரான்சும், பிரித்தானியத் தீவின் நாடுகளும் அமெரிக்காவும் முன்னேற்றப் பாதையில் திரும்பியுள்ளன. காடுகள் அழிவதைக் கட்டுக்குள் கொண்டு வரலாம், மீண்டும் காடுகளை உலக சுற்றுச்சூழலைக் காக்கும் நோக்கில் மீட்டுருவாக்கம் செய்யலாம் என்று நாம் திட்டமிட விரும்பினால் நான் வாழும் உலகின் காடுகளின் பரப்பளவு, அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றை இழந்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து நாம் விரிவாக அறிய வேண்டிய தேவையும் உள்ளது.

வேளாண்மையும் காடுகளும் சுற்றுச்சூழலும் பல்லுயிரினங்களும்:

நாம் வாழும் உலகில் சுமார் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே நிலப்பரப்பு, பிற யாவும் நீர் நிரம்பிய கடல் (71% கடலும் 29% நிலப்பரப்பு கொண்டது உலகம்). இருக்கும் அந்த நிலப்பகுதியை மட்டும் 100% என்று கணக்கில் கொண்டால், அதிலும் 29% மனிதக் குடியிருப்புக்கு உகந்தது அல்ல. அதாவது மனிதர்கள் வாழத் தகுதியற்ற வகையில் 10% பனிப்பாறைகளாலும் மற்றுமொரு 19% பாலை போன்ற தரிசு நிலங்கள், கடற்கரைகள், மணல் திட்டுகள், பாறைகள் ஆகியவற்றைக் கொண்டும் அமைந்துள்ளன. 1% ஆறு, ஏரி, குளம், குட்டை என்றவகையில் நீர்நிலைகளாகவும் இருக்கின்றன. மிச்சமிருப்பதே மனிதர்கள் வாழத் தகுதி கொண்ட நிலப்பரப்பு (படம் – 1).

siragu forest1இத்தகைய வாழத் தகுதி கொண்ட நிலப்பரப்பில் எவ்வளவு காடுகள் உள்ளன? அதாவது இன்றைய புவியின் நிலப்பரப்பில் எவ்வளவு பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது? என்று பார்த்தோமானால், இன்றைய நிலவரப்படி நிலப்பரப்பில் நான்கு பில்லியன் ஹெக்டேர் கொண்ட நிலப்பரப்பு அல்லது 38% நிலம் காடுகளாக உள்ளது. சற்றொப்ப பாதி வாழத் தகுதி கொண்ட நிலப்பரப்பு வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது (15% நமது உணவுப்பயிர்களுக்காகவும் + 31% கால்நடை மேய்ச்சல் மற்றும் கால்நடைகளுக்கான தீவனத்திற்காகவும் = 46%). 1% ஊர் மற்றும் நகரக் குடியிருப்புகள். மற்றுமொரு 14% காட்டுப் புற்களும் புதர்வெளிகளும் கொண்டது.

இது இன்றைய நிலை. ஆனால் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் இறுதி பனியூழிக் காலத்திற்கு முன் (“ஹோலோசீன்” கடல் மட்ட நீர் உயர்வு காலத்திற்கு முன்) இருந்த நிலை வேறு. அக்காலத்தில் சுமார் 60% காடுகளும் 40% புல்வெளிகளும் என்று இருந்த புவியின் நிலப்பரப்பில், மனித நாகரீக வேளாண் உற்பத்தி விரிவாக்கத்தின் காரணமாக 20% காடுகள் அல்லது 2 பில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிந்துவிட்டிருக்கின்றன. அதாவது மூன்றில் ஒரு பகுதி காடுகளை உலகம் இழந்துள்ளது.

