மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐங்குறுநூறு 45

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 31, 2022

siragu aingurunuru

ஐங்குறுநூறு 45, இது புலவிப் பத்தின் கீழ் வரும். தலைவன் பரத்தையரிடம் சென்று பாணர்களான தன் நண்பர்களோடு வீடு திரும்பி, தலைவியைச் சந்திக்க நினைப்பான்.  தலைவியும் அவள் தோழியும் அவனை ஏற்றுக் கொள்ள மறுப்பர். இந்தப் பாடலை எழுதியவர் ஓரம்போகியார். இது மருதத் திணைக்குரியப் பாடல். தோழி தலைவனிடம் தலைவி கூறுவதைப் போலக் கூறிய பாடல்.

கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று நின் ஊரே!
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே.

குளிர் காலம் வரின்

உன் ஊரின் ஆறு

கலங்கிக் குளிர்த் துளிகள்

ஏந்தும்,

கதிரோனின் ஆட்சி வரின்

ஆற்றின் நிறம்

வானின் நிறத்தை

ஏற்று

ஓடும்

அந்த ஊரின்

தலைவனான உன்னைத்

தலைவி மணம் முடித்தாள்

மனம் கனலென வெதும்பிப் புரண்டாள்

அவள் அன்பை விடுத்து

அவள் மடி மறந்து

வேறு

மடி தேடிச் சென்றனை

அவளின் கண்கள்

கனவுகள் உறைந்து

பசலை எனும் பிரிவின்

நிறத்தை ஏற்றுக்

கண்ணீரில் நீந்தியதே

அவளைத் துறந்து

சென்ற உன் காலடித்

தடங்கள் எங்கள் வாயில்

மிதிப்பதை எங்கள்

எண்ணம் கூட விரும்பாது


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐங்குறுநூறு 45”

அதிகம் படித்தது