மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகள்!

சுசிலா

Dec 15, 2018

Siragu election result1

தற்சமயம் நடந்து முடிந்திருக்கும் 5 மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லும் செய்தியென்னவென்றால், மோடி அலை என்ற ஒரு மாயபிம்பத்தை தோற்றுவித்து, அதன் மூலம் மக்களை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்த பா.ச.க அரசை, ஒரு மதவாத அரசை, சனநாயகத்திற்கு கேடு விளைவிக்க எத்தனிக்கும், ஒரு சர்வாதிகார அரசை, மக்கள் நலனில் சிறிதும் அக்கறைகொள்ளாத ஒரு அரசை, கொதித்தெழுந்து மக்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், மதசார்பற்ற சமூகநீதிக்கு போராடும் சக்திகள் ஒன்றிணைந்து ஒரே குரலாக, மதவாத பா.ச.க-வை எதிர்த்தது தான். மேலும், அனைத்து எதிர்க்கட்சிகளும், சனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் ஒன்றிணைந்து போராடுகின்றன என்பதை மக்கள் உணர்ந்ததால் தான், பாசிச பா.ச.க-விற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சி தான் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால், அங்கு சாதி அடிப்படையிலான ரெட்டிகளுக்கும், கம்மாக்களுக்கும் இடையே அதிகாரப்போட்டி வந்ததின் விளைவு, அரசின் மீது அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்தது. அதனை, மிகவும் துணிச்சலாக அணுகுகினார் சந்திரசேகர ராவ். ஆட்சியை களைத்துவிட்டு தேர்தலுக்கு ஆயுத்தமானார். மீண்டும் தன்னுடைய ஆட்சியை மூன்றில் இரண்டு பங்கு வெற்றிபெற்று தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மிசோராமில், காங்கிரசு தன்னுடைய நீண்டகால ஆட்சியை இழந்திருக்கிறது. அம்மாநில கட்சியான தேசிய முன்னணி அரிதி பெரும்பான்மை பெற்று, தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. 5 தேர்தல்களில், இரண்டு மாநிலக் கட்சிகள் வென்றிருக்கின்றன என்பதில் மகிழ்ச்சி.

Siragu election result4

அடுத்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில், பா.ச.க தான் ஆளும் கட்சியாக இருந்தது. அசைக்க முடியாத சக்தியாகவும் இருந்தது என்றால் மிகையில்லை. 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது பா.ச.க-வின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வட மாநிலங்களில் மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள். அந்தளவிற்கு, பா.ச.க-வின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று முறை தொடர்ந்து சிவராஜ் சவுகான் வெற்றிபெற்று, பா.ச.க-வின் ஆட்சியை ஆண்டுக் கொண்டிருந்தவர். ராஜஸ்தான் பா.ச.க-வின் கோட்டை என சொல்லப்பட்ட மாநிலம். சத்தீஸ்கரிலும், பா.ச.க கட்சி நன்கு வேரூன்றி இருந்தது. அங்கும் மூன்றுமுறை அவர்களின் ஆட்சி ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவு ஆழமாக மக்களின் மனத்தில் பதிந்திருந்த பா.ச.க, இந்த 2018 சட்டமன்றத் தேர்தலில், தங்கள் ஆட்சியை இந்த மூன்று மாநிலங்களிலும் இழந்திருக்கின்றது. மாறாக, காங்கிரசு ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்றால், 2014ல் மோடி அலை என்று கற்பனையாக பின்னப்பட்ட வலையில் சிக்கிக் கொண்டிருந்த மக்கள், இன்று வெளியே வந்து சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள், மிகச் சரியாக வாக்களித்திருக்கிறார்கள் என்பது தானே மெய்ப்பிக்கப்படுகிறது.

