மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எப்படியும் நாளை எழுதிட வேண்டும் !!(கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 5, 2016

eppadiyum naalai1.jpg

 

 

கடிகார மணி அடிக்கும் முன்

விறு விறு என்று எழுந்தேன்

கண்கள் கசக்கிய படி

மணியை பார்த்தேன்

ஆறடிக்க இன்னும் 15

நிமிடங்கள்

மனம் துயில் கொள்ளவே

விரும்பினாலும்

கால்கள் அடுக்களையை

நோக்கியே நடந்தன

சென்ற மாதம் படிக்க

ஆரம்பித்த நாவலை

எப்படியும் இந்த வாரமாவது

படித்து முடித்து விட வேண்டும்

என்று எண்ணிக் கொண்டே

அரிசியை கொதிக்கின்றே

உலையில் இட்டேன்

நேற்று தோன்றிய கவிதையை

எப்படியும் இன்று எழுதிட வேண்டும்

என்று நினைக்கையில்

மக்கள் இருவரையும் எழுப்பிட

வேண்டும் என்ற எண்ணம்

வந்தவளாய் இருவரையும்

எழும்பிட குரல் கொடுத்தேன்

கட கட என்று

காய் நறுக்கி

குழம்பு பொரியல்

காலை சிற்றுண்டி

தயாரித்து

ஆவி பறக்க தேநீர்

தயார் செய்து

செய்தித்தாளில்

மூழ்கிக்கிடக்கும்

கணவனுக்கு

தந்து விட்டு

தேநீர் பருகலாம் என்று

வாய் வரை கொண்டு

செல்லும் போது தான்

கவனித்தேன் மணி ஏழு;

இன்னும் ஒரு மணி

நேரத்தில் ஓட வேண்டும்

தேநீர் பிறகு அருந்தலாம்

என்று மேசையில்

வைத்து விட்டு

பிள்ளைகளை தயார் செய்து

சீருடை காலணிகள்  மாட்டி விட்டு

நிமிர்கையில்

மணி எட்டை நெருங்கிக்கொண்டிருக்க

தட தட வென நானும்

தயாராகி

தொடர் வண்டியை பிடித்து

கூட்டத்தில் நசுங்கி

அலுவலகம் செல்லும்

நேரம் மணி சரியாக பத்து ;

செக்கு மாடு வேலை என்றாலும்

மூளை சூடாகும் ;

மீண்டும் மாலை வீடு திரும்பும்

வேளை  நாளை

சமைக்க காய்கறி

வாங்கிக் கொண்டு

ஓட்டமும் நடையுமாய்

வீடு வந்து சேர்ந்தேன்

பிள்ளைகளை

ஒழுங்கு படுத்தி

படிக்க வைத்து

வீட்டினை சீர்ப்படுத்தி

இடைப்பட்ட நேரத்தில்

உணவு தயாரித்து

பிள்ளைகளுக்கும்

கணவனுக்கும் பரிமாறி

உண்ட பாத்திரங்களை

கழுவி

காய்கறிகளை வெட்டி

குளிர்ப்பெட்டியில் வைத்து விட்டு

வரும் போது தான் பார்த்தேன்

காலையில் மேசையில் வைத்த

தேநீர் ஆறியிருந்தது !!

பிள்ளைகள் தூங்கி விட்டனர்

நாவலை இரண்டு பக்கம்

புரட்டினேன் உடற்சோர்வும்

காலை எழ வேண்டுமே

என்ற எண்ணமும்

கண்களை மூட வைத்தது

மணி பதினொன்று !!

நினைத்துக்  கொண்டே இருக்கின்றேன்

உறக்கத்திலும்…;

சென்ற மாதம் படிக்க

ஆரம்பித்த நாவலை

எப்படியும் இந்த வாரமாவது

படித்து முடித்து விட வேண்டும்

நேற்று தோன்றிய கவிதையை

எப்படியும் நாளை எழுதிட வேண்டும் !!

eppadiyum naalai3


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எப்படியும் நாளை எழுதிட வேண்டும் !!(கவிதை)”

அதிகம் படித்தது