மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு

தேமொழி

Jan 21, 2017

Siragu kaliththogai1

பாட்டும் தொகையும் என அறியப்படும் சங்க இலக்கியங்களின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை. பாவகையினால் பெயர் பெற்ற கலித்தொகை ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும், ‘கல்வி வலார் கண்ட கலி’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுவது. சங்க இலக்கியங்களில் தொகுக்கப்பட்ட நூல்களில் அனைத்து நூற்றைம்பது பாடல்களும் சிதைவின்றி கிடைப்பதும் இதன் தனிச்சிறப்பு. நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் கலித்தொகைக்குக் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் கி. பி. 1887 ஆம் ஆண்டில் கலித்தொகையை முதன்முதலில் ஏட்டுச் சுவடிகளை ஆய்ந்து நூலாகப் பதிப்பித்தார்.

                 கடவுள் வாழ்த்து (சிவனை வாழ்த்தும் 1 பாடல்),

                பாலைக்கலி (பெருங்கடுங்கோன் எழுதிய 35 பாடல்கள்),

                குறிஞ்சிக்கலி (கபிலன் எழுதிய 29 பாடல்கள்),

                மருதக்கலி (மருதன் இளநாகன் எழுதிய 35 பாடல்கள்),

                முல்லைக்கலி (அருஞ்சோழன் நல்லுருத்திரன் எழுதிய 17 பாடல்கள்),

                நெய்தற்கலி (நல்லந்துவன் எழுதிய 33 பாடல்கள்),

ஆகிய பாடல்கள் கலித்தொகையில் இடம் பெற்றுள்ளன. பழந்தமிழ்ப் பாடலொன்று ஒவ்வொரு கலிப்பாடல்கள் தொகுப்பும் யார் யாரால் பாடப்பெற்றது என்று குறிப்பிடுகின்றது. இருப்பினும், பாடல்களின் அமைப்பையும் நடையையும் கொண்டு நெய்தல் பாடிய நல்லந்துவனாரே கடவுள் வாழ்த்து முதற்கொண்டு அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் என்பதும் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை போன்ற இலக்கிய ஆய்வாளர் சிலரின் கருத்தாகவும் இருக்கிறது[1]. மற்ற புலவர்களின் பெயர்களை அறியத் தரும் பழம்பாடலுக்கும் ஓர் உண்மை அடிப்படையாக இருக்கக்கூடும் என்பதால் பிற புலவர்களையும் அந்தந்த கலிப்பாடல்களின் ஆசிரியராகவே வழங்குவது தமிழறிஞர் மரபு. இப்புலவர்களுள் இருவர் அரசர்கள் என்பது கலித்தொகையின் சிறப்பு. ஐந்திணைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கலித்தொகை பாலைத்திணைக்கு முதலிடம் கொடுத்துத் துவங்குகிறது.

முல்லைக்கலி பாடல்கள் பாண்டியனையும், பாண்டியநாட்டின் முல்லை நிலத்தின் சிறப்பையும் கூறும் பாடல்களாக அமைந்திருப்பினும் அது சோழன் நல்லுருத்திரனால் பாடப்பட்டது என்பது வியப்பிற்குரியது. தமிழிலக்கியங்களில் கலித்தொகைப் பாடல்களின் முல்லைக்கலியில் மட்டுமே ஏறுதழுவுதல் குறித்த பாடல்கள் அமைந்துள்ளன என்பது தமிழறிஞர் சிலர் கூற்று[2]. முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் என்னும் முல்லை நில வழக்கம் பல பாடல்களில் இடம் பெறக் காணலாம். ஆயர்மகள் தனது துணைவன் ஏறு தழுவ துணிவு கொண்டவனாக இருக்க வேண்டும் என்றே விரும்புவாள். “கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை” மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டாள் ஆயர்மகள் என்பதனைக் கூறும்,

                “கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

                புல்லாளே ஆயமகள்.”

                -கலித்தொகை 103; 63-64

என்ற பாடல் வரி மிகவும் புகழ் பெற்றது. பழந்தமிழர்ப் பண்பாடான காதலும் வீரமும் விரவிக் கிடக்கின்றன இப்பாடல்களில்.