Siragu election result6

இந்த தோல்விகளுக்கெல்லாம் காரணம், மதவாத பா.ச.க-வின் ஆட்சி முறை தான் என்பது நம் எல்லோருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த மதவாத பா.ச.க-வின் ஆட்சியில், கடந்த நான்கரை ஆண்டுகளாக, மக்கள் அனுபவித்த வேதனைகள் சொல்லொண்ணாத் துயரத்தை தானே அளித்திருக்கின்றன. மிக முக்கியமாக, முதன்மையாக சொல்லவேண்டுமென்றால், கருப்பு பணத்தை மீட்கப்போகிறேன் என்று ஒரு பொய்யான காரணத்தைக் காட்டி, செயல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை. ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கூட பெறாமல், திடீரென்று அறிவித்து, செயல்படுத்திய விதம், மக்களை எல்லாம் நடுத்தெருவில் நிற்கவைத்த கொடுமை, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கையை மிகவும் பாதித்தது. இதனால், நாடெங்கிலும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கிறது. இதில், உச்சகட்ட கொடுமையென்னவென்றால் பா.ச.க சார்பில் சொல்லப்பட்ட, கருப்புப்பணமும் திரும்ப கிடைக்கவில்லை என்பது தான்.!

Siragu GST1

அடுத்து, சிறு குறு வியாபாரிகளை மிகவும் பாதித்த ஜிஎஸ்டி வரி தான். அவர்களின் வர்த்தகத்தையே புரட்டிப்போட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்திருக்கிறது. வளர்ந்த நாடுகளில் கூட இல்லாத அளவிற்கு வரிச்சுமையை ஏற்றிவிட்டு, பெரும் பணக்காரர்கள், கார்ப்பரேட்டுகள் பெருமளவில் இலாபம் சம்பாதிப்பதற்கு, ஏழை, எளிய மக்களின் குடிசைத்தொழில் முற்றிலும் அழிக்கப்பட்டது. அடுத்து பார்த்தோமானால், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப் படவில்லை. போதுமான மழை பெய்யாதபடியால் விவசாயம் பொய்த்த நிலையில், அவர்களின் கடன் தள்ளுபடிகள் பற்றிய வேண்டுகோளை இந்த அரசு செவி சாய்க்கவில்லை. அதோடு மட்டுமல்ல… பண முதலைகளான, அம்பானி , அதானிகளுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு, அவர்கள் மேலும் பணக்காரர்களாக ஆக்கப்பட்டனர். ஏழை மக்கள், மேலும் வாழ்வதற்கு போராடும் ஏழைகளாகவே இருப்பதற்கு நேரடியாகவே நிர்பந்திக்கப்பட்டனர். !

Siragu-state-govt3கல்வி, சமூகநீதியிலும் கைவைத்து, நீட் போன்ற தேர்வை செயல்படுத்தி, ஏழை கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கனவையும் சிதைத்தது. தமிழ்நாடு அரசு, அனைத்துக் கட்சியினரையும் கலந்தாலோசித்து, நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப் படவேண்டும் என்ற தீர்மானம் போட்டதை, கிடப்பில் போட்டுவிட்டு, நீட் தேர்வை நடத்திக்கொண்டிருப்பது என்பது சமூகநீதிக்கும், தமிழ்நாட்டு சட்டமன்றத்தையும், அதன் பிரிதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த தமிழக மக்களையும், அவமதிக்கும் செயல். நமக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். பா.ச.க ஆட்சியில் கருத்துரிமை, பேச்சுரிமை மறுக்கப்படுகின்றன. கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கவுரி லிங்கேஷ் உள்ளிட்ட பல பகுத்தறிவாளர்கள் கொலை செய்யப்பட்டனர். மேலும் பலர் நகர நக்சலைட்கள் என பொய்யாக வழக்குகள் போடப்பட்டு, அச்சுறுத்தப்படுகின்றனர். மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக, அனைத்திலும் மத்திய அரசின் தலையீடு தொடரும் ஆதிக்கங்கள் நடந்தேறுகின்றன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்காமலிருந்த அலட்சியம் மற்றும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், எரிவாயு உருளைகள் விலை ஏற்றம் என தினமும் மக்களை வதைக்கும் அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன . எப்போது எதை இந்த அரசு அறிவிக்குமோ என்ற ஒரு அச்சம், படபடப்பிலேயே மக்களை வைத்திருத்தல், மேலும், புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளைக் கூட பொருட்படுத்தாமை, அதற்கான நிதியை முறையாக வழங்காமை, இழுத்தடிப்பு என இருத்தல் என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இந்த ஆட்சியில் நிறைகளை விட குறைகள் தானே அதிகம். சொல்லப்போனால், நிறைகளே இல்லை என்பது தானே நிதர்சனமான உண்மை.!

