மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை

தேமொழி

Sep 20, 2014

nalvaazhvu4உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியர்களில் 15% மக்களே, அதாவது சற்றொப்ப 6 பேரில் ஒருவரே தங்கள் வாழ்க்கையில் தங்களுக்கு மனநிறைவு தரும் நல்வாழ்வு அமைந்திருப்பதாகக் கருதுகிறார்கள். இத்தகவலை வழங்கி இருப்பது ‘காலப்-ஹெல்த்வேஸ்’ நிறுவனம் நடத்திய, நல்வாழ்வு கருத்தாய்வு அறிக்கை (Gallup-Healthways’ well-being survey report). இந்த வாரம் (செப்டம்பர் 16, 2014) அன்று வெளியான இந்த அறிக்கையில்,   காலப் கணக்கெடுப்பு ஆய்வுக் குழு, 135 நாடுகளில் உலகளாவிய கருத்துக் கணிப்பு நடத்தி நாடுகளை அவற்றின் “நல்வாழ்வு குறியீட்டெண்” (Gallup-Healthways Global Well-Being Index) அடிப்படையில் தரவரிசைப் படுத்தியுள்ளது.

nalvaazhvu1கடந்த எட்டு ஆண்டுகளாக உலகளாவிய நிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அனைத்துலக நாடுகளிலும் …

(1) வாழ்க்கையில் குறிக்கோள்

(2) ஆதரவான சமுக உறவுகள்

(3) பொருளாதார நிலை

(4) சமுதாயத்தில் நிறைவுள்ள வாழ்க்கை அமைப்பு

(5) உடல் நலம்

ஆகிய காரணிகளின் (factors include having purpose, having supportive social relationships, being financially secure, being satisfied with the community and being physically healthy) அடிப்படையில் கேள்விகளை முன்வைத்து மதிப்பீடு செய்தது. இந்தக் காரணிகள் மக்களின் கருத்தினை அளவிடுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் முன்னேறிய நிலையைப் பற்றி அந்த நாட்டின் உற்பத்தி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்ற தரவுகளின் அடிப்படையில்தான் மதிப்பிடப்படும். அதற்கு மாறாக இந்த ஆய்வு, மக்கள் இந்தக் காரணிகளைப் பற்றி என்ன கருத்துகள் கொண்டுள்ளார்கள் என்ற கோணத்தில் அவர்கள் மனநிலையை அறிந்து கொள்ள முயன்றுள்ளது.

nalvaazhvu5[1] குறிக்கோள் அலகுகள்: தினசரி வாழ்வில் பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது, வாழ்வில் குறிக்கோளை அடைவோம் என்ற முயற்சியுடனும் நம்பிக்கையுடனும் இருப்பது

[2] சமூக உறவுகள் அலகுகள்: ஆதரவு தரும் உறவுகள் இருப்பது, அன்பும் பாசமுள்ளவர்களுடன் வாழ்வது

[3] பொருளாதார அலகுகள்: பொருளாதார நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் செல்வம் தரும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகவும்,   இல்லாமை தரும் மன உளைச்சல் குறைவாகவும் இருப்பது

[4] சமுதாயக் கட்டமைப்பு அலகுகள்: பிடித்தமான வசிக்கும் இடமும் அங்கு பாதுகாப்பு பற்றிய அச்சுறுத்தல் இல்லாமை, தங்களுடைய சமூகம் பற்றிய பெருமித உணர்வு கொண்டிருப்பது

[5] உடல்நல அலகுகள்: நல்ல உடல் நலமும், தினசரி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆற்றலும் பெற்றிருப்பது.

மேற்குறிப்பிட்ட ஐந்து காரணிகளில் மூன்றோ அல்லது அதற்கும் அதிகமான காரணிகளில் மக்கள் மனநிறைவுடன் இருக்கும் நாடுகளை தரவரிசைப் படுத்தியதில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் நாடுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பட்ட நிலையில் இருப்பது தெரிய வருகிறது.

nalvaazhvu2உலக நல்வாழ்வின் குறியீடு ஆய்வு 2013 ஆம் ஆண்டில் 133,000 மக்களிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்புத் தரவுகளின் படி “பனாமா நாடு” அதிக மதிப்பெண் பெற்று தரவரிசைப்படி நல்வாழ்வில் முதலிடம் வகிக்கிறது. தொடர்ந்து போர்களும் கலவரங்களும் நிறைந்துள்ள சிரியாவும், ஆப்கானிஸ்தானும் முறையே 134 மற்றும் 135 ஆவது இடங்களைப் பெற்று வரிசையின் இறுதியில் இருக்கின்றன.

