மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் – பாகம் 6

முனைவர். ந. அரவிந்த்

May 15, 2021

siragu ulavu2
உணவு, உடை, உறைவிடம் மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாதவை என்பது அனைவரும் அறிந்ததே. இவை மூன்றிலும் அத்தியாவசிய தேவை உணவுதான். அதனை நாம் விவசாயம் மூலமாகவே பெறுகிறோம். பருத்தி நூலால் நெய்த உடைகள் இல்லாத காலத்திலும் மனிதன் இலைகளை வைத்து உடலினை மறைத்தான். வீடுகட்டத் தெரியாத ஆதி மனிதன் இயற்கை குகைகளில் வசித்தான். ஆனால், உணவிற்கு மாற்று கிடையாது.

விவசாயம் செய்பவன் விவசாயி. உலகின் முதல் மனிதனின் முதல் தொழில் விவசாயம். முன்நாட்களில் தமிழகத்தில் மாதம் மும்மாரி மழைபெய்தது என ஆதாரங்கள் உள்ளன. மழை பெய்வதற்கு மரங்கள் அவசியமானது. ஆனால், இன்று காடுகளில் உள்ள மரங்கள், ‘தீ’ போன்ற இயற்கை சீற்றத்தினாலும், கட்டிடங்கள் கட்டுவதற்காகவும், சாலைகள் போடுவதற்காக நிலங்களை சமதளப்படுத்துவதற்காகவும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளாலும் அழிக்கப்படுகின்றன. மரங்கள், மழை பெய்வதற்கு பேருதவி புரிகின்றன. வள்ளுவன் கூற்றின்படி, மழை இல்லையேல் நாட்டில் தானமும் இருக்காது, தவமும் இருக்காது. பிற தொழில்கள் செய்யும் மனிதர்கள்கூட, சம்பாதிக்கும் பணத்தினை வைத்து உணவு பொருட்களையே முக்கியமாக வாங்குகின்றனர். தென்பெண்ணை, பாலாறு, காவிரி, கொள்ளிடம், அமராவதி, காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற நதிகள் தமிழ் நாட்டினில் பாயும் முக்கியமான நதிகளாகும். தமிழகத்தின் முக்கிய தொழில் விவசாயம். சங்க காலம் முதல் இன்றுவரை தமிழர்களின் வாழ்க்கையின் முதன்மைப் பகுதியாக விவசாயம் இருந்து வருகிறது. இது மனித வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாகும்.

உழவர்கள் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ததனால் சுய மரியாதையுடன் வாழ்ந்து வந்தனர். பழங்காலத்திலேயே தமிழர்கள் மண்வகைகள், அவற்றில் பயிரிடப்படும் பயிர் வகைகள் மற்றும் நீர்ப்பாசன முறைகளை அறிந்திருந்தனர்.

பழங்காலத் தமிழகத்தில் பரவலாக நெல், கரும்பு, சிறுதானியங்கள், மிளகு, பருப்புவகைகள், தென்னை, அவரை, பருத்தி, வாழை, புளி போன்றவை பயிரிடப்பட்டன. நெல் முதன்மைப் பயிராக இருந்தது. இவை மட்டுமின்றி ஒவ்வொரு வீட்டிலும் பலா, தென்னை, பனை, பாக்கு போன்ற மரங்கள் இருந்தன. வீடுகளுக்கு முன்னால் மஞ்சள் செடிகளும் வீடுகளுக்கு பின்னால் பூந்தோட்டங்களும் வளர்க்கப்பட்டன. தமிழர்கள் பழ மரங்கள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு ஆகிய பணிகளையும் செய்தனர். பயிர் சுழற்சி முறைகளையும் தமிழர்கள் பின்பற்றினர்.

siragu uzhavu1

இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்று காந்தியடிகள் கூறியுள்ளார். கிராமங்களில் உள்ள வீடுகளை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் நம் நாட்டின் முதுகெலும்பாகும். விவசாயத்திற்கு முக்கிய தேவை நீர். மழை காலங்களில் கிடைக்கும் நீரினை சேமித்து வைக்க அணைகளின் தேவையினை உணர்ந்தான் தமிழன்.

