மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏற்பது இகழ்ச்சி

ஆச்சாரி

May 16, 2011

படம்: ரிச்சர்ட்

கடந்த ஐந்தாண்டுகளாக பேசப்படும், பெறப்படும் ஒரு முக்கிய விடயம் அரசாங்கத்தால் அளிக்கப்படும் இலவசங்கள். குறிப்பாக தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில், முக்கிய அணிகள் இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை வாரி வழங்கி உள்ளன.

எதற்காக இந்த இலவசம் அளிக்கப்படுகிறது ? மக்களின் வாக்குகளை பெற, போட்டியிடும் கட்சிகள் வழங்கும் லஞ்சம் தான் இந்த இலவசம். அதையும் சூட்சுமமாக  செய்கின்றன இன்றைய அரசியல் கட்சிகள்.தேர்தலுக்கு முன் வாக்குகளுக்கு கையூட்டாக பணமோ பொருளோ தர வேண்டுமானால், அவர்களின் சொந்த பணத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும். ஆனால் தேர்தல் திட்டங்களில் அவை இடம் பெற்று விட்டதால், அரசுப் பணத்தை வைத்தே தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். தவிரவும், மக்களை பயமுறுத்தியே அவர்களை கோழைகளாக்கி வைத்திருக்கும் அரசியல் கட்சிகள், இங்கும் அதையே பயன் படுத்திக் கொள்கின்றன. நீங்கள் வாக்களித்து எங்களை வெற்றி பெற வைத்தால், இவ்வளவும் இலவசமாக உங்களுக்கு கிடைக்கும். இல்லையேல் நஷ்டம் உங்களுக்குத் தான் என கூறாமல் கூறுகின்றன.

இது அரசியல் கட்சிகளைப் பற்றிய பார்வை என்றால், இவற்றை நன்றாக உணர்ந்த மக்கள் பார்வை என்ன என்று பார்ப்போம். இன்று பெரும்பான்மையான மக்கள் இவற்றை எல்லாம் அறிந்திருந்தும் மௌனம் காக்கிறார்கள். எப்படியும் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் பெரிதாக மாற்றம் ஒன்றும் வரப் போவதில்லை. எந்த பலனும் இல்லாமல் இருப்பதற்குப் பதில், இந்த இலவசங்களை ஏற்றுக் கொள்வது என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை. நாம் வேண்டாம் என்றால் எவனோ ஒருவன் நமக்கு முட்டாள் பட்டம் கட்டி விட்டு நம் பங்கை எடுத்துக் கொள்வான். அதற்கு புத்திசாலித்தனமாக நாமே வாங்கிக் கொள்வோம். இப்படித் தான் இருக்கிறது இன்றைய சராசரிக் குடிமகனின் பார்வை.

என்ன ஆயிற்று நம் இனத்துக்கு? எங்கே தவறு? ஏற்பது இகழ்ச்சி என்ற ஏற்றமிக்க நம் பண்பு எங்கு சென்றது? பல வருடங்களாக சிறிது சிறிதாக இலவசம் என்ற பெயரில் தூக்கி எறியப்படும் பிச்சைகளால் மழுங்கடிக்கப்பட்டு விட்டோம்.  2010-2011 நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு தொலைகாட்சி பெட்டிகளை வழங்க மட்டும் ரூ. 500 கோடி ஒதுக்கீடு  செய்துள்ளது, எரிவாயு அடுப்பு வழங்க ரூ. 140 கோடியும் வேலை வாய்ப்பு அற்றோருக்கு உதவி தொகையாக 60 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி பராமரிப்புக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடு 36 கோடி, மருத்துவமனை பராமரிப்பு 80௦ கோடி,என்ன ஒரு ஊதாரித்தனம்?

2011-2012 இடைக்கால நிதி அறிக்கையில் 3716 கோடி ருபாய் செலவில் 1,58,08285 பயனாளர்களுக்கு வண்ண  தொலைகாட்சி வழங்கப்பட்டுள்ளது என்றும், இன்னும் பத்து லட்சம் தொலைக்காட்சி பேட்டிகள் 249 கோடி ருபாய் செலவில் வாங்கப்படும், என்றும் வெட்கமில்லாமல் கூறப்பட்டுள்ளது.

