மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

என்ன செய்யப் போகிறோம்?

சு.பாரதிதாசன், அருளகம், கோயமுத்தூர்

May 17, 2016

genetic6எனக்கு மாதுளம் பழங்கள் பிடிக்கும் என்பதால் ஒரு மாதுளம் செடியை வாங்க ஒரு நாற்றுப்பண்ணைக்கு அண்மையில் சென்றிருந்தேன். அதன் உரிமையாளர் இது வெறும் பூ மட்டும் தான் பூக்கும் காய்க்காது என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அடுத்து ஒரு பவளமல்லிச் செடியை எடுத்தேன். இதுவும் பூ மட்டும் தான் பூக்கும் விதையே வராது என்றார். ஏன் இப்படி என்று கேட்டேன். மக்கள் இப்படித்தான் விரும்புகிறார்கள் என்று மக்கள் மேல் பழியைப் போட்டார்.

இத்தகைய பரிசோதனை செடிகளில் மட்டுமல்ல விலங்குகளிலும் மேற்கொள்ளப்படுகிறது என்பது தெரியும். ஆயினும் இதை எப்படி எடுத்துக் கொள்வது? வெறும் ஆராய்ச்சி என்றோ இரசனை என்றோ மட்டும் இதை ஒதுக்கி விட முடியுமா?. பல்லுயிர்த் தன்மையை அழித்து எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மை ஆக்கும் செயலையும், இதற்குப்பின் ஒளிந்திருக்கும் பெருவணிக அரசியலையும் உற்று நோக்க வேண்டியுள்ளதும் அல்லவா?.

நாம் எல்லோருமே தெரிந்தோ தெரியாமலோ வணிக வலைக்குள் சிக்கிக் கொள்கிறோம். நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பது முதற்கொண்டு எந்த உடை உடுத்த வேண்டும்?, என்ன படிக்க வேண்டும்?, எங்கு படிக்க வேண்டும்?, எப்படி யோசிக்க வேண்டும்? என்பது வரை எல்லாமே நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. நிறுவனர்களுக்கு நாமே ஒரு பண்டம் தான். அவர்களைப் பொருத்த வரையில் வாங்குபவர்கள் விற்பவர்கள் என்ற இரண்டு பிரிவு தான்.

வீரிய விதை அதிக விளைச்சல் தரும் இரகம் என்ற மந்திரச் சொல்லால் பல்லுயிர் தன்மை அழிக்கப்பட்டதோடு விதையும் விவசாயிகளிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டது. விளைச்சலில் ஒரு பகுதியை விதைக்கு என ஒதுக்கி வைத்திருந்த நிலை மாறி ஒவ்வொரு முறையும் கம்பெனிகளையே நாட வேண்டி இருக்கிறது. அதற்குக் காரணம் ஒரு முறை வாங்கிய விதையைப் பயன்படுத்தி மீண்டும் விளைவிக்க முடியாதபடி மலட்டு விதைகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் நம் பொருளாதாரம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. எல்லாவற்றுக்குமே கம்பெனிகளை நாடும் அவல நிலைக்கும் தள்ளப்படுகிறோம். இதனால் தற்சார்பை இழந்து கோவணத்துடன் நாடே நிற்க வேண்டியிருக்கிறது என்பதை உணரவேண்டும்..

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த மாதிரி இரகங்களால் உணவு உற்பத்தி பெருகியது போன்ற தோற்றம் தரும். ஆனால் எதை அழித்து உணவு உற்பத்தி என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் அல்லவா?

genetic2செடியில் மட்டுமா? மாட்டிலும் கலப்பின மாடுகள் அதிகம் பால் தரும் என்ற ஒற்றை நோக்கோடு உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றார்போல் கால்நடை இரகங்கள் பரிணமித்துள்ளன. அவைகள் குறைவாக பால் தருகின்றன என்று காரணத்தால் புறந்தள்ளப்பட்டு விட்டன. ஆனால் அப் பாலில் உள்ள கொழுப்புச் சத்து, அம்மாடுகளின் உழு திறன், அதன் சாணியால் பெருகும் விளைச்சல்  போன்றவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் அவைகளுக்கு இயல்பிலேயே இருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் போன்றவையும் கண்டுகொள்ளப்படுவதில்லை. பராமரிப்புச் செலவு அதற்கு போடப்படும் தீவனம் கட்டுப்படியாகமல் இருப்பது போன்றவை எல்லாம் புள்ளி விபரங்களால் மறைக்கப்படுகின்றன.

genetic3கோழி வளர்ப்பும் இன்று மிகப்பெரிய தொழிலாகிவிட்டது. குக் கிராமத்திலும் நாட்டுக் கோழி கிடைப்பதில்லை. ஆனால் சிக்கன் 65 கிடைக்கிறது. நம் வீட்டில் திரியும் நாட்டுக்கோழி ஒவ்வொன்றுமே தனித்துவமிக்கவை. இதை அழிய விடாமல் காக்கும் வேலையை படிக்காத பாமர மக்கள் தான் செய்து வருகின்றனர்.

