மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களுக்கு இரங்கல்

சிறகு சிறப்பு நிருபர்

Nov 15, 2014

m.s.s.pandiyan2சமூக ஆய்வாளரும் வரலாற்றுத் துறை பேராசிரியருமான பாண்டியன் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் எனும் ஊரில் பிறந்தார். இளங்கலைப் பட்டம் நாகர்கோயில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் பயின்று 1978 இல் பெற்றார். பின் 1980ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், 1987ல் முனைவர் பட்டமும் பெற்றார்.

சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தில் சேர்ந்து பணியாற்றினார். அதன்பின் கல்கத்தா சி.எஸ்.எஸ்.எஸ் நிறுவனத்தில் சிறிதுகாலம் பணியாற்றினார். மீண்டும் துணைப் பேராசிரியராக சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தில் 12 ஆண்டுகள் பணியாற்றினார். வருகைதரு பேராசிரியராக ஆக்ஸ்போர்டு, ஹவாய், மின்னசோட்டா உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார். வரலாற்றுத்துறை பேராசிரியராக 2009 முதல் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.இவருக்கு முனைவர் ஆனந்தி என்ற மனைவியும், ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர்.

1980-களிலிருந்து ஆய்வுக்கட்டுரைகளை “எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி” என்ற ஆங்கில இதழில் எழுதி வந்தார். இதே இதழில் “இமேஜ் ட்ராப்” (Image Trap) என்ற பெயரில் புத்தகமாக முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தது. இப்புத்தகத்தை பின்னர் வெளியிட்டார்.

தன்னுடைய ஆய்வுகளை திராவிடர் இயக்கம், தேசிய, காஷ்மீர் பிரச்னைகள், சாதிய சிக்கல்கள், தமிழ் சினிமா என பல்துறைகளில் மேற்கொண்டவர்.

வட இந்திய மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தமிழகத்தின் திராவிட இயக்க மரபு குறித்த அறிமுகம் மற்றும் புரிதல் ஏற்படுவதற்கு அவரது ஆங்கிலக் கட்டுரைகள் பெரிதும் உதவின.

1996-ல் அனைத்திந்திய புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு சென்னையில் நடைபெற்றது.அந்தக் கருத்தரங்கில் பாண்டியன் ஒரு பேச்சாளராக இருந்தார். அன்றைய தினம் உடல்நல பாதிப்பின் காரணமாக அவரால் உரையாற்ற இயலாத போதிலும், கலந்து கொண்டுநக்சல்பாரி அமைப்பினர் மீது அவர் காட்டிய மதிப்பும் மறக்கமுடியாதவை. இவரது அகம்பாவம் இல்லாத இயல்பான உரையும், நட்புணர்வும் மறக்கமுடியாததாகவே உள்ளது.

தன்னுடைய கருத்தை ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகக் கொண்டிருந்தபோதும், புலிகள் இயக்கத்தையும் பார்ப்பனிய எதிர்ப்பையும் தன் விமரிசனக் கண்ணோட்டத்துடனேயே அணுகினார்.

ஆங்கிலத்தில் பல கட்டுரைகளில் தி.மு.க.,வைப் பற்றி மதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எழுதிய பாண்டியன், முள்ளிவாய்க்கால் இனப்படு கொலைக்குப் பிறகு தி.மு.க., மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

வெளியிட்ட நூல்கள்:

  • Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present, புதுதில்லி: 2007/2008
  • The Image Trap: M G Ramachandran in Films and Politics (1992)
  • Political Economy of Agrarian Change: Nacnchilnadu, c. 1880-1939, 1990
  • Muslims, Dalits and Fabrications of History: Subaltern Studies, Writings on South Asian History and Society, vol. 12, 2005 (தொகுப்பு)

எம். எஸ். எஸ். பாண்டியன் 2014 நவம்பர் 10 திங்கட்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தில்லி AIIMS மருத்துவமனையில் தனது 57வது அகவையில் காலமானார்.

தமிழகத்துக்காக பெரிதும் உழைத்த அன்னாரின் மறைவிற்கு சிறகு இதழ் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களுக்கு இரங்கல்”

அதிகம் படித்தது