 முல்லைக்கலியின் 17 பாடல்களில் முதல் ஐந்து பாடல்கள் மட்டுமே (101-105) ஏறு தழுவும் விழா நடத்தப்படும் திடலில் நிகழும் காட்சிகளை விரிவாக விவரிக்கின்றன. மேலும் இரு பாடல்களுள் ஒன்றில் புலத்தில் மேய்ச்சலுக்குச் செல்லும் வழியில் அடங்காத காளைகளை அடக்கும் ஏறுதழுவும் நிகழ்வையும் (106), மற்றொன்று தொழுவத்தில் நுழைந்து விரட்டிய காளையை அடக்கும் ஏறுதழுவும் நிகழ்வையும் (107) காட்சிப்படுத்துகின்றன. இவை விரிவான (80 அடிகள் வரையும் கூட) நீண்ட பாடல்களாகவும் அமைந்து ஏறு தழுவும் ஆயர்மகனையும், அவனது வீரத்தில் மயங்கி மணம் முடிக்கும் ஆயர்மகளையும் குறிக்கின்றன.

இப்பாடல்கள் தரும் காட்சிகளைத் தொகுத்து, கோர்வையாக ஒரேநாளில் நடைபெறும் ஓர் ஏறு தழுவும் விழாவினை விவரிப்பதாக இக்கட்டுரையை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்காட்சிகள் யாவும் முதல் ஐந்து பாடல்களில் இடம்பெறுபவை[3].

 முல்லைக்கலி காட்டும் ஏறு தழுவும் விழா:

Siragu-kaliththogai5

ஊரில் நிகழவிருக்கும் ஏறு தழுவும் விழா குறித்துப் பறை அறிவிக்கப்படுகின்றது. விழா நாளன்று பிடவம், செங்காந்தள், காயாம்பூ போன்ற பலவகை அழகிய நறுமணமிக்க மலர்களால் தொடுக்கப்பட்ட கண்ணியைச் சூடியவர்களாக, பல மாடுகளின் உரிமையாளர்களாகவும் இருக்கும் ஆயர்குல இளைஞர்கள் போட்டிக்குத் தயாராகக் காத்திருக்கிறார்கள்.

காட்சியாளர்களுக்காக அமைக்கப்பட்ட பரண் ஒன்று ஆயர்குல இளம்பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. விழாவை எத்திசையிலும் பார்க்கும் வகையில் உயர்வான பரணாக அமைக்கப்பட்டிருந்த அந்த மேடையில் அமர்ந்திருந்தார்கள் இனிய சொற்களையும், கரிய பெரிய குளிர்ச்சியான கண்களையும், முல்லை மொட்டு போன்ற வெண்ணிற சிறு பற்களையும், காதில் ஒளிரும் மகரக்குழைகளையும், அழகிய அணிகளையும் அணிந்திருந்த மாந்தளிர் நிறம் கொண்ட ஆயர்குல மகளிர். அப்பெண்கள் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் தங்கள் காதலர்கள் வெற்றி பெற வேண்டும் என்றும், ‘கொல்லும் காளையை வென்றவன் இவளது துணைவன்’ என்று தங்களுக்கு ஊரார் மெச்சும்படியான பெருமை கிடைக்க வேண்டும் என்றும் மாயவனை வேண்டுகிறார்கள்.

அவர்களில் அழகி ஒருத்தி ஏறுதழுவும் வீரர்களில் ஒருவனது கவனத்தைக் கவருகிறாள். என் இதயத்தில் நுழைந்து விட்டாள் இந்த இளம்பெண்! தோழிகளுடன் மென்மையான குரலில் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருக்கும் அந்த அழகி யார் என்று தோழனிடம் கேட்கிறான் தலைவன். பாங்கனும் ஓ, ஓ… அவளைக் குறிப்பிடுகிறாயா? கம்பீரமாக நிற்கும் அந்த முரட்டுக் காளையை அடக்கிப் பிடிப்பவருக்குத்தான் அவளை மணமுடித்துக் கொடுக்கப் போவதாக எல்லோரும் கேட்கும்படி பறை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அந்த எருதை அடக்குபவரைத் தவிர வேறு யாரும் அந்தக் கருநிற அழகியை அடைய முடியாது என்கிறான் தோழன். நான் அந்தக் காளையை அடக்குவேன் என்று அவளது குடும்பத்தினரிடம் சென்று சொல்வாயாக என்கிறான் துடிப்புமிக்க அந்த வீரன்.

காலந்தாழ்த்த வேண்டாம், பறை முழங்கட்டும், விழா தொடங்கட்டும், அழகிய ஆயர்குலப் பெண்களை மணக்க விரும்பும் வீரர்கள் காளைகளுடன் மோதட்டும் என ஆணையிடுகிறார்கள் இளம்பெண்களின் உறவினர்கள். இடையர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உற்சாகம் பொங்கத் தத்தம் காளைகளைத் திடலுக்குள் செலுத்துகிறார்கள்.

