மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏரிகளில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுகள்

தேமொழி

Oct 1, 2022

கடற்கரையோரங்கள், ஆற்றின் கழிமுகங்கள், உப்பங்கழிகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளின் நடுவில் கண்ணைக்கவரும் உதய்பூர் ஏரி அரண்மனை போன்று செல்வந்தர்களின் உல்லாச மாளிகைகளும், நீராழி மண்டபங்களும், சுற்றுலா செல்பவர்களுக்காகத் தங்கும் விடுதிகளும் அமைக்கப்படுவது வழக்கம். இயற்கையாக அமைந்த தீவுகளிலோ அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளிலோ குடியிருப்புகள் பலகாலமாக இவ்வாறு அமைக்கப்பட்டு வருகின்றன. துபாயில் அமைக்கப்பட்ட உலகப் புகழ் பெற்ற பனை மர வடிவ செயற்கைத்தீவு, ஜப்பானின் டோக்கியோ வளைகுடாவில் உள்ள ஒடைய்பா என்ற செயற்கைத்தீவு, ஒசாகா வளைகுடாவில் கனாசி பன்னாட்டு விமான நிலையம் அமைந்த செயற்கைத் தீவு, டென்மார்க் ஸ்வீடன் நாடுகளை இணைக்கும் பாலத்திற்காக உருவாக்கப்பட பெபர்ஹோம் (Peberholm) தீவு போன்றவை இக்காலத்தில் நாம் அறியும் சில செயற்கைத் தீவுகள். கடலிலோ அல்லது நிலத்தில் இருக்கும் நீர்நிலைகளிலோ, செயற்கையாகத் தீவு ஒன்றை உருவாக்கி, அதில் வாழிடங்கள் உருவாக்கப்பட்டு வருவது புதிய தொழில் நுட்பமல்ல என்ற உண்மை மனித வரலாற்றை மேம்போக்காக அறிந்தவருக்கு வியப்பைத் தரலாம்.

வரலாற்றுக் காலத்திற்கும் முன்னர், பொது ஆண்டுகளுக்கு 4,000 முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே, புதிய கற்காலத்தில் மனிதக்குலம் செயற்கைத் தீவுகளை உருவாக்கி வந்துள்ளனர். கதிரியக்க கரிமக் கணிப்பின் (radiocarbon dating) மூலம் ஆய்வாளர்கள் இதை உறுதி செய்துள்ளனர். தொன்மையான செயற்கைத் தீவுகள் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பா நாடுகளில், குறிப்பாக பிரிட்டிஷ் தீவுகளில் உள்ள ஸ்காட்லாந்திலும் அயர்லாந்திலும் மிகுதியான எண்ணிக்கையில் அமைந்திருக்கின்றன. இந்த செயற்கைத் தீவுகள் ‘கிரானாக்’ (Crannog) என்று அழைக்கப்படுபவை. கிரானாக் என்ற வழக்கு 12ஆம் நூற்றாண்டு முதல் வழக்கத்தில் உள்ளது. இங்கிலாந்தின் ‘ஸ்டோன்ஹெஞ்ச்’ (Stonehenge) கல்வட்டம் உருவாக்கப்பட்ட காலத்திற்கும் முற்பட்டவை பழமையான இந்த கிரானாக் செயற்கைத் தீவுகள்.

siragu artificial island 1

siragu artificial island 2

இவை ஏரிகளில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுகள். இவை முற்றிலும் செயற்கைத் தீவுகள், அல்லது தீவின் ஒரு பகுதி செயற்கைமுறையில் அமைந்தவையாகவும் உள்ளன. பெரிய மரங்களை வெட்டி அமைக்கமுடியாத செம்புக்காலத்தில், ஏரியின் கரையை ஒட்டி, நீர்நிலையின் ஆழம் குறைந்த பகுதிகளில் பாறைகளையும் கற்களையும் நீரில் போட்டு, நீர் மட்டத்திற்கு மேல் ஒரு சிறு நிலப்பரப்பு உருவாக்கி, அதில் மரம் செடிகள் வளர்த்து சுமார் 100 அடிகள் குறுக்களவு கொண்ட தீவுத் திட்டுகளை உருவாக்கினர். அவற்றில் கற்களாலும் மண்ணாலும் வட்ட வடிவில் அமைக்கப்பட்ட குடில் போன்ற வீடுகளுக்குப் புற்களால் வேய்ந்த கூரைகள் அமைக்கப்பட்டன. ஒரு வீடு அல்லது சில வீடுகள் கொண்ட பகுதியினைச் சுற்றி கற்சுவரோ மண்சுவரோ எழுப்பிக் கொள்வார்கள். இந்த செயற்கை தீவுகள் நிலத்துடன் தொடர்புகொள்ள பாலம் போன்ற அமைப்பு (causeway) கொண்டதாகவோ அல்லது படகு போக்குவரத்து மட்டுமே கொண்டதாகவோ இருக்கும்.

