மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எது அரசியல்? -ஈழத் தமிழ்மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது அரசியலா?

க.தில்லைக்குமரன்

Apr 5, 2014

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் சிலர் ஈழ மக்களின் அவலத்தை விவாதிப்பதையும், அம்மக்களின் அவலநிலை நீக்க செயல்படுவதையும் அரசியல் என்று விமர்சித்து அவை இல்லாமல் நிகழ்ச்சிகள் செய்ய இயலாதா? என்று வினவினர். நீண்ட நாட்களாக அம்மக்களின் அவலத்தைப் போக்க தம்மால் இயன்றளவு பாடுபட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு இது பெரும் வியப்பையும் வேதனையையும் கொடுத்தது.

ஈழமக்களின் அவலத்தைப் பேசுவதை அரசியல் என்று கூறும் இவர்களுக்கு எது அரசியல், எது மனிதநேயம் என்பது நன்கு புரியும். இருந்தாலும் ஈழச்சிக்கலை விவாதிக்க மேடையமைத்துக் கொடுப்பதற்கு இவர்கள் கல்நெஞ்சம் இடம்கொடுக்கவில்லை என்பதே வேதனை. உலகில் பல இடங்களில் மனித உரிமைக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆர்மேனியப் படுகொலை, யூத இனப்படுகொலை, ருவாண்டா, டார்பர், பாசுனியா, சொமாலியா போன்ற நாடுகளில் நடந்த படுகொலைகளுக்கெல்லாம் எதிராக உலகமே எழுந்தது, இன்றும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியர்களும் இந்த படுகொலைகளுக்கெல்லாம் எதிர்த்து கருத்துக் கூறினர். தென் ஆப்பிரிக்க இனவெறி அரசிற்கு எதிராக திடமாக நின்றது அன்றைய இந்தியா.

1974-ம் ஆண்டு இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜின் திறமையால் இந்தியா டேவிஸ் கோப்பை இறுதி சுற்றில் நுழைந்தது. இந்தியாவின் இனவெறிக்கு எதிரான கொள்கையால் தென் ஆப்ரிக்காவை எதிர்த்து விளையாடுவதில்லை என்று முடிவெடுத்து விலகியது 20 வயதான விஜய் அமிர்தராஜிற்கு அன்று ஏமாற்றத்தைத் தந்தது என்று அவரே கூறியிருக்கிறார். ஆனால் அவர் 1988-ம் ஆண்டு ஐநா மன்றத்தில் பேசியதைப் படிக்கும்போது எது அரசியல் என்று கேட்போருக்கு தெளிவு ஏற்படும்.

”Vijay Amirtraj’s speech at the United Nations Special Committee against Apartheid, May 6, 1988

My first official contact with South Africa came in 1974, at the age of 20, when as India`s No.1 tennis player, I had led my country to the Davis Cup final for only the second time since independence. We had beaten some strong nations to reach the final and felt that we had a better than even chance to beat South Africa and win the Davis Cup for my country which had always been my dream ever since I had started the game.

Until then I only knew what little I had read about South Africa`s apartheid policies. Now, coming in direct contact with that country made me take a much closer look at South Africa, its policies, its people, its association and contact with the West in every walk of life and the incredible struggle of the non-white people of that country for what the rest of the world takes for granted. Morally, it was an easy decision to make not to play the final but as a sportsman two thoughts kept coming into my mind. One was that we might never play in another final and the second was that we might never have as good a chance to win the Davis Cup.

With the Government of India`s strong stand against apartheid we chose not to play. As a sportsman at age 20 I felt a little disappointed but my heart felt wonderful that I had somehow supported the struggle of a people fighting just to live like everybody else. Because of our default in that final it took just a couple of years to expel South Africa from the Davis Cup competition and thirteen years for my dream to come true and play in another final.

Since that time I have watched closely with growing pain at the violence and deaths of so many human beings, not because of a national disaster but because of an adamant and stubborn thinking of a very small minority.

Sport is big business now and not just a game any more and sportsmen and women must realise the world over that with fame and fortune come an incredible responsibility which may affect the lives of people in different countries. It is very easy to say “let us keep sports out of politics”, but practically that is just not possible in certain cases. There are some issues that we must support or oppose, because we must clearly understand in our minds that we are first human beings before being sportsmen or women….

Over the years as a professional, I have been made several offers including vast sums of money to play exhibition matches in South Africa which I have declined. I feel that every individual, important or unimportant, artist, diplomat, professional or sportsman, has a certain responsibility towards his fellow men and if I may add, hopefully, a conscience. It is thus up to each of us to contribute in our own way towards a better world – a world of equality, of dignity, of freedom.”