உலகக் காடுகளின் அளவில் ஏற்பட்ட மாற்றத்தை இணைத்திருக்கும் படத்தில் தெளிவாகக் காணலாம். இது கடந்த காலத்திலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. இன்று உலக அளவில் மனிதர் வாழத்தகுதி கொண்ட நிலப்பரப்பில் பாதி வேளாண்மைக்காகப் பயன்படுத்தப் படுகிறது. அதிலும் குறிப்பாக கால்நடை வளர்ப்பிற்காக வேளாண்மைக்கு உட்படுத்தப்படும் பகுதி சற்றொப்ப காடுகளுக்குச் சமமாக இருப்பதைக் காணலாம். இந்த அளவு வேளாண் விரிவாக்கம் உலகின் சுற்றுச் சூழலில் அதற்குரிய தாக்கத்தையும் தருகிறது. காடுகளின் அளவு குறைக்கப்படுவதால் உலகில் வாழும் காட்டு விலங்குகளின் வாழ்வாதாரத்தையும், பல்லுயிரியலையும் (biodiversity) வேளாண்மை விரிவாக்கம் அச்சுறுத்துகிறது.

sirgu forest 2

sirgu forest 3உலகில் அதிக அளவில் காடுகள் இருப்பது ஐரோப்பா கண்டத்தில், குறிப்பாக இரஷ்யா நாடு பெரும்பான்மையான காடுகளைக் கொண்டுள்ளது. உலகின் கால் பகுதி அளவில் காடுகள் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது. அதையடுத்து தென்னமெரிக்கக் கண்டம் காடுகளை அதிக அளவில் கொண்டிருக்கிறது. உலகக் காடுகளில் ஐந்தில் ஒருபகுதி இருப்பது தென் அமெரிக்கக் கண்டத்தில் (படம் – 2). கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒப்பீடு அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்குச் செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய வகையில் ஆண்டுதோறும் நிகழ்கின்ற காடழிப்பு நடவடிக்கை 1980களில் அதன் உச்சத்தை எட்டியது. ஒரு புரிதலுக்காக ஒரு நாட்டில் ஒருவருக்குத் தலைக்கு எத்தனை மரங்கள் உள்ளன, உலக அளவில் ஒப்பிடுகையில் ஒருவருக்கு எத்தனை மரங்கள் என்றும் விழிப்புணர்வுக்காகக் காட்டப்படுவதுண்டு (படம்-3), நாட்டின் நில அமைப்பும் பரப்பளவும் மக்கட்தொகையும் இந்த எண்ணிக்கையைப் பெரும் அளவில் பாதிக்கும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் ஒருவருக்கு 28 மரங்கள் என்ற அளவில் மரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக வரலாற்றில் பலகாலங்களில் பெரும்பகுதியாக இருந்த காடுகளும் புல்வெளிகளும் கடந்த சில நூற்றாண்டுகளாக அதிகத் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. தொழிற்புரட்சியும், அதன் விளைவால் உருவான இயந்திரங்களும், மக்கட் தொகைப் பெருக்கமும், அவர்களின் வாழும் முறையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் உலகின் சுற்றுச் சூழலையும் பல்லுயிரியலையும் குலைத்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் வாழக்கூடிய நிலப்பரப்பில் 4% மட்டுமே வேளாண்மைக்குப் பயன்பட்டது என்று கணிக்கப்படுகிறது. இன்றோ அது நிலப்பரப்பில் சரிபாதியை எட்டுகிறது. இதில் முக்கால் பகுதிக்கு மேலாக (77%) கால்நடை வளர்ப்பு மேய்ச்சல், கால்நடைகளுக்கு உணவு என்ற நோக்கில் வேளாண்மைக்கு உட்படுத்தப் படுகிறது. எஞ்சி இருக்கும் கால் பகுதிக்கும் குறைவான அளவு (23%) மனிதர்கள் உணவிற்காக வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உலக மக்களின் உணவில் கால்நடைகளால், அவற்றின் இறைச்சியால் பெரும் உணவின் அளவோ சற்றொப்ப ஐந்தில் ஒரு பகுதிதான் (18%).