 

இல்லாதவர்களுக்கு இலவசங்கள் கொடுத்துதவுவது அரசின் கடமையே. பெரும்பாலான இலவசங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் வண்ணம் இருக்க வேண்டும். சேவை வடிவிலான இலவசங்கள் பொருள் வடிவிலான இலவசங்களை விட மக்களுக்கு பெரும் பயனளிக்கும். பொருட்களை இலவசமாகக் கொடுக்கும்போது இலவசப் பொருட்கள் கள்ள சந்தையில் பணமாக்கப்பட்டு அரசு பணம் வீணாவதைத் தவிர்க்கும் வண்ணம் மக்களிடம் நேரடியாக பணமாகவே கொடுப்பது சிறந்தது. சரியான இலவசத் திட்டங்கள் செயல்படுத்தும் போது இலவசம் பெரும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து மக்கள் வாழ்வில் முன்னேன்றம் காண முடியும். அனால் இதற்கு எதிர்மறையாக தமிழக அரசின் தவறான இலவசத் திட்டங்களால் தற்போது 90 விழுக்காடு மக்கள் இலவசங்கள் பெறுபவர்களாக இருக்கின்றனர். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இலவசத்திற்கும் பொருந்தும் என்பதை அரசும் மக்களும் உணர வேண்டும்.
- ஹமீது , கலிபோர்னியா மாகாணம்

கடனில் இயங்கிக் கொண்டிருக்கும் நம் அரசாங்கம் இலவசம் என்ற பெயரில் இவ்வளவு பொருட்களையும் அரசுப் பணத்தில் வாரி இறைக்குமானால், வருங்காலத்தில் யார் இந்த கடனை அடைப்பது என யோசித்தோமா? நாம் நமது சுயநலத்திற்காக நமது வருங்கால சந்ததியினரை அயல் நாட்டிற்கு அடகு வைக்கிறோம் என சிந்திக்க ஏன் மறந்துவிட்டோம்? இதையெல்லாம் மக்களுக்கு எடுத்தியம்ப வேண்டிய ஊடகங்கள் யாவும் அரசியல் கட்சிகளின் பகடைகளாகவும் பிரச்சார இயந்திரங்களாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களாலும் நாடகங்களாலும் நம் கண்களுக்கு திரையிட்டுகொண்டிருகின்றன.

நடைமுறையில் இந்த இலவசங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்கு வரப்போகும் அரசுக்கு நிறைய நிதி தேவைப்படும். இதனால் ஒரு பக்கம் ஆக்க வேலைகள் முடங்கும். இன்று தமிழகத்தில் முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்று மின்சார தட்டுப்பாடு. நாம் இன்றும் ஆங்கிலேயர்கள் கட்டமைத்து கொடுத்த மின்சார உள் கட்டமைப்பைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.  இதனை  மேம்படுத்த பெரும் முயற்சி எடுக்க வேண்டி உள்ளது. அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக் குறையினால் சரிவர பாடங்கள் நடத்தப்படுவதில்லை. பெரு நகரங்களுக்கு இடையில் கூட இன்றும் சரியான போக்குவரத்து வசதிகள் கிடையாது. இது போன்று ஒவ்வொரு துறையிலும் முன்னேற, மேம்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. இது போன்ற ஆக்க வேலைகள் அனைத்தும் தேங்கி நிற்கும். மறுபக்கம், இந்த இலவச அறிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற எப்படியும் பணத்தை ஈட்ட வேண்டும். அப்பொழுது தானே மக்கள் அடுத்த தேர்தலில் இவர்களுக்கு வாக்களிப்பார்கள். இருப்பது போதாதென மேலும் பல மதுக்கடைகளை திறப்பார்கள்.இன்றைய கீழ் தட்டு மக்களின் மிக முக்கிய பிரச்சினை இந்த மதுக்கடைகள். காலை முதல் மாலை வரை அவர்கள் உழைத்த உழைப்பை இரவில் உறிஞ்சிக் குடிப்பதே இந்த மதுக்கடைகளின் முக்கிய வேலை.  இப்படி இருதலைக் கொள்ளியாய் நம்மை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