அதே போல நாய் இனங்களிலும் நாட்டு நாய் இனங்கள் தெரு நாய் என்றும் சொறி நாய் என்றும் கேலிப் பொருளாகவே அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு இனமும் அந்தந்த தட்ப வெப்ப புறச்சூழலுக்கு ஏற்ப அதை எதிர்கொண்டு வளர்கின்றன. அதனால் பல்வேறு சூழல்களையும் தாக்குப் பிடிக்கின்றன.

மீன் இனங்களிலும் நாட்டு மீன்கள் எதிரியாகப் பார்க்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. மீன்களிலும் பல்லுயிர்த்தன்மை மறைந்து ஜிலேபி கெண்டை, ரோக் போன்ற இனங்களே வளர்க்கப்படுகின்றன.

நாட்டினங்கள் கேலிக்குரியனவாகச் சித்தரிக்கப்பட்டே வருகின்றன. நாமும் நமக்குத் தெரியாமலேயே அதற்குப் பலியாகிறோம். பல்லுயிர்த்தன்மையே வேண்டாம் என்பது நிறுவனர்களின் மனப்பான்மை. அதை நாம் முறியடிக்க வேண்டும். முதல் கட்டமாக உள்ளூர் இனங்களை தாழ்வாகப் பார்க்கும் மனநிலையை மாற்றவேண்டும். ஒற்றைத்தன்மையை ஊக்குவிப்பது நமக்கு நாமே எரியும் கொள்ளியை எடுத்து தலையில் சொரிவதற்கு சமம். நவீனம் என்ற பெயரில் மரபு சார்ந்த விடயங்களை நாம் புறந்தள்ளுகிறோம். இது மிகப் பெரும் ஆபத்தில் முடியும்.

genetic4இந்த உலகத்தின் சூழலைக் கெடுத்ததில் பெரும் பங்கு நம் தலைமுறையைத் தான் சேரும். மரபு சார்ந்த விடயங்களை மீட்டெடுக்க நமது தாத்தாக்களும் பாட்டிகளும் தான் நமக்கு உதவி செய்ய முடியும். இதற்கு எடுத்துக் காட்டு, எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டி தான். அந்தப் பாட்டியைப் பார்ப்பதற்காக அவரது மகன் நகரத்திலிருந்து மாதம் ஒரு முறை வருவார். திரும்பிப் போகும் போது தவறாமல் வெடக் கோழியொன்றையும் பிடித்துச்செல்வார். இவர் வந்ததைப் பார்த்தாலே அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் இன்னிக்கு ஒரு கோழிக்கு ஆயுசு முடிஞ்சுச்சு என்று கேலி பேசுவார்கள். ஆனால் அவரது அம்மாவுக்கோ, மகனுக்கும் பேத்திகளுக்கும் கோழி கொடுத்தனுப்பிய ஒரு பெருமை இருக்கும். அந்த பாட்டி தனக்கு செலவுக்குப் பணம் தேவைப்பட்டால் கூட மகன்களை நாட மாட்டார். திங்கள் கிழமை சந்தைக்கு நாலைந்து கோழிகளை எடுத்துச் செல்வார். அதை விற்று காசாக்கி தனது தேவையைப் பெரும்பாலும் பூர்த்தி செய்து கொள்வார். அவரின் தேவையும் குறைவு. பணமும் உள்ளூரிலேயே புழங்கி வந்தது. இப்படிப்பட்ட பாட்டிகள்தான் நமக்கு முன்னோடி. இவர்களைப் போன்றவர்களால்தான் பல்லுயிர்த்தன்மையையும் மீட்டெடுக்க முடியும்.


சு.பாரதிதாசன், அருளகம், கோயமுத்தூர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “என்ன செய்யப் போகிறோம்?”

அதிகம் படித்தது