மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது!! (சிறுகதை)

குமரகுரு அன்பு

Jul 17, 2021

siragu kavithai1

என் கதைக்குள் இருக்கும் அத்தனை கதாபாத்திரங்களிடமும் இருக்கும் அறம், அவர்கள் கதையை விட்டு வெளியேறியதும் ஏனோ காணாமல் போய்விடுகிறது. கதையின் முக்கிய கட்டத்தில் அறத்தைக் காப்பாற்ற போராடிய மக்கள் அனைவரும் கதை முடிந்ததும் உறங்கிவிட்டனர்.

முக்கிய கதாபாத்திரங்கள் மட்டும் கதைக்குள் வாழ்வதைப் போலவும் மற்றவர்கள் அனைவரையும் துணை கதாபாத்திரங்களாக மதிப்பிழக்க செய்ததையும், நான் இப்போதும் நினைத்து வருந்துகிறேன். ஒரு கதைக்குள் வாழும் அத்தனை பெயருள்ள மற்றும் பெயரற்ற கதாபாத்திரங்கள் அனைவருக்கும் ஒரு வாழ்விருக்கிறது- அந்த வாழ்வில் அவரவருக்கும் ஒரு பொறுப்பும் வேதனையும் இன்பமும் துன்பமும் இருக்கிறது. அத்தனையும் புறக்கணிக்கப்பட்ட பிறகு வெறும் நிகழ்வுகளின் ஊடே சுற்றும் பிடிப்புக்கான சிமெண்டு துகள்களாக மாற்றிவிடுகிறேன் என்று எனக்குள் ஒரு குற்றவுணர்ச்சி மேலிடுகிறது.

கதாநாயகனென்று ஒருவனை உருவாக்கி அவனைச் சுற்றிலும் கதையைப் பிண்ணி, அதற்குள் நிகழ்வுகளைப் புகுத்தி சிடுக்குகளை ஏற்படுத்தி, இப்படியெல்லாம் இருந்தால் படிக்கும் வாசகருக்கு பிடிக்குமா என்று யோசனை செய்து திருத்தி திருத்தி, கதையில் நிகழும் நிஜத்திற்கு நெருக்கமான உண்மையான மனிதர்களின் இயல்புகளை கத்திரித்து அறத்தை உருவாக்கிய பின், அப்போது புனைவாகி நிஜ மனிதர்களின் வாழ்வை விட்டு தூர ஓடிவிடுகிறது.

நாயகன் தன் கதாபாத்திரத்தின் மீது, எல்.கே.ஜி பிள்ளையின் முதுகில் தொங்கும் பையைப் போல அறத்தைத் தூக்கி கொண்டே திரிகிறான். அவனால் அறத்தைத் தவிர்த்து வாழவே முடியாதபடிக்கு அவன் செல்லுமிடமெல்லாம் அவனை கொண்டாடும் மக்களையும் படைத்து விட்டேன். அவர்கள் அவனையே பார்க்கிறார்கள், அவன் வாழ்வை மட்டுமே கவனிக்கிறார்கள், அவனுக்கு நடக்கும் நல்லது கெட்டது அனைத்தின் மீதும் தனக்கு தோன்றிய விமர்சனத்தை வைக்கிறார்கள். ஆறால், இவையெல்லாமே என்னுடையது. எதார்த்த வாள்விற்கு வெளியே யாரும் யார் வாழ்வையும் பற்றி நினைத்து பார்ப்பதேயில்லை. தோல்வியைப் பற்றி வருட கணக்கில் புரளி பேசுபவர்கள் வெற்றியை ஒரே நாளில் கொண்டாடி முடித்துவிடுகிறார்கள்.

இந்த குற்றவுணரச்சியின் முடிவில், சிற்பி தன் உளியால் செய்ய முற்பட்ட சிறந்த சிலையை ‘செதுக்கி1 செதுக்கி!! செதுக்கி!!!’ இறுதியில் வெறும் இறுதி துகள் மட்டுமே மிஞ்சியிருந்தது. அது சிலையாகவுமில்லை கல்லாகவுமில்லையென காற்றிடம் தூசாக பறக்க கொடுத்தைப் போலானது…

மிகவும் முக்கியமான அந்த முடிவு காட்சியில் எல்லோரையும் அழ வைக்க வேண்டும். அழ வைக்குமளவிற்கு திடமான காட்சிகளை அதற்கு முன் ஏற்படுத்து வேண்டும் என்று மெனக்கெட்டு வடிவமைத்த சொற்களின் நடுவில் துறுத்தி கொண்டிருந்த “மன்னிப்பு” ஒரு துரோகத்தின் மீது தெளிக்கப்பட்ட பின், தன் வாழ்வின் மிகச் சிறந்த துக்கத்தை எடுத்து செல்கிறார்கள் நாயகனும் அவனின் குடும்பமும். துரோகத்தை மன்னிப்பால் மிஞ்சுவதை ஏனோ நான் “அழகியல்” மற்றும் “பொது மனவோட்டத்தை நெருடி விடல்” என்று உணர்வதே இல்லை. ‘இயல்பான வாழ்வில் உறங்கவியலா இரவுகளை அன்பளிக்கும் துரோகங்களை கதை மாந்தர்கள் மட்டும் எப்படி மன்னித்து நகர முடியும்??’ என்ற கேள்வி, எனக்கு தெரிந்து என்னிடம் வந்த போது நான் கதையை விட்டு வெளியேறியிருந்தேன்!!

கதையும் என்னை விட்டு வெளியேறியிருந்தது!!

 


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது!! (சிறுகதை)”

அதிகம் படித்தது