மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏகாந்த வீணை… மயக்கும் இசை… வீணை செய்வதில் கைதேர்ந்த தஞ்சை கலைஞர் ராமலிங்கம்…

நாகா ரா

Oct 28, 2016

siragu-egaandha-veenai5

தஞ்சாவூர்:

காணும் பொருட்களில் கலை வண்ணம் கண்ட ஒரே ஊர் தஞ்சைதான். இங்கு உருவாக்கப்படும் வீணைகளுக்கு உலக அளவில் பெரும் புகழ் உண்டு. அந்த வீணையில் அற்புதமான வேலைப்பாடுகள் அமையப்பெற்று இருக்கும்.

அப்படிப்பட்ட வீணையை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பலர் உள்ளனர். இதில் வாடிக்கையாளர்கள் மனதில் நினைப்பதை அப்படியே கொண்டு வருவதில் திறமை வாய்ந்தவர் தஞ்சையை சேர்ந்த ஆர்.ராமலிங்கம். இவருக்கு வயது 75.

வாருங்கள்… இவர் பற்றி தெரிந்து கொள்வோம்.

கோயில்கள் சூழப்பட்ட தஞ்சை கர்நாடக இசையை வளர்த்த நகரம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். தஞ்சையை சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து பல இசைக்கலைஞர்கள் இசையுலகில் புகழ் கொடி நாட்டி உள்ளனர்.

பாடல்கள் பாடுபவர்களுக்கு தக்க பக்க துணை வேண்டும் அல்லவா? அதிலும் தஞ்சை உட்பட பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் திறமைசாலிகள். இவர்களுக்கான இசைக்கருவிகள் செய்யும் இடமாக தஞ்சை சிறந்து விளங்கி உள்ளது. இதில் முதலிடம் பிடிப்பது வீணை.

இசைக்கத் தெரியாதவர்கள் கூட தாளதந்தியைத் தொட்டு மெதுவாக மீட்டினால் அருமையான ஒலியை ஏற்படுத்தும். அதுதான் வீணையின் சிறப்பு. வீணையில் இருக்கும் அருமையான, நுணுக்கமான சிற்ப செதுக்கல்கள் நம்மை திறந்த விழியை மூட செய்யாதவை.

siragu-egaandha-veenai1

அப்படிப்பட்ட வீணை செய்வதில் கைதேர்ந்தவர் தஞ்சையை சேர்ந்த ராமலிங்கம் (75). கடவுளின் வரம் பெற்றவர்கள் என்று வீணையைச் செய்பவர்களைச் சொல்வார்கள். அது என்னவோ… உண்மையிலும் உண்மைதான். பலா மரத்தை வெட்டி அதைக் குடைந்து அற்புதமான இசைக்கருவியாக வீணையை உருவாக்குபவர்களை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா. வீணை உருவாக்குவது எளிதல்ல…

40 ஆண்டுகளுக்கு முன்பு வீணையின் அனைத்துப் பகுதிகளையும் ஒருவரே செய்வார்கள். அந்த வீணையில் அற்புதமான வேலைப்பாடுகளையும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் செய்து தருவார்கள்.

அந்தக் காலத்தில் வீணை செய்ய அவர்கள் எடுத்துக் கொண்ட காலம் குறைந்தது 15 நாட்கள் ஆகும். இப்போது வீணையை பகுதி பகுதியாக பிரித்து பலர் செய்கின்றனர். குடம் என்று அழைக்கப்படும் அடிபாகத்தை செய்வதற்காகவே சிலர் உள்ளனர். தாளதந்திகள் அமையும் பகுதியை ஒருவரும், மேற்புறம் வரும் யாளி உருவம் உள்ள பகுதியை சிலரும் என்று பிரித்து செய்கின்றனர். பின்னர் இது ஒன்றாக இணைக்கப்படுகிறது.

siragu-egaandha-veenai2

இதில் செய்யப்படும் வேலைப்பாடுகளும் அப்படியே வேறு ஒருவர் செய்கிறார். ஆனால் அந்தக்காலத்தில் இதை அனைத்தையும் ஒருவரே செய்வார்கள். இப்படி தன் மலரும் நினைவுகளில் மூழ்கினார் ராமலிங்கம் அவர்கள்.

சற்றே தளர்ந்து போய் இருந்தாலும் அவரது சொற்கள் கணீர் என்று வெண்கலக் குரலாக வெளிப்பட்டது. என் அப்பா ராதாகிருஷ்ணன் அவர்களிடம் இருந்துதான் இந்த தெய்வீகக் கலையை நான் கற்றுக் கொண்டேன். இதை அவ்வளவு எளிதாகக் கற்றுக்கொள்ள முடியாது.

