மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எம்.ஜி.ஆரும் கருணாநிதியும்

இராமியா

Jul 31, 2021

siragu stalin1

மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றதில் இருந்து அவரது அணுகுமுறை வியக்கத்தக்க வகையில் நல்ல முறையில் இருப்பதைக் காணும் போது அவருடைய தலைமையில் தமிழ் நாடு நல்ல முன்னேற்றத்தைப் பெறும் என்ற நம்பிக்கை தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் தோன்றி உள்ளது. அவர் முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பும் அவருடைய அணுகுமுறை நன்றாகத் தான் இருந்தது. ஆனால் அது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்தியாக இருக்குமோ என்ற ஐயத்திற்கு இடம் இருந்ததால் அவ்வளவாக அவருடைய பெருந்தன்மையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இன்று அவர் தன்னுடைய மிகச் சிறந்த ஆளுமையை ஐயந்திரிபற மெய்ப்பித்து விட்டார். இதன் தொடர்ச்சியாக, சந்தேகக் கண்களுடன் பார்க்கப்பட்ட அவருடைய குழுவினரும் சிறப்பாகச் செயல்படுவதைக் காணும் போது அவரும் அவரது குழுவினரும் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்திற்குத் தமிழ் நாட்டைச் சிறப்பான நிலையில் கொண்டு சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

 இது போன்ற மகிழ்ச்சியான நிலையில் ஒரு எச்சரிக்கை உணர்வும் தோன்றுகிறது. இதற்குத் தெளிவான, திடமான வடிவம் இல்லை என்றாலும் ஒரு வித அதீத எச்சரிக்கை மனதில் உறுத்துகிறது.

எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்ட காலத்தில் இருந்து கருணாநிதி அவர்கள் காலம் ஆகும் வரை, தமிழ் நாட்டில் கருணாநிதி ஆதரவு – கருணாநிதி எதிர்ப்பு என்ற அரசியல் தான் நடந்து கொண்டு இருந்தது. எம்.ஜி.ஆரிடம் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றிய பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றாலும், மக்களிடையே இருந்த கருணாநிதி வெறுப்பு உணர்வைப் பயன்படுத்தி அவரைக் காட்டியே மக்களிடையே தன் வலுவைத் தக்க வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். தன் இறுதிக் காலம் வரை இந்த உத்தியை வெற்றிகரமாகவே கையாண்டார். அவருடைய மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவும் அதே உத்தியைத் தன் மறைவு வரை கையாண்டார்.

கருணாநிதியை விரும்பும் மக்களுக்கு இது தீராத வடுவைத் தந்து இருக்கும் என்பதில் வியப்பு அடைவதற்கு ஒன்றும் இல்லை. இன்று மாறி உள்ள சூழ்நிலையில், அதாவது தி.மு.க. ஆட்சி அமைந்து உள்ள நிலையில், அந்த வடுவை ஆற்றி விட வேண்டும் என்றும் கருணாநிதியின் புகழை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர் அடைந்து உள்ள நற்பெயரின் அளவுக்கு அவர் உரியவர் அல்ல என்று நிலை நிறுத்தி விட வேண்டும் என்றும் முயல்வது போல் சில செய்திகள் வருகின்றன. இவ்வாறு முயல்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திடும் என்ற அச்சம் ஏற்படுகிறது.