மொத்த வேளாண் நிலப் பயன்பாடு என்பது பயிர்நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களின் பயன்பாட்டை உள்ளடக்கியது (total agricultural land use = cropland+pastureland). உலகில் 28,000 வகை உயிரினங்கள் அழிவை நோக்கிச் செல்வதாக மதிப்பிடப் பட்டுள்ள பட்டியலில், இது போன்று மனித இனம் செய்யும் வேளாண் விரிவாக்கத்தால், 24,000 வகை உயிரினங்கள் வேளாண்மை காரணத்தால் மட்டுமே அழிவை எட்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கால்நடை இறைச்சிக்காக மேய்ச்சல் தீவனம் என்ற வகையில் வேளாண்மை விரிவாக்கம் குறித்து பலநாடுகளையும் ஒப்பிடுகையில் அதில் தாவர உணவு வழக்கத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியா பிறநாடுகளில் இருந்து தனித்து நிற்பதைக் காணலாம். இந்திய வேளாண்மை மனிதர்களின் உணவுக்காகப் பயிர் விளைநிலங்கள் (<55%) என்ற வகையில் அமைந்திருக்கிறது. ஒப்பீட்டைக் காட்டும் படத்தில் இந்தியாவின் வேளாண் நிலப் பயன்பாடு 200 மில்லியன் ஹெக்ட்டேருக்கும் குறைவாக இருப்பதையும் பிற நாடுகளுக்கு, குறிப்பாக சீனாவிற்கு 600 மில்லியன் ஹெக்ட்டேருக்கும் காட்டப்பட்டிருப்பதையும் குறிப்பில் கொள்ள வேண்டும். கால்நடை மேய்ச்சல் தீவனத்திற்கான வேளாண்மை இந்தியாவில் (பச்சை நிறம்) மிகக் குறைந்த அளவில் (<5%) இருப்பதையும் காணலாம். உலகின் மக்கட்தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கும் நிலையில் குறைந்த அளவில் இறைச்சி உண்பது அல்லது முற்றிலும் இறைச்சி தவிர்ப்பது போன்ற உணவுப் பழக்கம் வேளாண் நிலப் பயன்பாட்டில் இத்தகைய தாக்கம் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது (படம்-4, படம்-5).

sirgu forest4

sirgu forest5முன்னர் 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், தலைவிகித வேளாண் நிலம் (Agricultural area per capita) என ஒருவருக்கு உணவு உற்பத்தி செய்யத் தேவைப்படும் வேளாண் நிலத்தின் அளவு 1.45 ஹெக்ட்டேரிலிருந்து 0.63 ஹெக்ட்டேருக்குக் குறைந்துள்ளது. குறைந்த நிலத்தில் அதிக மகசூல் பெறும் வண்ணம் தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் இன்று முன்னேறியிருந்தாலும் நமது உணவின் தேவையைத் தாவரங்களில் இருந்து மட்டும் பெற்று இறைச்சியைத் தவிர்த்தோம் என்றால் வேளாண்மைக்கு உள்ளன நிலங்களை அதில் இருந்து மீட்கவும், அங்கே காடுகளை மீட்டுருவாக்கம் செய்து பல்லுயிரினங்களை ஓம்பவும் நம்மால் இயலும்.

வெப்பமண்டலக் காடுகள் அழிக்கப்பட்டு வருவது தொடர்கிறது. மிதவெப்பமண்டலப் பகுதிகளில் விழிப்புணர்வு காரணமாகக் கடந்த 30 ஆண்டுகளில் மீண்டும் காடுகள் உருவாக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. பல நாடுகள் காடுகளை அழிப்பதைக் குறைத்து மீண்டும் மரங்களை நட்டு காடுகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. முயற்சிகள் முன்னேற்ற வழியில் தொடர்ந்தால் மீண்டும் காடுகளின் அளவை முன்னிருந்த நிலைக்கு மீட்டெடுக்க முடியும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் அதற்குக் காடுகள் அழிவதற்கு எவையெவை தூண்டுகோலாக இருக்கிறது என்பதை அறிவதும் தேவை.