இந்த விளையாட்டு வீரருக்கு இருக்கும் தெளிவு நம்மில் பலருக்கு இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. இலங்கையின் வரலாறு தெரியாததும் இந்த அவல நிலைக்கு ஒரு காரணம். இன்னமும் நம்மில் பலர், இலங்கையில் வாழும் தமிழர்கள் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இலங்கைக்கு குடியேறினர் என்று நம்பிவருகின்றனர். ஈழத்தமிழர்கள் ஈராயிரமாண்டுகளுக்கும் மேலாய் அந்த தீவில் வாழ்ந்து வருகின்றனர் என்பது அறிஞர் அறிந்த உண்மை. ஈழத்து பூதந்தேவனார் எனும் புலவர் சங்ககாலத்தில் வாழ்ந்துள்ளார். அவர் எழுதிய பாடல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட புறநானூற்றில் வருகிறது. எல்லாளன் எனும் தமிழ் மன்னனும், துட்ட காமினு எனும் சிங்கள மன்னனும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சண்டையிட்டிருக்கின்றனர். இவ்விரு மன்னர்களின் தளபதிகள் இருவரும் தமிழர்களாக இருந்துள்ளனர் என்பதிலிருந்தே தமிழர்கள் அங்கு பூர்வீக குடிமக்கள் என்று தெரியவரும்.

ஆசுத்திரேலியாவில் வாழும் வரலாற்று அறிஞர் முனைவர் முருகர் குணசிங்கம் அவர்கள் தனது “Tamils of Sri Lanka – A comprehensive History (C.300 B.C.-C.2000 A.D.)” எனும் நூலில் ஈழத்தீவில் ஒரே இன மக்கள் வாழ்ந்துள்ளனர், அவர்கள் தொல் திராவிட மொழியைப் பேசியிருக்கலாம், பௌத்த மதத்தினரின் துணையால் பிராகதமும், பாலியும் கலந்து சிங்கள மொழி உருவானது என்று கூறுகிறார். மேலும் அவர் விஜயா எனும் இளவரசன் வட இந்தியாவிலிருந்து சில வீரர்களுடன் இலங்கைக்கு வந்து சிங்கள இனத்தை உருவாக்கினான் என்பதெல்லாம் மகாவம்சக் கட்டுக்கதை என்றும் கூறுகிறார். தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் ஈராயிரமாண்டுகளாய் உறவுமுறை இருந்து வந்துள்ளது, இன்றும் தொடர்கிறது. போர்ச்சுகீசியர் ஆண்ட பொழுது, ஈழத்தையும், சிங்களத்தையும் இரு நாடுகளாகத்தான் பாவித்து ஆண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்கள் இலங்கைத்தீவை கைபற்றியபின்புதான் இரு நாடுகளையும் ஒருங்கிணைத்து சிலோன் என்று அழைத்தனர். ஈழநாடும், சிங்கள நாடும் ஒரு சில நூறாண்டுகளுக்கு முன்புவரை இலங்கைத் தீவில் இரு நாடுகளாக இருந்திருக்கிறது.

ஈழத்தமிழர் படுகொலை, இலங்கை 1948-ல் விடுதலையடைந்தவுடனே துவங்கிவிட்டது. 1956-ல் சிங்களமொழி ஒன்றே தேசியமொழியாக அறிவித்து தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரான செயல்களை சிங்களநாடு துவக்கிவிட்டது.

தந்தை செல்வா தலைமையில் அறவழிப்போராட்டம் அனைத்தும் சிங்கள வன்முறையால் ஒடுக்கப்பட்டது என்பது உலகறிந்த வரலாறு. சிங்களர்களுடன் இனி வாழ இயலாது, சிங்கள அரசு இனி தமிழர்களுக்கு தகுந்த இடமளிக்காது என்பதை நன்குணர்ந்த தந்தை செல்வா மே 14, 1976 அன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் வட்டுக்கோட்டை எனும் நகரில் தனித்தமிழீழமே தீர்வு என்கிற தீர்மானத்தை நிறைவேற்றி அடுத்து வந்த தேர்தலில் அதை கொள்கையாக அறிவித்தார். அத்தேர்தலில் தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களித்து தமிழர் முன்னணிக்கு பெரும்பாலான நாடாளுமன்ற இடங்களை அள்ளித்தந்தனர். சிங்களத்திற்கும் உலகிற்கும் தனித்தமிழீழமே தீர்வு என்று 1976-லியே ஈழத்தமிழர்கள் தமது வாக்குகள் மூலம் அறிவித்துவிட்டனர். தனித்தமிழீழம் என்பது விடுதலைப்புலிகளின் கண்டுபிடிப்பு அல்ல, மக்கள் அவர்களுக்குக் கொடுத்த உத்தரவு. தொடர்ந்து சிங்களம் வன்முறையை ஏவி தமிழர் போராட்டத்தை ஒடுக்கியதால் 80-களில் தமிழ்இளைஞர்கள் ஆயுதமேந்தியது அனைவரும் அறிந்த வரலாறு.

