மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏன் கண்மூடினாய்…? (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Sep 9, 2017

Siragu-en-kanmoodinaai1

பொங்கச்சோறு தினமும்

கிடையாது

நல்ல துணி உடுத்தவும்

முடியாது

பள்ளிக்கூடப் பையும்

பொத்தலாத்தான் இருக்கும்

புதுசா வாங்குன புத்தகம்

தரும் வாசணை

அறிஞ்சதே கிடையாது

பக்கத்து வீட்டு அக்கா

போன வருஷம்

தந்த புத்தகம்தான்

கிழிசலோட அடிக்கோடோட

கிடைக்கும்

மைபோட்டு எழுதுற பேனா

ஒரு நிறமும்

மூடி ஒரு நிறமும்

கையெல்லாம் மை

ஒழுகிக்கொண்டே

இருக்கும்

எழுதும்போதே

கைரேகை மைரேகையாக

காகிதத்தில் பதிந்து கிடக்கும்

இருந்தும் என்ன?

ஏதோ ஒரு வைராக்கியம்

நோய் கொண்டு போன

ஆத்தா போல இன்னொரு

ஆத்தா சாக கூடாதுன்னு

கண்விழிச்சு படிச்ச

கால்வயிறு நீர் ஆகாரம்

கிடச்சாலும் மொடக்குன்னு

குடிச்சுபூட்டு படிச்ச

பளபளப்பு இல்லாட்டியும்

உம் மனசுக்குள்ள

தகதகன்னு நம்பிக்கை

எரிய படிச்ச

ஐஞ்சு மணி மேல

வீட்டில

விளக்கு இல்லாட்டி என்ன?

சாலையோர விளக்குல

விடிய விடிய

படிச்ச

படிச்சுப்புட்டா

போதும்

வாட்டுற வறுமை

ஓடிப்போகும்ன்னு

நினைச்சு தானே

தவமா இருந்து

ஊரே மூக்குல

விரல வைக்க

1176 வாங்கின?

எப்படியும் மருத்துவர்

தான்னு உள் நெஞ்சு பூரிக்க

இடிய தந்ததே

ஆளுகின்ற வர்க்கம்

ஆண்டாண்டா பள்ளிக்கூட

படி ஏற முடியாம

சேத்துல உழன்டோமே

ஏன்னு கேட்க நாதியில்ல

தாடி வச்ச பெரியாரும்

கல்வி கண்ண திறந்த

காமராசரும் படிபடி

என்றே பள்ளிகள் தொறந்தாங்க,

எங்க சங்கதியும்

படிக்க ஆரம்பிச்சோம்

ஒரு அடி எட்ட

வைக்க தலை மேல

அடிபோட்டு

உங்களுக்கெல்லாம்

படிப்பான்னு

முகத்துக்கு நேரா

சொல்ல முடியாம

தகுதி தரம்ன்னு

நீட்ட கொண்டு

வந்தானே

எங்கம்மா உனை

நீட்டி பாடைல

படுக்க வச்சானே

அந்த படிப்பில்லன்னா

வேற படிப்பில்லையான்னு

தொந்தி வயிரெல்லாம்

எகத்தாளம் பண்ணுது

கூலி வேலை செய்யற

அப்பனின் மகளுக்கு

வாழ்வெல்லாம் போராட்டம்தானே?

அதயே தூக்கி வீசுன உனக்கு

தன்னம்பிக்கை பத்தி

பாடம் எடுக்குது

ஒட்டிப்போன வயிறும்

கன்னமும் சோகத்தில

மூழ்கிப் போக

உதிரம் சிந்த

வாங்கின

சமூக நீதியே

புதஞ்சு போச்சு

நாமும் புதஞ்சு

போவோம்ன்னு

கண்மூடினாயோ மகளே?

இல்ல சோத்தால்

அடிச்ச பிண்டம்போல

திரிஞ்சோமே

எங்கள உசுப்பிவிட

உன் சுவாசத்த

நிறுத்தினியோ மகளே?

இழவு விழுந்தாதானே

தமிழனுக்கு உணர்ச்சியே

பிறக்குதுன்னு புரிஞ்சுகிட்டு

கண்மூடினாயோ மகளே?

மனசனுக்கு மருத்துவம்

பாக்க ஆசபட்ட உன்னைய

மிருகத்துக்கு மருத்துவம்

பாக்க சொன்ன ஏமாற்றம்

தாங்காம

கண்மூடினாயோ மகளே?

தமிழ்நாடு கதறுதே

பச்ச மண்ணு உன்ன

நெருப்புல எரிச்சுபுட்டு

வயிறெல்லாம் பத்தி எரிய

கத்தறோம்

எவன் காதுல விழுகுது?

நூல்ல பறக்குற

பட்டமா ஆடுதே

தமிழ்நாடு

நூல அறுக்கத்தான்

காத்துக்கிடக்கோம்!!

 


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏன் கண்மூடினாய்…? (கவிதை)”

அதிகம் படித்தது