sirgu forest6உலகளாவிய நிலையில் காடுகளின் இழப்பு இருவகைப்படும். ஒன்று – காடுகளின் அழிப்பு (deforestation); இது இனி காடுகள் மீள வழியில்லாத இழப்பு. மற்றொன்று – காடுகளின் சீரழிவு (forest degradation). நாம் இழக்கும் உலகக் காடுகளில் சுமார் கால் பகுதியும் காடழிப்பால் ஏற்படுகிறது. காட்டு வளங்களை மீதமுள்ள முக்கால் பகுதியில் சுமார் ஒரு கால்பகுதி காடுகளின் வளங்களைச் சுரண்டுதல், மற்றொரு கால்பகுதி தற்காலிக விளைநிலமாக மாற்றப்படுதல், மீதமுள்ள கால்பகுதி காட்டுத்தீக்கு இரையாதல் என்ற வகையில் சீரழிவுக்கு உள்ளாகின்றது. சீரழிவுக்கு உள்ளாகும் காடுகள் மீட்கப்படக் கூடியவையே. நிரந்தரமாக அழிவுக்கு உள்ளாகும் காடுகளில் 95% அளவு மீட்கவே வழியில்லாதவை (படம் – 6). மீட்கவே வழியில்லாத காடுகளின் அழிப்பு, பெரும்பான்மையான ஏழை நாடுகளில் வெப்பமண்டலக் காடுகளாக இருக்கின்றன. மாறாக, மிதவெப்பமண்டலக் காடுகளின் அழிவு, சீரழிவு என்ற பிரிவில் அடங்குவதால் அவை முன்னிருந்த நிலைக்கு மீட்டுருவாக்கம் செய்ய வாய்ப்புள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா போன்ற மிதவெப்பமண்டலப் பகுதிகள் தங்கள் நாடுகளை மீட்டுருவாக்கம் செய்வதில் முன்னேறி வருகின்றன.

வெப்பமண்டலக் காடுகளின் அழிவிற்கு உந்துதலாக இருப்பது பன்னாட்டு வணிக நடவடிக்கைகள். பன்னாட்டு வணிகம் காரணமாக உலகப் பணக்கார நாடுகளின் நுகர்வோர் தேவைக்காக வெப்பமண்டலப் பகுதி ஏழை நாடுகள் தங்கள் மழைக்காடுகளை அழித்து வருகின்றன என்பது ஆய்வுகள் காட்டும் மறுக்கமுடியாத உண்மை. குறிப்பாக லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதி பாமாயில் மற்றும் சோயா போன்ற பயிர்களை வளர்ப்பதற்காகவும், மாட்டிறைச்சி உற்பத்திக்காக மேய்ச்சல் நிலங்களை உருவாக்கவும் காடுகள் அழிக்கப்படுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. உலகின் பாதிக்கும் மேற்பட்ட உயிரினங்கள் வெப்பமண்டலக் காடுகளில் வாழ்கின்றன. அவற்றின் சுற்றுச்சூழல் பன்மைத் தன்மை கொண்டது. அப்பகுதியின் சுற்றுச்சூழலை நிரந்தரமாக மாற்றியமைப்பதால் உயிரினங்கள் பலவற்றின் வாழ்வாதாரம் பாதிப்பிற்குள்ளாகி அவை உலகில் இருந்து நிரந்தரமாக மறைந்துவிடும் கெடுவாய்ப்பும் உள்ளது. எனவே வெப்பமண்டல மழைக்காடுகளைத் தங்களின் உறைவிடமாகக் கொண்டுள்ள பல்லுயிர் காக்கும் நோக்கிலும், சுற்றுச் சூழலைக் காக்கும் நோக்கிலும் காடுகள் அழிவுக்குள்ளாவதைத் தடுப்பதில் வெப்பமண்டலக் காடுகள் பாதுகாப்பிற்கு முதன்மையும் முன்னுரிமையும் கொடுக்கப்பட வேண்டும்.

குறிப்பு:

காடுகள் அழிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றைக் குறித்து தரவுகளுடன் கூடிய பல விரிவான ஆய்வுக் கட்டுரைகளை ‘அவர் வேர்ல்ட் இன் டேட்டா’ தளத்தில், மேலும் பல விளக்கப் படங்களின் உதவியுடன் படித்து அறியலாம். இக்கட்டுரை அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துக் கொடுக்கும் ஒரு சிறு முயற்சி.

மேற்கோள்:

காடுகள் மற்றும் காடழிப்பு பற்றிய முக்கிய கட்டுரைகள்

Hannah Ritchie and Max Roser (2021) – “Forests and Deforestation”.

Published online at OurWorldInData.org.

Retrieved from: ‘https://ourworldindata.org/forests-and-deforestation’ [Online Resource]

———–


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலக காடுகள்: காடழிப்பு நடவடிக்கைகளும் அதன் விளைவுகளும்”

அதிகம் படித்தது