நுணுக்கமும், செய்யும் போது பக்தியும், தொழில்மீது மரியாதையும் கொண்டே செய்ய வேண்டும். வீணைகள் எப்போதும் பலா மரத்தில்தான் செய்யப்படும்.

siragu-egaandha-veenai3

இதில் குடம் என்று அழைக்கப்படும் முதல்பகுதிதான் வீணையை மிகுந்த அழகாகக் காட்டும். இதில்தான் தெய்வ உருவங்கள், மயில் என பல்வேறு வகை உருவங்களை செதுக்குவோம். பொறுமையும். நிதானமுமாக இதைச் செய்ய வேண்டும். பின்னர் தாள தந்திகள் அமையும் நடுப்பகுதி. இதுதான் வீணையின் இசைக்கு அடித்தளம்.

தாளதந்திகளை அவ்வளவு எளிதில் செய்து விட முடியாது. இந்த கர்நாடக சங்கீதத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே என் தந்தையிடம் தொழில்கற்றபோது கர்நாடக சங்கீதத்தையும் கற்றுக்கொண்டேன். ஸ்வரங்களை வெளிப்படுத்தும் இந்த தந்திகளை சாதாரண கம்பியாக செய்ய முடியாது. அதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதை ஸ்வரஸ்தமானம் என்கிறோம்.

முதல் கம்பிக ஸ வார்த்தையை ஒலிக்கும். இரண்டாவது கம்பிகள் ப என்றும், 3ம் கம்பிகள் ம என்பதை ஒலிக்கும். 4வது கம்பி மா என்று ஒலிக்கும்… உயர்ந்த ஒலி அல்ல சற்றே குறைந்த ஒலியில்.

அந்த காலத்தில் வீணைகள் முழுமையாக செய்து முடிக்க குறைந்த பட்சம் 30 நாட்கள் எடுத்துகொள்வோம். காரணம் ஒருவர் ஒரு வீணையையை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் அல்லவா. குடம் பகுதியில் ஆரம்பித்து தண்டு (நடுபகுதி) தலைப்பகுதியில் வரும் யாளி உருவம் வரை நிதானமாக செய்ய வேண்டும்.

சிறிய பிசிறு கூட ஏற்படக்கூடாது. என்னைத் தேடி வந்து கேட்பவர்களுக்கு, அவர்கள் என்ன விரும்புகின்றனரோ அதை முழுமையாக சிரத்தையுடன் செய்து கொடுக்க விரும்புவேன். தற்போது வயதான காரணத்தால் வீணையைச் சேர்க்கும் பணியை மட்டும் செய்து வருகிறேன் என்றார்.

siragu-egaandha-veenai6

வீணையைச் சேர்க்கும் பணி என்றால்… குடம் தனியாக, தண்டுப்பகுதி தனியாக, யாளிப்பகுதி தனியாக, ஸ்வர வரிசைகள் தனியாக என்று செய்வார்கள் இதை அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.

இதை இந்த வயதிலும் சிறப்பாகச் செய்வதில் ராமலிங்கம் கைதேர்ந்தவராக உள்ளார். நாம் சென்ற போது பெண் கடவுள் சரஸ்வதி உருவம் நுணுக்கமாக செதுக்கப்பட்ட வீணையை இணைப்பதில் மும்முரமாக இருந்தார். இந்த வீணைக்கு ஏகாந்த வீணை என்று பெயர்.

இவருக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்களும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். சமீபத்தில் கனடாவிற்கு கப்பலில் வீணைகள் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட சிறு விபத்தில் வீணைகள் தனித்தனியே பிரிந்து விட்டது.

இதை இணைக்க கைதேர்ந்தவர்கள் வேண்டும் என்பதால் கனடாவில் இருந்து ராமலிங்கத்தைப் பார்க்க வந்து அவரை அங்கு வர கேட்டுள்ளனர். வயதின் காரணமாக யோசித்து வருகிறார்.

தள்ளாத வயதிலும் அருமையான வீணைகளைச் செய்த இவர் போன்ற திறமை வாய்ந்தவர்களுக்கு அரசு விருதுகள் கொடுத்து கவுரவித்தால் தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்யலாமே!


நாகா ரா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏகாந்த வீணை… மயக்கும் இசை… வீணை செய்வதில் கைதேர்ந்த தஞ்சை கலைஞர் ராமலிங்கம்…”

அதிகம் படித்தது