மன்னர்களும் பெருந்தலைவர்களும் விவசாயத்திற்கான நீரை தேக்குவதற்காக சிறப்புமிக்க அணைகளைக் கட்டினர். கி.மு.300 காலகட்டத்தில் கரிகால சோழன் கல்லணையை கட்டினான். அது, பல ஆயிரம் ஆண்டுகளை தாண்டி இன்றுவரை உபயோகத்தில் உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், முதலமைச்சராக இருந்த காமராசர் பல அணைகளை விவசாயம் செழித்தோங்க கட்டினார். தமிழ்நாடு விவசாயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளே சான்று.

இதுபோல் யூதநூல்களும் விவசாயத்தைப்பற்றி மிக அழகாக வர்ணிக்கின்றன. அதன்படி, ஆதிமனிதனின் பெயர் ஆதாம். அவனுடைய மனைவியின் பெயர் ஏவாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். அதில் மூத்தவன் நிலத்தை பயிரிடுகிறவனாயிருந்தான். இளையவன் ஆடு மேய்த்தான். இறைவன் மனிதனை படைத்த பின்னர் அவனுக்கு முதன்முதலாக கொடுத்த பணிநிலத்தை உழுது விவசாயம் செய்வதே ஆகும். இறைவன் பலமுறை மனிதர்களிடம் பேசியுள்ளார். இறைவன் மனிதர்களுக்கு ‘உங்களை ஆசீர்வதித்து விளைச்சலை பெருகப்பண்ணுவேன்’ போன்ற ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்களை வழங்கினார்.

இவை மட்டுமின்றி யூதநூல்கள், ‘கடும் உழைப்பையும் உழவுத்தொழிலையும் வெறுக்காதே; இவை உன்னத இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை’ என்று கூறுகின்றது. நல்லவர்கள் தம் கால்நடைகளை அன்போடு பாதுகாப்பர், உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர், உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமை வாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும் என்று விவசாயம் மற்றும் அதற்கு உதவும் காளைகளின் மகத்துவத்தினை எடுத்துரைக்கின்றது.

தானியங்கள் சேகரிக்கும் செயல்முறைகளையும் அவை அழகாக சொல்கின்றன. அதன்படி, உளுந்து இருப்புக் கோலால் அடிக்கப்படுவதில்லை; சீரகத்தின் மேல் வண்டி உருளை உருட்டப்படுவதில்லை; ஆனால் உளுந்து கோலாலும் சீரகம் தடியாலும் தட்டியடிக்கப்படும். உணவுக்கான தானியத்தை யாரும் நொறுக்குவார்களா? இல்லை; அதை அவர்கள் இடைவிடாது போரடிப்பதில்லை. வண்டி உருளையையும் குதிரையையும் அதன்மேல் ஓட்டும்போது, அவை நொறுக்கப்படுவதில்லை. இந்த அறிவினை மனிதனுக்கு தந்தது சகலவல்லமையுள்ள இறைவன் என்பதாகும்.

எலிசா என்பவர் கி.மு. 539 – 486 வருடங்களில் வாழ்ந்த ஓர் யூத இறைவாக்கினர். இவரைப்பற்றி யூத, இசுலாம் மற்றும் பாகாய் நூல்களில் நிறைய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர் பன்னிரண்டு ஏர்மாடுகளை பூட்டி உழுதார் என்று அவை கூறுகின்றன.
யூத வம்சா வழியில் அவதரித்த இயேசு பிரான், மக்களை நோக்கி ‘நிலங்களை உழுவது போல் மனங்களை உழுது நல் எண்ணங்களை விதையுங்கள்’ என்று உழவு தொழிலை மேற்கோள்காட்டி விளக்கியுள்ளார்.

வள்ளுவர் பெருமான் குறள் எண் 1033ல் உழவு தொழிலாகிய விவசாயத்தின் சிறப்பினை இவ்வாறு வர்ணிக்கிறார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்- 1033

இதன் விளக்கம், பிறருக்காகவும் உழுதுதாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை வைத்து உண்டு அவர் பின்னே செல்பவர் ஆவர் என்பதாகும். இதன்முலம், பழமை வாய்ந்த நாகரிகங்களுக்கும் சிறந்த கலாச்சாரங்களுக்கும் பின்னால் விவசாயம் இருந்ததென்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது.

தொடரும்…


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் – பாகம் 6”

அதிகம் படித்தது