இந்தியாவின் நிலை 135 நாடுகளின் தரவரிசையில் நடுவில் உள்ளது. சரி பாதி நாடுகள் இந்தியாவை விட மேலான நிலையிலும், அடுத்த பாதி இந்தியாவை விட மோசமான நிலையிலும் உள்ளன.

பொதுவான மனநிறைவு அடிப்படையில்:

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகளில் மனநிறைவுடன் இருக்கும் நாடுகள் அமெரிக்க கண்டத்திலும் (33%) … குறிப்பாக மத்திய அமெரிக்கப் பகுதியிலும் உள்ளன. அடுத்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் இடம் பிடிக்கின்றன (21%).   மத்தியக்கிழக்கு நாடுகளும் ஆப்பிரிக்க நாடுகளும் இறுதி இடங்களில் இருக்கின்றன.

வாழ்க்கையின் குறிக்கோள் தரும் மனநிறைவு அடிப்படையில்:

அமெரிக்க நாடுகளும், ஐரோப்பிய நாடுகளுமே முதல் இரு இடங்களையும் முறையே பிடிக்கின்றன (37%, 22%). மத்தியக்கிழக்காசிய நாடுகளும், பிற ஆசிய நாடுகளும் இறுதி நிலைகளில் உள்ளன.

ஆதரவான உறவுகள் தரும் மனநிறைவு அடிப்படையில்:

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னணியிலும் (முறையே 43%, 27%), ஆப்பிரிக்க நாடுகள் கடை நிலையிலும் இடம் பிடிக்கின்றன.

பொருளாதார நிலை தரும் மனநிறைவின் அடிப்படியில்:

ஐரோப்பிய நாடுகள் (37%) முதன்மை இடங்களையும், தொடர்ந்து அமெரிக்க நாடுகளும் (29%), வழக்கம் போல ஆப்பிரிக்க நாடுகள் இறுதி நிலையிலும் உள்ளன.

சமூகக் கட்டமைப்பு தரும் பாதுகாப்பின் மனநிறைவின் அடிப்படையில்:

அமெரிக்க நாடுகள் (37%) முன்னணியிலும், அடுத்து ஐரோப்பிய நாடுகளும் (28%), இறுதியில் ஆப்பிரிக்க நாடுகளும் இடம் பிடிக்கின்றன.

உடல்நலம் தரும் மனநிறைவின் அடிப்படையில்:

nalvaazhvu3அமெரிக்க நாடுகளை (36%) அடுத்து ஆசிய நாடுகளும் (23%) இடம் பெற, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் இறுதி இடத்தையும் பெறுகின்றன.

உலக அளவில், வாழ்க்கையின் குறிக்கோள் அடிப்படையில் ஐந்து பேரில் ஒருவரும், மற்ற சமுக ஆதரவு, பொருளாதாரம், உடல்நலம், மற்றும் சமுக கட்டமைப்பு தரும் பாதுகாப்பு ஆகியவற்றில் நான்கு பேரில் ஒருவரும் மன நிறைவுடன் இருக்கிறார்கள்.

மத்திய அமெரிக்க நாடுகளில் மக்கள் பொதுவாகவே தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலையில் இருப்பது இதற்கு முன்னர் பிற கருத்தாய்வுகள் வழியாகவும் தெரிய வந்துள்ளது. அத்துடன் அவர்களின் நம்பிக்கைகளுக்கும், நேர்மறை எண்ணங்களுடன் வாழ்க்கையை அணுகுவதற்கும் அவர்களது கலாச்சாரப் பின்னணி காரணமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. அடிப்படையில், வாழ்வில் நிகழும் நல்ல நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது என்ற பண்பு அவர்கள் வாழ்வின் முறையாக உள்ளது.