முதலில் கருணாநிதி அவர்களின் புகழை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயல்வது பற்றிப் பார்ப்போம். விரும்புகிறோமோ இல்லையோ கருணாநிதி அவர்களுக்கு எதிரான உணர்வு மக்களிடையே இருப்பது மறுக்க முடியாது. அதை மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியின் மூலமாகத் தான் வென்று எடுக்க முடியும். அதற்குச் சில காலம் காத்திருக்கத் தான் வேண்டும். அவசரமாகச் செயல்பட்டால் பா.ஜ.க.வினர் தேவை இல்லாத விவாதங்களை மக்களிடையே கொண்டு வந்து மக்களின் சிந்தனைப் போக்கில் குழப்பம் விளைவிப்பார்கள். அது நம் முதல் அமைச்சருக்கு இடையூறு விளைவிக்க மிகுந்த வாய்ப்பு உள்ளது. காமராசருக்குப் பின்னால், அண்ணாவுக்குப் பின்னால் ஸ்டாலினின் தலைமையில் தமிழ்நாடு தற்போது பெற்று உள்ள ஒரு நல்ல வாய்ப்பை நாம் இழந்து விடக் கூடாது.

அடுத்து எம்.ஜி.ஆரைப் பற்றிப் பார்ப்போம். அ.இ.அ.தி.மு.க.வில் உயர் நிலைகளில் உள்ளவர்கள் எம்.ஜி.ஆரின் மேல் உண்மையான அக்கறை கொள்ளாமல் இருக்கலாம். பல காரணங்களால் அவர்கள் பா.ஜ.க.வுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். அதில் இருந்து அவர்களால் தப்பி வரவும் முடியாது. ஆனால் பா.ஜ.க.வின் வலையில் மாட்டிக் கொள்ளாத பெரும்பாலாக உள்ள அடிமட்டத் தொண்டர்கள் இன்னமும் எம்.ஜி.ஆரின் மேல் பற்று கொண்டவர்களாகவே உள்ளனர். எம்.ஜி.ஆர். பெற்று உள்ள பெயருக்கு அவர் பொருத்தம் இல்லாதவர் என்று நிறுவ முயன்றால் அ.தி.மு.க.வில் மேல் மட்டத்தில் உள்ள பா.ஜ,க,வின் அடிமைகள் எம்.ஜி.ஆரை உயிரினும் மேலாகக் காட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு கொடுப்பதாக ஆகி விடும். அது கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தங்களை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்வதற்கு வழி வகுத்து விடவும் செய்யும். அப்படி நடக்கும் போது கட்சிக்குள் பிளவு ஏற்படாது. அப்படி பிளவுபடாத அ.தி.மு.க.வை பா.ஜ.க. முழுமையாக விழுங்க வாய்ப்பு கிடைக்கும். அப்படி நேர்ந்தால் தமிழ் நாட்டில் தி.மு.க. அணிக்கும் பா.ஜ.க. அணிக்கும் போட்டி என்ற நிலை உருவாகும். இது தமிழ் நாட்டின் நலன்களுக்கு மிகவும் கேடாக அமையும்.

 அப்படி அல்லாமல் எம்.ஜி.ஆரைப் பற்றி ஒன்றுமே கண்டு கொள்ளாமல் இருந்தால் அ.தி.மு.க. மேல்மட்டத் தலைவர்களுக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் கூர்மை அடையும் போது உயர் மட்டத் தலைவர்களுக்கு அடிமட்டத் தொண்டர்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் ஆயுதம் கிடைக்காது. சமூக நீதி உணர்வு கொண்ட தொண்டர்களிடையே சமூக நீதி உணர்வு கொண்ட புதிய தலைமை தோன்ற வாய்ப்பு ஏற்படும். எதிர்க்கட்சி என்ற இடம் திராவிட இயக்கச் சிந்தனையாளர்களிடையே இருக்கும். தங்கள் அடிமைகளின் வழியாக பா.ஜ.க. அங்கு நுழைவதையும், அவ்விடத்தைக் கைப்பற்றுவதையும் தடுக்க முடியும்.

இப்பொழுது நம் முன் உள்ள பணி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி எவ்வித உராய்வும் இல்லமாமல் நடப்பதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதும், அதன் மூலம் பா.ஜ.க.வைத் தமிழ் நாட்டில் கால் பாவவும் விடாமல் தடுப்பதுமே ஆகும்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எம்.ஜி.ஆரும் கருணாநிதியும்”

அதிகம் படித்தது