பல வகையான பலநிறங்கள் கொண்ட காளைகள் திடலுக்குள் நுழைகின்றன. எந்த ஒரு மாசுமருவுமற்று பாலினைப் போன்ற மிக வெண்மையாக பலதேவன் போன்ற நிறத்தில் ஒரு காளை; கரிய திருமால் போன்ற நிறத்தில் ஒரு காளை; சிவனின் இளம் பழுப்பு நிறத்தில் உயர்ந்த திமிலுடன் ஒரு காளை; முருகனின் கருஞ்சிவப்பு நிறத்தில் ஒரு காளை, இந்திரனின் உடலில் உள்ள ஆயிரம் கண்களைப் போல உடலில் திட்டுகள் பலவற்றைக் கொண்ட ஒரு காளை எனப் பல காளைகள் உயிரை எடுக்கும் எமனைப் போல திடலில் நுழைகின்றன.

Siragu kaliththogai4

இந்த வெண்ணிறக் காளையின் கழுத்தைப் பிடித்து அடக்குபவனுக்கு இந்த முல்லைப்பூ போன்ற கூரிய வெண்பற்களைக் கொண்ட இளம்பெண் மாலையிடுவாள்; கருநிறக் காளையின் சீற்றத்தைக் கண்டு அஞ்சாது அதன் கூரிய கொம்பினைப் பிடித்து அடக்குபவனை அழகிய அணிகளையும் படிய வாரியக் கூந்தலையும் உடைய இந்த அழகி மணந்து கொள்வாள்; ஒளிமிக்க கண்களையுடைய இந்தக் கொல்லேற்றை வெற்றி கொள்பவனை மானைப்போன்ற அழகிய கண்களைக் கொண்ட இந்த ஆயர்குலமகள் மணமுடிப்பாள்; ஆற்றல் மிக்க செங்காளையின் சீற்றத்தை அடக்குபவனுக்கு மூங்கில் போன்ற மென்தோள்களைக் கொண்ட இந்த அழகி வாழ்க்கைத் துணையாவாள் என்று ஏறு தழுவும் விழாவின் இடையர்குல மரபினைப் பின்பற்றி அறிவிப்புகள் கொடுக்கப்படுகிறது. ஆடு, மாடு, எருமை ஆகியவற்றை வளர்க்கும் அனைத்து இடையர்களும் ஏறுதழுவலுக்குத் தயாராகிறார்கள்.

இடி போன்ற ஒலியுடன் பறைகள் முழக்கப்படுகின்றன. நறுமணமிக்க புகை திடலில் எழுப்பப்படுகிறது. அப்புகை காளைகளைச் சீற்றம் அடையச் செய்கிறது. மலைக்குகை ஒன்றில் ஒருசேர இருந்த சினம் கொண்ட சிங்கம் போலவும், மதம் கொண்ட களிறு போலவும், வலிவுடைய குதிரை போலவும், அச்சம் தரும் முதலை போலவும் இருந்த ஏறுகளை மேகம் சூழ்ந்திருப்பது போல அப்புகைமண்டலம் தோற்றம் தருகிறது. தண்ணுமை முழவுகள் இடையறாது முழங்குகின்றன. கடவுளை வணங்கிக் கொண்டு, ஆரவாரத்துடன் வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.

இறைவனுடைய குந்தாலிப்படைபோல கூர்மையாகச் சீவிவிடப்பட்ட காளைகளின் கொம்புகளை நோக்கி ஆர்ப்பரித்து அரங்கில் பாய்கிறார்கள் ஆயர்குல இளைஞர்கள். இச்செயலைக் கண்ட காளைகள் சீற்றத்துடன் வில்லில் இருந்து பாயும் அம்பு போல வீழ்த்துவதற்காக அவர்களை நோக்கி ஓடுகின்றன. எங்கும் புழுதி கிளம்புகின்றது. வீரர்கள் மார்பினை நிமிர்த்தி அக்காளைகளை எதிர் கொண்டனர். கொம்புகளால் அவர்களைக் குத்துவதற்காக தலையைக் கவிழ்த்து காளைகளும் முன்னேறின. அவர்களில் பலர் எருதுகளின் சீற்றத்தைக் கண்டு கலங்கினர். இக்காட்சியை,

                 “தகை வகை மிசை மிசைப் பாயியர் ஆர்த்து உடன்

                எதிர் எதிர் சென்றார் பலர்

                கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினஞ் சிறந்து

                உருத்து எழுந்து ஓடின்று மேல்

                எழுந்தது துகள்

                ஏற்றனர் மார்பு

                கவிழ்ந்தன மருப்பு

                கலங்கினர் பலர்”

                -கலித்தொகை 102; 17-24

என விவரிக்கிறார் அருஞ்சோழன் நல்லுருத்திரனார்.