1983-ம் ஆண்டில் பல்லாயிரம் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள், பல கோடிக்கணக்கில் தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டது. தமிழர்கள் உலகெங்கிலும் அகதிகளாக போகும் அவலநிலையை 1983 இனக்கலவரம் துவக்கியது. தமிழகம் கொந்தளித்து, ஈழ உறவுகளை அரவணைத்தது, இந்தியாவும் போராளிகளுக்கு உதவத் துவங்கியது. அதன் பின் இராசீவ் காந்தியின் அறிவின்மையாலும், அன்றிருந்த வெளியுறவு செயலர் ருமேஷ் பண்டாரி, இலங்கையின் தூதர் தீக்சித் போன்றோரின் சதியால் தமிழர்களுக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 90-களில் சந்திரிகா அரசு செய்த கொடுமைகளை எழுத எனக்கு வலிமையில்லை. கொத்துக்கொத்தாக தமிழர்கள் அழிக்கப்பட்டனர். இறுதியாக 2009-ம் ஆண்டு மே திங்களில் சிங்களமும் உலக நாடுகளும் இணைந்து தமிழினப் படுகொலையை செய்து முடித்தது அனைவரும் அறிந்ததே. இப்படுகொலையை ஆராய ஐநா செயலாளர் அமைத்த மூவர் குழு 40,000 தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்றது. அடுத்த புலனாய்வான ஐநாவின் பெட்ரி அறிக்கை 70,000-ற்கும் மேற்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள் என்று கூறியது மட்டுமல்லாமல் ஐநா தமிழர்களைக் காக்கத் தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டியது. இன்று மன்னார் ஆயர் அருட்தந்தை ராயப்பு அவர்கள் 150,000 தமிழர்கள் காணவில்லை என்று கூறுகிறார்.

தமிழினப் படுகொலையை அனைத்து மனித உரிமை அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டன. Amnesti International, Human Rights Watch, International Crisis Group போன்ற அமைப்புகள் மட்டுமல்லாமல் பலர் சிங்கள அரசின் மீதும், புலிகள் மீதும் குற்றம் சாட்டினர். பல முற்போக்கு சிங்கள மனித உரிமை ஆர்வலர்களும், தமிழர்களுக்கு ஆதரவாக  செயல்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த சானல்-4 எனும் தொலைக்காட்சி ‘Sri Lanka: Killing Field’ எனும் ஆவணப்படத்தை தயாரித்து தமிழினப்படுகொலையை உலகிற்கு காட்டியது. பின்பு அதன் இயக்குனர் திரு.கெல்லம் மெக்கரே அவர்கள் ‘No Fire Zone’ எனும் மற்றுமொரு ஆவணப்படத்தின் மூலம் சிங்களத்தின் கொலைவெறியை தெள்ளத்தெளிவாகக் காட்டினார்.  இப்படி உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் சிங்களத்தைக் கண்டித்து தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்கையில், இங்குள்ள தமிழர்கள் சிலர், இது அரசியல் – இது வேண்டவே வேண்டாம் என்று கூறுவது கடும் கோபத்தையும், மிக்க வருத்தத்தையும் தருகிறது. உலகில் எங்கு வாழ்ந்தாலும் அங்கு வாழும் மக்கள் மீது வன்முறையை ஏவும் போது கண்டித்தும், அவர்களுக்கு ஆதரவாகவும் போராடிய இவர்கள் ஈழத்தமிழர்களின் அவலத்தைப் பேசும் போதுமட்டும் அரசியல் என்று கூறுவது அறியாமையா? அல்லது கல்நெஞ்சா? என்று தெரியவில்லை. இதற்கு அவர்கள் கூறும் காரணம், ஈழத்தமிழர்களை ஆதரிப்பது புலிகளை ஆதரிப்பது போல், எனவே ஈழத்தமிழர்களை ஆதரிக்க மாட்டோம். தில்லியில் ஒரு பெண் கற்பழித்ததை கண்டித்து வீதிக்கு வந்த இந்தியர்கள், இசைப்பிரியா எனும் இளம் தமிழ்ப்பெண்ணை சிங்கள நாய்கள் சீரழித்ததைக் கண்டிக்க மாட்டோம் என்று கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது? எமக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுத்துதான் மனிதநேயத்தைக் காட்டுவோம் என்பது மனிதமா? இது நீதியா? நண்பர்கள் சிந்திக்கவேண்டும்.

விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்தபோது புலிகளால்தான் இந்த சிக்கல், அவர்களை அழித்துவிட்டால் அங்கு சிக்கல் தீர்ந்துவிடும் என்று கூறியவர்கள் இன்று புலிகள் இயக்கம் முற்றிலும் அழிந்து விட்டபின்பும் ஈழத்தமிழர்களை ஆதரிப்பது (இல்லாத) புலிகளை ஆதரிப்பது போல் என்று பழைய பல்லவியையே பாடுவது ஏன்? இவர்களுக்கு உண்மையிலேயே அப்பாவித் தமிழர்கள் மீது எவ்வித அக்கறையுமில்லை என்றுதானே கருத வேண்டியுள்ளது?

தமிழர் நிகழ்ச்சிகளில் அரசியல் வேண்டாம் என்று கூறும் அனைவரும் தம் வாழ்வில் ஏதோவிதத்தில் அரசியல் செய்துதான் வருகிறார்கள். அரசியல் ஒன்றும் இழிசொல் அல்ல. விஜய் அமிர்தராஜ் கூறியதை மீண்டும் படிக்கவும். கொடூரர்களுக்கு எதிராகப் போராடுவது நல்லரசியல். காந்தியும், புத்தனும், வள்ளலாரும் வாழ்ந்த இந்த மண்ணில் மனிதம் முற்றிலும் மறைந்து போய்விட்டதா?

”வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், பசியினால் இளைத்தே

வீடுதோறு(ம்) இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்

ஈடு இன் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்”

- ’அருட்பெருஞ்சோதி வள்ளாலார்’ இராமலிங்க அடிகள்

நம் தொப்புள் கொடி உறவுகள் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டதைப் பேசுவது அரசியல் என்றால் அது இன்றைய காலக்கட்டத்தின் தேவையான நல்லரசியல் என்பேன், ஒவ்வொரு மேடையிலும் எம்மக்களின் அவலத்தை உலகிற்கு உணர்த்த உரக்க உரைப்பேன். 90 ஆண்டுகளுக்குப் பின் ஆர்மேனியப் படுகொலையை அமெரிக்க நாடாளுமன்றம் அண்மையில்தான் அங்கீகரித்தது. தென் அமெரிக்காவின் பொலிவியாவின் முன்னாள் அதிபரும், அவரது அரசிலிருந்த அதிகாரிகளுக்கும் அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் இனப்படுகொலைக்காக சிறைத்தண்டனை அளித்துள்ளது. தமிழினப் படுகொலையில் ஈடுப்பட்ட அனைவருக்கும் இந்த நிலை விரைவில் ஏற்படும். தமிழர்களுக்கு நீதி நிச்சயம் கிடைக்கும். உலகிற்கு அறத்தையும், அமைதியையும் கொடையளித்த இந்திய நாடு மனித உரிமை பக்கமிருக்குமா? கொலையாளிகள் பக்கம் இருக்குமா? என்பதை இந்தியாவை நேசிக்கும் இந்தியர்கள்தான் நிர்ணயிக்க வேண்டும். மக்களாட்சியின் வெற்றி என்பது மக்களின் ஈடுபாட்டில்தான் உள்ளது. இந்திய மக்கள் மனித உரிமைக்காகப் போராடாவிட்டால் இந்திய அரசு கொடுங்கோல் அரசாகத்தான் தொடரும். இந்திய மக்கள் தங்கள் பலத்தை உணர்வார்களா?.


க.தில்லைக்குமரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “எது அரசியல்? -ஈழத் தமிழ்மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது அரசியலா?”
  1. PROF. KOPAN MAHADEVA says:

    IF IT IS POSSIBLE TO KEEP OUR RICE AND CURRIES SEPARATE IN OUR STOMACHS WHEN WE EAT, THEN IT MAY BE POSSIBLE TO KEEP APART POLITICS (WHICH IS TODAY AFFECTING ALMOST ALL OUR ACTIVITIES IN LIFE) APART FROM CULTURE, IN OUR SOCIAL EVENTS.

அதிகம் படித்தது