தமிழகத்தில் பொருளாதார அறிவின்மை அனைத்து மட்டத்திலும் நிலவுகிறது என்பதை தான் இலவசம் காட்டுகிறது. பொறுப்பற்ற தன்மையுடன் இலவசம் வழங்க படுகிறது, அதனை உவகையுடன் மக்கள் பெறுகின்றனர். உலகில் எந்த பொருளையும் இலவசமாக கொடுக்க இயலாது என்பதே உண்மை, மக்கள் பெரும் இலவசம் அதே மக்கள் தலையில் வேறு வகையில் செலவாகதான் வந்து விழும். அல்லது இதுவரை உருப்படியாக மக்கள் நன்மைக்கு செலவு செய்யப்பட்டு வந்த பணம் இலவசத்திற்கு மடை மாற்றப்பட்டு பலன்கள் தடைபடும். அரசின் முக்கிய வருவாய் மக்கள் கட்டும் வரி, தீர்வை போன்றதன் மூலமாக வருகிறபோது அந்த பணத்தை ஆக்க வழியில் செலவு செய்யாமல் இலவசம் என்ற பெயரில் வீணடித்தால் மக்கள் வாழ்க்கைத்தரம் எவ்வாறு உயரும்? மக்கள் தமது தேவைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் உழைத்து தான் பொருளையோ, வசதிகளையோ தேட வேண்டும்.இலவசம் அவர்களை மேலும் ஏழ்மைக்கு தள்ளுவது மட்டுமல்லாமல், அவர்களிடையே சோம்பேறித்தனத்தை வளர்த்து சீரழிவை தான் ஏற்படுத்தும்.
- நாராயணன், கரோலினா மாகாணம்

பெரும்பான்மையான மக்கள் இவற்றைக் குறித்து பேசும் பொழுது, இதெல்லாம் நாடே அறிந்ததுதான், சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி கேட்கிறார்கள்.  ஏன் செய்ய முடியாது? யாரும் இதற்காக கத்தியை தூக்கிக் கொண்டு சண்டைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற அறிக்கைகளால் அரசியல் கட்சிகள் மக்களை கீழ்த்தரமாக நடத்துகின்றன, எங்களை இழிவுபடுத்தி விட்டன என மக்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கலாம். கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை உள்ள அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பலாம். இந்த மாதிரியான கேலிக்கூத்தான அறிக்கைகளை வெளியிட்டு எங்களை அவமானப் படுத்தும் கட்சிகளுக்கு கட்டாயம் வாக்களிக்க மாட்டோம் என அமைதியான ஊர்வலங்கள் மூலம் தெரிவிக்கலாம்.

எந்த ஒரு சமுதாயத்தில் மக்கள் சுயநலவாதிகளாகவும், கோழைகளாகவும் உள்ளார்களோ அந்த சமுதாயம் மிகப் பெரிய சுயநலவாதிகளாலும், தொலை நோக்கு பார்வையற்ற, குடியை கெடுக்கும் தன்னலமிக்க கோழைகளாலும் ஆளப்படும். இந்த அரசியல் கட்சிகள் இன்று தேர்தல் அறிக்கைகள் என்ற பெயரில் நம்மை இவ்வளவு தூரம் இழிவுபடுத்தியிருக்கின்றன என்றால் அதற்கு காரணம் நாமும் தான். இப்பொழுதும் விழித்துக் கொள்ளாமல் நாம் கனவுலகிலேயே மூழ்கி இருப்போமானால் நாம்  விழித்து கொள்ளும் பொழுது நாமும் நமது சமுதாயமும் சரித்திரமாகி இருப்போம்.

C writing strategies, getting it how to start writing an essay about yourself together for more information

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “ஏற்பது இகழ்ச்சி”
  1. தியாகராஜன் says:

    இலவசங்களை தவிர்த்து, அரசு நம் கட்டமைப்புகளில் ( மின்சாரம், சாலை வசதி ) கவனம் செலுத்தினால் நல்லது என்ற ஆசிரியரின் பார்வை சிறப்பாக உள்ளது. இலவசங்கள மக்களை ஏமாற்றும் ஒரு நோயகொல்லி. இலவசங்களை தவிர்ப்போம் , நல் வழியில் பயணிப்போம்

  2. sri says:

    நல்ல கட்டுரை , பாராட்டுகள்.

அதிகம் படித்தது