பரணில் மேலிருந்து ஆயர்குலப் பெண்கள் ஏறுதழுவுதலைக் காண்கிறார்கள். தோழி போரிடும் வீரர்களை ஒவ்வொருவராகத் தலைவிக்குச் சுட்டிக் காட்டுகிறாள். பாராய் தலைவி, அங்கே ஓர் இளைஞன் காளையின் கொடிய கொலைப் பார்வைக்கு அஞ்சாது அதன் கொம்பின் மீது பாய்கிறான். காளை தனது கொம்பினால் அவனைக் குத்தி, காயம்பட்ட அவனது உடலைத் தலைக்கே மேலே தூக்கிச் சுழற்றுகிறது.   அதோ, நெற்றியில் சுழி கொண்ட அந்தக் கறுப்புக் காளை அந்த வீரனைக் குத்தித் தாக்குகிறது. குடலை உருவுகிறது. அவன் உடலில் இருந்து குடல் சரிகிறது. இதோ இந்த இளைஞன் அச்சமின்றி வெள்ளைக் காளையின் மீது பாய்கிறான்.

Siragu-kaliththogai7

அங்கே, சிவனின் முடியில் உள்ள பிறை நிலவைப் போன்ற வளைந்த கூரான பெரிய கொம்புகளை உடையக் காளைகள் ஆற்றலுடன் எதிர்க்கின்றன. அவை இளைஞர்களின் உடலைக் குத்தி, அவர்களின் குடலை உருவி தங்கள் கொம்புகளில் சுற்றிய குடலை ஏந்தியிருக்கும் காட்சியானது கொம்புகளில் சிவந்த மாலையைச் சூட்டியிருப்பது போல உள்ளது. தனது வீரத்தின் மீது பெருமிதம் கொண்ட இளைஞன் ஒருவன் விடாது காளையைப் பின்பற்றி அதன் கொம்பில் உள்ள குடலை உருவி தனது வயிற்றுக்குள் மீண்டும் திணித்துக் கொண்டு வீழ்கிறான்.

காளையால் தாக்கப்பட்டு வீழ்ந்த மற்றொருவன் தனது செருக்கின் காரணமாக விடாது எழுந்து, தனது ஆற்றலையெல்லாம் திரட்டி துணிவுடன் மீண்டும் காளையினைப் பிடிக்க முயல்கிறான். இயலாது மீண்டும் வீழ்கிறான். அவனது முயற்சியைக் கண்ட அந்த பழுப்பு நிறக் காளை அவனைத் தாக்காது விலகிச் செல்கிறது. கொடிய போரில் வெற்றி பெற்ற சிறந்த வீரத்தளபதி ஒருவன் தோல்வியைத் தழுவிய தனது எதிரியை மேலும் தாக்கிக் கொலை செய்யாது பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது போல விலகுகிறது அந்தக் காளை.

 தோழி காட்டிய காட்சிகளைக் கண்டு அஞ்சுகிறாள் தலைவி. அது கண்டு தலைவி கொண்ட அச்சத்தைப் போக்க, உன் காதலன் உனக்காக வருவான், நான் அவனிடம் மதம் கொண்ட யானை போன்ற அந்த மிகப் பெரிய காளையை நீ வெல்வாய் என்றால் வெற்றி தரும் என் தலைவியின் கரம் பற்றலாம் என்று கூறியிருக்கிறேன் என்கிறாள் தோழி. மேலும், ஆயர்கள் குழல் வாசிக்கும் ஒலி கேட்கிறது. இது நல்ல நிமித்தம். உனது காதலன் காளையை அடக்கி வெற்றிமாலையுடன் உனக்காக வருவான், அவனைக் கணவனாக நீ அடைவாய் என்று சமாதானப் படுத்துகிறாள்.