பனாமா நாட்டில் 61% மக்கள் ஆய்வின் ஐந்து காரணிகளில் நான்கில் மனநிறைவுடன் இருப்பதுவும் இந்தக் கலாச்சாரப் பின்னணியை உறுதி செய்கிறது. அந்நாட்டின் வளரும் பொருளாதார நிலையும், அதிகரித்து வரும் வேலை வாய்ப்பும் அவர்களுக்கு நம்பிக்கையான எதிர்காலம் இருக்கிறது என்ற மனநிலை அமையக் காரணமாக உள்ளதாகக் ‘காலப்’ கருத்தாய்வு அறிக்கை முடிவு செய்துள்ளது. ஐந்து காரணிகளிலும் பொருளாதாரம் என்பதில் அவர்கள் மனநிறைவு பெறுவதில் அவர்களின் எண்ணிக்கை குறைவாக பின்தங்கி இருந்தாலும், மற்றவற்றில் அவர்கள் மகிழ்வுடனும் மனநிறைவுடனும் இருக்கிறார்கள். பொருளாதரத்தில் மனநிறைவு குன்றியிருந்தாலும் மற்ற வகையில் மனநிறைவு பெற்றவர்களாக இருப்பதிலிருந்து, செல்வத்திற்கும் மனநிறைவிற்கும் தொடர்பில்லை என்ற கோணத்தில் அவர்களது வாழ்க்கைமுறை அமைந்துள்ளது தெரிய வருகிறது.

பொருளாதார நிலை மனநிறைவு அலகில் பனாமாவைப் முந்திய நாடு ஸ்வீடன். ஸ்வீடனைப் போலவே அப்பகுதியின் வட ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்த் நாட்டு மக்களும் பொருளாதாரம் பற்றிய மனநிறைவைக் கொண்டுள்ளனர். அவற்றை அடுத்து மத்தியக் கிழக்காசிய எண்ணெய்வள நாடுகள் இடம் பெறுகின்றன. ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் எவையும் பொருளாதார நிலைமையில் மனநிறைவு கொண்ட நாடுகளின் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடிக்கவில்லை.

ஆப்ரிக்க நாடுகளின் போர்களும், அரசியல் கலவரங்களும், அரசின் ஊழல்களும், பொருளாதார வறட்சியின் காரணமாக அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கையற்று எதிர்கொள்வதையும் இந்த கருத்தாய்வு அறிக்கை காட்டுகிறது.

பொதுவாக மோசமான நிலைமையில் இருப்பது சிரியாவும், ஆப்கானிஸ்தானும். இந்நாடுகளில் வெறும் 1% மக்களே மனநிறைவுடன் இருப்பது இந்த ஆய்வு தரும் தகவல். ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் வாழும் நிலைமை வரவர மோசமாகி வருவதாகவும் ஆய்வாளர்களிடம் கூறியுள்ளார்கள். போரும், வேலை வாய்ப்பின்மையும், நாட்டின் பொருளாதார நிலைமையும் ஆப்கனிஸ்தான் வாழ்வதற்கு தேவையான சூழ்நிலையை அங்கு வசிக்கும் மக்களுக்கு வழங்கவில்லை.

நலவாழ்வு அடிப்படையில் மனநிறைவுடன் உள்ள மக்களே வாழ்வில் தாழ்வுகளை எதிர்கொள்ளவும், போராடி மீண்டுவரும் நம்பிக்கையையும் கொண்டிருப்பார்கள். அத்துடன் ஆக்கபூர்வமாக சமுதாய வாழ்வில் பங்கு பெற்று தங்களின் தன்னிறைவுக்கான செயல்களை தங்கள் வசம் வைத்திருப்பார்கள். அதனால், மக்களின் மனநிலையை விவரிக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் உலகநாடுகள் தங்கள் அரசுசார்ந்த கொள்கைகளை வடிவமைக்க உதவும் என காலப் ஆய்வு நிறுவனம் கருதுகிறது.

Source:

Country Well-Being Varies Greatly Worldwide: Panamanians have the highest well-being globally; Syrians and Afghans, the lowest, September 16, 2014, by Melanie Standish and Dan Witters.

http://www.gallup.com/poll/175694/country-varies-greatly-worldwide.aspx

Access the full State of Global Well-Being report and 2013 data:

http://info.healthways.com/wellbeingindex

Pictrure and Data source:

http://info.healthways.com/hs-fs/hub/162029/file-1634508606-pdf/WBI2013/Gallup-Healthways_State_of_Global_Well-Being_vFINAL.pdf

Gallup-Healthways_State_of_Global_Well-Being_vFINAL.pdf

State of Global Well-Being report 2013 1 Figure

State of Global Well-Being report 2013 2 Figure

State of Global Well-Being report 2013 3 Figure


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை”

அதிகம் படித்தது