மதவெறியை தூண்டிவிட்டு, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில், எத்தனை எத்தனை கொலைகள், சிறுபான்மையினர் அச்சமின்றி வாழமுடியாத சூழ்நிலை தானே இங்கு நிலவுகிறது. இதனால், தாழ்த்த படுத்தப்பட்ட மக்கள் எத்தனை இன்னலுக்குள்ளாகின்றனர் . இதனை முறைமுகமாக தூண்டிவிட்டு, அகமகிழ்தல் என இருக்கும் பா.ச.க-வின் இந்த பாசிச போக்கு குறைந்தபாடில்லை. பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பின்மை. அதிகரித்திருக்கும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள். மேலும், அனைத்திலும் ஒற்றை மதம், ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மொழி என்ற முறையில் திணிக்கப்படும் ஒற்றை ஆட்சிமுறையினால், இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்கும் விதமாக, சனநாயகத்தை அழிக்கும் விதமாக செயல்படும் சர்வாதிகாரப்போக்கு. இதையெல்லாம் விட, உச்சபட்ச சர்வாதிகார செயல்கள் என்று சொல்லவேண்டுமென்றால், நாட்டில் சுதந்திரமாக இயங்க வேண்டிய, தன் அதிகாரமுடைய, சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கி செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு, அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சி செய்தல், இணங்காதவரை ராஜினாமா செய்ய வலியுறுத்துதல் என ஆதிக்க, ஆணவப்போக்கு. இவ்வளவு ஏன், பா.ச.க-வின் ஆட்சியில் தானே, சனநாயகத்திற்கு ஆபத்து என உச்சநீதிமன்ற நீதிபதிகளே, பொது வெளியில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்களே.!
இவையெல்லாம் தான் இன்று இந்த பாசிச பா.ச.க-வை முற்றிலும் அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் விதைத்திருக்கின்றது.!

தென்னிந்தியாவில், எப்போதும் மதவாத அரசு காலூன்றுவது சாத்தியமல்ல என்பது அறிந்த ஒன்று தான். ஆனால், இன்று, வடஇந்திய மக்களும், இந்தி பேசும் மக்களும் பா.ச.கவின் உண்மை நிலையினை உணர்ந்து, பா.ச.க-வை வீழ்த்தியிருக்கிறார்கள் என்பதை தான், இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன. பாசிசத்திற்கு, மதவெறிக்கு எதிரான இந்த வெற்றி, மிகப்பெரிய அளவில் நம் எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும், நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும், இதன் பிரதிபலிப்பு இருக்க தான் போகிறது. பாசிச பா.ச.க-வை தோற்கடிக்க, முற்றிலும் வீழ்த்த காங்கிரசு தலைமையில், நாடு முழுவதும், 21 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கின்றனர் என்பது வரவேற்க வேண்டிய ஒன்று. இந்த தலைமையை மக்களாகிய நாம் ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டிய கடமையில் இருக்கிறோம். பாசிச பா.ச.க-வை அகற்றி, சனநாயகத்தை நிலைநிறுத்த உறுதி எடுப்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகள்!”

அதிகம் படித்தது