 வீரர்களில் ஒருவன் காளையின் திமிலுக்கு அருகில் கழுத்தை இறுகப்பிடித்து அதனை மடக்குகிறான். அவனது பிடி காளைக்கு வேதனை தருகிறது. காளையின் துன்பம் கண்டு அதன் உரிமையாளரான இடையர் கொதித்தெழுகிறார், இளைஞனின் செயல் கண்டு அவன் மீது கண்டு கடுஞ்சினம் கொள்கிறார். இளைஞர்கள் காளைகளின் கொம்புகளைப் பற்றியும், கழுத்தினை நெருக்கியும், திமிலினைத் தழுவியும் அவற்றை அடக்க போராடுகிறார்கள். தங்களை அடக்க முயல்பவர்களைக் காளைகள் கொம்புகளால் தாக்குவதில் குறியாக இருக்கின்றன. செந்நிறக் காளையொன்று தன்னை நெருங்குபவர்களை மீண்டும் மீண்டும் தாக்குகிறது. அதன் கொம்புகளின் மணிகள் தொடர்ந்து ஒலிக்கின்றன. வெள்ளை நிறக் காளையொன்று தனது கழுத்தில் தொங்கும் இளைஞனுடன் பார்வையாளர் பரணின் பக்கம் தாவுகிறது.

 மேலும் சில இளைஞர்கள் ஏறுகளை நேருக்குநேர் எதிர் கொண்டு அவற்றின்   மீது பாய்கிறார்கள். சிலர் அவற்றின் கொம்புகளின் இடையில் தங்கள் உடலை நுழைக்கிறார்கள். காளைகளின் திமிலைப் பற்றியவண்ணம் படகு சவாரி செய்பவர்கள் போல சவாரி செய்கிறார்கள். காளைகளின் கழுத்தை விடாது மாலை போல தொங்குகிறார்கள். ஆயர்குல மகளிர் கொல்லேறுகளின் திமிலைத் தழுவும் வீரர்களின் போராட்டத்தைக் கண்ணிமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இரு பெரும் அரசர்களுக்கு இடையே நடக்கும் போரின் போர்க்களம் போல திடல் காட்சியளிக்கிறது.

சினம் கொள்ளும் காளையைக் கட்டுப்படுத்த   எழுப்பப்படும் புகையால் அவை அடங்காது, மேலும் கொலைவெறி கொண்டு இளைஞர்களைத் துன்புறுத்துகின்றன. அவற்றின் கொம்புகளைப் பிடித்த இளைஞர்கள் சிலர் காயமுறுகிறார்கள். எலும்புகள் முறிகின்றன, குடல்கள் சரிகின்றன, திடல் எங்கும் தசைகள் சிதறுகின்றன. பரணில் இருந்து குதித்த இளைஞன் ஒருவனும் குத்தீட்டி போன்ற கூறிய கொம்புகளை உடைய வெண்ணிறக் காளையொன்றை நோக்கி அச்சமின்றி ஓடுகிறான். அச்சம் கொண்ட பார்வையாளர் சிலர் வீரர்களைத் தடுத்து நிறுத்த முயல்கிறார்கள். ஆனால் காளைகளை அடக்குவதில் உறுதியான உள்ளம் கொண்டு, அவற்றை எதிர்கொள்ளும் இளைஞர்களை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை.

புலிகளும் யானைகளும் தங்களுக்குள் மோதியதுபோல காளைகளுடன் மோதிய வீரர்கள் திடலை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களது காயாம்பூ மாலையில் இருந்து மலர்கள் திடலெங்கும் சிதறிக் கிடக்கின்றன. போட்டியில் பங்கு பெற்ற காளைகள் மேய்ச்சலுக்குத் திரும்புகின்றன. வெற்றி கொண்ட வீரர்களை அரவணைக்க அவர்களது அழகிய இளம் காதலிகள் ஆர்வத்துடன் ஓடுகிறார்கள்.

                 “கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

                புல்லாளே ஆய மகள்.

                அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை

                நெஞ்சு இலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து

                நைவாரா ஆய மகள் தோள்

                வளியா அறியா உயிர் காவல் கொண்டு

                நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு

                எளியவோ ஆய மகள் தோள்”

                -கலித்தொகை 103;63-70

“கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை” மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டாள் ஆயர்குலமகள் என்பதை ஆயர்குல ஆண்கள் அறிவார்கள். கொல்லும் காளையின் கொம்புகளுக்கு அஞ்சுபவர்கள் ஆயர்குல மகளிரின் இதயத்தில் இடம்பிடிக்க முடியாது என்றும் அவர்கள் அறிவார்கள். காளைகளை வெல்லாது ஆயர்குல மகளிருடன் இணையமுடியாது என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