siragu wiki-crannog-1siragu wiki-crannog-2

இந்த செயற்கைத் தீவுகள் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட தீவரண்கள் என்று கருதப்பட்டன. இருப்பிடத்தைச் சுற்றி தரையை அகழ்ந்து நீர் நிறைந்த அகழி ஏற்படுத்துவதற்கு மாறாக நீரின் நடுவில் நிலம் உருவாக்கிக் கொள்ளும் முறையாக இதைக் கருதலாம். தொன்மையான ஆரம்பக் காலத்துத் தீவுகளில் ஆயுதங்கள் அதிகம் கிடைத்தது இல்லை. தனிமை வாழ்க்கைக்கு உதவிய இந்தத்தீவுகளில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு அவை உணவாகவும் பயன்படுத்தப்பட்டன. தீவில் வளரும் தாவரங்களை விலங்குகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தினர். பாலம் உள்ள தீவுகளிலிருந்து கால்நடைகள் கரையோர மேய்ச்சலுக்கும் கொண்டு செல்லப்பட்டன. இங்கு மக்கள் தனிமையில் வீடு கட்டி வாழ்ந்ததுடன் கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிற்கூடமாகவும் பயன்படுத்தினர் என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது.

siragu crannog-3

siragu crannog-2

siragu crannog-1ஏரிகளில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் செயற்கையானவை என்று பலகாலம் அறியப்படாமல் இருந்தது. கண்ணிற்கு எட்டிய தொலைவில் தீவுகள் இருந்தாலும் எளிதாக அடைய முடியாத சூழ்நிலை; அவ்வாறு அடைந்தாலும் தொல்லியல் ஆய்வுகள் செய்ய இயலாத வகையில் நீர்நிலைகளாக இருப்பது போன்றவை ஆய்வுகளைத் தாமதப் படுத்தியிருக்கிறது. இருப்பினும் இதே காரணங்கள், அந்தப் பகுதிகளில் மனித நடமாட்டம் ஏற்பட்டுச் சீர்குலையாமலும், தடயங்கள் பெரும்பாலும் அழிவுராமல் இருக்கவும் உதவியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் கிரானாக் எனப்படும் செயற்கைத் தீவுகள் குறித்த உண்மைகள் தொல்லியல் ஆய்வுகள் மூலம் வெளிவரத் துவங்கின. இவ்வாறு செயற்கைத் தீவை உருவாக்கும் முயற்சி பொது ஆண்டுக்கு 800கள் முதல் பொது ஆண்டுக்குப் பின்னர் 200 ஆண்டுகள் வரை மிக அதிகப்படியான நிலையில் இருந்திருக்கிறது. புதிய கற்காலம் முதலே இவை உருவாக்கப் பட்டு வந்தாலும் இந்த வாழிடங்கள் இடை இடையே கைவிடப்பட்டும், மீண்டும் குடியேற்றம் நடந்தும் பல மாற்றங்களை எதிர் கொண்டவை. செயற்கைத் தீவுகளின் கட்டுமானங்களின் வரலாறு பொது ஆண்டு 1600கள் வரையிலும் தொடர்ந்துள்ளதும் தெரிய வருகிறது.

அண்மையில் வெளியான ஆய்வு (Antony G. Brown et al.2002) ஒன்று, செல்வந்தர்கள் தங்கள் செல்வச் செழிப்பையும், அதிகாரத்தையும் வெளிப்படுத்த கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் நடத்த இத்தகைய கிரானாக் செயற்கைத் தீவுகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறுகிறது. தீவைச் சுற்றிப் படிந்துள்ள படிவுகளில் கிடைப்பனவற்றை ஆய்வுகளுக்கு உட்படுத்திச் செய்யப்பட்ட உயிரியல் மூலக்கூறுகள் ஆய்வின் (biomolecular analyses) மூலமும்; அங்குக் கிடைக்கும் எலும்பு, மரம், மட்பாண்டங்கள், இரும்பு கருவிகள், வேலைப்பாடமைந்த துணிகள் ஆகியவற்றை ஆராய்ந்ததன் அடிப்படையிலும் ஆய்வாளர்கள் இவ்வாறு கருதுகிறார்கள்.

References:
• New integrated molecular approaches for investigating lake settlements in north-western Europe. Antony G. Brown et al. Published online by Cambridge University Press: 28 September 2022.
https://www.cambridge.org/core/journals/antiquity/article/new-integrated-molecular-approaches-for-investigating-lake-settlements-in-northwestern-europe/7A0304934781CF67D37DF76FCC87C54B; https://doi.org/10.15184/aqy.2022.70

• Neolithic crannogs: rethinking settlement, monumentality and deposition in the Outer Hebrides and beyond. Duncan Garrow and Fraser Sturt. Published online by Cambridge University Press: 12 June 2019.

https://www.cambridge.org/core/journals/antiquity/article/neolithic-crannogs-rethinking-settlement-monumentality-and-deposition-in-the-outer-hebrides-and-beyond/41A5D2F1C5E678B9EABB50BB17F7990E

• Artificial islands surrounding British Isles were used for ancient parties, archaeologists find. Kristina Killgrove.

https://www.livescience.com/ancient-elites-partied-on-crannogs-uk

• Artificial islands older than Stonehenge stump scientists. Erin Blakemore. Published online June 12, 2019.

https://www.nationalgeographic.com/culture/article/neolithic-island-older-than-stonehenge-crannog-scotland

• உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு, முனைவர் க. சுபாஷிணி, ஜூலை 25, 2021.

https://mymintamil.blogspot.com/2021/07/blog-post_25.html


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏரிகளில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுகள்”

அதிகம் படித்தது