வெற்றி பெற்ற வீரர்களுடன் சோலைகளில் நுழையும் பெண்கள் பாடி, குரவை ஆடி மகிழ்கிறார்கள். தங்களது தெய்வம் மாயோனை போற்றிப் பாடியும், பாண்டிய மன்னனை நீடு வாழ்க என வாழ்த்திப் பாடியும் குரவை ஆடுகிறார்கள். தாளகதியுடன் பாடலும் ஆடலும் தொடர்கிறது. ஒரு ஆயர்குலமகள் தனது தோழியையும் தங்கள் மரபின்படி குரவையாடலில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்த வருமாறு அழைக்கிறாள்.

அவளது தோழியோ, செந்நிற நெற்றியைக் கொண்ட பெரிய காளையினை வென்ற விரிந்த பரந்த மார்பினைக் கொண்ட வீரம் மிக்க இளைஞனை நான் பாராட்டிப் பாடுவேன், மக்கள் அதுகுறித்து அலர் பேசினாலும் பொருட்படுத்த மாட்டேன், அவனது வீரம் என்னைக் கவர்ந்தது என்கிறாள்.   அவளது தோழியோ கறுப்புக் காளையை வென்றவனை அல்லவா உனக்கு மணம் செய்வதாக உன் பெற்றோர்கள் கூறியுள்ளார்கள் என வியக்கிறாள். குரவைபாடி மாயோனை வேண்டி அவர்கள் உனது விருப்பத்தை ஏற்கவேண்டும் என்று வேண்டிக் கொள் என்று கூறுகிறாள்.

 முல்லைக்கலி காட்டும் காதலும் திருமணமும்:

Siragu kaliththogai8

முல்லைக்கலி பாடல்கள் அனைத்தும், ‘கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டாள் ஆயர்மகள்’ என்றக் கருத்தினைக் காட்டும் பாடல்களாக; அதாவது ஏறுதழுவும் வீரனை விரும்பி மணம் முடிக்கும் காதலாகவும் காட்டப் பெறவில்லை. பின்னர் வரும் பத்து முல்லைக்கலி பாடல்கள் சற்றொப்ப 25 வரிகள் கொண்ட சிறிய பாடல்களாகவும், ஆயர்மகளும் ஆயர்மகனும் சந்திக்கும் நாடகக் காட்சிகள் போலவும், அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் மூலம் அவர்களது மனக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக மோர் விற்பதற்காகவோ, கன்று மேய்ப்பதற்காகவோ, தோழியருடன் விளையாடவோச் சென்ற ஆயர்மகளை வழிமறித்து, அவளது அழகைப் புகழ்ந்து, அவள் தந்த காதல் நோயைக் குறிப்பிட்டு, அவளை அடைய விரும்புவதை ஆயர்மகன் கூறுகின்றான். அவனை வழியை விட்டு விலகும்படிக் கூறியோ அல்லது தனது பெற்றோரை அணுகும்படியோ ஆயர்மகள் அறிவுறுத்துகின்றாள். சில பாடல்களில் அவனை எச்சரிப்பது போலவும் கண்டிப்பது போலவும் காட்டிக் கொண்டாலும், தான் தனித்திருக்கும் இடத்தையும் நேரத்தையும் குறிப்பால் உணர்த்தியும் செல்கிறாள். அக்குறிப்பையும் புரிந்து கொள்ளாத அப்பாவியாக இருப்பவனிடம் தனது தோழியை அனுப்பி அவனுக்கு விளக்கி வரவும் ஏற்பாடு செய்கிறாள் முல்லைநிலத்தின் ஆயர்மகள்.

______________________________________________________

[1] பாட்டும் தொகையும் – ஓர் அறிமுகம், டாக்டர். சி. பாலசுப்பிரமணியன், முதற் பதிப்பு 1994, பாரி நிலையம்.

[2]   கலித்தொகை: கருத்தும் காட்சியும், முனைவர் துரை. குணசேகரன்2015, வல்லமை

http://www.vallamai.com/?p=64912

[3]   கலித்தொகை – மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், பதிப்பாசிரியர்: இ.வை.அனந்தராமையர், 1925 ஆண்டு பதிப்பு, தமிழ் இணையக் கல்விக்கழகம் சேகரிப்பில் உள்ள நூல்.

http://www.tamilvu.org/slet/l1260/l1260pag.jsp?bookid=26&page=617


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு”

அதிகம் படித்தது